Monday, December 20, 2010

காத்திருப்பு

எல்லா பலவீனங்களோடும்
கை குலுக்க வேண்டிய
நிர்ப்பந்தம்..
"நான் பலவான்களின்
உற்ற சிநேகிதன்...உங்கள்
கைகளைக் குலுக்குவதே
எனக்குத் தேவையில்லாத வேலை.."
என்று பலவீனங்களிடம்                      
சொல்ல நினைக்கிறேன்...

"நீ நினைப்பதையே நாங்கள்
புரிந்து கொள்வோம் "
என்கிற தோரணையில்
என்னில் ஊடுருவி
என்னை ஆக்கிரமிக்கின்றன
பலவீனங்கள்...
என் பலங்களையும் தைரியங்களையும்
உடனடியாக காலி செய்யச்சொல்லி
நாலாந்தரமாக நடக்கின்றன....

"கவலைப்படாதே ராசா...
இப்போதைக்கு நாங்க போறோம்..
கண்டிப்பா இந்த பலவீன சனியன்கள்
தொலையும்.. அப்ப திரும்ப வருவோம்"
--இப்படி என்னை
இருக்க வைத்துவிட்டுப்
போயிருக்கின்றன பலங்களும்
தைரியங்களும்..

சுலபத்தில் எல்லா
நல்லவைகளும் காத்திருக்க
சொல்லி விட்டு அதோகதியாக
நிறுத்தி விட்டுப் போய் விடுகின்றன..

மறுபடி பலங்களையும் தைரியங்களையும்
களவாடுகிற
திறன்களை பயங்களிடமும்
கவலைகளிடமும் இருந்தே
கற்றுக்கொள்ள வேண்டி உள்ளது....!!

Monday, November 29, 2010

கேவலமானவர்களின் சந்தோஷங்கள்..

{இப்படியாக சிலரை என் வாழ்நாளில் சந்திக்க நேர்ந்ததன் பொருட்டு எனக்குள் இப்படி ஓர் காழ்ப்பு... ஆனால் இப்படியான ஈனத்தமையில் உலவுபவர்களால் தான் நல்லவர்கள் இன்னும் நல்லவர்களாக தெரிகிறார்கள் என்று கருதுகிறேன்.}

உன் உற்சாகம்
எனக்கு வெட்கமாக
இருக்கிறது...
                                                            
ஓர் நாசுக்கில்லாமல்
குதூகலிக்கிறாய்...
உன் உற்சாகத்தைக்
காட்டிலும் உன்
சோபை இன்மை
நாகரீகமாக தெரிகிறது...

இங்கிதமற்ற உன்
பேரானந்தம்
என்னுள் இம்சை
விளைவிக்கிறது...

உன் சிரிப்பைக்காட்டிலும்
ஓர் அறை விட்டு உன்னை
அழவைப்பது
ஆரோக்கியமாகப்
படுகிறது எனக்கு...

உன் சந்தோஷத்தின்
மீதான என்னுடைய கோபம்
எல்லாருக்கும் என்னை
"பயித்தியக்காரன்" போல
தோற்றுவிக்கலாம்..,
--ஆனால் என்னைப்போல
உன்னை அன்றாடம்
தரிசிக்கிற அவஸ்தைகளை
அவர்கள் அனுபவிக்காத போது
அப்படித்தான் தோன்றும்..
இருக்கட்டும்..!!

உன் கால்களுக்கான
பாதணிகளை மாத்திரம்
தேர்ந்தெடுக்கிற சுயநலமி நீ..
--போலியோ பாதிப்பில்
விந்தி நடக்கிறவர்களைப்
பார்த்து, கையில் கூட வாயை
மூடத்தெரியாமல் சிரிக்கிற
உன் போன்ற ஓர் ஜென்மத்தை,
அதன் சிரிப்பை எப்படி
பொறுத்துக்கொள்வது??

Sunday, November 28, 2010

தொன்று தொட்டு....

வார்த்தைகளை விட
தொன்மையானவை
மௌனங்கள்...


மௌனங்கள்--
அமைதியின் அடையாளமாக                    
தியானத்தின் அடையாளமாக
வார்த்தைகளைக்காட்டிலும்
வீரியம் நிரம்பியதாக
நம் எல்லாரிலும்
ஊடுருவிக்கிடக்கின்றன....

கைதட்டல் வாங்குகிற
வார்த்தைகள் , சமயங்களில்
கல்லடியும் வாங்கக்கூடும்..

ஆனால் மௌனங்கள்
நிராயுதபாணியாக நின்றே
எதனையும் வெல்பவை..

மரணங்களும்
தொன்மையானவை தான்...
ஆனால் தொன்மையான
வாழ்வினை வைத்து
நாம் அதனை எப்போதும்
தவிர்க்கவும் தகர்க்கவுமே
போராடிப்பார்க்கிறோம்..,

ஓர் குழந்தை அடம் பிடித்து
பலூனை பெற்றுக்கொண்டதும்
ஓர் புன்னகை தவழ்கிறதல்லவா...?
--அப்படி இருக்கிறது
நம் வாழ்க்கைக்கான போராட்டம்
அனைத்தும்....

--நாம் அப்படி
போராடி ஜெயிப்பதை
மெல்லிய புன்னகையோடு
ரசித்துக்கொண்டிருக்கிறது மரணம்..!!

Thursday, November 25, 2010

காகிதப்பூ

மூன்று நாள்
முள்தாடியை
விரல்களால் நெருடியபடி
ஓர் நல்ல கவிதைக்கு
யோசித்துக்கொண்டிருப்பதைக்
காட்டிலும் -
நேர்கிற சுகமான இயல்பான
அனுபவங்களைக்
கவிதையாக பகிர்ந்துகொள்ளப்
பிரயத்தனிப்பது
நல்ல கவிஞனின் அடையாளம்..!

சமயங்களில்
அனுபவக் கவிதைக்கான
வார்த்தைகள் பிடிபட
மறுக்கலாம்..,
கற்பனையாகப் புனைகையில்
சுவாரஸ்யமான வார்த்தைகள்
பீறிடலாம்...
--அதற்காக அந்த அனுபவ
உணர்வுகள் அழிவதில்லை.!!

கற்பனைக்கு பிடிபட்ட
வார்த்தைகள் காகிதப்பூக்கள்..,
வார்த்தை பிடிபடாத
அந்த அனுபவ உணர்வுகள்
வாசனை மலர்கள்..!!            

கிட்டத்தட்ட இந்தக்
கவிதையைக்
  கூட மணக்காத
காகிதப்பூ போல தான்
உணர்கிறேன் நான்...

Saturday, November 20, 2010

ஓர் மகானின் கட்டுரை..    
 உலக அறிவு அற்றிருந்த பால்ய விளயாட்டுப்பருவங்கள் மாதிரியான சுவையான தருணங்கள் .. அநேகமாக சாகிற வரை எவருக்குமே கிடைப்பதில்லை..
ஓர் இழையில் எல்லா அறிவுகளும் வந்து மனதைத்தொற்றிக்கொண்டு , அந்த நாட்களை மலரும் நினைவுகளில் வைத்துத் தத்தளிக்க நேர்கிறது...
அதுவும் நம் அப்பாக்களோ தாத்தாக்களோ சந்தித்திராத வினோத சம்பவங்களையும்  , விபரீத மரணங்களையும்  .. கொடுமையான சோகங்களையும்  இன்றைய தலைமுறையினர் மிக சுலபமாக அன்றாடமுமே சந்திக்க தயாரிலும் பீதியிலும் இருக்க வேண்டியுள்ளது என்றால் அது மிகையன்று...

மிகவும் துரிதமாகவும் , ஆடம்பரமாகவும் வளர்ந்து வருகிற அறிவியலும் அது சார்ந்த மனித மூளைகளும் ...
என் போன்ற வெறுமனே தகவல்களை சேமிக்கிற, பொது அறிவை வளர்த்துக்கொள்கிற நபர்களின் கூட்டம் தான் இந்தப் பிரபஞ்சத்தில் எங்கெங்கிலும் அதிக சதவிகிதம்... டெக்னாலஜி  யில் அப்டேட் செய்து  சாதிப்பவர்களின் சாதனைகளை அன்றாடம் தகவல்களாக அப்டேட் செய்வதே எங்கள் போன்றவர்களின் சாதனை...{?}

இன்னும் சிலர் இருக்கிறார்கள்.... எல்லா செய்தித்தாள்களிலும் தலைப்பு செய்திகளாக வெளி வந்து ஊரே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்கிற ஓர் சூழ்நிலையில் கூட "எதுக்குடா எல்லாரும் என்னவோ மாதிரி இருக்கீக?" என்று சன்னமாக தனது சந்தேகத்தை கேள்வியை கேட்கிற சாதனையாளர்களும் உண்டு...

ஒரே குடையின் கீழ் இப்படி சாதிப்பவர்களும், தகவல் திரட்டிகளும், எதுவுமே உரைக்காதவர்களும் வாழ்ந்து வருகிறோம்...

என்னவோ சொல்ல வந்தவன் என்ன சொல்வதென்றே புரியாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறேன்... எனக்கு நானே என்னை தகவல் திரட்டி என்று தம்பட்டம் அடித்துக்கொள்வது சற்று குற்ற உணர்வாக உள்ளது..."எதுவுமே உரைக்காத" லிஸ்டில் சேர்வதே சாலச்சிறந்தது என்று கூட தோன்றுகிறது இந்த மகானுக்கு....ஹிஹிஹ்..

Monday, November 15, 2010

அநாகரீகமான யதார்த்தங்கள்?.....

என் அற்பத்தனங்களும்
சபலங்களும்
எனது நண்பர்களுக்கு               
மாத்திரமே
பிரத்யேகமானவை...

மனைவியினிடத்து
மிக நாசுக்காகவும்
அற்பத்தனங்களோ
சபலங்களோ சற்றும்
இது வரை வாழ்வில்
அறிமுகமே ஆகாத
தொனியில்....

வார்த்தைகளில் ஆகட்டும்
செய்கைகளில் ஆகட்டும்
சுலபத்தில் விரசங்களை
உட்புகுத்தி தன்னை
மிக கேவலமான
மனிதர்களாக சித்தரிப்பதில்
மனைவி குழந்தைகள் நண்பர்கள்
மற்றும் எந்த நபர்களிடமும்
கிஞ்சிற்றும் வெட்கமே அற்ற
சிலரை நான் அடையாளம்
காண்கிறேன் அனேக சமயங்களில்....

கீழ்த்தரமாக அவர்கள்
புரிபட்டாலும்
யதார்த்தம் தொலையாதவர்கள்
என்றே என்னால் உணரவியல்கிறது...

Saturday, November 13, 2010

சமாளிப்பு..

 என்றோ ஒரு நாள்
ஓர் சுவாரஸ்யமான
கவிதை ஒன்றை               
எழுதி வைத்ததாக
ஞாபகம்...
-மறுபடி அதனைக்
கொணர்வதற்கான
முஸ்தீபுகளை
மேற்கொண்டாலும்
அதே கோர்வையில்
வார்த்தைகள் பிடிபட
மறுக்கிறது.. மற்றும்
அந்தக் கருத்துக்
கூட அத்தனை தெளிவாக
நினைவிலில்லை...
--இவ்வளவு இம்சையில்
அது குறித்து எதற்கு
இத்தனை பிரலாபம்?

கவிதை வறட்சியில்
ஓர் பழைய கவிதைக்கான
தேடல்..
அது கிடைக்கவில்லை
என்கிற அவஸ்தையைப்
பதிவு செய்வதில்
இப்போது ஒரு கவிதை...??

Monday, November 8, 2010

மலர்ந்த நினைவுகள்...

தீபாவளிக்கு அடுத்த நாள் எனது பால்ய நண்பர் விஜயஷங்கர்  தனது மகனுடன் எனது வீட்டிற்கு வந்திருந்தார்...நேருக்கு நேர் பார்த்து வருடங்கள் பல ஆகி விட்டன..நீண்ட இடைவெளி... பழைய நண்பனைக் காண்பதென்பது கிட்டத்தட்ட பிரிந்திருந்த காதலியைக் காண்பதற்கு ஒப்பான ஓர் உணர்வை ஏற்படுத்தியதென்றால் அது மிகையன்று...

வாழ்க்கை எல்லாருக்குமே இப்படியே தான் ...
வெவ்வேறான தளங்களில் இருவரும் ... தகுதிகளைப் பரிமாறிக் கொள்வதற்கான சந்திப்பல்ல இவைகள்... அநேகமாக.. பரஸ்பரம் பார்த்து சிலிர்த்துக் கொள்ளவே என்று தோன்றுகிறது எனக்கு...

நான் புலம் ஏதும் இது வரை பெயராமல் திருப்பூரிலேயே .. இன்னும் கொஞ்சம் பந்தா படுத்த வேண்டுமானால் இந்தியாவிலேயே இருந்து வருகிறேன், இனி மேலும் இருந்து வருவேன்.. இந்தியா மீதான பற்று அப்படி எனக்கு..(?)
ஆனால் எனது நண்பரோ, படிப்பு நிமித்தமாகவும் தொழில் நிமித்தவாகவும் பற்பல நாடுகளை சுற்றிவிட்டு இன்று பெங்களூருவில் வசித்து வருகிறார்...
--- மேற்கொண்டும் வெளிநாடுகள் செல்கிற திட்டங்களில் இருக்கிறாரோ என்னவோ...

நான் கண்டிப்பாக இந்தியாவை விட்டு நகர மாட்டேன்.. உறுதியாக சொல்கிறேன் .. யாரும் கவலைப்படத் தேவை இல்லை... ஹிஹிஹ்ஹிஹ்....

ஆனால் அவர் மறுபடி வெளிநாடு செல்வதற்கு முன்னர் நான் ஒரு முறையாவது பெங்களூரு சென்று வரலாம் என்பதில் உறுதியாக உள்ளேன்...என் நண்பரின் அனுமதியை வாங்காமலே அடித்து சொல்கிறேன்... இருக்கட்டுமே, நண்பர் என்ன வரவேற்காமலா போய் விடுவார்?...             

Monday, November 1, 2010

அம்மா கட்சி...

குழந்தையின் அழுகைஇம்சை என்கிற என் கூற்றை
மனிதாபிமானமற்றது                        
என்கிறாள் என் மனைவி...
-அயர்ந்து நான்
உறங்குகிற போதோ
தொலைபேசியில்
எவருடனாவது தீவிர
விவாதத்தில் இருக்கிற போதோ
அவள் கதறுகிற நிகழ்வு
அன்றாடம் என்கிற
பழக்கத்துக்கு வந்தாகி விட்ட
போதிலும், அந்த
ஷனத்தின் கோபத்தை
கட்டுப்படுத்தத் தவறி
ரகளை செய்கிற
மகளை பொய்யாக
ஓர் மிரட்டு மிரட்டுகையில்
உதடு பிதுங்கியவாறு
அடங்கிப்போகிறாள் என்றாலும்
மனைவி என்னை
ஹிட்லராக சித்தரித்து
எனக்குள் குற்ற உணர்வை
விதைத்து விடுகிறாள்...

-பிற்பாடான சாவகாச
தருணங்களில்
அப்பா அப்பா என்று
என்னுடன் தான்
சிரித்துக் கொஞ்சி
விளையாடுகிறாள்...எனிலும்
நான் மிரட்டுகையில் எல்லாம்
அவள் அம்மா கட்சி...!!

சுந்தரவடிவேலு...

Thursday, October 28, 2010

தித்திக்கிற தீபாவளிகள்

எல்லா ரகளைகளுடனும்
இளமை குதூகலத்தில்
கும்மியடித்துக்கொண்டிருந்தது.
தீபாவளி என்றால்
அதற்கான எல்லா சுகந்தங்களும்    
வீரியம் பெற்று
ரத்தத்தை அதீத சூடேற்றிய
வண்ணமாகக் கழியும்....
ஒற்றை வெடியைக்கூட
சுவாரஸ்யம் குன்றாமல்
லொட்டு லொட்டு என்று
ஓயாமல் வெடித்துத் திரிவோம்..
-இன்று கட்டு வெடி வெடிக்கவே
அசுவாரசியம் வந்து விடுகிறது..

இளமையின் அதே வீச்சில்
மறுபடி தீபாவளி வராதா
என்கிற ஏக்கம்
இப்போது வருகிற
எல்லா தீபவளிகளின் போதிலும்..!!

நம் அத்தனை
ஆனந்தங்களையும்  நம்
குழந்தைகள் இந்த நாட்களில்
உணர்கிறார்களா என்பது
கேள்வி தான் என்ற போதிலும்
நமது சுவாரஸ்யம் குறித்த
இதே வித கேள்விகள்
அன்று நம் பெற்றோர்களிடமும்
இருந்திருக்குமோ என்னவோ...?

ஆக, எல்லா தலைமுறைகளுமே
தனக்கு நேர்ந்தவை மாத்திரமே
மகோன்னதமானவை என்கிற
தீவிர நம்பிக்கையில் வாழ்ந்து
வருவதாக அனுமானிக்கிறேன்...

Thursday, October 14, 2010

நானும் கடவுளும் முரண்களும்...

 1

நாத்திகனையும்
காப்பாற்றுகிற பொறுப்பு
கடவுளுக்கு இருக்கிறது...

சாதாரண மனிதர்கள்
கடவுள்களில் பாரபட்சம்
பார்க்கலாம்..,
அசாதரணமான கடவுள்
மனிதர்களில் பாரபட்சம்
பார்ப்பதில்லை...!!

இந்தக்கருத்துக்கூட
இனி எந்தக் கடவுளுக்குப்
போய் சேருமோ தெரியவில்லை..

ஆனால் நிச்சயம்
ஒரு நாத்திகனாவது
படித்துப் பார்ப்பான்
என்றே அனுமானிக்கிறேன்....!!



நன்றி நவில்வதிலுள்ள 
பேரின்பம்
பிரார்த்தனைகளில் இருப்பதாகத்
தெரியவில்லை..
பிரார்த்தனை என்பது
மெருகேற்றிய பிச்சை..!

கோயில் வாசலுக்கு
வந்ததும் பிச்சைக்காரனிடம்
நீ கடவுளாகி விடுகிறாய்...

--உள்ளே நீ கடவுளிடம்
ரகசியமாக பிச்சை கேட்டாய்..,
பிரார்த்தனை என்கிற பெயரில்...!!



நான் கடவுளைப்
பிரார்த்திப்பதில்லை..,
நம்பிக்கையின்மையால் அல்ல,
கடவுள் மீதான பெருமதிப்பால்....

