Friday, August 31, 2012

சுயம் ---2

தையும் எழுதாதவர்களுக்குக் கிடைக்கிற அனுபவங்கள், எதையும் எழுதுபவர்களுக்குக் கிடைக்கக் கூடுமென்கிற உத்தரவாதம் இல்லை... ஆகவே, கிடைக்காத அனுபவங்களக் கூட கிடைத்த பாவனையில் கிறுக்கித் தள்ளும் சுபாவம் இயல்பாகவே கொண்டுள்ளனர் எழுதுபவர்கள்..

எழுதுகிற அபிப்ராயமற்ற அனுபவஸ்தர்களின் அனுபவங்கள் அனாமதேயமாக அவர்களுள் அமிழ்ந்து அஸ்தமனமாகி விடுகிற அவலம் அன்றாட நிகழ்வாக அவர்களுக்கு... அவை குறித்த கிஞ்சிற்று பிரக்ஞை கூட அற்று அடுத்த அனுபவங்களுக்காக அலைபாய நேர்கிறது அவர்களுக்கு..

ஆனால் வெறுமே இருந்துகொண்டு பற்பல அனுபவங்களை சந்தித்த சாதனையோடு தனது எழுத்துப் பந்தலை எழுப்பி மாய்ந்து போவான் ஓர் தேர்ந்த எழுத்தாளன்..

மேற்சொன்ன மாதிரி அனுபவங்களை மாத்திரம் அன்றாடம் தரிசித்து எழுதுகிற நோக்கமற்று வலம் வருகிற எனது நண்பர் ஒருவர் சொன்னார் என்னிடம்..: "இந்த எழுதுவதென்பது பெரிய மனவியாதி போல.. அதற்கு அடிக்ட் ஆகிவிட்டால் அவ்வளவுதான்.. எழுதிக் கொண்டே கிடக்க வேண்டியது தான்... ஏதாவது எழுதாமல் இருந்தாலோ, அந்த நாளே அனாசாரமாகப் போய் விடும் அவர்களுக்கு" என்றாரே பார்க்கலாம்.

எதையேனும் எழுதிக் கிழிக்கிற, கிழித்துக் குவிக்கிற எனக்கே ஒரு வகையான குற்ற உணர்வாகி விட்டது அதனைக் கேட்டு. 
மேற்கொண்டு எழுதித் தான் ஆகவேண்டுமா என்கிற கேள்வி என்னைக் குடைய ஆரம்பித்துவிட்டதென்றால் பாருங்களேன்..

இப்படி சமயங்களில் அனர்த்தங்கள் எல்லாம் பெரிய அர்த்தம் கண்டு விடுகிற விபரீதம் எல்லா சம்பவங்களிலும் சகஜமாகி விடக் கூடும்.. 

நல்ல விஷயங்களில் லயிப்பது கூட கெட்டபழக்கம் போல ஓர் மாயையை தோற்றுவிப்பது வேடிக்கையாக உள்ளது.. 
ஆனால் சுலபத்தில் ஓர் நல்லதைக் கெட்டதாக மாற்றுகிற ,மற்றும் கெட்டதை  நல்லதாக மாற்றுகிற வல்லமை வதந்திக்கு உண்டு..

Tuesday, August 28, 2012

சுயம் - 1

சுயம் என்கிற தலைப்பில் எனது நிலைப்பாடு குறித்து அவ்வப்போது ரெண்டொரு பக்கம் கிறுக்கி விடலாம் என்றொரு ஆசை..

ஏனெனில் எனது மனப்பான்மை இன்னதென்கிற தெளிவு எனக்கே இன்னும் பிடிபடாத புதிராக என்னில் ஊடுருவிக் கிடக்கிறது.. இந்த சுயம் என்கிற தளத்தில் எனது சரிதத்தை நான் திணிக்க முயல்கையில், என்னுடைய மன அரிப்புக்களும், என்னுடைய அபிப்ராயங்களும் வெளியேறுவதற்கான வாய்ப்பாக இதனைக் கருதுகிறேன்.. நன்றி..

நான் பலவீன எழுத்தாளன்?

ழுதுகிற அநேகம் பேர்கள் இப்படித்தானா?..
ஏதேனும் எழுத முற்படுகயிலும் கூட , இன்னது எழுதலாம் என்கிற கரு'வற்று வெறுமே எழுதத்துவங்கி பிற்பாடு, போகிற போக்கில் அசந்தர்ப்பமாக பிடிபடுகிற கரு'வைத் திணித்து, என்னவோ பல மாதங்கள் நெஞ்சினுள் சுமந்து, எழுத்தில் இப்போது தான் இறக்கி வைக்கிற பாவனையில்...
----மற்ற எழுதுகிற நபர்கள் எவ்விதமோ அறியேன், நான் எண்பது தொண்ணூறு சதவிகிதம் எழுதுகிற லட்சணம் இப்படி மட்டுமே தான்..!!

-இந்த திடீர் பாய்ச்சலில் ஓர் மேன்மையும் ஆற்றலும் ஓர் விபத்தாகக் கூட தென்படுகிற சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்பது பதிலற்ற கேள்வி தான்..

