Monday, August 6, 2012

நான் ஈ படவிமரிசனம்

நான் ஈ படம் பார்க்க நேர்ந்தது... இப்படி ஓர் தத்ரூபமான படத்தை இதுவரை தமிழில் நான் பார்த்ததில்லை..
இந்தப் படத்தின் கதை இன்னதென்று ஒருவரிடம் கேட்டு, அதை அவரும் உங்களிடம் சொல்லும் பட்சத்தில்... திரை அரங்கு சென்று பார்க்கிற எண்ணம் சுலபத்தில் வராது.. . நாம் பாட்டுக்கு அப்படியே ரிலாக்ஸ் ஆக போய் உட்கார்ந்து பார்ப்போமேயானால் ... நிச்சயம் சந்தர்ப்பம் வாய்த்தால் மற்றொரு முறை சென்று பார்க்கலாம் என்று அவா ஏற்படுத்துகிற ஓர் படம் இது என்றால் மிகை அன்று..

திரைக்கதையும் வசனங்களும் இம்புட்டு அறிவுப்பூர்வமான நக்கலாக இருக்கிறதே என்று வியந்தால்... அதன் உபயம் அண்ணன் கிரேசி மோகன்... 
அதுபோக, படத்தின் பின்னணி இசை பின்னி எடுத்துவிட்டார் எம்.எம்.கீரவாணி.. பாடல்கள் எதுவும் மனசில் ஒட்டவில்லை என்ற போதிலும் பின்னணி இசை பிழிந்தெடுத்து விட்டார்..

இந்தக் கதைக்கான மூலம் என்னவாகவும் இருக்கட்டும்..தைரியமாக புகுந்து விளையாடி இருக்கிற இந்த லாவகத்தைப் பார்த்தால், இதுவரை நம்ம பாலசந்தரோ சங்கரோ கமல்ஹாசனோ கூட கையாளவில்லை இப்படி ஓர் குதூகல கும்மாளத்தை என்றே சொல்லவேண்டும்... 

கதாநாயகனை கால்வாசி மட்டும் நடிக்கவைத்து விட்டு முக்கால்வாசியை ஈக்கே சமர்ப்பித்திருக்கிற இவர்களது ரசனை அபரிமித வியப்பில் ஆழ்த்துகிறது... 

அந்த வில்லனது வீரியத்தை கண்டு வியக்காமல் இருப்பது மான்பன்று... அப்படி ஓர் களவாணித்தனம்... கிஞ்சிற்றும் இறக்கம் என்னவென்று தெரியாத இரும்பிதயம் படைத்த இம்சை அரசன்..

கவுரவத் தோற்றத்தில் திருட்டுப் பயலாக உலா வரும் சந்தானம் .. அப்போது கதாநாயகி ஈயை, அதாவது கதாநாயகனைக்  கொஞ்சுவதை கண்டு .. தன்னைத் தான் கொஞ்சுவதாக நினைத்து .. நெக்குருகிப் போவது செமை நக்கல்... 
அந்தக் கதாநாயகியின் மிக யதார்த்தமான காதல் நடிப்பு... ஈயுடன் நடிக்க எந்த ஈகோவையும் காண்பிக்காத ஓர் தன்மை...
-இப்படி படம் நெடுக பகுத்தறிவும் ஆரோகியமும் நகைச்சுவைகளும்  மிளிர்கிற இந்தப் படம்.. நிச்சயம் தமிழ்பட வரலாற்றில் ஓர் மைல்கல் என்பதில் எவ்வித ஆச்சர்யமோ சந்தேகமோ இல்லை..

ஒரே விஷயம் என்னவென்றால்.., சில துக்கிரி சிந்தனையாளர்கள் .. இதைப் பார்த்து மேற்கொண்டு "நான் கொசு" என்று ஒரு காவியத்தைப் படைக்க முனையக் கூடும்... அந்த விபரீதம் தவிர்க்கப்பட முடியாதென்றே தோன்றுகிறது..

1 comment:

  1. மிகவும் ரசித்து எழுதி உள்ளீர்கள்... பாராட்டுக்கள்... நான், குழந்தைகளோடு குழந்தையாக பார்த்து சந்தோசப்பட்டேன்... நன்றி...


    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...