Tuesday, May 31, 2016

எறும்புக்கு வக்காலத்து..


ந ம து  உண்ட மிச்சங்கள் தரையில் சிந்தி சிதறி விடுகையில் .. அதனை நாம் கவனியாமல் விட்டுவிட, எறும்புகள் கவனித்து படை எடுத்து குழாமாக  அதனை பசிக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் நமது கண்களுக்கு அவை ஒருவித அசூயையும், உடனடியாக அகற்றி விடவேண்டும் என்கிற அவசரங்களும் பிய்த்து உதறக் கூடும்.

ஆனால் சற்றே அவகாசம் ஒதுக்கி, உங்களது 6ஆம் அறிவுக்கு யோசிக்கிற சந்தர்ப்பத்தினை வழங்குங்கள்..
கவனமின்மையோடு நம்மால் சிதறிய உணவது.. ஒன்று, சிதறியதை உடனே கவனித்து அப்புறப் படுத்தி இருக்கவேண்டும்.. இப்போது எறும்புகள் புடைசூழ்ந்து பசியாறிக் கொண்டிருக்கையில் அவைகளைக் கூண்டோடு மருந்திட்டு அல்லது வேறுவிதத்தில் அழித்தெறிந்து விடுவது மிக மிக சுலபம்.. அதற்காக வேறு நம் அகம் திருப்தி கொள்வது எவ்வளவு கேவலம்..!!

தாம் குழாமாக கவனிக்கப் படுகையில் மனிதக் கண்களுக்கு உடனே அழிக்கிற ஆவேசம் வந்து விடுவதை அந்த எறும்புகள் உணர்வதற்கான ஒரு மெமரியை ஏன் இறைவன் நிரப்பாமல் சதி செய்துவிட்டான் என்கிற கோபம் வருகிறது.. 

கோவிலில் பிரசாதம் விநியோகிக்கையில், அன்னதானம் நிகழ்கையில்.. ,   சாரை சாரையாக நாம் மாத்திரம் படாத பாடு பட்டு .. என்னவோ பூகம்பம் நிகழ்ந்து ஹெலிக்காப்டரில் இருந்து  வீசப் படுகிற பொட்டல சோற்றுக்கு  அலைபாய்வது போன்று ஆலாய்ப் பறக்கிறோம்.. 
அந்த எறும்புகள் பாவம், நாம் சிந்திய பருக்கைகளுக்கு ஒன்று கூடுகையில் நம்முடைய ஆண்மையும் பெண்மையும் எதற்காக அப்படி வீறு கொண்டெழ வேண்டும்? 
இத்தனைக்கும் நம்மைப் போன்று சுயநலம் அற்று அவை ஒன்றோடொன்றாக நம்முடைய அந்த அற்ப சிதறல்கள் குறித்து செய்தி பரப்பி எங்கேயோ மேய்பவைகளை ஒன்று திரட்டி வந்து வட்டம் கட்டி பொறுமையாகப் பசியாறுகின்றன.. 

பிரத்யேகமாக ஒரு இடத்தை ஒதுக்கி அங்கே அன்றாடம் எறும்புகளுக்கு என்று ஏதேனும் உணவுகள் வைப்பதை  உங்களுக்கு நீங்களே பயிற்றுவித்து க் 
கொள்ளுங்கள்.. 

சொல்லமுடியாது.. எதிரிகளிடம் உங்களுக்குப் பிரச்சினைகள் நேர்கிற போது, உங்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக எதிராளியின் ஜட்டி பனியனுக்குள் புகுந்து அவனைத் துவம்சம் செய்து உங்களைக் காப்பாற்றக் கூடும் எறும்புகள்.. 

Sunday, May 29, 2016

காதல் குறித்து..

Image result for symbol of love and sex
காதல் ----
கவிதை எழுத 
வைத்துவிடுகிறது..
மய்யில்லாத பேனாவை 
வீசிவிட்டு 
ரத்தங்கீறியாவது....!

ஆனால் காமம் .. 
மைநிரம்பிய பேனாவையே 
முனையுடைத்து 
ஒன்றுமற்று வெறுமே 
புடைத்து நிற்கச் செய்கிறது...!!

எந்தத் தந்திரங்களும் அற்று 
காதல் ... நம்மை மிக இயல்பாய் 
கனிந்து விடச் செய்கிறது.. 

காமமோ.. 
எந்த வயதில் பீறிட்டாலும்
பிஞ்சில் பழுத்த 
குற்ற உணர்வையே 
வியாபிக்கச் செய்வதேனோ? 


கொடிய நோயென 
காவியங்களால் அடையாளப் 
படுத்தப் பட்ட காதலின் 
முன்னிலையில்....