-இதையும் தாண்டி சிற்சிலர் புகழ்வதை ஏற்றுப் புளகித்து ஓர் மெல்லிய குற்ற உணர்விலும் என் இதயம் மிதக்க  நேர்வதுண்டு..
-
முன்னர் நான் சொன்னது போல -சில சதவிகிதங்கள் மாத்திரமே- நெடு நாட்கள் மனசுக்குள் சுமந்த விஷயங்களை எழுத்தில் இறக்கி வைக்கப் பிரயத்தனிக்கையில் ... மனசுள் படிந்துள்ள அந்த கெட்டித் தன்மை, அந்த இலக்கிய வீச்சு,  - பிரசவமாகிற என் எழுத்துக்களில் மிளிராதது என் எழுதுகிற திறனை  என்னையே சந்தேகப் பட வைக்கிற சமாச்சாரமாகும்..
போகிற போக்கில் தென்பட்டு எழுதகிற விஷயங்களின் வீரியம் கூட, திட்டமிட்டு எழுப்புகிற சம்பவங்களுள் படியாதது  எனது எழுதுகிற திறனிலுள்ள  ஓர் நீர்த்த தன்மையை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கக் கூடும்..?...

நன்றி..  

Monday, August 27, 2012

pandit shri hariprasad chaurasia - flautist..

நான் இசை ஆர்வலன். நான் மட்டுமா ?.. இந்தப் பிரபஞ்சத்தில் எல்லா ஜீவராசிகளும் ஏதோ இசையின் வசம் ஈடுபாடு கொண்டே வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன..
இன்று ஹிந்து வில் புல்லாங்குழல் கலைஞர் திரு.ஹரிப்ரசாத் சௌராஸியா அவர்களது ஓர் பேட்டி இடம் பெற்றது .. அவர் ஓர் அற்புதமான குழல் இசைக் கலைஞர்... இந்தக் கால இளைய தலைமுறையினருக்கு அவர் நறுக்குத் தெறித்தாற்போல ஒன்றை சொல்கிறார்.. அதனை இங்கே வெளியிட ஆசைப் படுகிறேன்.. 

His advice to youngsters: “Don’t need to become a performer, become a listener. It will give you strength. Musical temperament makes you happy and healthy. Every day, listen to music at least for five minutes.”

"இசையில் நிபுணனாக முயலத் தேவையில்லை.. முதற்கண், அந்த இசையை அன்றாடம் தீவிரமாக ஓர் தியானம் போல இருந்து கவனிக்க முயலுங்கள்... அது உங்களுக்கு ஒரு விதமான சக்தியைக் கொடுக்கும்... அற்புதமான இசை உங்களை சந்தோஷத்திலும் ஆரோக்கியத்திலும் வைத்திருக்கும்... அனுதினமும் குறைந்த பட்சம் ஓர் ஐந்து நிமிடங்களாவது இசையை கவனிக்கிற ஓர் தன்மையை மனசுக்குப் பயிற்றுவியுங்கள் "

Saturday, August 25, 2012

"கருவாச்சி காவியம்"..வைரமுத்து

சமீபத்திய எனது வாசிப்பில் என்னை மிகவும் லயிக்க வைத்த நாவல் கவிஞர் வைரமுத்துவின் "கருவாச்சி காவியம்"..

ஒவ்வொரு பக்கமும் நம் உயிரைப் பரவசப்படுத்தும் என்றால் அது மிகையன்று. அந்த வெள்ளந்தியான நடை, அதன் ஆழ்ந்த பொருள்கள், யதார்த்தம் வழுவாத சம்பவ சூழல்... ஒவ்வொரு பாத்திரப் படைப்பின் கெட்டித் தன்மை... ஐந்தறிவு படைத்த ஆடு கூட எவ்வளவு உயிரோட்டமாக ஆறறிவு மனிதனுக்கு சமானமாக சிருஷ்டிக்கப் பட்டிருக்கிறது வை.முத்துவின் பேனாவால்?

இந்த நாவலை அதன் பாத்திரப் படைப்புகளை விமரிசிக்கிற வலிமை நிச்சயம் எனக்கில்லை என்பதோடு, அவ்விதம் விமரிசிக்கத் துணியும் பட்சத்தில், அதன் பக்கங்கள் இந்த நாவலைக் காட்டிலும் நீண்டு விடக்கூடும் ..

பல பக்கங்களை இங்கே வெளியிட அனுமானித்திருந்தேன்.. ஆனால் அது ஆகாத காரியம் என்கிற முடிவுக்கு வந்து ஒரே பக்கத்தை... ஒரே பக்கம் கூட இல்லை, அரை பக்க பத்தி ஒன்றை மாத்திரம் இங்கே வெளியிட விரும்புகிறேன்... ஒரு பானை சோற்றுக்கு ஒரே சோறு பதம் என்கிற பழமொழிக்கு சான்றாக இதை நீங்கள் உணரக் கூடுமென்று மிக நம்புகிறேன்..

294 ஆம் பக்கத்திலிருந்து..


"எத்தன நாளைக்கு சோதிப்பியோ சோதிச்சுக்க சாமி... வீட்டைத்தான் புடுங்கிட்ட..புடுங்கிக்க... கோயில் இல்லாட்டி சாமி இல்லேன்னு போயிருமா?. வீடு இல்லாட்டி நான் இல்லேன்னு போயிருவனா?
--வீடுன்னா என்ன?.. எல்லாரும் கடைசியா விட்டுட்டு வெளியேறப் போற ஒரு எடம்.. ஒடம்ப காலி பண்ணிட்டு உசுரே போயிரப்போகுது ஒரு நாளைக்கு. 
ஒரு வீட்டை காலி பண்ணிட்டு வெளிய போறப்ப மட்டும் மசமசன்னு ஏன் மண்ட காயணும் ?"