என்னுடைய அல்ப
பிரார்த்தனைகளைப் பொருட்படுத்துகிற
அவகாசம் கடவுளுக்கு
இல்லாமற் போகக்கூடும்,
உடனே நான் அந்த
அசாதாரண கடவுளை
கோபிக்கக்கூடும்..,
அவசரப்பட்டு "கடவுள் பலவீனமானவன்"
என்று முடிவெடுக்கக்கூடும்..,

ஏதேனும் நிறைவேறுகிற
தருவாயில்
உடனடியாக கடவுளுக்கு
நன்றி சொல்கிற அவசரமும்
நாகரிகமும் என்னிடமிருக்கிறது....!!

சுந்தரவடிவேலு...

Tuesday, October 12, 2010

நேரம் காலம் நல்லா இருந்தா...

எழுதி சம்பாதிக்கிற எண்ணம் கொண்டவர்கள் ... அது சாத்யமாவது அவ்வளவு எளிமையுமல்ல, அவ்வளவு சிரமமும் அல்ல... இப்படி இரண்டு வகையறா கோணங்களிலும் வசீகரமாக உணர வைக்கிற இந்த உலகம் ஆச்சர்யம் நிரம்பியது..
அந்தக்காலகட்டங்களில் எழுதி, எழுத்தாளர்களாக பிரபலமானவர்கள் உண்டு., பிரபலமாகாமலே நன்றாக எழுதியவர்களும் உண்டு..
எது எப்படியான போதிலும் எழுதி எவரும் பெரிய கோடீஸ்வரர்களாக ஆனதாக எந்த செவி வழி செய்திகளும் இல்லை..

ஆனால் இன்றைய சூழல்கள் வேறு... கண்டதையும் எழுதி விரல் நொந்து கிடக்கிற பல எழுத்தாளர்களும்  உண்டு,  சும்மா feather touch செய்து லட்சம் கோடி அள்ளுகிற கில்லாடி எழுத்தாளர்களும் உண்டு.. உதாரணமாக வைரமுத்து, பா.விஜய், என்று நீண்டதொரு பட்டியல் போடலாம்... உடனே அவர்கள் மீதாக அவசரப்பட்டு பொறாமை கொள்வது அறிவீனம்.. அவர்களது இலக்கிய அறிவு, அதனை நாசுக்காக கையாள்கிற திறன், ரசிகர்கள் வியக்கும் வகையில் காட்சிகளில் கற்பனா சக்தியை கொணர்வது..., இப்படி நிறைய திறமைகள் இருக்கும் அவர்களை எல்லாம் ஆய்வு செய்கையில்...

நாமெல்லாம், டுபாக்கூராக நான்கு வார்த்தைகளை தெரிந்து வைத்துக்கொண்டு சுலபத்தில் கவிதை எழுதி விடலாம், பிரபலக் கவிஞர்கள் ஆகி விடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருப்பது வீண்வேலை...  

விஷய ஞானம், அதை பாங்காக வெளிக்கொணரும் திறமை..... யாவற்றையும் விட நேரம் அதிர்ஷ்டம் எல்லாம் ஒரு சேர கும்மி அடித்தால் நாமும் ஆனந்தக் குலவை கொட்டிக்கொண்டு பிறரை பொறாமை கொள்ள செய்து கொண்டிருக்கலாம்....

Saturday, October 9, 2010

காலக்கைதி

விளையாடுகிறது
என்று நினைத்தால்...
--மனசைக்கீறி
ரணப்படுத்தி இருக்கிறது
காலப்பூனை..!

என்னைக் கடித்துக்
குதறப்போவது புரியாமல்
மாரில் அழுத்திக்
கொஞ்சிக்கொண்டிருந்திருக்கிறேன்...          

--பூனை பாவனையில்
புலியாக இருக்கிறது காலம்..,
காலப்புலி...!!

மண்புழுவென 
நினைத்த "காலம்"
பூராணாக ஊர்கிறது....
--சுழற்றும்  சாட்டை
என கருதிய "காலம்"
கொத்தும் பாம்பாக நெளிகிறது..


பூக்களை சொரியுமென்று
நினைத்தால்
முட்களை செருகுகிறது காலம்..
பன்னீர் தெளிப்பதாக
நினைத்தால் எச்சிலை உமிழ்கிறது...

--என் மரணத்தைக்
காரணம் காட்டியாவது
காலத்தை நான்
குற்றவாளிக்கூண்டில்
நிறுத்தாமல் விடமாட்டேன்..!!!

Tuesday, October 5, 2010

அனாதையாகும் திறன்கள் ..

எவருடைய டைரிகளை எடுத்தும் எனது சரிதங்களைக் கிறுக்கிக் கொண்டிருந்திருக்கிறேன் எனது பால்ய காலங்களில்...இன்னொருவர் டைரியை பார்ப்பதோ படிப்பதோ அநாகரீகம் என்றிருக்க நான் கொஞ்சமும் இங்கிதமற்று எழுதியிருக்கிறேன்..
நல்ல வேலையாக நான் அப்படி கிறுக்கிய டைரிகள் யாவும் எனது தந்தை  மற்றும் சகோதரிகளின் டைரிகள் என்பதால் வெறும் திட்டு வாங்கியதோடு தப்பித்துக்கொண்டேன்...
விவஸ்தை  ஏதுமற்று என் அன்றாட நிகழ்வுகள் யாவற்றையும் அந்த டைரிகளில் தத்துபித்தென்று எழுதிக்குவித்து விடுவேன்...          

என் எழுதுகிற தன்மை உணர்ந்து அவர்களாவது எனக்கு ஒரு டைரி பரிசாகவோ "இந்தா வச்சுத்தொலை" என்றோ கொடுத்திருக்கலாம்... குறைந்த பட்சம் பழைய பாடாவதி டைரி யாவது கொடுத்திருக்கலாம்.. அவ்வளவு டைரி யிலும்  ரெண்டொரு பக்கங்கள் சின்ன வரவு செலவு கணக்குகளோ இன்னபிற அவர்களது படிப்பு சம்பந்தமாக எதாவது நாலு பக்கங்கள் மாத்திரம் தான் எழுதி இருப்பார்கள்.. 

இதை நான் ஏன் இவ்வளவு மெனக்கெட்டு சொல்ல வருகிறேன் என்றால், ஏதேனும் எழுதுகிற திறனுள்ள ஒரு நபரை அந்தக்குடும்பத்தில் அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டுமேயன்றி அதனை மதியாமலும், பழித்துக்கொண்டும் இருப்பது எந்த விதத்தில் ஆரோக்கியம் என்பது எனக்குப்புரியவில்லை... 

எழுதுகிற திறன் மட்டும் அல்ல, வேறு வகையறா சார்ந்த திறன்கள் ஏதேனும் ஒரு நபருக்கு இருப்பினும் அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிற பாங்கு வேண்டும், அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கு.. திறன்களை அடையாளம் காணும் திறனற்று இருப்பவர்களைக்கூட மன்னிக்கலாம், ஆனால் அது தெரிந்தும் வெறுமனே இருப்பவர்களை என்ன செய்வது....இப்படித்தான் பல குடும்பங்களில் பல கலைகள் அனாதையாக அரங்கேற முடியாத அவஸ்தைகளோடும் மௌனமான வலிகளோடும் உயிருடன் புதையுண்ட வண்ணம் உள்ளன...

Thursday, September 23, 2010

உள்ளொன்று வைத்து...

இன்னொருவன் மனைவி
என்னைப்பார்த்து சிரிப்பதில்
எந்த விபரீதங்களும் இல்லை..
இன்னொருவனைப்பார்த்து
என் மனைவி சிரிப்பதே              
விபரீதமெனக்கு...
--என் மீது எனக்குள்ள
நம்பிக்கை
என் மனைவி மீது
இல்லாதது வினோதமே..

இத்தனைக்கும் நான்
பிறன் மனை புணர்வதற்கான
சந்தர்ப்பம் வாய்க்கையில்
அதனைக்கூட சாதகமாக்கிக்
கொள்கிற ஏற்பாட்டில் இருக்கிறவன்..,
--ஆனால்
தன்னைப்பார்த்து எவனாவது
சிரித்தாலே கூட
அதனை ஓர் புகார் போல
என்னிடம் முறையிடுபவள்
என் மனைவி..
''என் புத்தியை
அவள் தன்மையோடு
ஒப்பீடு செய்கிற யோக்யதையே
கிடையாது'' என்கிற கூற்றில்
ஆணித்தரமாயுள்ளேன்
என்ற போதிலும்
--எவனாவது
பல்லைக் காட்டறான்னு
நீயும்  எங்காச்சும்
இளிச்சுக்கிட்டு நிக்காதே---
என்கிற ஓர் மிரட்டலோடு
வெளிக்கிளம்புவேன்
அனேக சமயங்களில்.....!!!

Tuesday, September 14, 2010

ஆங்கிலத்தில் ஏதேனும் முயலலாம் என்கிற எனது பிரயத்தனம், அநேகமாக அதிகப்பிரசங்கமாக உணரப்படும் என்பதாகவே நான் அபிப்ராயிக்கிறேன்...
அந்த மொழியிலே ஓர் சரளம் வேண்டும் என்பது என் பல நாள் கனா.. இன்னும் அது கனவாகவே என்னில் உலா வந்த வண்ணமுள்ளது..
ஓர் ஆங்கிலப்புலமை வாய்ந்த நபரிடம் வாட் இஸ் யுவர் நேம் என்பதை மாத்திரம் உத்தரவாதமாக என்னால் கேட்க முடியும்... மற்றபடி அவரது புலமைக்கு ஈடு கொடுக்கும் வகையில் தொடர்ந்து உரையாற்றுகிற திராணி என்னிடம் இல்லை..

இதற்காக குற்ற உணர்வில் பரிதவித்த காலங்கள் உண்டு.. இன்றெல்லாம் தமிழை மறக்காமல் இருந்தாலே பெரிய விஷயம் என்கிற பக்குவம் {?} வந்து விட்டது..

இப்படித்தான் வாழ்க்கை ஒரு கட்டத்தில் பெரிய எதிர்பார்ப்பிலும் மற்றொரு கட்டத்தில் ஏமாற்றத்துடனும் அமைந்து விடுகிறது.. அதற்காக பெரிய ரோஷக்காரன் போல வாழ்வையோ காலத்தையோ இளப்பமாக நினைத்து விட முடிவதில்லை..
காலம் நமக்கு அளித்த கொடை இவ்வளவே., இதனை செவ்வனே அனுசரிப்பதே நேர்மை.. அதனை விடுத்து காலம் நம்மை இப்படி படுகுழியில் தள்ளி விட்டதாக புலம்பிக்கொண்டிருப்பது மடைமை...

Saturday, September 11, 2010

ABOUT LOVE

fragrance of  flowers 
and its colours all seems to
be an absolute bogus
after i saw you...

except you 
everybody and everything
all changed into
a great illusion.

unusually 
i am laughing while
my parents scolding me..
they concluded me as mad..

power of love
scattered me into drizzles..
but i failed to wet you,
that's my idioticness...

no pain is simultaneous
to the pain, which is
the make of love failure...

being in love is one state..
whereas failure in it as an another state..

the person who
escapes from the suicide state,
sure they will be in a rigid state forever..


Tuesday, September 7, 2010

மறுபடி சிறை..

1996 ஆம் வருடம் நான் எழுதிய ஒருபக்கக் கதை.. அரை பக்கம் கூட வராதென்று நினைக்கிறேன்...

அன்புள்ள கதிரேசனுக்கு...
உன் ப்ரிய சுப்பிரமணி எழுதுவது..ரெண்டொரு நாட்கள் முன்பு நீ போட்டிருந்த கடிதம் கிடைத்தது.. உனக்கின்னும் தண்டனைக் காலம் நீட்டித்திருப்பதாக நீ எழுதியிருந்தது எனக்கும் உன் மனைவிக்கும் சற்று வருத்தத்தைத் தந்தது.. உன் மனைவியை  தேற்ற நான் மிகவும் பிரயத்தனம் எடுத்துக் கொள்ள வேண்டியாயிற்று..... கடிதம் என் கைக்குக் கிடைத்தும் கூட விவஸ்தை இல்லாமல் சுகந்தியிடம் காண்பித்தது என் கேனத்தனம்... எதற்கும் அடுத்த முறை என்ன தகவலானாலும் என் வீட்டு  முகவரிக்கு நீ எழுதவும்..
உன் மனைவி குறித்து நீ எந்த வேதனையும் அடைய வேண்டாம்.. நான் இருக்கிறேன்.. வேண்டிய உதவிகளை செய்து கொடுக்கிறேன்.. நீ திட சித்தத்துடன் இரு கதிரேசா...அடுத்த முறை வேலூர் வருகையில் உன்னை வந்து பார்த்து விட்டு வருகிறேன்..

மற்றவை நேரில்
உன் பிரிய நண்பன் சுப்பிரமணி...

---கதிரேசனாகப்பட்ட எனது நிலவரம் ஓரளவு உங்களுக்கு புரிந்திருக்குமென்று நம்புகிறேன்.. சுப்பிரமணி போன்ற நண்பர்களால் மட்டுமே சிறையில் கூட கொஞ்சம் நிம்மதியோடு இருக்க முடிகிறது... அசந்தர்ப்பமாக நிகழ்ந்த  ஓர் கொலைக்கு என்னை சம்பந்தமில்லாமல் கைது செய்தது போதாதென்று தண்டனைக்காலத்தை வேறு அனாவசியத்திற்கு  நீட்டித்துக்கொண்டு வேதனைப்படுத்துகிறார்கள்..
எனக்கு மனைவி வாய்த்ததை, நண்பன் வாய்த்ததை .. யாவற்றையும் விலாவாரியாக விளக்க வேண்டுமானால் குறைந்த பட்சம் ஓர் குறுநாவல் போலவாவது சொல்லியாக வேண்டும்.. அதற்கு இந்த ஒற்றைப்பக்கம் போதாது...

--- சற்றும் நான் எதிர்பாராத ஒரு நாளில் --- எனக்கு விடுதலை அறிவிக்கப்பட்டது..
வீடு வந்த போது.. சுப்ரமணியும் என் மனைவியும் தலைமறைவென்ற தகவல்...

--- மறுபடி நான் என் வீட்டிற்குள் சிறைப்பட்டேன்...

Sunday, September 5, 2010

நண்பனுக்கு அஞ்சலி.

மிகவும் மனதை பாதிக்கிற விஷயங்களுள் தலையாயது பால்ய சிநேகிதனின் மரணம் என்று தான் நினைக்கிறேன்.. நான்கைந்து நாட்கள் முன்னர் என் இளம்ப்ராயத்தோழன் ஒருவன் பைக்கில் செல்போன் பேசியவாறு பயணித்ததில் ஏதோ ஓர் மரத்தின் மீதோ பாலத்தின் மீதோ மோதி தூக்கிஎறியப்பட்டு அதே இடத்தில் அகால மரணம் அடைய நேர்ந்தது..
எவ்வளவோ முறைகள் எங்களுக்குள் மனஸ்தாபம் வந்திருக்கிறது, கைகலப்பு செய்திருக்கிறோம் , மறுபடி சில மாதங்களோ  வருடங்களோ பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்திருக்கிறோம்... அதன் பிறகு மனமுதிர்வு அடைந்த கால கட்டங்களில் இருவரும் முந்தைய நடவடிக்கைகள் குறித்து மலரும் நினைவுகளாக பகிர்ந்து அந்த சிறுபிள்ளைத்தனங்கள் மீண்டும் வாராதா என்று  ஏங்கி இருக்கிறோம்.... 
மரணம் இப்படியாக எல்லா உணர்வுகளையும் உறவுகளையும் சுலபத்தில் கபளீகரித்து விடுவது வேதனை நிரம்பிய வியப்பு...
அவனது ஆத்மா என்ற ஒன்று இருக்கிறதா ... அது மனித மூளையின் அபரிமிதமான கற்பனையா...அதே போன்று, அடுத்த பிறவி என்பதும் ஓர் சுகமான கற்பனை என்றே அனுமானிக்கிறேன்...
அப்படி ஆத்மா  இருக்கிற பட்சத்தில் ---எல்லாரும் பிரார்த்தித்துக்கொள்வது போல---சத்தியமாக அது சாந்தி அடையட்டும்... அடுத்த பிறவி இருக்கிற பட்சத்திலும்,  அவன் அடுத்த பிறவியிலும் என் நண்பனாகவே வந்து அவதரிக்கட்டும்...   
..

Wednesday, September 1, 2010

ஓர் சபலிஷ்டின் அவஸ்தை....

நானும்
சபலக்காரன் தான்
என்ற போதிலும்
மற்ற சபலப்பேர்வழிகளைப்
பிடிப்பதில்லை எனக்கு...                    
பாம்பின் கால்
பாம்பறியும் போல
யார் எந்த சபலத்தில்
இருக்கிறார்கள் என்கிற
முக ஜோதிடம்
எனக்குத்தெரியும்...{?}

இப்படித்தானே
நானும் அடையாளப்
படுவேன் ? என்கிற
சங்கடங்களும் அச்சங்களும்
உண்டென்ற போதிலும்
--அப்படிப்
பிரித்துணரும் வண்ணம்
அப்பட்டமானதல்ல
என் சபலம்
என்கிற அனுமானம்,
 மற்றும்
நம்பிக்கை எனக்கு...

ஒவ்வொரு சபலக்காரனும்
இவ்வித நம்பிக்கையில் தான்
இருப்பான்?

சபலங்கள் தவிர்க்கப்பட்ட
வாழ்க்கை மிகவும்
யதார்த்தமானது...
சத்யம் நிரம்பியது...!
-அப்படிப்பட்ட நபர்களையும்
நான் அடையாளம் காண்பேன்...,
--குறைந்த பட்சம்
அவர்களினிடமாவது
என் சபலம் அடையாளப்
பட்டுவிடக்கூடாது என்பது
என் பிரார்த்தனை..!!

Sunday, August 29, 2010

சம்பந்தமற்றவை....

விபத்துக்களில்
பிரசவமாகிற மரணங்கள் 
சவக்கிடங்கில் 
சங்கமிக்கின்றன....

கதறிக்கொண்டு 
வருகிற உறவினர்களுக்கு 
சிதைந்த அடையாளங்களோடு சில,
சிரித்த முகங்களோடு கூட சில.....       