மருந்தாகி விடுகிற 
காமத்தை .. 
மலரினும் மெலிது
என்கிறது வள்ளுவம்.. ?
Image result for symbol of love and sex

Wednesday, May 11, 2016

தலைப்புத் தரவும் வேண்டுமோ?

முன்குறிப்பு: 
தற்கொலைக்கு சமானம் தற்பெருமை என்பதை நன்கறிவேன்.. 
 அதனையும் தாண்டி நம்மை 'சுய' விளக்கங்கள் செய்ய வேண்டிய சூழல் சற்றே சங்கடம் எனிலும், .. வேறு எந்த அஸ்திரம் கொண்டு தான் நம்மை உணர்த்துவதாம்?/
Image result for ego

. கெட்டாலும்
மேன்மக்கள் 
மேன்மக்கள் போல.. 
என் இதயம் 
எத்தனை பலவீனப் 
பட்டபோதிலும் 
உயர் ரக இசையை 
மாத்திரமே அடாது 
ரசிக்க அவா கொள்கிறது.. 

ஒரு டப்பாங்குத்தையோ 
குத்துப் பாட்டினையோ 
கானா பாட்டினையோ
மருந்துக்குக் கூட 
நாடுவதில்லை.. 

என்னையோ  
எனது இதயத்தையோ 
தூக்கி வைத்துக் 
கொண்டாடுகிற 
நோக்கமில்லை இது.. 

சாஸ்வதமில்லாத
இந்த உடலோ இதயமோ 
புகழ் எய்தினும் இகழ் எய்தினும் 
அவை பொருட்டன்று.. 
ஆனால் அவை 
 மேற்கொள்கிற நிலைகளை 
உணர்த்துகிற இந்தத் தன்மை 
ஏனோ எனக்கே 
தற்பெருமை போன்று 
புலனாவது தவிர்ப்பதற்கில்லை.. 

இதயம் அன்று 
கெட்டிப் பட்டுக் கிடந்த காலத்திலும் 
இதே இளகுகிற 
மெழுகுப் பாங்கில் தான் வீற்றிருந்தது என்னில்.. 

இன்று உருகி வழிகிற அழுமூஞ்சி போன்று 
மருந்துண்டு உயிர் பற்றிக் கொண்டிருக்கிற இதயம்.. 
ஈன ஸ்வரம் போன்ற அபஸ்வரத்தில் 
அரற்றிக் கொண்டிருக்கிற இதயம்.. 

நல்லதொரு மெல்லிசை கேட்க வாய்க்கையில்
'நேத்துத் தான் பொறந்த மொசக்குட்டி' போல 
அத்தனை லாவகத்தில் மாறிவிடுவது 
வார்த்தைகள் தொலைந்த மகோன்னதம்.. !!

Image result for ego

Tuesday, May 10, 2016

24-- [தமிழ் மூவி ரிவ்யூ]

நேற்று நாளை இன்று குழுவினர் கோடு போட , இவர்கள் ரோடு போட்டு விட்டனர்.. அதுவும் தாரில் இல்லாமல், கான்க்ரீட் ரோடு..
இப்படியான யதார்த்தங்களுக்குப் புறம்பான விஷயங்கள் சுலபத்தில் வசீகரித்து விடும் என்பது ஒருவகை மனோவியல்..
டார்ஜான், சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் . ஜேம்ஸ் பாண்ட் .. சித்தரிப்புக்கள் அனைத்துமே மக்களிடத்து  வெற்றி பெற்றமைக்கு அந்த அசாத்யங்களே காரணி..
மனிதன் பறப்பது மற்றும் சுலபத்தில் எதிரிகளை சுட்டு வீழ்த்துவது என்பவை  இயல்பான யதார்த்தமான விஷயங்களாக  இருப்பின், உலகம் சூப்பர்மேன்களால் நிரம்பி வழியக் கூடும்..

எத்தனை கால்களை எம்பிக் குதித்தாலும் சில ஷணம் மட்டுமே கால்கள் பூமி பாவாமல் அந்தரத்தில் இருப்பது சாசுவதம்.. மற்றபடிக்கு உண்பது உடுத்துவது உறங்குவது என்கிற அனைத்துமே பூமி ஒட்டியே  நிகழ்த்தியாக வேண்டிய  சூழல்  தான் மனிதனின் சலிப்பேற்றறுகிற யதார்த்தம்..