இன்னொன்னும் புத்தியில ஓங்கி ஒறைக்குது அவளுக்கு..

பூமியத்தான் மனுஷன் தம் பேர்ல எழுதிக்கிறானே ஒழிய, பூமி தன் மேல மனுஷன் பேர என்னைக்காச்சும் எழுதி வச்சிருக்கோ?
--இதுல என் வீடு என் காடுங்கறது எல்லாம் முதல் போட்டு வாங்கி வச்ச முட்டாள் தனமா இல்லையா?
இப்ப நீ இருக்கற வீடு கொஞ்ச காலத்துக்கு முன்னுக்கு ஒன்னதா? இல்ல, ஏழேழு தலைமொறைக்கும் ஒனக்கோ ஒன்குடும்பத்துக்கோ இருக்கப் போகுதா? 
இது ஒரு சத்திரம். வந்து போற நாமெல்லாம் வழிப் போக்கருக.. சத்திரம் சொந்தமாகுமா சாலையில போறவனுக்கு?

வீடு மாறி வீடு போறப்ப அது நல்ல வீடு இது கெட்ட வீடுங்கறாங்களே அது நெசமா?.. எல்லா வீட்டுக்கு மேலயும் மழை விழுந்திருக்கு..எல்லா வீட்டுக்குக் கீழையும் ஒரு பொணம் கிடந்திருக்கு..
வீடுகள்ல நல்லது கெட்டது , ஒன்னது என்னதுங்கற தெல்லாம்  வெறும் மனப்பெரட்டு.."

-இப்படி நாவல் முழுக்க எல்லா பக்கங்களுமே சுவாரசியம் ததும்பிக் கிடக்கிறது.. தவறாமல் யாவரும் படிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். . நன்றி.

Wednesday, August 22, 2012

நழுவும் சந்தர்ப்பங்கள்.

அனேக சமயங்களில் பேருந்து நிறுத்தங்களில் நாம் எதிர்பார்த்துக் கிடக்கிற பேருந்து மாத்திரம் சொல்லி வைத்தாற்போல வருவது காணோம்..
 நின்று நின்று மண்டை காய்ந்து நடை கட்டலாம் என்று முடிவெடுக்கையில் அதே நிறுத்தத்திற்கு ஒரு நல்ல பிகர் வந்து நிற்கிறது ..
அப்பாடா என்று பெருமூச்சு விட்டு ஆசுவாசப்படுகையில், வேக வேகமாக வந்து தொலைகிறது சற்று முன்னர் நாம் எதிர்பார்த்த பேருந்து...
ஆனால் அந்த பிகர் நிற்பது மற்றொரு பஸ்ஸுக்காக.. நமக்கென்று வந்த பஸ்ஸில் ஏறச்சொல்லி முட்டாள்தனமாக நம்  கண்கள் பணிக்கின்றன... ஐயோ.
ஓர் கேலிப் புன்னகை செய்கிறாள் அவள்...அதனை காதல் என்று விவஸ்தை இல்லாமல் கற்பனை செய்து அவஸ்தை கொள்கிறது நம் மனது.
-காதலிப்பாள் என்கிற உத்தரவாதம் இருக்குமாயின், நிச்சயம் இறங்கி அவளது பேருந்தில் பயணிக்க ஆட்சேபணை என்ன?
"எங்கடா வெளிய போன மகனைக் காணோமே?" என்று அம்மா தவிப்பதோ, "இதென்னடா வெளிய போன புருஷனைக் காணோம்" என்று பொண்டாட்டி பயப்பதோ பொருட்டற்ற விஷயங்களாகி விடாதோ அவள் நம்மை வரவேற்கையில்??
சபலங்களினின்று மீள்வதென்பது விழித்துக் கொண்டே காண்கிற கனா...
சபலங்கலினுள் சரிந்து புதையுண்டு மூர்ச்சை ஆவதே யதார்த்தமிங்கே..!!