பிரசவக்கூடத்தில் 
ஒலிக்கிற சுகமான 
அழுகைக்கும் 
சவக்கூடத்தில் ஒலிக்கிற
வேதனையான ஓலங்களுக்கும்
எந்த சம்பந்தங்களும் இல்லை...

Friday, August 27, 2010

ஆதங்கம்

காதல் -
புது மெருகு
போட்டது போல
இந்த வயோதிகத்திலும்..!!.
ஆனால்
அவயவங்களின் சுருக்கத்தில்
அந்த மெருகு
பிரதிபலிக்காதது
துரதிர்ஷ்டம்..!!          
                                                

Saturday, August 21, 2010

நின்று கொல்லும் தெய்வம்....

கோயிலை விட்டு
வெளியே  வந்த 
பிறகு தான் 
கர்ப்பக்ரஹத்துக்குள்
சுவாமியைப் பார்க்கவே 
மறந்தது ஞாபகம்
வருகிறது....                                      
பிரச்சினைகளுக்கான 
பிரார்த்தனைகளோடு
கோயிலை எல்லாரும் 
அணுகிக்கொண்டிருக்க -
பிரார்த்திப்பதே 
பிரச்சினை என்பதாக
நான் முரண்படுவது 
எந்த லட்சணத்தில் 
சேர்த்தி என்பது புரியவில்லை..

எதிர்வரிசை பெண்களில் 
லயித்து விடுகிறது என் பக்தி..

நாயைக்கண்டால் 
கல்லைக்காணோம்  என்பது
மனிதனின் பிரச்சினை..
--கல்லாயிருக்கிற 
கடவுளுக்கு அது பிரச்சினையே அல்ல...
--ஒரு நாள் 
தன்னையே பெயர்த்து 
'நங்'கென்று என் தலையில் 
ஒரு சிதிலம் 
விழக்கூடுமென்றே அனுமானிக்கிறேன்...!!

Saturday, August 14, 2010

பற்று..

மிகவும் ரகளை
என் மகள்...
குறைந்த பட்சம்
நறுக்கென்று
கிள்ளி விடவோ
'சட்'டென்று
ஒரு அடி வைத்து
விடவோ
தோன்றி விடுகிறது...

முடிந்த வரைக்கும்
அவ்விதம் செய்வதைத்
தவிர்த்து விடுகிறேன்
என்ற போதிலும்,
மனக்குமைச்ச்சலை
வார்த்தைகளில் கொட்டித்
தீர்க்க நேர்கிறது....

அர்த்தம் புரியாத
அந்த வார்த்தைகளுக்காக அல்ல,
-அதட்டலாக அது தொனிக்கிற
ஸ்தாயியில்
மிரண்டு விடுகிறது
அந்தப்பிஞ்சு...
அந்தக்குஞ்சு உதடுகளைக்
குவித்து அழத் துவங்குகிறது...
-அதனையும் அடக்க
ஓர் 'உஷ்' மிரட்டல்,
ஆள்காட்டி விரலைக்காட்டி...

அப்படியே பாலைக்குடித்து விட்டு
கண்ணயர்ந்து விடுகிற
அவளைப்பார்க்க ..
தாங்கவே முடிவதில்லை
ஒவ்வொரு முறையும்..!!
--உடனே
விழிக்க வைத்துக்                              
கொஞ்சவில்லை என்றால்
உயிரே போவது போலிருக்கும்...
ஆனபோதிலும் அவள்
உறக்கத்தைக்கலைப்பதில்லை...!!

Wednesday, August 11, 2010

நீள்கிற பட்டியல்கள்..

எப்படி எல்லாம்
வாழ வேண்டும் என்கிற
எனது பால்ய காலப்
பட்டியல்கள் இன்றளவும்        
மறப்பதற்கில்லை....

அனுமாநித்திருந்தவாறு
நடந்திருந்தால் கூட
பட்டியல்கள் மறந்திருக்குமோ
என்னவோ....
எதுவும் நினைத்தது போல
நடை பெறாத காரணத்தால்         
பட்டியல்களின் பதிவு
ஆணித்தரமாயிருக்கிறது..

இட்ட பட்டியல்களைக்
காட்டிலும் மேம்பட்ட விதமாக
வாழ்க்கை அமைந்திருந்தால்
என் அதிர்ஷ்டங்களுக்காகப்
புல்லரித்துப்போயிருக்கலாம்..
என் திறன்கள் மீதாக
தாறு மாறாக மதிப்புகள்
குவிந்திருக்கலாம்...
தகுதியும் புகழும் பொருளாதாரமும்
பிறர் பொறாமை கொண்டு
மூர்ச்சையாகும் சூழல் கூட
ஏற்பட்டிருக்கலாம்...

ஆனாலும் என்ன...
இன்றைக்கும் கூட
நீண்ட பட்டியல்கள் உண்டு...
பால்யகாலப்பட்டியல்கள் போன்ற
சிறுபிள்ளைத்தனங்கள் அற்ற
அறிவுப்பூர்வமான,
மிக நேர்த்தியான பட்டியல்கள்...

இதே மாதிரி எதுவும்
நிறைவேறாமல்
ஆதங்கப்பட்டுக்கொண்டிருக்கும்
என் வயோதிகம்...
அந்த நடுங்குகிற விரல்கள்
கூட அன்றைய சூழலுக்கேற்ற
பட்டியல்களை தயாரித்துக்
கொண்டிருக்கும் ...??

சுந்தரவடிவேலு...

Saturday, August 7, 2010

காதல் தோல்வி...

எந்த தருவாயிலும்
உன்னை இனி நினைப்பதில்லை
என்கிற தீவிர முடிவை
எடுக்க செய்தது
உன் உதாசீனம்..

உன் உதாசீனம்
ஆரம்பம் முதலே
நிகழ்கிறது என்றபோதிலும்
ஏதேனும் ஒரு தருணத்தில்
அது மாறுபட்டு
என் மீதான காதலாக
உருவெடுக்கும் என்கிற
எனது அனுமானத்திற்கு
நேற்றோடு கெடு முடிந்து விட்டது...

இந்த தோல்வி
எதிர்பார்த்தது தான்
என்ற போதிலும்..
வெற்றியுமே கூட
எதிர்பார்க்கப்பட்டது தான்...
-வெற்றி பெறுகிற
பட்சத்தில்
நல்லதொரு விருந்து
வைப்பதாக என் நண்பர்களிடம்
நான் உறுதியளித்திருந்தேன்...
--பிற்பாடு
என் தோல்வியை நான்
மாத்திரம் கொண்டாட நேர்கிறது
ஊரின் ஓரத்தில்
இருக்கிற டாஸ்மாக்கில்...                      

Tuesday, August 3, 2010

குடிகாரப்பசங்களுக்கு

சிலர்.. அல்லது நிறையப்பேர்கள், மதுவிற்கும் புகைப்பதற்கும் சுலபத்தில் அடிமையாகி விடுகிறார்கள்... படிப்பிலும், நல்ல தொழில் செய்து பொருள் ஈட்டுகிற வல்லன்மையிலும் கெட்டிக்காரர்களாக  இருக்கிற மிகப்பலரும் கூட அந்த இரண்டிற்கும் ஏனோ தன்னை இழந்தவர்களாகி விடுவது சற்று வேதனை அளிப்பதாக உள்ளது...
இந்த பிரபஞ்சத்தில் இருப்பது கொஞ்ச காலம், அதற்குள்ளாக அனைத்த விஷயங்களையும் அனுபவித்து விட வேண்டும் என்கிற சித்தாந்தம் வேறு சொல்கிறார்கள்...  
மது, மாது, புகை இதெல்லாம் இல்லாமல் .... அது என்ன வெறுமை வாழ்க்கை.. அப்படி வாழ்ந்து என்ன ஸ்பெஷலாக வாரிக்கட்டிக்கொண்டு போகப்போகிறார்கள் என்கிற நய்யாண்டி வேறு செய்கிறார்கள், நல்லவர்களைப்பார்த்து இந்தக் களேபரத்தில் ஈடுபடுகிற புத்திசாலிகள்....
குடும்பத்தில்  மனைவி பிள்ளைகள் சங்கடப்படுவார்களே என்கிற பிரக்ஞை கூட நாளடைவில் காணாமல் போகும் அளவிற்கு தன் சுய மரியாதை இழக்கிறார்கள்...
இதற்கான காரணங்களை உடன் இருக்கும் நண்பர்கள் என்று சொல்லலாம், அல்லது தனது மன உளைச்சல்களும் இன்ன பிற பிரச்சினைகள் என்று ஏதேனும் ஒன்றை சுலபத்தில் கை காட்டி விடலாம்.. ஆனால் , இப்படியான தன்மைகளால் தன் வாழ்க்கை சின்னாபின்னமாகி விடுகிற சூழ்நிலைகளை ஏன் உணர மறுக்கிறார்கள், அல்லது உணர்ந்தும் அது குறித்து அக்கறை கொள்ளாமல் இருக்கிறார்கள்... வியப்பாயிருக்கிறது...

நான் புகைக்கத்துவங்கி, மற்றும் மது அருந்தத்துவங்கி இருபது வருடங்களுக்கும் மேலாகி விட்டது... ஆனால் அவை யாவும் என் அடிமை தானேயன்றி அவைகளின் அடிமை நான் இல்லை... ஒரு நாளைக்கு ரெண்டொரு சிகரெட்டோ அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு சிகரெட்டோ தான் நான் புகைக்கிறேன்.. அதே போல மதுவும் ஆடிக்கொரு முறையும் அம்மாவாசைக்கொரு முறையும் சாப்பிடுவேன்... அந்த போதையில் பிறரை காயப்படுத்த முனைவதில்லை... பற்பலரும் மற்றவர்களை காயப்படுத்துவதை குறிக்கோளாக்கி அருந்துகிறார்கள்.. தெளிந்து மன்னிப்புக்கேட்கிறார்கள்.... தேவையா இது?..   
அமிர்தமே என்றாலும் அபரிமிதமானால் ஆபத்து தான்... விஷமே கூட அளவாக மருந்து போல உட்கொண்டு வந்தோமேயானால் அது ஆரோக்கியம்...
-- இதென்னவோ நான் புதிதாக ஒன்றும் கண்டுபிடித்து எழுதவில்லை, இப்படி என் போன்ற அனுபவத்தில் உள்ள பலரும் இது போல தங்களது கருத்துக்களில் வெளிக் காண்பித்துள்ளனர்.. . ஆனால் அடிமையாகிக்கிடப்பவர்கள் இதைப்படித்து திருந்துவது என்பதெல்லாம் ஆயிரத்தில் ஒன்று நடந்தால் கூட அதிசயம் தான்..
ஆனால் என் போன்ற நல்லவர்கள் {?} இப்படி எல்லாம் பீற்றிக்கொண்டு தான் இருப்போம்... ப்ளோகில் ஏதாவது எழுதி நிரப்ப வேண்டும் அல்லவா??

Sunday, August 1, 2010

what is this

நிகழக்கூடும்
என்கிற அனுமானங்களும்
எதிர்ப்பார்ப்புகளும்
அனிச்ச்சையை
துவம்சம் செய்பவை..

எதிர்பார்த்து நிகழ்கிற
சந்தோஷங்களைக்காட்டிலும்
அனிச்சையாய் நிகழ்பவை
ஆவேசம் நிரம்பியவை...

அனிச்சை யதார்த்தமானது,
ஆனால் கொன்று விடும்
ஆற்றல் கொண்டது...!!

பொய்கள்..

சலனமில்லா
சூறாவளி..
கர்ஜிக்கிற கற்சிலை...
மௌனிக்கிற
மாலை நேரப்பறவைக்
கூட்டம்...                                   
ஆர்ப்பரிக்கிற
தோட்டத்துப் பூக்கள்..

என் மீது
உயிரையே வைத்துக்
காதலிக்கிற நீ..!!

Saturday, July 24, 2010

குப்பைக்கூடை

மேஜை மீது
பரவிக்கிடக்கிறது
குப்பைகள்..
மேஜையின் அடியில்
காலியாகக்கிடக்கிறது
குப்பைக்கூடை...                                        
உழைக்க தயார் நிலையில்
இருக்கையில்
வேலை கொடுக்காத
எஜமானனைப்பார்த்து
சலித்துக்கொள்வதைப்போல
தோன்றுகிறது
குப்பைக்கூடையின் வெறுமை...

மேஜை மீது இருப்பதில்
குப்பை எது,
தேவைப்படுவது எது
என்று பகுக்க முடியாத
வேலைப்பளுக்களும்
வேலை முடிந்த பிறகாக
சோம்பல்களும் ஒருங்கிணைந்து
கொள்கிறது அன்றாடம்...

சரி , குப்பைக்கூடையை
திருப்திப்படுத்தலாம் என்று
ரெண்டொரு காகிதங்களை
கசக்கி சுருட்டி வீசினாலோ
பிற்பாடு, அதே காகிதங்கள்
அவசியமாகி -- அந்தக்
கசக்கல்களை நிதானமாகப்
பிரித்துப்பார்க்க  வேண்டியாகி
விடுகிறது அனேக சமயங்களில்....
-- அதனாலேயே
உத்தரவாதமாகக் கசக்கி
வீசி விடலாம் என்கிற குப்பைகள்
கூட எந்நேரமும் மேஜையின்  மீது....!!

என் அலுவல் அறையின்
அந்தக்குப்பைக்கூடையை
நான் பார்க்க நேர்கையில் எல்லாம்
அதென்னவோ அந்தக்கூடை
வேலை இல்லாத குற்ற உணர்வில்
சங்கடப்படுவாதாகவே
எனக்குத் தோன்றிக் கொண்டிருக்கிறது..!!!

சுந்தரவடிவேலு..

Monday, July 12, 2010

அங்கலாய்ப்புகள்

"இன்னும் கொஞ்சம் முயன்றால் சிறப்படையலாம்..."
என்னில் அறிவு வந்துவிட்டது என்று நான் அபிப்ராயித்த பிராயம் தொட்டு நான் செய்கிற அனேக காரியங்களுக்கான அனுமானங்களும் அபிப்ராயங்களும் அறிவுரைகளும் கிட்டத்தட்ட எல்லாரிடமும் இதுவாகத்தான் இருந்து வருகிறது..
ஆனால் நான் எந்தக்கால கட்டத்திலும் அந்த இன்னும் கொஞ்சம் முயல்வதே இல்லை.. அல்லது முயன்றும் அது என் கைவரப் பெறுவதில்லை... அதற்கான திறமைகளும் அதிஷ்டங்களும் சிலருக்குத்தான் சுலபத்தில் வாய்க்கிறது..
எனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை என்று சொல்லி தப்பிக்க விரும்பவில்லை.. அந்தத்திறமையும் இல்லை என்பது தான் யதார்த்தம்..

உழைத்து வருகிற வியர்வைக்கும்
உப்புசத்தில் வருகிற வியர்வைக்கும் 
உடல் ரீதியாக எந்த மாறுதல்களும் இருக்க வாய்ப்பில்லை..
ஆனால் மன ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் நிறைய மாறுதல்கள் உண்டு..

அதே தன்மையோடு தான் இயல்பான  திறமைகளோடு எழுதி பெயரும் புகழும் பெறுபவர்களை ஒப்பிட்டு , என் மாதிரியான கத்துக்குட்டிகள் தனக்கு அது மாதிரி ஏன் வாய்க்கவே இல்லை என்று வீண் அங்கலாய்ப்பு படுவதும் ஆகும்...

நன்றி    

Monday, July 5, 2010

அனிச்சையாய் நிகழ்வன...

முன்பென்
காமம் தூண்டிய 
அவளது முலைகள்
இன்றென்
குழந்தையின் 
பசிக்கான அமுதசுரபி 
ஆகி விட்டன...

-பாசம்  பிரதானமாகி
 விட நேர்கையில் எல்லாம்
காமம் பின்னடைவாகிறது...

பதுங்கிப் பாய்கிற புலிகுணம்
கொண்டது காமம்...                                      
பிற்பாடு பாசம்
புள்ளி மானாய் துள்ளி மறையும்..

ஆனபோதிலும் 
புணர்ச்சியின் போதிலாக 
சற்றே
குழந்தையின் அழு குரல் 
கேட்டாலும் என்னை                
தூரம் தள்ளிப்போட்டு 
விடுகிறாள் என் மனைவி..

Friday, July 2, 2010

காலங்கள்

இன்பங்களும் துன்பங்களும்
இனம் புரியாமல் அடர்ந்து 
கிடக்கின்றன .. எதிர்காலங்களில்..!!
நம் எல்லா தீர்க்கதரிசனங்களையும்
புறந்தள்ளி விட்டு 
காலம் அதன் போக்கில்                         
நம் சூழல்களை அரங்கேற்றும்.. 


சற்றும் எதிர்பாராத
எவ்வளவோ விஷயங்கள் 
சுலபத்தில் நிகழக்கூடும்..
நடக்கும் என்று ஆணித்தரமாக 
நம்பியவை நாமதேயமே அற்று
நசுங்கிப்போயிருக்கும்...
உச்சியில் நிறுத்தும்
புரட்டிப்போடும் 
அதல பாதாளத்தில் கொண்டு சேர்க்கும்..

அசை போட அதிகம்
உபயோகப்படும் இறந்த காலம்..
நிகழ்ந்து முடிந்த சுவாரசியங்களும் 
தர்ம சங்கடங்களும் , சுகதுக்கங்களும்
இன்னபிறவும் ..

மேற்சொன்ன 
இறந்த எதிர் ஆகிய 
எல்லா காலங்களை
அலசவும் 
மிகவும் பயன்படுகிற
நிகழ்காலம் மாத்திரம் 
ஏனோ பிரக்ஞை அற்றே
கிடக்கிறது அநேகம் பேர்களிடமும்...!!


சுந்தரவடிவேலு..

Sunday, June 27, 2010

அழுகி வரும் வேர்கள் .....

மக்கள் தொகை
பெருகி விட்டது...,
ஆனால் மக்கள்
மனசுகள் சுருங்கி              
விட்டன...                    
சுயநலம் என்பது
யதார்த்த நிகழ்வாகி
விட,
பொது நலமிகளை
விநோதமாயும் அந்நியமாயும்
பார்க்கிறார்கள்....

பிரச்சினை தனக்கு
நேர்கையில்
பிறருதவி எதிர்பார்ப்பவர்கள்
பிறர் பிரச்சினைகள்
குறித்து கிஞ்சிற்றும்
பிரக்ஞை அற்று நகர்கிறார்கள்..!!