அப்படி சலிப்பில்லாமல் பூமியே பாவாமல் சதா அந்தரத்தில் பறக்க சாத்யப்  படுகிற மனிதர்கள் நிழல் பிம்பங்களாகத் திரையில் வழிகையில் அதனை, அவர்களை  ஆராதிக்கிற அதிசயிக்கிற வேகம், சற்றும் விவேகமற்று நம்மில்  ஆட்கொண்டு  விடுகிற விபரீதம் நம் யாதொருவருக்குமான நிகழ்வாக ஏதோ ஒரு பிராயத்தில் உதித்து,  மனமுதிர்வு அடைகிற பிராயமொன்றில் காணாமலும் போய் விடுகிறது...!

கிட்டத்தட்ட 3 மணி நேரம் கடந்தது புரியாமல் அனைவருமே லயித்து விடுகிற மேஜிக்  இந்தப் படத்தில் நடக்கிறது.. மற்றபடி ஆழ்ந்த கதைச் செறிவோ, மனசைக்  கவ்வுகிற பாடல் சங்கதிகளோ எதுவுமே இல்லை என்பதை வெளியே வந்து  நிதானமாக சொல்லிவிடலாம்..

இளையராஜா கைகளில் மட்டுமே மெலடிகள் "புள்ளப் பெக்கற அம்மா" க்களாக இருந்தன போலும்.. இன்றைய இசை அமைக்கிறவர்களின் கைகளில் மெலடிகள்  "மலடிகள்" ஆகி விட்டனவோ?
மனதில் ஒட்டாத பாடல்களும் 'பிஜிஎம்' என்கிற பின்னணி இசைப் புனைவுகளும்  எவ்வித ஸ்மரணைகளும் அற்று வெறுமே ஒலிக்கின்றன..
ஆனால், இம்சிக்கவில்லை என்பதே பெரிய விஷயம் அல்லவா??..

VFX  டெக்னாலஜி மாத்திரம் பகீரதப் பிரயத்தனப் பட்டு காட்சிப் படுத்தப் பட்டுள்ளன.. அந்த வாச்சுக் கடை, அந்த பஜார், அங்கே வருகிறவர்கள் போகிறவர்கள் .. கடக்கிற வாகனங்கள் .. நிகழ்கிற சம்பவங்கள் ..   அனைத்துமே .. சற்றே உற்று நோக்கின், செட் போட்டு சமாளித்திருப்பது புலனாகும்.. ஆனால் அப்படி ஆழ்ந்த பிரக்ஞை கொண்டு அதனை   அலசி ஆராய்வது  வீண்வேலை.. ஸோ .., ஜஸ்ட் ஜாலியாக பார்த்து ரசிப்பதே ஒரு தேர்ந்த  சினிமா ரசிகனின் பார்வையாகும் ..அதனால, லைட்டா எடுத்துட்டு என்ஜாய்  பண்ணுங்க . மக்களே.

அரக்க குணம் கொண்ட வில்லன் சூர்யா.. அப்பாவி விஞ்ஞானி சூர்யா.. வாச்சு மெக்கானிக் சூர்யா.. முப்பரிமாணங்களில் தமது அனைத்து ரசங்களையும் படர  விட்டு தெய்வமகன் சிவாஜி ரேஞ்சுக்கு முயன்றிருக்கும் சூர்யாவைப் பாராட்டுவோம்.  அம்மா சரண்யாவின் அலேக்கான தாய்ப்பாச செண்டிமெண்ட்.. அவ்வப்போது கண்களில் வழிந்து கன்னங்களை நனைத்து கைக்குட்டைக்கு வேலை வந்துவிடுகிறது..

3மணி நேரம் நழுவியது புரியவில்லை.. அதே போன்று  மனத்திலும் பெரிய அளவுக்கு சம்பவங்கள் ஒட்டவில்லை..
அரங்கினுள் அறுவையாக சலிப்பாக உணரப் பட்டாலும் கூட, வெளிவந்ததும் மனசை  என்னவோ பிசைகிற படங்கள்.. மறுபடி கண்டிப்பாக பார்க்கத்தூண்டி அந்த முதற்கண்  உணரப்பட்ட சலிப்பு இரண்டாம் முறையாகக் களையப் பெற்று  3ஆம் முறை கூடப் பார்க்க ஆசை வந்த படங்கள் முன்னரெல்லாம் வந்தன..  பார்த்து மகிழ்ந்தோம்..

இன்றெல்லாம் அவ்வித நிகழ்வுகள் கானலாகி விட்டன..  அதுவும் நல்லதுக்குத் தான்.  அன்றைக்கு 2.90- கொடுத்து 5 முறை பார்த்தாலும் ரூ.15 கூட ஆகாது. இன்று 1 முறைக்கே 150ரூ 200 ரூ அழ நேர்கிறது.. 

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...