காலம்பர கொஞ்சம் வாக்கிங் போலாம்னு வெளிய கெளம்புனா கொறஞ்சது ரெண்டு மூணு பேராச்சும் "வீட்ல டிராப் பன்னட்டுங்களா?" ன்னு கேப்பாங்க.
"இல்ல சார்.. நம்ம ஹெல்த் ப்ராப்லத்துக்காக வாக் பண்றேன்.. நோ தாங்க்ஸ்.." என்று  பிதற்ற நேர்கிறது..
எப்பாச்சும் நல்லா மண்டை காயற வெயிலில டூ வீலரோ பேருந்தோ அற்ற ஒரு சூழ்நிலையில்  அப்படி கிராஸ் பண்ற யாரையாச்சும் டிராப் பண்ண சொன்னா கூட, "சாரி சார். நான் அப்டி திரும்பறேன்.. இப்டி திரும்பறேன்.." என்று சொல்லியவண்ணம்  நேராக சென்று நம்மைக் கடுப்படிப்பர்... சிலரோ, ம்ஹும் .. ஒரு ரெஸ்பான்சும் இல்லாமல் போயிக்கினே இருப்பாங்க... போங்கடா போங்க.. எங்கனாச்சும் போயி இடிச்சு வுழுங்கோ ன்னு மௌனமா சபிக்கிற அளவு டென்ஷன்  செய்வாங்க..
நாமளும் வண்டியில போறபோது எவனாச்சும் டிராப் பண்ண சொல்லி கையைக் காட்டினா  அவ்ளோ நம்பிக்கையா நிறுத்தறமா என்ன... கேள்விப் பட்டிருக்கோம்.. பின்னாடி ஒக்காந்துக்கிட்டே எதாச்சும் விஷமம் செய்வாங்க... அப்டி இப்டின்னு... அதுக்கு பயந்துட்டு பறந்துடறோம் ...
அப்டித்தானே எல்லாரும்?.. ஆனா நமக்கு நெனப்பு என்னன்னா, நாம மட்டும் தான் பொறுப்பா திங்க் பண்ணி வேணான்னு முடிவெடுக்கறோம் , மத்தவங்க எல்லாம் பொறுப்பே இல்லாம நம்மை avoid பண்றாங்கன்னு முடிவெடுக்கறோம்...
எல்லா விஷயங்களுமே இப்படித்தான் .. அவுங்க அவுங்க அவுங்களோட சவுகரியத்துக்கு  ஒரு முடிவுக்கு வந்திடுவாங்க.. எல்லாருமே தன்னோட தீர்மானமே  சரியானதுங்கற முடிவுக்கு சுலபமா வந்துடறாங்க.. இது எல்லாருக்குமே உள்ள இயல்பான  பலவீனம்.. 

Monday, August 20, 2012

நடைமுறை விபரீதங்கள்..

ஆடி வெள்ளிகளுக்கு அமோக கூட்டம் மொய்த்தன கோவில்களில்... அதுவும் பிரத்யேகமாக அம்மன் கோவில்களில்... மாரியம்மன் கோவில்கள் , பத்ரகாளியம்மன் கோவிலகள் , இத்யாதி இத்யாதி அம்மன்கள்..

புடை சூழ்கிற பெண்களை தரிசிக்க புடை சூழ்கிற ஆண்கள்... அனேக பெண்கள் கற்சிலை அம்மன்களை தரிசிக்கக் குழுமுகையில் , ஆண்களோ நடமாடும் அம்மன்களை தரிசிக்க திரள்கிறார்கள்..

எங்கெங்கிலும் நிகழ்கிற யதார்த்தம் இதுவே என்ற போதிலும் ... என்னவோ ஆண்கள் இனமும் ஆடி வெள்ளி அம்மன்கள் மீது பிரம்மாத அக்கறை செலுத்துவது போன்ற பாவ்லா காட்டினால், அதை நம்புவது அப்பாவி மக்கள் மட்டுமே.

நான் ஓர் ஆணாக இருந்து கொண்டு ஆண்கள் மீது இப்படி ஓர் சாடல் நிகழ்த்துவது நியாயமற்ற செயல் என்றும், இது மிக வன்மையாகக் கண்டிக்கத் தக்கது என்றும் கூக்குரல் எழுப்புகிறவர்கள் வேண்டுமானால் உண்மையான பக்தி சிரத்தை உள்ள ஆண்கள் என்று சான்றிதழ் வழங்க முடியும்... இதனை ஆமென்று மெளனமாக ஆமோதித்து நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்கிற சபல மனிதர்களை எனது மனக்கண் முன்பு நான் அனுமானித்துக் கொள்கிறேன்... அவர்கள் நிச்சயம் எனது கருத்துக்களுக்கு எவ்வித ஆட்சேபனைகளும் தரப் போவதில்லை என்பதை என் மனதறியும்..

கோவில்கள் என்று மட்டுமில்லை... எல்லா கும்பல் கூடுகிற பிராந்தியங்களிலும் இதே  கதை தான் என்பதை என்னால் அடித்து சொல்லமுடியும்... இன்னும் சொல்லப் போனால் இப்படி எல்லா பக்கங்களும் கும்பல் திரளக் காரணமே  எதிரினங்களின் வருகை நிமித்தமே.. வேண்டுமானால் ஆண்களுக்கென்று தனியாகவும் பெண்களுக்கென்று தனியாகவும்  எல்லா விஷயங்களிலும் அனுமதிகள் வழங்கட்டும்... தேவையானவர்களும் உண்மையானவர்களுமே அந்த இடத்தில் குழுமக் கூடும்.. தேவையற்ற ஆண்களோ பெண்களோ அங்கே இடம் பெறுவதற்கான வாய்ப்பு  சற்றும் இல்லை என்பதை நான் அழுத்தி சொல்வேன்..

ஆனால் லேடீஸ் ஒன்லி பஸ் என்பதோ ஜென்ட்ஸ் ஒன்லி பஸ் என்பதோ கூட நடைமுறைக்கு சிக்கலான விஷயங்களாகவே இருந்துவருகிறது..