நம் வீட்டுக்குழந்தைகள்
கூட தொலைக்காட்சிப்
பெட்டிகளையும் கணினிகளையும்
மாத்திரமே உற்ற சிநேகிதர்களாக
வரித்திருக்கின்றன...
கார்ட்டூன் பொம்மைகள்
மீது வைத்துள்ள அக்கறை கூட
உடன் பிறந்த தம்பி தங்கையிடம்
இருக்குமா என்பது சந்தேகமே...
-- இப்படி எலும்பு சதை ரத்தம்
மீதான பாச பந்தங்கள் எல்லாம்
பஞ்சு திணித்த பொம்மைகள் மீதும்
நிழலாடுகிற மாய பிம்பங்களின் மீதுமே

இந்தத்தலைமுறை குழந்தைகளுக்கு..!!
--தொட்டில் பழக்கமே
இப்படி என்கிற போது, சுயநலம்
சகஜமாகி விடுவதும் சகஜம் தானே???



சுந்தரவடிவேலு...

Wednesday, June 23, 2010

செம்மொழி மாநாடு

கோவை செம்மொழி மாநாடு குறித்து பற்பலரிடமும் பற்பல கருத்துக்கள் நிலவி வருகின்றன... முன்னர் இது குறித்து அவதூறாக பேசி வந்த எனது நண்பன் ஒருவன் இப்போது இந்த மாநாடு குறித்து பெருமை பேசுகிறான்.  ஓர் அரசாங்கம் இப்படி ஒரு திருவிழா நடத்துகிற யோகியதை கூட அற்று இருக்க வேண்டுமா , ஆகவே இது ஒரு ஆரோக்யமான மாநாடு , நம் மாநிலத்தின் உயர்வுகளை , அதன் தொன்மையான வரலாறுகளை, அன்று பெருவாழ்வு வாழ்ந்து மாண்ட மாமன்னர்கள் குறித்த அற்புதமான பதிவுகளை பறை சாற்றுகின்றன.. இப்போதைய தலைமுறைகள், தமிழின் தமிழர்களின் வீரியத்தை கண்டு உணர்வதற்கான பிரம்மாண்டமான வாய்ப்பென்று அபிப்ராயிக்கிறான்..
அரிசி பருப்பு விலைகளை கட்டுப்படுத்துகிற வக்கற்று ஆடம்பரம் செய்கிற ஒரு அரசாங்கம், கொடுங்கோலாட்சி நடத்திக்கொண்டிருப்பதாக அன்று சீறி சினந்து குதித்தவன் இன்றைய தேதியில் தன் கருத்தை இப்படி மாற்றி சொல்வதன் விபரீதம் புரியாமல் திணற நேர்கிறது..
எத்தனையோ இயற்கைப்பேரழிவுகள் நடக்கின்றன, பல கோடிகள் நஷ்டமாகின்றன, ரயில் விமானம் பேருந்து என்று ஒன்று விடாமல் அன்றாடம் விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணமுள்ளன, உயிர்சேதம் ஆகின்றன..அவர்கள் குடும்பத்திற்கு நஷ்டஈடு என்று பல கோடிகள் அளித்துதவ வேண்டியுள்ளது, அப்படியெல்லாம் செலவாகிறது.. ஒரு அற்புத விழா நடந்தேற ஆகும் செலவுகள் குறித்து நாம் ஏன் கவலை பட வேண்டும் என்று விளக்கம் சொல்கிறான்..
நேற்று மாநாடு சென்று திரும்பிய பலரும் BC என்றும் AC என்றும் பல கருத்துக்கள் வைத்துள்ளர்கள்.. அதாவது before conference  , after conference ...
அந்த பிரம்மாண்டத்தை காண்பதற்கே கண்கள் கோடி வேண்டும் என்றும், வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்றும் அரற்றுகிறார்கள்..
அவரையும் இவரையும் அப்படி சொன்னார்கள், இப்படி சொல்கிறார்கள் என்று பிதற்றுகிற நான் ?... நானும் அதே குழப்பங்களில் தான் இருக்கிறேன்..
நாளைக்கு மாநாடு சென்று வந்தால், நானும் இனி அபிப்ராயங்களை மாற்றி கொள்வேன் என்றே தோன்றுகிறது... பார்ப்போம்..        

Thursday, June 17, 2010

இருட்டுச்சூரியன்..

நான் உன் சூரியன்..
உன் மலை மார்புகளுக்குள்
புதையுண்டு
அஸ்தமிக்க விரும்புகிறேன்
அன்றாடம்...
அக்கினிக்குஞ்சாய்                                               
என்னைப்பராமறிக்கிறாய்..!
-உன் மார்புச்சூட்டில்
இந்த சூரியன் குளிர்காய்கிறது..!!

உன் காதல் ஒத்தடத்தில்
ஏன் ஏக்க வீக்கம் இளைக்கிறது..,
ஆனால் காமம் பருத்து விட்டது...
காமம் இளைப்பதற்கான
எந்த ஒத்தடங்களையும்
மறுக்க விரும்புகிறேன்..!

உன்னில் புதையுண்ட பிற்பாடு
மறுபடி மீள்வதற்கான
எந்த ஆயத்தங்களையும்
மேற்கொள்ளப்பிடிக்கவில்லை..!
உன்னில் அஸ்தமித்த பிற்பாடு
மறுபடி வெளியேறி
உதிக்கிற உத்தேசமே
அற்றுப்போய் விட்டது..!!

உன்னுள் உள்ளொளி பாய்ச்சி
எல்லா சுடர்களையும்
உன்னிடமிருந்தே உலகம்
கடன் பெறட்டும்..!!
சூரியனைக் கபளீகரித்து
விட்டதாக உன்னை சொல்வார்கள்,
சொல்லி விட்டுப்போகட்டும்..!         

சுந்தரவடிவேலு..

Saturday, June 12, 2010

அழகிய தமிழ்மகன்கள்...

நடக்கவிருக்கிற செம்மொழி மாநாடு எந்த வகையில் மக்களை அவர்களது வாழ்க்கைத்தரங்களை மேம்படுத்தப்போகிறது ? அப்படி மேம்படுத்துகிற வல்லன்மைகள் கொண்டதா இந்த மாநாடு... ?
பற்பலரும் பற்பல அனுமானங்களை, கருத்துக்களை பேச்சிலும் கட்டுரைகளிலும் வெளிப்படுத்திக்கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது..
பருப்பு அரிசி விலைகளை கட்டுப்படுத்துகிற யோக்யதையை காணோம்... இத்தனை கோடிகளைகொட்டி மாநாடு நடத்துகிறார்களாம்...
-- இப்படித்துவங்குகிற புலம்பல்கள், பல தினுசுகளில் நீள்கிறது..!!

தமிழை முன்னிறுத்துகிற பிரயத்தனங்கள் திமுகாவிற்கு இன்றோ நேற்றோ விளைந்ததன்று.. இது ஆரம்ப காலம் தொட்டு நிகழ்ந்து வருகிற கூத்து... என்ன செய்தும் தமிழ் அப்படி ஒன்றும் பிரதானமாக எதிலும் கோலோச்சுவதாகத் தெரியவில்லை... கருணாநிதியே தன் பிறந்த நாளை ஜூன் 3  என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டால் தான் தற்குறி கூட புரிந்து கொள்ள முடியுமே தவிர மாசி மாசம் என்றோ ௨௦ ஆம் தேதி என்றோ சொன்னாலோ எழுதிககாட்டினாலோ ஒன்றும் விளங்கிக்கொள்ளப்போவதில்லை... ஒரு நிறுவனத்தில் வேலைக்கு apply செய்வதற்கு கூட resume  ஆங்கிலத்தில் இருந்தால் தான் நாகரீகம் என்கிற போக்கு abcd   ஒழுங்காகத் தெரியாதவனுக்குக் கூட..
தமிழ்நாட்டில் வசிக்கிற நாம், ஆங்கிலத்தில் கையெழுத்து போடுவதை தானே பிரமாதமாகக் கருதுகிறோம்... எத்தனை பேர்கள் செக் லீபிலும், இன்னபிற முக்கிய ஆவணங்களிலும் தமிழில் signature செய்கிறார்கள்?.. அவர்களையும் அறியாமல் ஆங்கிலம் தான் அங்கே தவழ்கிறது..
எத்தனை மாநாடுகள் இந்த மாதிரி நடந்தாலும் இதே தலையெழுத்து தான் நம் மாநிலத்துக்கு... தமிழ் உயரிய மொழிதான், உன்னத மொழிதான்.. தமிழ் போலொரு இனிதான மொழி இல்லைதான்.. நன்கு பண்பட்ட மொழிதான்... ஆன போதிலும் தமிழ் தமிழ் என்று அழுபவர்களும் சிரிப்பவர்களும் ,  தன்னை உயர்த்திக்காண்பிக்கவும், பகுத்தறிவாளனாக உணர்த்தவும்  ரகசியமாக ஆங்கிலம் பேசவே  ஆசைப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை, சத்யம்..

சுந்தரவடிவேலு..          

Monday, June 7, 2010

ஹைக்கூ குக்குக்கூ....

நதியில்
சலனங்களின் சிறகடிப்பில்
நிலவே குலுங்கிற்று..

விலாவாரியாக
விளக்க முயல்கிறேன்.,
ரத்தினச்சுருக்கங்கள் குறித்து..

சமரச முயற்சிகளே
சண்டையின் சாயலில்
பயமுறுத்துகின்றன...


சுந்தரவடிவேலு..

Monday, May 31, 2010

Indonesian baby on 40 cigarettes a day

கடவுளுக்கு சங்கடம்....

பிறவி
அறுக்கச்சொல்லிய
என் சென்ற பிறவியின்
முறையீடும் அதற்கான
இறைவனின் ஒப்புதலும்
இந்தப் பிறவியிலும் கூட
எனக்கு ஞாபகம் இருக்கிறது..

மறுபடியுமான என்
இப்பிறப்பு குறித்து
இறைவனுக்கே குற்ற உணர்வு
போலும்.. ,
என்னை நாஸ்திகனாக்கி
கோவிலுக்குள்ளேயே
வராமலிருக்க செய்து விட்டான்..!

ஆனபோதிலும் இன்றைய
நவீனங்களை தரிசிக்கிற
அற்புத சந்தர்ப்பங்களை வழங்கவே
எனக்கு அவன் இந்தப்
பிறப்பை மறுபடி
நிர்ணயித்திருப்பதாக அனுமானித்து
நன்றி தெரிவிக்க
-என் நாத்திக தன்மையை ஒழித்து-
கோவில் புக நேர்ந்தது.. 

திரை போட்டிருந்தார்கள்....

இன்னும் இறைவன்
தர்மசங்கடத்தில் இருப்பதாகவே
தோன்றியது எனக்கு..!!


சுந்தரவடிவேலு...         [இது சிறு கற்பனையே.. ஆஸ்திகர்கள் பொறுத்து அருள்வார்களாக]

Saturday, May 29, 2010

நாம் சுயநலமிகள்...

பெருவாரியான மனிதர்களுக்கு பிறர்க்கு உதவி புரிகிற போக்கே சற்றும் இல்லை என்பது மிகவும் வருத்தமும் கேவலமும் நிரம்பிய ஓர் தன்மை என்றே சொல்வேன்..
மிகவும் சுயநலமாய் இருப்பதை பெரிய லாபமாக கருதத்துவங்கி விட்டார்கள்... உதவுவதையே சங்கடமாயும் நஷ்டமாயும் உணர்கிறார்கள்... தனக்கு ஒரு பிரச்சினை வருகிற போது மாத்திரம் பிறரின் உதவிகளை எதிர்பார்க்கவும், கேட்டுப்பெறவும் துணிகிறார்களே தவிர, பிறரது பிரச்னைகளை தூசாக மதித்து மறைந்து விடுகிறார்கள்...
பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டவன் மேற்கொண்டு என்ன ஆவான் என்கிற கற்பனைகளுக்குகூட  மனசில் இடம் கொடுக்காமல் அவர்களுடைய சந்தோஷங்களுக்கான பிரயத்தனங்களில் மூழ்கி விடுகிற கொடூர தன்மைகளுக்கு இலக்காகி விடுகிறார்கள் மனிதர்கள்....

சென்ற வாரம் ஒரு நாள் நான் கோத்தகிரி செல்ல நேர்ந்து திரும்ப நேர்கையில் நான் பயணித்து வந்த பேருந்து பின் சக்கரம் பஞ்சராகி நின்று போனது..சேட்டுப்பெட்டை என்ற இடத்தில்... கீழே விரைகிற எல்லா வாகனங்களும் தவித்து நிற்கிற எங்களைப்பார்த்து ஹோ ஹோ வென்று கத்திக்கதறி ஆர்ப்பரித்து கிண்டலடித்து விட்டுத்தான் செல்கிறார்களே தவிர கொஞ்சம் சில சில பேர்களாக ஏற்றி அடிவாரம் சேர்க்கலாம் என்கிற எண்ணம் எவர் வசமும் இல்லை...
மற்றொரு பஸ்ஸில் ஏற்றி விடலாம் என்கிற கண்டக்டரின் முயற்சிகள் கூட தோற்ற வண்ணம் தான் இருந்தன.. எல்லா பஸ்களும் நிரம்பி வழிந்தும் , டீலாவில் விழுந்து விடுவது போலவும் தான் வந்து கொண்டிருந்தன... அது போக உள்ளிருக்கிற பயணிகளும் நிற்காமல் போகச்சொல்கிறார்கள்...
கடைசியில் ஓர் ஜல்லி லாரி காலியாக வரவே, சிலர் லிப்ட் கேட்டு மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்தோம்.. இன்னும் சிலர் என்ன ஆனார்கள் எப்படி வந்து சேரப்போகிறார்கள் என்கிற கவலையோ பயமோ எங்களுக்குக்கூட இல்லை..
அப்போது தான் யோசித்தேன்... தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் புரிந்தும் புரியாமலும் எல்லா மனிதர்களுக்குள்ளும் அடியாழத்தில் சுயநலம் தான் ஆணிவேராக இருந்து எல்லாரையும் இயக்கி வருகிறதென்று..!!

இந்தத்தன்மையில் இருந்து விலகி  சில ஞானிகளும் பெரிய உள்ளமும் கொண்ட மாமனிதர்களும் விரல் விட்டு எண்ணும் அளவு இருக்கலாம்... ஆனால் அநேகம் மனிதர்கள் மிகவும் கேவலமான மன அமைப்பில் தான் வாழ்ந்து வருகிறோம் என்பது மறுக்க முடியாத மறைக்க முடியாத உண்மை ..


சுந்தரவடிவேலு..             

Saturday, April 24, 2010

மெளனமாக புறக்கனிக்கப்படுகிறேன்?

என் திறன்களுக்கான
தளங்கள் யாவும்
தகர்த்தெறியப்பட்டு விட்டதாக
அனுமானிக்கிறேன்..!


மறுபடி
புணரமைப்பதற்கான
சாஸ்வதங்கள் அறவே இல்லை
என்பதாக என்
அவநம்பிக்கைகள்
பிதற்றுகின்றன..!!


இந்த விளைவுகள் யாவும்
காலம் நிகழ்த்தியதாக
என் சோம்பேறி மனது
தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறது..

திறன்கள் சோபையுறும்
என்று நம்பிய காலங்களில்
அதற்கான தளங்களை
அமைக்கிற
பொறுமையும் திறமையும்
அற்றிருந்தேன்..

--இன்று மெனக்கெட்டு
தளங்களை அமைத்து
என் திறன்களை அரங்கேற்றப்
பார்க்கையில் ....
-என் திறன்களும்
தளங்களும்
நவீன காலத்தின்
கேலி சித்திரங்களாக
இருப்பதாய் உணர்கிறேன்..!!

இன்றைய நவீனங்களுடன்
கை கோர்க்கிற திராணி
இழந்து கிடக்கிறது என் தன்மை..,
--இதனோடு தான்
பயணித்தாக வேண்டுமென்கிற
கட்டாயத்தை செருகி விட்டது
காலம்..!

-என் ஊனத்திற்கு
ஒரு மரத்திலான தடியே
போதுமானதாயிருக்கையில்
கால்களுக்கு சக்கரம் மாட்டி
உருள சொல்கிறது

காலம், சமூகம் எல்லாம்...



விந்தி விந்தியாவது
வாழ்ந்து விடப்பார்க்கிற என்னை
விரைந்தோடி மறைந்து விடு
என்கிறது நவீனம்...!!
                                                                ..
                                         
சுந்தரவடிவேலு...

காதலின் வசம்..

உன்னைக் காண்பதற்கான
ஆயத்தங்களோடு நானிருந்தாலும்
இப்போதைக்கு-
ஒத்திப்போடுவதற்கான                       
சந்தர்ப்பங்களே நிகழ்ந்த
வண்ணமாயுள்ளது...

உன் விலாசமெனக்கு
புரிபடாமல் இருந்தாலும்
உன்னை சுலபத்தில்
கண்டு பிடித்து விடுவேன்
என்கிற நம்பிக்கை
தீவிரமாயுள்ளது..!

முழு முகவரிகள் தெரிந்து
வைத்திருக்கிற நபர்களைக்
கூட நான் சந்திக்க
முயல்வதில்லை..

உன் நினைவுகளினூடே காலம்
கழிப்பதென்பது சற்று தர்ம சங்கடம்
தான் என்ற போதிலும் --- காலம்
உன் நினைவுகளைப் பிரதிபலித்தவாறே
என்னை ஓர் சுகந்த ஹிம்சையில்
செலுத்துகிறது..!!

பூ தடுக்கி
கல்லின் காலில் 
ரத்தம் வழிவதாக, 
நிலவைப் பார்த்து 
சூரியனுக்கு கண் கூசுவதாக...
--ஆயிரம் கவிதைகள்
எழுத முடிகிற என்னால்
--உன் பற்றி
எழுதும் போது மாத்திரம்
எந்தப்பொய்யும்
சொல்ல முடிவதில்லை...!!      ..
சுந்தரவடிவேலு...

Thursday, April 22, 2010

அனுப்பப்படாத காதல் கடிதங்கள்....

என் மதிப்பிற்குரிய காதலிக்கு...

நான் எழுதுகிறேன்.. நீண்ட இடைவெளிக்குப்பிறகு எழுதுகிறேன்..
சற்றும் எதிர்பாராமல் கனவில் நீ வந்ததால் உடனே உள்ளொளி பொங்கி விழிப்புத்தட்டியது...
இருண்டுபோய் பிசுபிசுத்து ஒட்டிக்கிடக்கிறது உடலில் உயிர்... எந்த நேரத்திலும் பிய்ந்து போவதற்கான சாஸ்வதங்களுடன்...
ஷணத்தில் வந்து மறைந்த உனது முகம், கனவு முகம் என் உயிரை, என் வாழ்வை மறுபடி புதுப்பிக்கக்கிடைத்த  அங்கீகாரம் போல,  அத்தனை ஆசுவாசத்துடன்- நேரம் கூடப்பாராமல் உடனடியாக பேனா எடுத்து எழுதி விடத்தூண்டிய அவரசரம் ஆச்ச்சர்யமளிக்கிறது..
வெறுமனே வந்தாய்.. வார்த்தை கூடப்பேசவில்லை.. அதற்குள்ளாக விழிப்பு வேறு வந்து விட்டதே..பிறகு? உன்னைப்பார்த்தான பிறகு உறங்கிக்கொண்டிருக்க முடியுமா... அது கனவு தான் என்ற போதிலுமே கூட?.. அதுவும் கனவு என்பது விழித்த பிறகல்லவா தெரிகிறது!!

-கனவு மாதிரியே விழிப்பும் வந்து போவதாயில்லை..
விழிப்பு, அடர்ந்து படர்ந்து கிடக்கிறது.. கனவு மாதிரி சுகமாயில்லை விழிப்பு.. கவலை மை இழுக்குகிறது.., ஏக்கச்சேற்றை வாரி இறைக்கிறது ... வாழ்வை பயமுறுத்துகிறது...
தைரியங்களையும் சந்தோஷங்களையும் நீர்க்குமிழிகளாய் வைத்திருக்கிறது விழிப்பு..!!

விழிப்பு வாழ்வெனில், உறக்கம் மரணமோ?
ஆனால் மரண பயமே கூட விழிப்பில் தான் வருகிறது.., மற்றபடி உறக்கத்தில் வாழ்க்கை குறித்த பயங்கள் எல்லாம் எதுவும் வருவதில்லை...!!

நமஸ்காரம் காதலியே..           ..
உன்... பிரியமானவன்?

Tuesday, April 20, 2010

தத்துவப்பித்தனின் தத்துபித்துக்கள்

எவரேனும் நம்மை கவனிக்கவேண்டும், நம் இருப்பில் பேரானந்தமும் நம் இல்லாமையில் கடும் துயர்களும் அனுசரிக்கப்பட  வேண்டும் ... மிகப்பெருமையாக நாம் எல்லாராலும் பேசப்பட வேண்டும்,  எந்தத்தருவாயிலும் நம் பருப்பு வேகாமல் போய் விடக்கூடாது என்கிற அதீத பிரக்ஞைகள் ஒவ்வொருவர் வசமும்...
சின்ன தோல்விகள் கூட பெரிய கௌரவகுறைச்சல் போல மிகவும் சிரமப்படுகிறார்கள் பலரும்.. வெற்றி மட்டும் தான் வாழ்க்கை என்கிற எழுதப்படாத சட்டங்களுள் சிக்கி தன் பயணங்களை மிகவும் சிரத்தை எடுத்து வாழ்கிற போக்கு ஒரு கோணத்தில் ஆரோக்யமாக உணரப்பட்டாலும் இன்னொரு கோணம், அந்தத்தன்மை ஏதோ ஓர் நோய்வாய்ப் பட்டதாகத் தான் புரிகிறது..
வெற்றி தோல்வி சகஜம் என்கிற மனப்பாங்கு வேண்டும்.. ரெண்டு விஷயங்களையும் அனுபவமாக, சுலபமாக எடுத்துக்கொள்கிற பக்குவம் வேண்டும்..
வெற்றியில் மட்டுமே கிறங்கிப் போயும் தோல்வியில் துவண்டு போயும் .. கிடப்பது அறிவீனம்...

இன்னும் சொல்ல முயல்கிறேன்...
நீங்கள் எல்லாம் ஓடி ஒளிந்து கொள்கிற வரை ..!!       

Wednesday, April 14, 2010

நிகழ்காலம் சுவாரஸ்யப் படுவதில்லை

வயோதிகம்-
எந்த இழையில் வந்து
இளமையைக் கபளீகரிக்கிறது
என்கிற புரியாத
புள்ளி விபரங்களோடு......

நரையைத்திரையிட
ரசாயனம் தேடும் கிழமனது..
கருப்பாய் நடிக்கத்துவங்கும்
நரைமுடிகள்...
-செயற்கை கருமை
குறித்து அடியாழக்
குற்ற உணர்வொன்று...!!

நிகழ்காலமென்பது
எல்லா ப்ராயங்களிலுமே
தொந்தரவாகவே தான்
உணரப்படுகிறது..,
16  வயதிலுமே கூட
கடந்து போயிருந்த
12 வயது குறித்த
கவலைகள் தான்..
திரும்ப அந்த வசந்தங்கள்
வரவே வராதே என்கிற
அநியாய ஏக்கங்கள்...
--அதனைக்காட்டிலுமான
வசந்தங்கள் தற்போதைய
அனுபவத்தில் இருந்தாலும்
கடந்து போன அந்த
எளிய வசந்தங்கள் கூட
வனப்பாகப் புரிபடுகிற ஒரு மாயை
புதிர்தான்...
வனப்பாகப் புரிபடுகிற அந்தப்புதிர்
ஓர் மாயை தான்...!!

சுந்தரவடிவேலு..   

Tuesday, April 13, 2010

not opening...

due to my system slow, nowadays i can,t post any ideas.. sometimes, it seems ok.. but most of the times, it is in dead. my network displays that a packets, which are sending frequently but not receiving properly.. i complained for airtel broadband persons and they all are blaming my computer and it must be fully want to be get serviced by my service person.. but my person blaming on airtel and they must solve it..
the only suffering innocent laughing man is me and i don,t know how to rectify this idiotic problem.. i don,t know further to complain with whom and so, i am calm nowadays.. very rarely pages are opening ... now also accidentally it opens and at this interval, i m complaining my ridiculous problems to you all.. please if any technical persons comes to my blog and read this, please convey me about this headache dilemma...


thanking you
sundaravadivelu.v

Friday, April 9, 2010

மலரினும் மெல்லிய... காமம்

வெள்ளிகிழமைகள் கோவில்கள் போவதுண்டு... சுவாமிகள் மீதான பக்திகளும் கும்பிட வரும் நறுமணப் பெண்கள் மீதான ஓர் இனம் புரியாத கவர்ச்சிகளும் கலவையான ஓர் அற்புத மனநிலையில் ஒவ்வொரு வெள்ளியும்.... சில நேரங்களில் கர்ப்பகிரஹத்தை கவனிக்கத்தவறி விடுவது கூட உண்டு., கும்பிட வரும் பெண்டிர்களை தரிசிக்கத்தவறுவதே இல்லை...
காமத்திற்கான பிரத்யேக நிறைவு வயது என்று எதுவும் இல்லை என்பது அறிவியலாக படிக்கையில் ஆனந்தமாக உணரப்பட்டாலும், நம்மை ஈர்த்த ஒரு சிட்டை , விவஸ்தை அற்று ஓர் கிழம் உரசிக்கொண்டு நிற்கிறதென்றால் வருது பாரு ஒரு சூடு... அறுபது டிகிரி செல்ஷியஸ் நு நினைக்கிறேன்...
பெரியவர் என்கிற போர்வையில் பலரும் தன சபலங்களை சற்றும் இங்கிதமே அற்று அரங்கேற்றுகிற காட்சிகளை பல பொது இடங்களிலும் கவனித்திருக்கிறேன்...

தன் மகளை ஒத்த வயதுள்ள பெண்களைக் கண்டாலும் கூட கண்களில் காமம் கொப்பளிக்க இருப்பதைப்பார்க்கையில் ak 47 எடுத்து ஒரு பிடி பிடிக்கலாம் என்று தோன்றும்...ஓர் இயற்கை உந்துதல் இது என்கிற நியாயம் ஒரு புறம் இருந்தாலும் , அப்படி என்ன ஒரு வெறி என்கிற அசூயை ... ஓர் தெரு நாயைப்போல...!!
நாமும் இப்படி தன்னை இழந்த ஓர் அஜாக்கிரதை தருணங்களை எதிர்காலமொன்றில் தரிசிக்கிற சூழல் ஏற்படக்கூடும்.. என்னைப்போலவே எவராவது  கவனித்து ப்ளாக் எழுதி மானத்தை வாங்கக்கூடும்... எது எவ்வாறாயினும் மலரினும் மெல்லிய அந்தக்காமத்தை துஷ்ப்ரயோகம் செய்கிற கேவலமான ஓர் தன்மைக்கு நான் இலக்காகி விடக்கூடாது என்கிற பிரார்த்தனை ஒவ்வொரு கோவில் பிரவேசத்தின் போதும் எனக்குள் ஏற்படாமல் இல்லை....

சுந்தரவடிவேலு....

Tuesday, April 6, 2010

பார்ப்போம்.. மேற்கொண்டு ..

அவ்வப்போது நாலாந்தரமாக என் எழுத்துக்களும் கருத்துக்களும் அமைந்து விடுவதுண்டு.... நாகரீகமாக சொல்லப்பட வேண்டிய ஓர் விஷயத்தை சேரப்பியது போல நாறி விடுகிறது என் தொனிகள்... அது எனக்கே தர்மசங்கடங்களையும் சற்று குற்ற உணர்வுகளையும் ஏற்படுத்தி விடுவதுண்டு...
எழுத்துக்கள் செயல்கள் யாவற்றிலுமே ஓர் மேன்மையை மென்மையை தெளிவை முன்னிறுத்த வேண்டும் என்கிற தீராத தாகம் கொண்டவன் என்ற போதிலும் என்னையும் மீறி உணர்ச்சிக்கு அடிமையாகி சண்டக்கோழி போல உளறி கிளறி கொட்டி விட வேண்டிய தன்மைக்கு இலக்காகி விடுகிறேன்...

இந்த எனது போக்கினை மாற்றி ஓர் நேர்மையான எழுத்தாளன் ஆகி விட ஆசை என்ற போதிலும், செய்முறைக்கு சாத்யமற்றுத்தான் போகும் என்று அனுமானிக்கிறேன்...
சொல்ல வருவதில் நேர்மையும் தெளிவும் வீரியமும் கருத்துக்களும் அடங்கி இருப்பது தான் ஓர் நல்ல எழுத்தாளனின் சீரிய அடையாளம்.., அல்லாமல் கத்துக்குட்டி போல நினைத்ததை எல்லாம் விவஸ்தைகள்  அற்று , யதார்த்தம் என்று நினைத்து கிறுக்கிக் கொண்டிருப்போமேயானால்  அதற்குரிய அவமானங்களை  சந்திக்கவும் தயார்நிலையில் இருக்க வேண்டியது தான்..

பார்ப்போம்.. மேற்கொண்டு ..   சுய பரிசோதனை

Monday, April 5, 2010

sorry brothers...

ரஹ்மான் இளையராஜா குறித்து நான் தெரிவித்திருந்த கருத்துக்களை எவரும் ஆமோதிக்கவில்லை, மாறாக சங்கடங்களைத் தெரிவித்திருந்தனர்.. இது எனது சொந்த கருத்து, என் கருத்து சுதந்திரத்தில் தலையிடும் உரிமை எவர்க்கும் இல்லை என்று முட்டாளைப்போல சண்டைக்கு நிற்க எல்லாம்  எனக்குத்தெரியாது... என் கருத்தில் பிறர்க்கு உடன்பாடில்லை என்றால் நானும் அதனை உடனே தவிர்ப்பதையே ஆரோகியமாக கருதுகிறேன்... எவர் மனதையும் புண் படுத்துவது எனது நோக்கமன்று...

அதனால் தான் அந்த போஸ்டே என் ப்லோகிளிருந்து ரிமூவ் செய்யப்பட்டுவிட்டது... மேற்கொண்டு எழுதுவதை ஜாகிரதையாக எழுத வேண்டும் என்கிற பொறுப்பு வருகிறது...
ஆனபோதிலும் ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன்... எனக்கு இளையராஜாவின் பாடல்கள் என்றால் உயிர்... அவர் குறித்தும் அவர் இசை குறித்தும் எனது நண்பர்களோடு விவாதிக்கயிலும் கூட ... புறம் நின்று கவனிப்பவர்களுக்கு, என்னவோ பெரிய சண்டை நடப்பது போல இருக்கும்...

பேசினால் மட்டும் இல்லை, எழுதினால் கூட பிரச்சினை வந்து விடும் போல இருக்கிறது..
நன்றி...

--சுந்தரவடிவேலு...

Sunday, April 4, 2010

angaadit theru..

அங்காடி தெரு திரைப்படத்திற்கு ஆனந்தவிகடன் 47 மதிப்பெண்கள் தந்திருப்பது ஆரோக்யமாக படுகிறது... சென்று பார்க்க வேண்டும் என்கிற உந்துதலை ஏற்படுத்தி இருக்கிறது.. வசந்தபாலனின் வெயிலை சொக்கிப்பார்த்திருக்கிறேன்.. நல்ல படைப்பாளிகள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் தமிழுக்கு...
துரதிர்ஷ்டமாக அந்த மாதிரியான படைப்புகளும் படைப்பாளிகளும் அடையாளம் தெரியாமல் போய் விடுகிற குரூரம் அவ்வப்போது நிகழாமல் இல்லை., ஆன போதிலும் ஓர் நல்ல சக்தி ஒன்று அவர்களை அங்கீகரித்து விட வேண்டியது காலத்தின் லாவகத்தில் நடைபெறும்...

மூடு வாயை

ஒரு முறை
உன்னை அனிச்சையாக
தரிசிக்க நேர்ந்ததன் பொருட்டு
---ஒவ்வொரு முறையும்
அதே அனிச்சையை
எதிர்பார்க்கிறேன்...!!

என் அவநம்பிக்கைகளை
கிழித்துப்போட்டது உன் புன்னகை..
என் நிராசைப் பட்டியல்கள்
கசக்கி வீசப் பட்டன..
இனி வாழ்வு நெடுக
வசந்தம் பீடு நடை போட
ஆயத்தமாகி விட்டதாக
அடித்து சொன்னேன் நண்பர்களிடம்..!!

உள்ளார்ந்து வேரூன்றி கிடக்கின்றன
சந்தேகங்கள் இன்னும்...
உன் புன்னகை கிழியக்கூடும்,
என் வசந்தங்கள் அழியக்கூடும்.., -
--உன்னிடம் பேச ஆரம்பித்த
மூன்றாம் நாளே இதை சொல்ல
வாய் திறந்தேன்..!!

கிடைத்திருக்கிற கிஞ்சிற்று
நிம்மதியையும்
கோழி கழுத்தை திருகி எறிவது
போன்ற முட்டாள்தனத்தை
எதற்கு செய்ய வேண்டும்
என்கிற காதல் அறிவு எனக்கு...

சொல்வதற்கில்லை.,
இந்த முறை காலத்திற்கு
என்னை ஏமாற்றும் விருப்பம்
இல்லாதிருக்கலாம்..!!

சுந்தரவடிவேலு...

Saturday, April 3, 2010

nothingness..வெறுமை...

வெறுமையின் வீச்சில் ரசனைகள் பொசுங்கின... காலத்தின் மௌன ஓலமாய் வெறுமை ஓர் பேரண்டமாய் வியாபித்து வார்த்தைகளுள் பிடிபடாத ரகளைகளை மனசுள் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது...
கானலின் தகிப்பு போல ஜொலிக்கிறது வெறுமை... நிழலைக்காட்டிலுமான சூனியத்தில் வெளிச்ச வேஷம் தரித்துக்கொண்டு மினுமினுக்கிறது வெறுமை... ஏதோ புயலுக்கான  சமிக்ஞை போன்றும் புலனாகிறது, பெரிய ரணகளம் நிறைவுற்றதற்கான தடயம் போலவும் பாவனை காட்டுகிறது வெறுமை...

அதன் தன்மையில் விக்கித்து நிற்கையில், அதன் தீவிரத்தில் உடைந்து கிடக்கையில், அதன் நுட்பத்தில் மூர்ச்சையாகிக்கிடக்கையில்...
சுற்றி இருப்பவர்கள் எல்லாரும் சலித்துக்கொள்கிறார்கள்.., சாணி மாதிரி சும்மா கிடப்பதாக அபிப்ராயம் தெரிவிக்க அவசரப்படுகிறார்கள்... வெறுமை யினின்று மீள்வதற்கான வழி வகைகளை செய்ய வக்கற்று, வார்த்தைகளால் சாகடிக்க முயன்று பார்க்கிறார்கள்...

நீர்வீழ்ச்சி போலவும் உணரப்பட்டது வெறுமையை... எரிமலை குழம்பாகவும் உணரப்படுகிறது... எல்லா பரிமானங்களுக்கான  யோக்யதைகளுடனும் வெறுமை இருப்பது சற்று வினோதம் என்ற போதிலும் , அதனின்று வெளிப்பெயர்ந்து ஓர் தொழில் முனைபவனாக , எதையேனும் சாதிக்கிற தாகம் கொண்டவனாக , குறைந்த பட்சம் ஓர் நாய்க்கு அடிமையாக இருப்பதற்கான முஸ்தீபாவது கொண்டிருந்தால் தான் பெற்றவளும் பிறந்தவளும் கட்டியவளும் மதிக்கிற சூழல் இந்த சமூகத்தில்..

சுந்தரவடிவேலு..

Thursday, April 1, 2010

same like that....

எத்தனை தீவிரமாகக்
கண்காணித்தும் தப்பி
விடுகிற திருடன் போல
--உன் முகம்
உன்னைப் பார்க்காத
போதெல்லாம் மறந்து
விடுகிறது...

ஐந்தாம் வகுப்பிலேயே
1330 குறள்களையும்
கரதலப்பாடமாக
மனனம் செய்து அசத்திய
என் அசாத்ய திறன்கள்
எங்கே ஓடி ஒளிந்தனவோ
புரியவில்லை...

இப்படியெல்லாமா காதல்
என்னை மக்குப்பயலாக்க வேண்டும்?
--குட்டிக்கொள்கிறேன் என் மண்டையை நான்..

எதிரில்  நீ தரிசனம் தருகிறாய்..
மறந்து போகும் போதெல்லாம்
குட்டிக்கொள்வது என் பால்ய
ப்ராயந்தொட்டு வந்த வழக்கம்..
அப்படி குட்டுகையில் ஞாபகமும்
வந்துவிடும்...