மற்றொன்று... இந்த டூ வீலர் நன்கு ஓட்டிப் பழகி விடுகிற கல்லூரி செல்கிற டீன் ஏஜ்  பெண்கள் ஆகட்டும், ஓர் நடுத்தர வயதுப் பெண்மணி ஆகட்டும், மிக வேகமாக செல்கிறார்கள்... சிலர் சுடி அணிந்து கொண்டு காற்றில் சால் மிதக்கப் பயணிப்பதைப் பார்த்தால், பொறுப்பான எவருக்குமே  ஓர் டென்ஷன் வந்து விடும்... என்ன வேகம் அது ? எதற்கு அந்த வேகம்?.. இது போதாதென்று தோள்பட்டைக்கும் காதுக்கும் இடையில் செல்போனை செருகிக் கொண்டு ஏதோ பேசிய வண்ணம் பயணித்து ஒழுங்கான முறையில் டிரைவ் செய்கிற ஆண்களையும் கீழே சாய்த்து விடுவார்கள்... ஆனால் கடைசியில் தர்மடி வாங்குவது அந்த அப்பாவி ஆணே ...! இவர்களும் தாங்கள் என்னவோ சீராக ஓட்டி வந்தது போலவும் , அந்த ஆள் தான் வேடிக்கை பார்த்துவிட்டு தன மீது இடித்து விட்டதாகப் புகார் கொடுத்து சிக்க விட்டு விடுவார்கள்..

இன்னும் சில பெண்கள்.. வீட்டில் இருக்கிற வரை ஒழுங்காக இருந்திருப்பார்கள்.. இந்த ஸ்கூட்டி ஓட்டிப் பழகியதும், எடுத்துக் கொண்டு எங்காவது ஓர் ஓரமாக ஒதுங்கி  ஒய்யாரமாக மணிக்கணக்கில் எவருடனோ பேசிக் கொண்டிருப்பதை எல்லாருமே பார்த்திருக்கலாம்... அந்தப் பெண்ணுடைய கணவனோ, தனது மனைவி அற்புதமாக வண்டி ஓட்டுவாள், பள்ளி சென்ற குழந்தைகளை நாம் இனி ட்ராப் செய்யத் தேவை இல்லை, என்கிற நிம்மதிப் பெருமூச்சோடு  இருப்பான்... ஆனால் இங்கே அம்மணி தனது நண்பர்களிடம் கடலை போட்டுக் கொண்டு பொழுது ஓட்டுவாள். வண்டியை ஒரு மரத்து நிழலில் நிறுத்தி அதிலே உட்கார்ந்த வண்ணம்..

இந்த அபாண்ட குற்றச்சாட்டை எல்லா அப்பாவிப் பெண்கள் மீதும் திணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை...
சிலர் இப்படி சீர் கெட்டுத் திரிகிறார்கள் என்பது நிதர்சன உண்மை என்பதை நல்ல பெண்களே ஆமோதிப்பர் என்று நம்புகிறேன்..

இதே தவறுகளை ஆண்களும் மிக யதார்த்தமாக செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்... பெண்கள் செய்வது பிரத்யேகமாகத் தெரிகிறது... ஆண்கள் செய்வது , ஓர் பொது இடத்தில் "தம்" அடிப்பது போல போய் விடுகிறது.. பெண்கள் அவ்விதம் புகைத்தால் வினோதமாகத் தெரியுமல்லவா? அந்த மாதிரி..


Saturday, August 18, 2012

மதுபானக் கடை (திரைப்பட விமரிசனம் )

மதுபானக் கடை படம் பார்த்தேன்..
நிஜமாகவே ஓர் கச்சடா ஒயின் ஷாப்புக்குள் நுழைந்த ஓர் அசூயை நிரம்பிய சூழலை உருவாக்கிய செட்டிங் போட்டவருக்கு ஓர் பெரிய பாராட்டு...

அங்கே வந்து அன்றாடம் குடிக்கிற குடிகாரப் பயல்கள் ஆகட்டும், குடித்துவிட்டு அவர்கள் செய்கிற ரகளைகள் ஆகட்டும், மிக யதார்த்தமாக நகர்த்தி அசத்தி இருக்கிற திரைக்கதைக்கு ஒரு குவாட்டர் .. இல்லை இல்லை.. ஒரு புல்லே வாங்கித் தரலாம்..

அந்த மாமூல் ரகளை செய்கிறவர்களை விரட்டியடிப்பதும், அவர்களது லூட்டியை சலித்துக் கொள்வதும் கூட நகைச்சுவை இழையோடும் விதமாக அமைந்துள்ளது...

அந்த மதுபானக் கடைக்கு ஓர் முதலாளி , கஸ்டமர்களுக்கு சப்ளை செய்கிற டாஸ்மாக் தொழிலாளிகள், எல்லாருமே நடிக்கவில்லை.., மாறாக இயல்பாக வாழ்ந்திருக்கிறார்கள் அந்தப் பாத்திரங்களாகவே... காமெரா இவர்களுக்கெல்லாம் தெரியாமல் இவர்களை சுட்டுத் தள்ளியது போல யதார்த்தம் தாண்டவமாடுகிறது படம் நெடுகிலும்... ஒ(ளி )லிப்பதிவின் யதார்த்தங்கள் கூட அதே கரகாட்டம் ஆடியுள்ளதெனில் மிகையன்று... இவ்வளவு யதார்த்தங்களோடு இசையும் சேர்ந்து கொள்கிறது..