அப்படியே தான் உணர்கிறேன்
இப்போது குட்டிக்கொள்கையில்
நீ எனக்கு தரிசனம் தந்ததையும்..!!

சுந்தரவடிவேலு....

Tuesday, March 30, 2010

dirty ego..

என் அகந்தை
என்  ரசனை சம்பந்தப்படாதது..
அது  அநியாயமான
வார்த்தைகள்  கொண்டது...
கவிதையாக  பெயர்க்க
யோக்யதை அற்றது..
மிகவும்  அநாகரீகமானது
என்  அகந்தை...
காலில் பீ அப்பியது போல.., 
உண்ணும்  சோற்றில் யாரோ
எச்சில் உமிழ்ந்தது போல..!!

மிகவும்  வீரியமாய் 
புடைத்து வருகிற பலவீனம் அது..
என் இயல்பேயான எளிமைகளையும்
மென்மைகளையும்                     
ஷணத்தில் துவம்சம் செய்து விடுகிற
சூறைக்காற்று..
மேற்கொண்டு என் இயல்புகளை
வெளிக் கொணர்ந்தாலும் 
சந்தேகிக்க வைப்பது ..


இனி முடிவு செய்து விட்டேன்..
என் அகந்தைக்கு முடிவு 
கட்ட வேண்டும் என்று..
ஆனால் இது எத்தனையாவது
தடவை என்பது தான் தெரியவில்லை..

சுந்தரவடிவேலு..




 

Sunday, March 28, 2010

nyaanangalum icchaigalum.. [FOUR-4]

எதை போகஸ் பண்ணினா சர்குலேஷன் ஜாஸ்தி ஆகும்னு நம்ம தமிழ் பத்திரிகைகளுக்கா தெரியாது..? இப்போதைக்கு நம்ம நித்யானந்தா இருக்கற போது வேற பிரச்சினை எல்லாமே ஜுஜுபி தான்.. ஆ ஊ நா பெட்டிக்கடைகளில் நோட்டீசா தொங்கறது நம்ம நித்தி தான்...

சொல்லப்போனா நக்கீரன் ஜூ வி குமுதம் ரிப்போர்டர் எல்லாமே நித்யாவுக்கு ராயல்டி தொகையே தந்தாகணும்... அவரும் தான் அதுக்கு தகுந்தாற்போல வெடுக்குனு உண்மையை ஒத்துக்கறாரானா அதுவும் இல்லை.. பாலியல் ஆராய்ச்சின்னு ஒரு டுபாக்கூரு நியாயம் அளக்கறாரு... அப்புறம் கட்டாயம் நேர்ல வந்து விளக்கம் அளிப்பாராமா... கிளிண்டனுக்காவது ஒரு ஜோடி ஷூ மாத்திரம் போய் விழுந்துச்சு.. இந்த அன்னாருக்கு பிஞ்ச செருப்புகளே போய் போய் விழும்...
என்னை கேட்டா மெடிக்கல் கான்பரன்ஸ் மாதிரி ஒரு ஓரமா அங்கன இருந்து ஒளிஞ்சுக்குனு பேசினா மச்சான் கொஞ்சம் அடி ஒதைல இருந்து தப்பிப்பார்னு தோணுது.. இந்த டெக்னிக் எல்லாம் நித்யாவுக்கு அத்துபடி.. நாம சொல்லியா தரணும்?

ஆமாய்யா .. பண்ணிட்டேன்.. மேற்கொண்டு இப்பிடி ஆகாம பார்த்துக்கறேன்... மன்னிக்க இஷ்டம் இருந்தா மன்னிச்சுடுங்க, இல்லையா .. என்னை ஆன்மீகத்திலிருந்து தள்ளி வச்சிடுங்க.. ஒரு ஓரமா நான் பாட்டுக்கு இருந்திட்டுப்போறேன்.. " என்று சொல்லித்தொலைந்திருந்தால் கூட கொஞ்சம் யதார்த்தமாக இருந்திருக்கும்... நாயை உட்டுத்தொலைங்கடா என்றாவது மக்கள் ஒதுங்கி இருப்பார்கள்... இப்படி எதுவும் அற்று மறுபடி அதையும் இதையும் பேசி சொதப்பி, இப்ப ஆளாளுக்கு டின்னு கட்ட ரெடியா நிக்கிறாங்க.. எப்பிடி சமாளிப்பியோ நித்யா..
சொல்ல முடியாது.. மறுபடி நீ மக்களை வசியம் பண்ணி அல்வா தந்தாலும் தந்திடுவே.. .. எத்தனை அடிபட்டாலும் இன்னும் நம்ம மக்கள் புதுசு புதுசா பைனான்சு கம்பெனில காசை உட்டுக்கினு அதுக்கான சர்டிபிக்கட்டை வேற டிவி பேட்டியில சிரிச்சுக்கினே காட்டராணுக.. அதே மாதிரி உன் கிட்டயும் மறுபடி வந்து உய்ந்தாலும் சொல்றதுக்கு இல்லே..சும்மா நீ இல்லாத போது உன்னை செப்பல்ல அடிக்கனும்னு குதிப்பான்களே தவிர , நீ எதனாச்சும் ஒரு புது புருடா உட்டீனா உன் பாதத்தையே கழுவிக்கூட குடிப்பாங்க..

சுந்தரவடிவேலு.. திருப்பூர்.

Thursday, March 25, 2010

அபத்தங்கள் குறித்த பட்டியல்..

கடனை வாங்கும்
போதுள்ள பவ்யம்
மேற்கொண்டு
இருப்பதில்லை
வாங்கியவர்களுக்கு..
கொடுத்தவன்
திரும்பப்பெறுவதற்கு
மேற்கொள்ளப்பட
வேண்டியதாகி விடுகிறது
பவ்யம்...

இருப்பதைப்பிடுங்கும்
ஆற்றல் நம்மை
சுற்றிலும் ஊடுருவிக்
கிடக்கிறது..,
கொடுக்கிற நம்
ஆற்றலைக்கூட
கொச்சைப்படுத்துகிற
பிச்சைக்காரர்கள்...
வழக்கத்துக்கு மாறாக
ரெண்டொரு நாட்கள்
சில்லறை இல்லை
என்று சொல்வதையே
அவநம்பிக்கை பிதுங்கப்
பார்ப்பர்...
சுற்றி இருப்பவர்களினிடத்து
நம்மைக் கேவலப்படுத்துவது
போல செய்வதில் அவர்களுக்கு
ஓர் அலாதி ஆனந்தம்...

இறைஞ்சுதல் என்பதே
ஈனத்தனம்...
கடவுளினிடத்து பக்தன்
இறைஞ்சுவது , கோவிலுக்கு
வெளியே இறைஞ்சுகிற
பிச்சைக்காரனை விட
ஓர் கேவலமான ,
தன்மானம் இழந்த செயல்
என்பேன் நான்...

இருக்கிற நிலைப்பாட்டிற்கு
நன்றி தெரிவிப்பதே
நாகரீகம்...
நல்லது மாத்திரமே
நடக்க வேண்டும் என்று
கெஞ்சுவதும்,
நடக்காமற்போயின்
இறைவனைத்தூற்றுவதும்
மகா அநாகரீகம்..!!

சுந்தரவடிவேலு.. திருப்பூர்/

Tuesday, March 23, 2010

ஞானங்களும் இச்சைகளும்..{3}

ஏதோ மக்கள் தியானம் யோகா என்று சற்று தங்கள் உடல் நிலைகளையும் மனநிலைகளையும் சரி வர பராமரித்து வந்தனர்... அதற்கெல்லாம் ஆப்பு வைத்தது போல நம்ம நித்யா அந்த மாதிரியான உயர்ந்த விஷயங்களையே சந்தேகப்படும் படி செய்து விட்டார்...
ஞானி பொய்யனாகலம் .. ஞானம் பொய்மை ஆகாது..!

நித்யாவின் இயக்கத்தில் இருந்து வந்த பல லட்ச பக்தர்களுக்கு தாங்கொணா தர்மசங்கடங்களை விளைவித்த பெருமை நித்யாவையே சாரும்..

இனி மற்ற ஞானப்போர்வையில் அக்குரும்புகள் செய்து வந்த ஆசாமிகள் எல்லாம் ஜரூரான ஜர்ரூரில் உஷாராகி, தங்களுக்கு சிசுருஷைகள் செய்து வந்த பணிப்பெண்களை அப்புறப்படுத்தி விட்டு வயோதிகர்களை நியமிக்கிற அவசரத்தில் இறங்கியிருப்பார்கள் என்று அனுமானிக்கிறேன்...

அவர்களெல்லாம் நினைப்பார்கள் : நித்யாவாவது ஒரே ரஞ்சிதாவோடு தான் சிக்கினார்.., நமக்கு எவனாவது காமெரா வச்சிருந்தானுகன்னா ? அடங்கோப்பா சாமி.. தப்பிச்ச்சமடா.. இனி மேற்கொண்டாவது காவி வேட்டி காவி சட்டையை கழட்டாமப்பார்த்துக்கணும்... கக்கூசுக்குள்ள போனாக்கூட ஜெட்டி கழற்றப்ப காமெரா இருக்கானு பார்த்துக்கணும்...
படுபாவிப்பசங்களா இருக்கானுக .. அதவிடக்கொடுமயடா சாமி இந்தக்காலத்து டெக்நாலாஜி...

இனி நித்யா பக்தர்கள் எல்லாம் மாற்று சாமியார்களை தேடிப்போகிற சூழல் உருவாகி விட்டது.. அல்லது இந்தக்கருமாந்திரம் இதோட போகட்டும், இனி நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு கெடக்கலாம்... இன்னொரு பக்கம் போயி அந்த சாமியாரு வேற டைப்ல வேட்டு வச்சார்னா தாங்கவே முடியாது, இந்த தொந்தரவுக்கு நாமலே கூட சாமியாரா ஆகித்தொலஞ்சிடலாம், லேடீஸ் ஒன்லி பஸ் போல ஜென்ட்ஸ் ஒன்லி சாமியார் ஆகிட்டா கொஞ்சம் safe என்றாலும் இந்த ஹோமோசெக்ஸ் பிரச்சினை வேறு இருக்கிறது.. .

கோ எட் மாதிரி நடத்துனம்னா அதுக ஜோடி ஜோடியா அட்டூழியம் பண்ணிட்டு நம்மள போட்டுக்கொடுத்துரும்கள்...

ரிஸ்க் இல்லாம எந்த பிசினஸ்மே இல்லை தான்... அல்வா கடை ஆகட்டும் ஆன்மிகம் ஆகட்டும்...

சமாளிச்சுத்தான் பார்ப்போமே... அப்புறம் கடைசியா வேணும்னா மாட்டிக்கிலாம்.., அதுக்குள்ள நாலு சங்கதிகளைப் பண்ணிக்கிலாமில்ல...!!

சுந்தரவடிவேலு...


Saturday, March 20, 2010

ஞானங்களும் இச்சைகளும் {இரண்டு}

நித்யானந்தா பற்றி ஓர் நபர் சொல்கிறார் : நித்யா செஞ்சது என்னவோ பெரிய குற்றம் போலவும், மனித குலமே செய்யக்கூடாத ஒன்றை செய்து விட்டது போலவும், எல்லாரும் லபோ லபோ என்று அடித்துக்கொள்வதை பார்க்கையில் மிகவும் அபத்தமாக இருக்கிறது... நான் ஒன்றும் அவருடைய சீடன் இல்லை, அவரது யோகாக்களையும் பின்பற்றுபவன் இல்லை.. இன்னும் சொல்லப்போனால் இந்த சம்பவத்திற்கு பிறகு தான் இப்படி ஒரு ஞானி{?} இருப்பதே எனக்குத்தெரியும்...
ஆனாலும் நம்ம மக்கள் ரொம்பத்தான் இது குறித்து தாளித்து விட்டார்கள்.. நக்கீரனும் ஜூவி யும் செம சேல்ஸ்..

நான் சொல்கிறேன்: அவர் படுக்கட்டும்.. வேண்டாம் என்று சொல்லவில்லை.. ஓர் புது காதலியுடன் , நியாயமான காதலுடன்.. அதனை விடுத்து ஓர் நடிகை மீது இந்த ஞானிக்கு என்னய்யா மோகம்?.. பலருடன் தன்னை பகிர்ந்து கொண்ட ஓர் பெண் இவள் என்று தெரிந்த பிறகு கூட அவளோடு என்னய்யா சல்லாபம்?.. எச்சிலை சுவைக்கிற சராசரி நபர் தான் இந்த நித்யானதா என்பது புரிகிறது.. ஓர் ஞானப்போர்வையில் இருந்து கொண்டு இப்படி உள்ளே முடை நாற்றத்துடன் இருந்து வந்தது கண்டனத்திற்குரியது... ஏதோ ஒரு காமெரா வைத்ததால் இந்த சின்ன நாற்றம் தெரிந்திருக்கிறது ... காமெரா வைக்காத முந்தைய இரவுகளில், எந்தெந்த நடிகைகளோ... எந்தெந்த வேசிகளோ....

பாலியல் குறித்த ஆராய்ச்சி... காமமும் ஒரு வகையான யோகா என்றெல்லாம் பிதற்றுவது கேனத்தனமாக உள்ளது...

இன்னும் சிலர் சொல்கிறார்கள் : அவருடைய ஞான முறைகளை மாத்திரம் அனுசரிக்கச்சொல்லி... அவருடைய அந்தரங்கம் அவர் சம்பந்தப்பட்டது...
-- இப்படி சொன்னால் உடனே ஓகே என்று ஓடியா விட முடியும் நித்யா பின்னாடி?
என்னவோ ஆளாளுக்கு அபிப்ராயம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்...

இனி என்ன சொல்லியும் நித்யா பருப்பு வேகப்போவதில்லை.. அம்புட்டுத்தான்... பணத்தையும் சொத்தையும் வேண்டுமானால் இன்னும் அவர் சம்பாதிக்க முடியும்.. ஆனால் இனி பழைய புகழோ பெயரோ கனவிலும் பலிக்காது...

கொடுமை என்னவென்றால் , இனி செக்ஸ் படம் எடுக்கிற மலையாளத்தான்கள் , நித்யானந்த சாமியாரின் உண்மைக்கதை என்று விளம்பரம் செய்து ஷகிலாவையும் கும்தாஜயும் பாடாய் படுத்துவார்கள்... கடுமையான கண்டனம் தெரிவித்த நாம் எல்லாரும் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு காலைக்காட்சிக்கு queue கட்டி நிற்போம்...
கியூவில் நம்ம நித்தியாவேகூட மப்டியில் நிற்பார் என்றாலும் ஆச்சர்யம் ஒன்றுமில்லை..

பார்ப்போம்.. முடிந்தால் போகப்போக இன்னும் ஏதாவது ஓதுவோம்...


சுந்தரவடிவேலு.. திருப்பூர்/

இளையராஜா ரஹ்மான்...

இளையராஜா இருக்கிற வரை பாடல்களும் இசையும் தெளிவையும் பொலிவையும் கொண்டிருந்தன... இன்றைக்கு எல்லாமே டுபாக்கூராக உள்ளன.. விஸ்வநாதன் காலத்தில் tms . சுசீலா போலவும், இளையராஜா காலத்தில் spb . ஜானகி போலவும் இன்று ஒரு உருப்படியான பாடகர் இல்லை, பாடகி இல்லை.. அல்லது இருந்தும் கூட அவர்கள் போல தெளிவான அடையாளத்தோடு இல்லை... ஓர் மிக பிரம்மாணடமான குழப்பத்தை வெளிப்படுத்தி அதிலே சுலபத்தில் வெற்றியும் பெற்ற இசை அமைப்பாளர் ar . ரஹ்மான் என்றே சொல்வேன்.. slumdogmillionaire எண்பது சதவிகிதம் பேர்கள் இன்னும் பார்ததாகத்தெரியவில்லை.. ஆனால் அதிலே பங்காற்றிய ரஹ்மானுக்கு ஆஸ்கார் கிராமி என்று குவிகின்றன... இளையராஜாவின் திறமையில் 25 சதவிகிதம் ரஹ்மானுக்கு இருந்தால் அதிகம்... ஆனால் கண்டிப்பாக சொல்வேன்.. ரஹ்மானின் பத்து சதவிகித அதிர்ஷ்டம் கூட இளையராஜாவுக்கு இல்லை...
சுந்தரவடிவேலு.. திருப்பூர்...

Friday, March 19, 2010

ஞானங்களும் இச்சைகளும்...

நான் காலையில் நடைபயிற்சிக்காக என் ஊரின் ஒரு பள்ளி மைதானத்திற்கு செல்வது வழக்கம்.. பல வகையறாக்களில் அங்கே மனித குழாம்கள் ஒன்று கூடி நான்கைந்து பேர்களாகவும் ஏழு எட்டுப்பேர்களாகவும் சாரை சாரையாக எதையேனும் அரற்றியபடி அளவளாவிக்கொண்டே நடந்து கொண்டிருப்பார்கள்.. நடை பயிற்சியை காட்டிலும் அந்த உரையாடலும் அதன் கார சாரங்களுமே முக்கியம் போல மிகவும் சுவாரஸ்யமாக பேசிய வண்ணம் "ஏதோ" நடப்பார்கள்.. நான் எல்லா குழாம்களோடும் அவ்வபோது சேர்ந்த வண்ணம் நடப்பேன்.. கரண்ட் இஷ்யு என்னவோ அதனை அலசுவதில் கில்லாடிகள் மனிதர்கள்.. ஒரு ஜூனியர் விகடனோ நக்கீரனோ ஏற்படுத்தாத ஒரு வசீகரத்தை அவர்களின் விவாதம் ஏற்படுத்தி விடும்... பேச்சு சுதந்திரங்களும் கருத்து சுதந்திரங்களும் காற்றிலே மிதந்து என் காதுகளுக்கு விருந்தளிக்கும்.. என் கருத்தை ஒத்து எவரேனும் பேசும் பட்சத்தில் நானும் அதற்கு உடன்பாடாக என் பங்களிப்பிருக்குமே தவிர என் கருத்துக்களுக்கு எதிர் கருத்துக்கள் த்வநிக்கிற நபர்களிடம் நான் அளவு மீறாமல் பார்த்துக்கொள்வேன்..

இந்த ஒரு வார காலமாக சுவாமி நித்யானந்தா புராணம் ஓயாத அலையாக எங்கு பார்த்தாலும் பாய்ந்த வண்ணம் உள்ளது...
நானும் எனது பங்கிற்கு எதையேனும் சொல்ல முயல்கிறேன்..

தொடரும்...

Tuesday, March 16, 2010

விழித்தவாறு கனவுகள்...

என் பிம்பத்தைப்
பிரதிபலிக்க மறுக்கிற
கண்ணாடி...
என் நிழல்களைப்
புறக்கணிக்கிற
வெளிச்சங்கள்...
-நான் சுவாசிக்க
மட்டும் காசு கேட்கிற
வெட்டவெளி...
நான் நீந்துவதை
நிறுத்தச்சொல்கிற
நீர்நிலைகள்...

இப்படி அவஸ்தையான
கனவுகள்...,
துணுக்குற்று விழித்தாலோ
மின்சாரம் தொலைந்து
மின்விசிறி நின்றிருக்கிறது..!
வியர்த்து நனைந்த
அவஸ்தையினூடே
மறுபடி உறங்க பிரயத்தனிக்கிறேன்...!!

அடுத்து வந்த கனவில்
கவர்ச்சி நடிகையை கற்பழிக்க
ஓடுகிறேன்...
ஓட்டத்தினூடே
முன்போல மீண்டும் இந்த முறை
துணுக்குற்று விழித்துவிடக் கூடாதே
என்று மிகவும் பயக்கிறேன்...!!!

சுந்தரவடிவேலு..

Thursday, March 11, 2010

விண்ணை தாண்டி வருவாயா? விமரிசன முயற்சி..

என் இளம்ப்ராயங்களில் என்னை நான் ஒரு சினிமா பிரியன் என்று சொல்வதைக்காட்டிலும் சினிமா வெறியன் என்று சொன்னால் தான் பொருந்தும் அளவுக்கு கண்ட படங்களையும் கண்டபடிக்குப்பார்த்து பொழுதுகள் ஒட்டித்தீர்த்திருக்கிறேன்.... ஆனால் இன்றைய சூழ்நிலைகளும் மனநிலைகளும் அவ்வித போக்குகளுக்கு அறவே முழுக்குப்போட வைத்து விட்டன.. அன்றைக்காவது படிக்கவேண்டியது இருந்தும் கூட அதனைத்தவிர்த்து படங்கள் பார்த்து வந்தேன்.. இன்று அந்த வேலையும் இல்லை, ஆனால் ஏனோ படம் பார்க்கிற மனோபாவம் முற்றிலும் பஸ்பமாகிவிட்ட முரண்பாடு எனக்கே ஓர் இனம் புரியாத தன்மையை எனக்குள் ஊடுருவச்செய்திருக்கிறது...

மிக நீண்ட இடைவெளிக்குப் பிற்பாடு விண்ணைத்தாண்டி வருவாயா படம் பார்த்தேன்.. இதற்கு முன்னர் அயன் பார்த்ததாக ஞாபகம்.. அதற்கும் முன்னர் தசாவதாரம் பார்த்தேன் என்று நினைக்கிறேன்...

இன்னதென்று கதையை சொன்னால், சப்பை மேட்டராகத்தான் தெரியும்.. கீழே வீட்டில் இருக்கிற சிம்பு , மேல் வீட்டில் இருக்கிற த்ரிஷாவை லவ் செய்கிறார்.. புறக்கணிப்பது போல ஆரம்பித்து , பிற்பாடு சிம்புவின் காதலை த்ரிஷா ஏற்றுக்கொள்கிறார்.. பெண் வீட்டார் கிறிஸ்டியன்.. சிம்பு ஹிந்து... வழக்கமான கிறிஸ்துவர்களுக்கே உரிய எதிர்ப்பு.. விடாபிடியாக துரத்திக் காதலிக்கிற தமிழ்பட கதாநாயகன் .. காதல் எதுவும் வேண்டாம், நட்பு போதும் என்று நாயகி அபிப்ராயம் சொல்ல நாயகனும் அதனை ஏற்க, அடுத்த ஐந்து நிமிடங்களில் நாயகனுக்கு நாயகி தன உதடுகளை கடிக்க சொல்லி அனுமதி அளிப்பது .. நட்பு காதலாவது, காதல் காமத்தை நெருங்குவது...

இப்படியான ஓர் வழக்கமான தமிழ் டுபாக்கூர் கதையை .. கவுதம், எ. ஆர்.ரகுமான், ஒளிப்பதிவாளர் பரமஹம்சா.. மற்றும் பலர் சேர்ந்து படத்தை அற்புதமான கவிதையாக்கி தவழ விட்டிருக்கிறார்கள் என்றால் தகும்...
அழுத்தமான வசனங்கள், காட்சிகளுக்கு புது மெருகேற்றுகிற பின்னணி இசை.... சொக்க வைக்கிற சில பாடல்கள்..

பொதுவாக நான் சிம்பு படங்களை பார்த்ததில்லை, டிவியில் ஒளிபரப்பாகிற பாடல்களை மாத்திரம் பார்த்து கண்டபடிக்கு திட்டித்தீர்ப்பேன்.. இவனெல்லாம் ஒரு நடிகன், இவனுக்கு ஒரு பாட்டு... ராஜேந்தரை விட பய்யன் லூசான் என்றெல்லாம் ஓர் ஆணித்தரமான அனுமானங்களை சிம்பு குறித்து வைத்திருந்தேன்...
--ஆனால் அவை அனைத்தையும் பொடி தவிடாக்கி விட்டான் சிம்புப்பயல் என்று தான் சொல்ல வேண்டும் இந்தப்படத்தில்... இவ்வளவு முதிர்ந்த இலக்கிய ரீதியான உணர்வுகளை மிக சுலபத்தில் வெளிக்கொணர்ந்திருக்கிற அவரின் திறன் பாராட்டத்தக்கது.. ஆனால் என்ன, இந்த தன்மையை தொடர நமது இயக்குனர்கள் விட மாட்டார்கள், மறுபடி அதே குத்துப்பாட்டு ஆட வைத்து பையனை வீண் செய்து விடுவார்கள்..,
சிம்புவை பாராட்டினால் எவ்வளவு தகுமோ அதே அளவு தகும் த்ரிஷாவை பாராட்டினாலும்... மிக நேர்த்தியான சூழ்நிலைகளுக்கு ஏற்ற பாவனைகளை பிரதிபலித்து அசத்தி இருக்கிறார் த்ரிஷா..

முடிவு சற்றே குழப்பினாலும், கொஞ்சம் பொறுமை காத்து கவனிப்போமேயானால் , அங்கு இழையோடுகிற ஓர் சோகமும் அதிர்ச்சியும் ரொம்பவே நம்மை திக்கு முக்காட செய்து விடும் என்பதில் ஐயம் எதுவுமில்லை...!!

--சுந்தரவடிவேலு...

வெளிச்சம் வெறுப்பவன்...

இருள் எனக்குள் விளைவித்த விந்தைகள் வெளிச்சங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஓர் தன்மை... இருள் என்பது சுயம்பு.. அதன் அடர்த்தியையும் அதன் பிரம்மாண்டத்தையும் , எந்த வெளிச்சத்தினாலும் அடக்கவோ நிரப்பவோ சாத்யமில்லை..
எல்லைகளற்று பரவி என்றும் ஓர் நிதர்சனமாய் சத்தியமாய் எங்கெங்கிலும் பரவி வியாபித்துக்கிடக்கிறது இருள்... வெளிச்சங்கள் இயற்கையின் பிரயத்தனங்களிலும் மனிதர்களின் செயற்கை பிரயத்தனங்களிலும் தற்காலிகமாக வந்து போகிற விருந்தாளியே யன்றி .. இருளைப்போன்று என்றென்றும் வீற்றிருப்பதில்லை..

கருமை படர்ந்த இந்த இருட்டு சாம்ராஜ்யத்தில் சூரியன் ஓர் சிறு பொறி... எத்தனை கோடி சூரியன்களையும் சுலபத்தில் கபளீகரம் செய்கிற வல்லன்மை இருட்டொன்றை தவிர வேறெந்த சக்திகளுக்கும் சாத்யமில்லை.

விழிகள் மூடி
நிற்கிறேன்...
இருளை தரிசிக்க.!!
சூரியனை விட
இருட்டுக்கூசுகிறது
எனக்கு..

வெளிச்ச்சத்திருடன்
திறக்கச்சொல்லி
தட்டுகிறான்
என் விழிக்கதவுகளை..
--கதவுகள் திறக்கிறேன்..
அற்ப அற்ப விஷயங்களை
அடையாளம் காண்பித்த
வண்ணம் இருந்தன வெளிச்சங்கள்..!!!


சுந்தரவடிவேலு..

Thursday, March 4, 2010

ஒ..நித்தியானந்தா... வாழ்க உமது ஆன்மீகத்தொண்டு...

அனேக சாமியார்களின் ரகசிய அறைகள் இப்படித்தான் இருக்கக்கூடும், ஆனால் அங்கெல்லாம் காமெராக்கள் பொருத்தப்படவில்லை..அவ்வளவே..
போதனைகளை மாத்திரம் அட்சரம் பிசகாமல் அள்ளி வழங்குகிறார்கள்.., பிற்பாடு உள்ளே போதைகளில் திளைக்கிறார்கள்...?

ஏதோ சின்ன வயசு.. நீங்க மட்டும் அவரு ஆசிரமத்துக்கு பொண்டாட்டி புள்ளைங்களோட பிக்னிக் மாதிரி போறீக, வாரீக.. அவரு சும்மா மைக்க புடிச்சுட்டு நாயம் அளந்துட்டு மட்டும் இருந்தா போதுமா? வேற எதையாவது புடிக்கனும்னு அவருக்கும் ஆசை வரக்கூடாதா என்ன!!

இன்னும் ஏதேதோ சொல்லத்தோணுது... ஆனா ஒன்னும் சரிவர பிடிபட மாட்டேன்குது... பார்ப்போம்.. மேற்கொண்டு ஏதாவது இதுபத்தி எழுத முடியுதான்னு ... அதுக்குள்ள வேற மேட்டர் வந்துருச்சுன்னா இதனோட சூடு போயிடும்... சரி சரி, நாம் என்ன பெரிசா சூடா சொல்லிக்கிழிச்சிடுறோம்... அவன் அவன் சூடா செஞ்சே கிழிக்கிற போது...

Monday, March 1, 2010

அந்தரத்தில் சுவடு தேடுபவர்கள்..

சில விஷயங்கள் மனசுள் அனாவசியமான ஓர் படிமானம் அடைந்து விடுகிறது..
என் மோட்டார் பைக்கின் எண்கள் ஓர் நீங்கா படிமானம்.. வங்கியின் அக்கவுண்ட் நம்பர்., எ.டி.எம் நம்பர், பான்கார்ட் , காஸ் கனெக்ஷன் ... இப்படி பட்டியல்கள் நீளும் ஒவ்வொருவருக்கும்...
ஆனபோதிலும் பைக்கின் நம்பர் ஓர் மந்திரம் போல மனசுள் பதிந்து விடுகிறது.. நம் பைக்கின் எண்கள் கொண்ட பிற வாகனங்களை என்றேனும் அசந்தர்ப்பமாக பார்க்க நேர்கையில் ஓர் மௌனமான மனசிலிர்ப்பு.. அந்த அதே எண்கள் கொண்ட வாகனம் ஓட்டுகிற நபரிடம் ஓடிச்சென்று எனது நம்பரும் இதே என்று சொல்லி விட வேண்டும் போன்ற கற்பனை அவசரம்.. ஆனால் அப்படி கேனத்தனமாக செய்ததில்லை...
யந்திரத்தன்மையுடன் நகர்கிற இந்த வாழ்க்கையில் அவ்வப்போது இம்மாதிரியான அல்ப சந்தோஷங்களை அனுபவிக்கிற ரசனைகள் எத்தனை பேரிடம் உள்ளது என்பது ஓர் கேள்விக்குறி தான்... இரவு வானத்தில் நிலவைக்கூட என்றோ ஒரு நாள் அதிசயமாக பார்த்து, என்னவோ நிலாவையே இவுரு தான் கண்டுபிடித்த மாதிரி கவிதையெல்லாம் வேற எய்துவாக.... அமாவாசை அன்றைக்கு எங்கடா நெலாவக் காணோம்னு வேற பொலம்பி சாகடிப்பாக...

காசு பணம் ஒன்றே குறிக்கோளாக உள்ள எவ்வளவோ பேர்கள், தன வீட்டுக் குழந்தையின் புன்னகையைக்கூட தரிசிக்கப்பிடிக்காத சாபத்தில் உழல்வர்...

சுந்தரவடிவேலு..

Thursday, February 25, 2010

பிரச்சினைகள்...

பிரச்சினைகளுக்கு முகம் காட்ட மறுக்கிற சுபாவம் உள்ள நபர்கள் அதிகம் உள்ளார்கள்... நானுமே கூட...!!
முளையிலேயே நகத்தில் கிள்ளி எறிந்திருக்க வேண்டிய பிரச்சினைகளை நமது சுபாவமே ஆன தர்மசங்கடம் காரணமாக தவிர்த்திருப்போம்... அது பிற்பாடு நமக்கே புரியாமல் பூதாகரமாக வளர்ந்து நம்மையே கபளீகரம் செய்து விடக்கூடிய விபரீதங்கள் சுலபத்தில் நிகழும்.. ஏது செய்வதென்று தெரியாமல் சுக்கு நூறாகி விடுவோம்...

ஆகவே, தயை கூர்ந்து யாதொரு பிரச்சினைகள் எனிலும், அதற்கு முகங்காட்டி , நம்மைக்கண்டு அந்தப்ப்ரச்சினை தலைதெறிக்க ஓடி விட வேண்டுமேயல்லாது , அவைகளிநிடத்து நாம் சிக்கி சீட்டி அடிக்கக்கூடாது...

பிரச்சினைகள் மெழுகு பொம்மைகள்... நெருப்பென நாம் அவைகளுக்கு முகம் காட்டி உருகி விலகச்செய்திட வேண்டும்..
பாறைகள் என நினைத்து பிரச்சினைகளுக்கு பயந்து ஒதுங்கிநோமேயானால் அவைகள் நம்மை சிதிலமாக்கி சின்னா பின்னமாக்கி விடும்..

Saturday, February 20, 2010

நாத்திகன் உளறல்கள்....

கழுத்தில் சுற்றி
சிவனை அழகு
படுத்துகிற பாம்பு
நம்மை ஏன் கொத்திக்
கொல்ல மட்டுமே
வருகிறது?...

முருகனை மட்டுமே
ஏற்றி உலகம் சுற்றுகிற
மயில் .. நாம் வெள்ளாமை
செய்திருக்கிற நெற்பயிர்களை
வந்து ஓயாமல் சேதம் செய்வது ஏன்?

விநாயகர் முன்னிலையில்
லட்டைக் கையில் ஏந்தி
மிகவும் பவ்யமாகக்
காட்சி தருகிற சுண்டெலி
நம் வீட்டுத் தலையணை
போர்வைகளை ரணகளம்
செய்து நம் தூக்கங்களை
அல்லவா துவம்சம்
செய்கின்றன?...!!

யதார்த்த வாழ்விலே
மனிதனுக்கு அவஸ்தை
கொடுக்கிற யாவற்றையும்
தெய்வத்தின் முன்னிலையில்
சாதுவாக நிறுத்துகிற
அவனுடைய கற்பனாரசனை
கவித்துவம் நிரம்பியதே..
--கடவுளையே
அற்புதமாக கற்பனை
செய்கிற மனிதன்
அல்ப மிருகத்தை
செய்ய சிரமப்படுவானா என்ன?

சுந்தரவடிவேலு..

Monday, February 15, 2010

காதலர் தினம் குறித்து...

காதலையே கொச்சைப்படுத்துவது மாதிரியான ஒரு நாளாக உணர முடிகிறது இந்தக் காதலர் தினத்தை. நாசூக்கான மெல்லிய உணர்வது.. மென்மையும் மேன்மையும் பொதிந்த அதனை, காலத்திற்கும் வெளிக்காண்பிக்க வேண்டிய அதனை, ஒரே ஒரு நாளில் அடக்கி அன்று மட்டும் அதற்கு முக்கியத்துவம் தருவதும் அதற்காக காதலர்கள் குதூகலிப்பதும் அப்பட்டமான அல்பத்தனமாக படுகிறது...

காதல் என்பதும் காமம் என்பதும் புனிதமும் ரகசியமும் நிரம்பிய மகோன்னதமான உணர்வுகள்... அதனை சந்தைப்படுத்துவது போன்று நாகரீகமற்று இம்மாதிரியான நாட்களை அனுஷ்டிப்பதெல்லாம் நம் இந்தியக் கலாச்சாரத்திற்கு முரணாயும் முட்டாள்தனமாயும் புரிகிறது...

இதனை வரவேற்பதும் வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்வதும் பார்க்கவும் கேட்கவும் கூச்சத்தில் நெளிய வைக்கிறது.. லஜ்ஜை உள்ள எல்லார்க்கும் இவ்விதமாகத்தான் இருக்கும்...

இதனை எதிர்ப்பவர்கள் கூட ஓட்டுப்பொறுக்கிகளும் , வன்முறைகளை வளர்க்க விரும்புகிற அரசியல் கட்சிகளும் தானே தவிர, வேறு உருப்படியான உள்நோக்கம் கொண்டவர்கள் இல்லை என்பது வருந்தத்தக்கதே...

ஓரினச்சேர்க்கையை ஆதரிப்பவர்களுக்கும் இந்தக் காதலர் தினத்தை ஆதரிப்பவர்களுக்கும் அப்படி ஒன்றும் பெரிய வித்யாசம் இருப்பது போல எனக்குப் படவில்லை...


சுந்தரவடிவேலு.. திருப்பூர்..

Saturday, February 13, 2010

நாளைக்கு மறுபடியும்....

வழக்கமான மைதான நடைபயிற்சிக்கு பதிலாக வீதிகளில் அவ்வப்போது நடப்பேன்.. சர்க்கரை , ரத்த அழுத்தம், இன்னபிற என்று நமக்கும் புரியாமல் பட்டியல் போட்டு வைத்திருக்கிறது நம் உடல்...
இவை எல்லாமே நடைபயிற்சியில் நம்மை விட்டு ஓடிப்போய்விடும் என்கிற மாயை நடக்கிற எல்லாருக்குமே உண்டென்பதால் மார்னிங் வாக்கிங் என்பது இன்றைய தேதியில் சூப்பர் ஸ்டார்..