இப்படி ஓர் நாற்றவெளி, கதையின் மையமாயிருக்கையில் ... வாசமானதொரு காதலும் தளமமைத்திருப்பது ஆச்சர்யமும் ஆறுதலும் நிரம்பிய விஷயங்கள்... சாராயக் கடையின்  முதலாளி மகளையே டாவடிப்பதும் , டாவடித்தவாறு அந்தப் பெண்ணின்  அப்பனையே அதாவது தன் முதலாளியையே நக்கலாகவும் கேவலமாகவும்  பேசுவதும், அதற்காக அந்தப் பெண் சற்று கோபிப்பதும்  பிற்பாடு காதலில் துவண்டு கோபிக்கிற சுரணை இழப்பதும் நம் தமிழ் சினிமாவுக்கு ரொம்பப் புதிய காட்சிகள்...

இவ்வளவு இயல்பான சினிமாவுக்கு , திரை அரங்கு மொத்தத்திலும் பத்துப் பதினைந்து பேர்கள்  இருந்தால் அதிகம்... ஒருக்கால் ரெண்டு வாரம் ஆனதால் கூட்டம் குறைந்து காணப் படுகிறதோ தெரியவில்லை..

-நிச்சயம் ஒரு நல்ல சினிமாவை சுலபத்தில் அடையாளம் கண்டு கொள்கிற எவருமே இதையும்  அதே சுலபத்தில் அடையாளம் கண்டு கொண்டு வியப்பார்கள் என்பதில்  கிஞ்சிற்றும் ஐயமில்லை..

ஆகஸ்ட் பதினஞ்சு..

சுதந்திர தின வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்ளப் பட்டன.. மின்னஞ்சல்களில்

எனக்கதில் உடன்பாடு உள்ளதெனிலும் ஓர் வகை ஆதங்கமும் உண்டு அதனை வெளிப்படுத்தும் விதமாக நான் கொஞ்சம் நீண்டு ஓர் அஞ்சல் அனுப்ப நேர்ந்தது அதனை எனது  பிளாகிலும் வெளியிட விரும்புகிறேன்


.வாழ்த்துக்கள் பரிமாறி பிரத்யேகமாக சுதந்திரத்தை யாரும் இங்கே அனுபவிப்பது போல தெரியவில்லை... தீபாவளி போலவோ பொங்கல் போலவோ ஒரே நாள் கொண்டாட்டமாக இங்கே சுதந்திரம் இல்லை.. இது அன்றாடம் நிகழ்கிற பேரின்பமாக நம்மில் படிந்துள்ளது... எத்தனை பேர் இந்தப் புனிதமான விலைமதிப்பற்ற சுதந்திரத்தை பிரயோகிக்கிறார்கள், மற்றும் துஷ்ப்ரயோகிக்கிறார்கள் என்பதே இங்கே கவனிக்கப் படவேண்டிய, தவறுகள் காண்பின் கண்டிக்கப் படவேண்டிய விஷயங்கள் ஆகும்... 
பொது இடங்களில் வெற்றிலை சிகப்பெச்சிலைத் துப்புகிற, நினைத்த இடங்களிலும் குப்பை கொட்டுகிற, காறித் துப்புகிற, சளியை மூக்கிலிருந்து பருச்சென்று சிந்துகிற, திடீரென்று பேருந்து ஜன்னலில் தலையை நீட்டி வாந்தி எடுக்கிற, வெட்டவெளியில் மலஜலம் கழிக்கிற, .. இன்னும் இப்படி இத்யாதி துஷ்ப்ரயோக சுதந்திரங்களை நாமெல்லாம் விரும்பாவிட்டாலும் அன்றாடம் அருவருப்போடு தரிசித்து முகம் சுழிக்கிற சூழல் நிகழ்ந்த வண்ணமே தான் உள்ளது..
இவை போக, வாசலுக்கு வந்தே தான் பல் துலக்குகிற, அந்த பேஸ்ட் வெள்ளையை நினைத்த இடங்களில் துப்பி சிதறல் கோலம் போட்டு ரசிக்கிற, துவைப்பதற்கென்று வெளியே கல் போட்டு சோப்பு நுரையை வீதியில் உலவ விடுகிற, ... இப்படி இவையெல்லாம் ஓர் வித சுதந்திரம்... 
யு டியூபில் வெளி நாடுகளின் தூய்மையை கவனியுங்கள்... மக்களின் சுகாதார மேன்மையை கண்டு வியப்பீர்கள்... லட்சம் பேர் கூடுகிற ஓர் இடத்தில் கூட அவசரம் ஆர்ப்பரிப்பில்லாத தெளிவில் செயல்படுகிறார்கள்... ஆனால், நமது கோவில்களில் கூட ஓர் இருபது பேர் கூடியிருந்தாலுமே கூட .. பிரசாத விநியோகம் என்றால் , குப்பைத் தொட்டியில் எச்சிலை விழுந்ததும் உர்ரென்று முகங்களை வைத்துக் கொண்டு பிராண்டுகிற நாய்களுக்கு ஒப்பாக நமது மக்கள் தங்களையே கேவலப் படுத்திக் கொள்கிறார்கள்... 
சுகாதாரம் குறித்த பிரக்ஞை அற்ற எவரும் சுதந்திர வாழ்த்துக்களைப் பரிமாறுகிற யோக்கியதை அற்றவர்கள் என்பது எனது தாழ்மையான கருத்து... நன்றி..

Friday, August 10, 2012

பாப்பாவின் குறும்பு


பாப்பாவின் குறும்பு
எனக்கும் மனைவிக்கும்
ரத்தக் கொதிப்பேற்றும்..
முதுகில்அறைந்து விடுவதும்
கால்களுக்குக் கீழே
நறுக்கென்று கிள்ளி
விடுவதும் எங்கள்
தண்டனை முறைகள்...

முதுகில் என் மனைவி
அறைகையில்
அவளை நான் கண்டிக்கிற
தருணங்களும்
கால்களுக்குக் கீழே
நான் கிள்ளுகையில்
மனைவி என்னைக்
கண்டிக்கிற தருணங்களும்
வாய்ப்பதுண்டு...

அவள் அறைவதும்
நான் கிள்ளுவதும்
பரஸ்பரம் ஆட்சேபங்கள்
எதுவுமற்று கூட
அவ்வப்போது நிகழும்..
ரகளையின் சூடு
பாப்பாவிடம் அப்படி
இருக்கும்...

பிந்தைய தருணமொன்றில்
எங்கள் இருவராலும்
கொஞ்சப் படுவாள்..
எங்கள் முத்தங்களில்
ஈரமாகி கசங்கிப் போவாள்...

தீவிர ரகளையில்
இருவரிடமும்
தாக்குதலுக்குட்பட்டு ..
அழுது ஆர்ப்பாட்டம் செய்து
அப்படியே தூங்கிப்
போகிற போது மட்டுமே
நாங்களிருவரும்
அதிகம் கலங்கிப்
போக நேர்கிறது..
ஒவ்வொரு தருவாயிலும் ...!!
!

Monday, August 6, 2012

நான் ஈ படவிமரிசனம்

நான் ஈ படம் பார்க்க நேர்ந்தது... இப்படி ஓர் தத்ரூபமான படத்தை இதுவரை தமிழில் நான் பார்த்ததில்லை..
இந்தப் படத்தின் கதை இன்னதென்று ஒருவரிடம் கேட்டு, அதை அவரும் உங்களிடம் சொல்லும் பட்சத்தில்... திரை அரங்கு சென்று பார்க்கிற எண்ணம் சுலபத்தில் வராது.. . நாம் பாட்டுக்கு அப்படியே ரிலாக்ஸ் ஆக போய் உட்கார்ந்து பார்ப்போமேயானால் ... நிச்சயம் சந்தர்ப்பம் வாய்த்தால் மற்றொரு முறை சென்று பார்க்கலாம் என்று அவா ஏற்படுத்துகிற ஓர் படம் இது என்றால் மிகை அன்று..

திரைக்கதையும் வசனங்களும் இம்புட்டு அறிவுப்பூர்வமான நக்கலாக இருக்கிறதே என்று வியந்தால்... அதன் உபயம் அண்ணன் கிரேசி மோகன்... 
அதுபோக, படத்தின் பின்னணி இசை பின்னி எடுத்துவிட்டார் எம்.எம்.கீரவாணி.. பாடல்கள் எதுவும் மனசில் ஒட்டவில்லை என்ற போதிலும் பின்னணி இசை பிழிந்தெடுத்து விட்டார்..

இந்தக் கதைக்கான மூலம் என்னவாகவும் இருக்கட்டும்..தைரியமாக புகுந்து விளையாடி இருக்கிற இந்த லாவகத்தைப் பார்த்தால், இதுவரை நம்ம பாலசந்தரோ சங்கரோ கமல்ஹாசனோ கூட கையாளவில்லை இப்படி ஓர் குதூகல கும்மாளத்தை என்றே சொல்லவேண்டும்... 

கதாநாயகனை கால்வாசி மட்டும் நடிக்கவைத்து விட்டு முக்கால்வாசியை ஈக்கே சமர்ப்பித்திருக்கிற இவர்களது ரசனை அபரிமித வியப்பில் ஆழ்த்துகிறது... 

அந்த வில்லனது வீரியத்தை கண்டு வியக்காமல் இருப்பது மான்பன்று... அப்படி ஓர் களவாணித்தனம்... கிஞ்சிற்றும் இறக்கம் என்னவென்று தெரியாத இரும்பிதயம் படைத்த இம்சை அரசன்..

கவுரவத் தோற்றத்தில் திருட்டுப் பயலாக உலா வரும் சந்தானம் .. அப்போது கதாநாயகி ஈயை, அதாவது கதாநாயகனைக்  கொஞ்சுவதை கண்டு .. தன்னைத் தான் கொஞ்சுவதாக நினைத்து .. நெக்குருகிப் போவது செமை நக்கல்... 
அந்தக் கதாநாயகியின் மிக யதார்த்தமான காதல் நடிப்பு... ஈயுடன் நடிக்க எந்த ஈகோவையும் காண்பிக்காத ஓர் தன்மை...
-இப்படி படம் நெடுக பகுத்தறிவும் ஆரோகியமும் நகைச்சுவைகளும்  மிளிர்கிற இந்தப் படம்.. நிச்சயம் தமிழ்பட வரலாற்றில் ஓர் மைல்கல் என்பதில் எவ்வித ஆச்சர்யமோ சந்தேகமோ இல்லை..