ரெண்டொரு நாட்கள் நடப்பது ஏதாவது காரியம் நிமித்தம் தடைபட்டுவிட்டால் கூட மனசுள் பெரும் குற்ற உணர்வை கொண்டு வருகிற அளவிற்கு நடப்பது என்பது இன்று எல்லாரது வாழ்விலும் பெரும் பங்கு வகிக்கிறது என்றால் மிகையன்று...

அதிகாலை நாலு மணிக்கே பயிற்சியை துவங்குகிற நபர்கள் உண்டு.. அந்த நேரத்தில் ஒன்றுக்கு.. ஐ மீன் உச்சா.. ஒன் பாத்ரூம் அவசரமாக வர இருந்தாலுமே கூட , நன்றாக இழுத்து போர்த்திப்படுத்து விட்டு ஆறுக்கோ ஏழுக்கோ எழுந்து தான் போகிற அளவுக்கு நான் சுறுசுறுப்பானவன்..
ஆக, அதற்கும் பிறகாக நிதானமாக எழுந்து ஒரு சாயா அடித்துவிட்டு கிளம்புவேன்..

அநேகமான நாட்கள் மைதானம் தவிர்க்கப்படும்.. விரிந்து கிடக்கிற புதுப்புது வீதிகளில் பராக்கு பார்த்த வண்ணம் கடந்து செல்வது ஓர் அலாதி சுகம் எனக்கு... டி.சர்ட்டுகள் நாயை பயமுறுத்தும் என்பதால் சாதாரண சட்டையே போட்டு செல்வேன்..

எல்லாருமே வீட்டு வாசலுக்கு வந்து தான் பல் துலக்குவார்கள் போலும், குளியலறைகளை குளிப்பதற்கு மாத்திரமே உபயோகிக்கிறார்களோ? பிரஷும் பேஸ்ட் நுரையுமாக ரொம்பப்பேர்களை தெரு நெடுகிலும் தரிசிக்கலாம்...

அடுப்பை வேறு வெளியில் வைத்திருப்பார்கள்.. தண்ணீர் காய வைப்பதற்காக கண்ட குப்பைகளையும் போட்டு கவலையே படாமல் மாசு படுத்துவதில் இந்தியர்கள் கில்லாடிகள்...
இதே மோசமான பழக்கங்களையே தன் குழந்தைகளுக்கும் கூச்சமில்லாமல் கற்றுக்கொடுக்கிறார்கள், அல்லது இதையெல்லாம் பார்த்து பொடிசுகள் இயல்பாகவே கற்றுக்கொள்கின்றன...

சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டிக்கொண்டே வயிற்றுக்கு ஊட்டுவார்கள்.., அப்படித்தான் ஓர் நடுவயதுப்பெண்மணி தன் குழந்தைக்கு இன்று... சற்று தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த என்னை என்னைக்காண்பித்து இட்லியைத் திணித்துக் கொண்டிருந்தாள்.. அந்நேரம் வரை அது அழுது அடம் செய்திருக்கும் போல.., என்னையும் ஏன் ராஜ நடையையும் பார்த்த பிற்பாடு சிரித்த முகத்தோடு இட்லி உட்கொண்டதாக ஓர் அற்புதமான தகவலை அந்தப்பெண்மணி நான் அருகில் சென்றதும் சொல்லக்கூடும் என்கிற என் அனுமானம் எல்லாம் ஒன்றுமில்லாமல் போனது...
வெறுமனே ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு அவள் வாசலை கடக்க நேர்ந்தது., என் அந்தப்புன்னகை அவளைப்பார்த்தா அவள் குழந்தையைப் பார்த்தா என்கிற கேள்வியுடன்...
அவளுக்குள்ளும் அந்தக்கேள்வி இருக்கும்?
பார்ப்போம், நாளைக்கும் அதே தெருவில் நடந்து...!!

Wednesday, February 10, 2010

பிற்பாடு..

அனாவசியம் என்று
எதனையும் அவ்வளவு
அவசரப்பட்டு அப்புறப்
படுத்த முடிவதில்லை..

மேஜை எங்கிலும்
பரவலாக காகிதங்கள்..,
எடுத்து பத்திரப்படுத்த வேண்டும்
என்பதான அனுமானம்
பத்து நாட்களுக்கும் மேலாக...!

கசக்கி குப்பைக்கூடையில்
போட்ட பிற்பாடே அந்தக்
காகிதம் பிரத்யேகமான
தேடலுக்கு உள்ளாகும்...
-மேஜையின் மீது
நாய் கூட சீந்தாமல்
நாற்பது நாட்கள் கிடக்கும்...!!

நம் வாழ்க்கை கூட
அந்தக்காகிதம் போல தான்...
எந்தப்ப்ரயோஜனமும் அற்று
சும்மாவே கிடப்போம்..,
புதையுண்ட பிறகாக
ஆற்ற வேண்டிய ஆயிரம்
கடமைகள் அநாதைகளாகி
விட்டதாக
நம் ஆன்மா அரற்றும்?....


சுந்தரவடிவேலு

Tuesday, February 9, 2010

புலிகளுக்கு நேரம் சரியில்லை...

புலிகள் நம் நாட்டில் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாகவும் .. அற்ப எண்ணிக்கையில் மாத்திரமே இப்போது இருக்கிறதென்றும் சொல்கிறார்கள்...
காணவில்லை விளம்பரம் மாதிரி அடிக்கடி ஒரு குட்டிப்புலி தன் தாயை தேடி ஓடி வருவது போலவும் தாயைக்காணாமல் வேதனையாக முனகுவது போலவும் ஓர் விளம்பரம் போடுகிறார்கள்.. அதன் தாய் புலி திரும்பி வருமோ அல்லது மனித வேட்டைக்கு இரையாகி இருக்குமோ என்று ஓர் சோக சந்தேகமாய் பின்னணியில் குரல் ஒன்று ஒலிக்கிறது...
டிஸ்கவரி சானலில் மானை புலி ஆடுகிற வேட்டைகளை காண்பிக்கிற போதெல்லாம் அது துரத்துகிற மான் தப்பித்தால் தேவலாம் போலவே தோன்றும் ... ஆனால் எப்படியும் அது மானை சாதுர்யமாக பிடித்தே தீரும்... பிறகு மானின் மீதான அக்கறை குறைந்து .. புலி அந்த மானை சாப்பிடுகிற நேர்த்தியை ரசிக்க ஆரம்பிக்கும் மனிதர்கள்...
ஆயுதங்கள் ஏதுமற்று மானிடமே தோற்றுப்போகிற மானிடர்கள் நாம்...
எந்த ஆயுதங்களும் அற்று மானை வீழ்த்துகிற புலிகளையே வீழ்த்தி விடுகிறோம்..

பொதுவாகவே புலிகளுக்கு இப்போது நேரம் சரியில்லை என்றே தோன்றுகிறது...

தொலைக்காட்சியில் இந்த விளம்பரம் தான் விவஸ்தை இல்லாதது போல படுகிறது...
சாதரணமாக டிவி பார்க்கிறவர்கள் அநேகமாக நாய் வளர்ப்பார்கள், பூனை ஆடு கோழி மாடு வளர்ப்பார்கள்.. மீன்கள் கூட கலர் கலராக வளர்ப்பார்கள்...
புலியை வேட்டையாடுகிற காட்டுமிராண்டிகள் டிவி பார்க்க மாட்டார்கள்.. டிவி பார்க்கிற நாம் அவர்களைப்பார்த்து புலியை கொல்லாதீர்கள் என்று சொல்லவா முடியும், முதலில் அவர்களை பார்க்கவாவது முடியுமா? பார்த்து சொன்னாலும் தான் புரியுமா அவர்களுக்கு? புரிந்தாலும் தான் கேட்பார்களா?

தமாசுக்கு அளவே இல்லை....

சுந்தரவடிவேலு...

Monday, February 8, 2010

எழுதுகிறவர்கள் குறித்து...

ஓர் அசந்தர்ப்பத்தில் என் எழுத்துக்களில் சுவாரஸ்யங்களும் அறிவுப்பூர்வங்களும் ஒருங்கே இழைந்து என்னை ஓர் அறிவுஜீவி போல எனது கவிதைகளும் கட்டுரைகளும் உணர்த்தி விடுகின்றன... என் உயரிய கருத்துக்களுக்கும் என் செயற்பாடுகளுக்கும் இருக்கிற முரண்கள் எனக்குள் ஒரு இனம் புரியாத குற்ற உணர்வுகளைக்கூட கிளர்ந்திடச்செய்யும்..
இது எல்லா எழுதுகிறவர்களுக்கும் பொருந்துமோ என்னவோ புரியவில்லை.., !!

என் தனிப்பட்ட கருத்துக்களையும் உணர்வுகளையும் பிறர் வசமும் எதிர்பார்க்கிற இந்த மனோபாவம் ஒரு வகையான சிறுபிள்ளைத்தனம் என்றே அனுமானிக்கிறேன்... நம் பலவீனங்களை கூட யதார்த்தமாக வெளியிடுகிற நாகரீகம் நமக்கு வேண்டுமேயல்லாது, அதில் ஒப்பீடும் சந்தோஷங்களும் கொள்கிற சிறுமை தவிர்க்கப்படவேண்டிய ஒன்றே...!

நாம் எழுதுவதில் எந்நேரமும் ஆழ்ந்த சிந்தனைகளும் பிறர் பாராட்டுக்களும் இருக்க வேண்டுமென்கிற தீராத தாகம் ... அனாவசியமானதென்றே கருதுகிறேன்... நம் போக்கில் யதார்த்தமாக எழுத வேண்டும், அது நேர்மையாக தெளிவாக இருக்க வேண்டும்.. அவ்வளவு தானே அன்றி .. பலரது பாராட்டைப்பெற வேண்டும் .. மிகுந்த கரகோஷம் பெற வேண்டும் என்று கருதுவதெல்லாம் ஓர் பெரும் பின்னடைவை நிகழ்த்தவே ஏதுவாகும் என்று கருதுகிறேன்...

யாதொருவருக்கும் அதிர்ஷ்டம் என்பது இயல்பாயும் விபத்தாயும் அமையுமே அல்லாது எதிர்பார்ப்பதோ, அடைய வேண்டும் என்கிற வெறி கொள்வதோ அறிவீனமே ஆகும்..


சுந்தரவடிவேலு ...

Saturday, February 6, 2010

ஆதார ஸ்ருதிகள்...

அசை போடக்கூட அலுத்துப்போகிறது எனது அன்றைய நாட்களின் காதல் அனுபவங்கள்.. அன்றைய போழ்துகளில் மிகுந்த மென்மையும் மேன்மையும் பொதிந்து உணரப்பட்ட காதல் இன்று ஓர் தடயம் கூட இழந்த தன்மையில் பாழ் பட்ட அரண்மனை போல வவ்வால் எச்சம் போல ஓர் அசூயை கொண்டு நாறுகிறது என் மன ஓட்டங்களில்...
பேரானந்தங்களையும் ரம்மியங்களையும் ஓயாமல் அள்ளி வழங்கிய காதல் இன்று வெறுமனே ஓர் லஜ்ஜையான ஞாபகமாய் என்னில் வியாபித்து, உபயோகமற்ற பாசி போல படர்ந்து கிடக்கிறது...
காதலித்த நாட்களில் ... இந்தக்காதல் என்கிற ஓர் அதியற்புதமான உணர்வு பின்னொரு நாளில் மலரும் நினைவுகளாய் மனதில் பொங்கி என்னை சிலிர்க்க வைக்கக்கூடும் என்று அனுமானித்திருந்த எனக்கு இன்று ஓர் பெரிய ஏமாற்றமாய் தான் உள்ளது...
காமம் தவிர்த்து மிகவும் புனிதமாகவும் தெய்வீகமாகவும் மாத்திரமே உணரப்பட்ட காதல் ... எங்கோ தொலைந்து போய் இன்று ....
காதல் இழந்த காமம் தான் அவ்வப்போது தொனிக்கிறது ...

இந்தக் காதல், காமம் இரண்டும் தான் மனித வாழ்வின், பிற உயிரனங்களின் ஆதார ஸ்ருதி என்றாலுமே கூட , மற்ற பிரச்சினைகள் சுலபத்தில் மையம் கொண்டு விடுவதால் , இவை இரண்டும் தன் வீரியங்களை இழந்து நினைத்துப்பார்க்கக்கூட சாத்யமற்றுப்போகிற விபரீதம் கொஞ்சம் வேதனை தான்...

சுந்தரவடிவேலு...

Sunday, January 31, 2010

இப்படி எல்லாம் வேண்டாமே....

ஓர் மனிதன் இந்த உலகில் இருந்து ஒன்றை சாதிக்க வேண்டுமேயன்றி, தீயில் கொடுமையாக கருகி தன்னை மாய்த்துக்கொண்டு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியவில்லை எனக்கு... காலம் நமக்கு கொடையாக வழங்கியுள்ள இந்த விலை மதிப்பற்ற உயிரை வைத்துக்கொண்டு இந்த சமுதாயத்தை அற்புதமாக வழிநடத்துகிற திறனை வளர்க்க வேண்டும், நமக்கு இந்த நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் உண்மையான அக்கறை இருக்கும் பட்சத்தில்.. அதனை விடுத்து இப்படி தியாகம் என்கிற பெயரில் எல்லாரும் உயிர் நீக்கத்துணிந்தோமானால் அப்புறம் அட்டூழியங்களுக்கு விடிவே பிறக்காது...
இதனை தியாகம் என்று இளம் நெஞ்சங்களில் வீரத்தை விதைப்பதாகக் கருதி நாம் நம்மையும் அறியாமல் ஊக்குவிப்பதைத் தவிர்த்து இந்த உலகில் இருந்து சாதிக்கிற விவேகத்தையும், வீரத்தையும் இனி வருகிற தலைமுறைகளுக்கு புகட்ட வேண்டுமேயன்றி இந்தத்தற்கொலையை விடுதலை தாகமென்றும் வீர மரணமென்றும் தவறுதலாக அடையாளப்படுத்தி மீண்டும் ஒரு முறை இவ்வித விபரீதத்தை நடைபெறாமல் இருக்க செய்வதே நாம் இந்த நாட்டிற்கு ஆற்ற வேண்டிய தலையாய கடமை தியாகம் பகுத்தறிவு எல்லாமும் ஆகும்....
நன்றி.. ஜெய் ஹிந்த்..

ஒ மை காட்....

ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதை இன்னொரு நபர் நம்புவதில்லை மற்றும் விரும்புவதில்லை... தங்கள் மகிழ்ச்சிகளையே அவநம்பிக்கைகள் கொண்டும் பயந்து கொண்டும் அனுபவிக்கிற மனோபாவத்தில் தவித்துக்கொண்டிருப்பவர்களுக்கு மற்றவர்களது ஆனந்தம் சந்தேகமானதாகவும் பொய்யானதாகவும் தான் அடையாளப்பட்டிருக்கும்....
அடிக்கடி ஜகி வாசுதேவ் சொல்லுவார்.. ஆனந்தம் என்பது எவரும் எங்கும் தேடி அலைகிற விஷயம் அல்ல.., அது இயல்பாகவே எல்லார் வசமும் குடி கொண்டிருக்கிற தன்மை.... ஆனால் எனக்கென்னவோ மனிதர்களுக்கு பயம் தான் இயல்பாக குடி கொண்டுள்ளதென்றும் , ஆனந்தம் என்பது இப்படி சில ஞானிகள் அவ்வப்போது சொல்லித்தான் நம்மிடம் குடி கொண்டுள்ளது என்றெல்லாம் நினைக்க முடிகிறது...
ஞானமற்றும் மானமற்றும் கூட இருக்கலாம்.. ஆனந்தமற்றும் அமைதியற்றும் இருப்பது தான் பெரும் பாபம் என்பது என் அனுமானம்...!!

இது குறித்து ஓர் சின்ன நய்யாண்டி ஒன்றுண்டு...

ஓர் மனோதத்துவ டாக்டரை ஒருவர் சந்திக்க செல்கிறார்...
"எனக்கு எல்லாமே நல்லபடியா அமைஞ்சிருக்கு டாக்டர்.. நல்ல தொழில், அழகான குணவதியான மனைவி, அறிவான குழந்தைகள்... நிம்மதியான அமைதியான வாழ்க்கை..சண்டை வழக்கு இல்லாத சமரச வாழ்வு..."

அந்த மனோதத்துவ டாக்டர் கேட்கிறார்..:
"ஒ மை காட்....இதெல்லாம் உங்களுக்கு எத்தனை நாட்களாக?"

--சுந்தரவடிவேலு..

Saturday, January 30, 2010

சொல்வதற்கில்லை..

உன்னை
வசீகரிப்பதற்கான என்
எல்லா பிரயத்தனங்களும்
தழுவிய தோல்விகள்----

--ஓர் இனம் புரியாத
அனுபவமுதிர்ச்சியை
என்னில் ஊடுருவச்செய்துள்ளது...!


மேற்கொண்டு
என்ன செய்வது என்கிற
புதிய சிந்தனை ஓட்டங்களையும்
கழிகிற நேரங்களை
சுவாரஸ்யமாகவும்
மாற்றியமைத்த பேறு
உன்னையே சேரும்...

என் காதல்
மிகவும் ரசனை நிரம்பியதென்றும்
வண்ண மயமானதென்றும்
வர்ணித்த நீயே தான்
---- அந்த என் அன்புக்காதலி
நீ என்று நான் சொன்னதும்
பார்வைத்தீயில் என்னை
சுட்டுப்பொசுக்கினாய்...

ஆக --
பிறரையும் பிறவற்றையும்
நான் ரசிக்கையில்
மிகுந்த வாஞ்சையோடு
அங்கீகரிக்கிற நீ
உன்னை ரசிக்கிறேன்
என்கிற போது மட்டும்
தடுமாற்றமடைவதும்
என்னைத் தவிர்க்க
முயல்வதும் ..

அப்படி என்ன
உன்னைக்குறித்த
என் ரசனைகள்
உனக்கு அசுவாரசியமாகி
விட்டதென்கிற பெரிய
கேள்வி என்னிடம்
இருக்கிறது என்றாலும்....

--உன் இந்தத்தன்மை
உன்னை எனக்கோர்
சுயநலமியாக அடையாளம்
காண்பிக்கத்துவங்கியுள்ளது
சமீப நாட்களாக...

சொல்வதற்கில்லை...
என்னையும் என் காதலையும்
நீ ஏற்கிற ஓர் தருவாய்
வரும் பட்சத்தில்
உன்னை நான்
தவிர்த்து விடக்கூடுமோ
என்று கூட அஞ்சுகிறேன்...!![???]

சுந்தரவடிவேலு...

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...