ஒரே விஷயம் என்னவென்றால்.., சில துக்கிரி சிந்தனையாளர்கள் .. இதைப் பார்த்து மேற்கொண்டு "நான் கொசு" என்று ஒரு காவியத்தைப் படைக்க முனையக் கூடும்... அந்த விபரீதம் தவிர்க்கப்பட முடியாதென்றே தோன்றுகிறது..

Friday, August 3, 2012

உங்களுக்கும் இப்படி எல்லாம் தோன்றுமா?

நூறு கமெண்ட்ஸ் வந்துவிட்டதே பரவாயில்லையே என்று வியந்து அந்த நபருடைய கமெண்ட்ஸ் column த்தைப் பார்த்தால் நூற்றுக்கு எண்பத்தாறு கமெண்ட்ஸ் அந்த நபரே பிதற்றியிருப்பார்... பார்க்கவே இசி மிதித்த உணர்வை மனசுள் பரப்பும்... இது என்ன மானம்கெட்ட தனம் என்று அரற்றும்... ஆனால் இப்போது எனக்கே அது நிகழ்ந்தது போல ஓர் அசூயைக் கிளர்கிறது... ஆம்.., ஓர் சிறு கவிதைக்கு பிரசுரமாகி இருக்கிற எட்டுக் கமென்ட்டில் என்னுடையதே மூன்று நான்கு இருக்கிறது..., வெறுமனே நன்றி நவிலல் கமெண்டில் சேர்ந்து விடுகிறது... ஆனால் நம்மை மனதாரப் பாராட்டிய ஒரு மனிதனுக்கு நன்றி தெரிவிக்கிற ஓர் சாதாரண தன்மை கூட இல்லை என்றால் பிளாக் எல்லாம் எதற்கு எழுதணும் என்கிற கேள்வி மனசுள்...

புகழ் எனக்கு இஷ்டம் எனிலும் , அது குப்பை போல குவிய வேண்டுமென்கிற பேராசை இல்லை... ரெண்டொருவர் என்னை அங்கீகரிக்கிற சந்தோஷமே அலாதி எனக்கு...
மற்றொன்றையும் தெரிவிக்க விரும்புகிறேன்... இந்தக் காலப் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் மீதாக வைத்துள்ள அளவு கடந்த நம்பிக்கைகளும், தங்கள் வாரிசுகள் பல துறைகளில் பிரம்மாதமாக, பிரம்மாண்டமாக ஜொலிக்க வேண்டுமென்கிற பேரவா பரவலாக இன்று எல்லார் வசமும் ஓர் மனவியாதி போல வியாபித்து விட்டிருக்கிறது..

விஜய் டிவி யில் குழந்தைகள் பாடுகிற நிகழ்வுகளைப் பார்க்கிறேன்... மிக நேர்த்தியாகப் பயிற்றுவிக்கப் படுகிறார்கள் குழந்தைகள்... அவர்களது திறன்களைத் தீர்மானிக்க தலைமை வகிக்கிற பிரபலப் பாடகர்கள்.. அந்தப் பாடுகிற குழந்தைகளை , அவர்களது பாடுகிற திறமைகளை விலாவாரியாகப் புட்டுப் புட்டு வைக்கிறார்கள்.., மேற்கொண்டு எவ்விதம் அவர்களது திறன்களை பிரகாசிக்கச் செய்வதென்கிற டிப்ஸ் கொடுக்கிறார்கள்.., ஆனால் அப்போதைக்கு அவர்களுக்கு அங்கீகாரம் தாற்காலிகமாக மறுக்கப் படுகிறது... அதனை ஏற்க மனதற்று அந்தக் குழந்தை தேம்பித் தேம்பி அழுகிறது... அவர்களது பெற்றோரின் முகங்களும் தற்கொலைக்கு முயல்பவர்களின் பாவனையோடு இம்சை காண்பிக்கிறார்கள் முகங்களில்..

அந்தப் பிரபல பாடகர்களின் அபிப்ராயங்களும் சாடுதல்களும் தங்களுக்கு ஓர் திருத்திக் கொள்கிற சந்தர்ப்பமாக ஏற்கப் படவேண்டுமேயன்றி, மிகக் கேவலப்பட்டு விட்டது போலவும் மேற்கொண்டு இந்த வாழ்க்கையே வாழத் தகுதியற்றது போலவும் எதற்கு ஓர் சீன் போட்டுக் காட்ட வேண்டும் அந்த விஜய் டிவி காமெராக்கள்? இதையெல்லாம் வர்ணித்து ஓர் சோக உரை ... அதனூடே ஓர் தந்தி அறுபட்ட சோபை இழந்த இசை... 

இப்படியெல்லாம் சூழல்களை சிருஷ்டித்து என்னத்தை சாதித்துக் கிழிக்கப் போகிறார்கள் இவர்கள் எல்லாரும்?, அதாகப் பட்டது, இதனைத் தொகுக்கிற நிகழ்ச்சித் தொகுப்பாளர், மத்யஸ்தம் செய்கிற பிரபலப் பாடகர்கள்... குழந்தைகள் இப்போதே சூப்பர் ஸ்டார் ஆகவேண்டும் என்கிற தாகம் தொனிக்கிற பேராசைப் பெற்றோர்கள்.. இன்னபிற இவை சார்ந்த கலைஞர்கள்.. எல்லாரும்?..

கொஞ்சமேனும் லஜ்ஜைகள் கற்றாக வேண்டும் இவர்கள் யாவரும்... 
நன்றி..


நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...