Monday, October 31, 2011

மழைக்கால ஞாபகங்கள்..

மழையின் ருசியில்
மயங்கியது நாக்கு...                             
...
சின்னத் தூறலில்
நனைவதற்குக் கூடத்
தடை விதித்த 
பால்ய காலங்கள்
மலரும் நினைவுகளாய்
இப்போது நனைந்துகொண்டே...!

ஒவ்வொரு மழையிலும்
ஓடிப்போய் நனையவே 
என் ரசனைகள் பருத்திருந்தன...
ஆனால் தடை விதிப்பதைக்
கடமையாயும் கெளரவமாயும்
கருத்தாய்க் கொண்டிருந்தனர்
பெற்றோரும் மற்றோரும்...!

சிணுங்கிக்கொண்டே விலகி நிற்பேன்..
போகப்போக என் அடம் 
அவர்களுக்கு பெரிய இம்சையாகவே,
குடைகொடுத்து இறக்கிவிடுவர்
மழையில் என்னை..
என் குடையை  கொஞ்சம் மட்டும்
நனைய விட்டு
 முழுதுமாக
நான் நனைந்து...மேற்கொண்டு
குடை  நனையாமல் 
பார்த்துக் கொள்வேன்...!!

மழையில் நனைகிற என்
திமிரை எவராலும் எப்போதும்
அடக்கவே முடிந்ததில்லை...

மழை வருகிற முஸ்தீபில்
வானம் பூச்சாண்டி காட்டுகிற
போதெல்லாம் , மக்கள்
ஏன் அப்படி துரிதம்
காட்டுகிறார்களோ  என்று
எரிச்சல் வரும் எனக்கு...

இத்தனை ஜாக்கிரதை
காட்டுகிற மக்கள்
சளி காய்ச்சல் என்று
அடுத்த நாள் ஆஸ்பத்திரியில்
குவிகிறார்கள்...

இத்தனை கிழிக்கிறவன்
என் மகள் நனைகையில்
பதறாமலா இருக்க முடிகிறது?
அவசரமாகக் கைக்குட்டை
எடுத்து அந்த சின்ன
மண்டையைத் 
துவட்டி விடாமலா இருக்க முடிகிறது??...

Saturday, October 29, 2011

மானக்கேடு...இன்னும் இரண்டு 
அல்லது மூன்று
மாதங்கள்
 கால்களுக்கு வரக்கூடும் 
என்கிற தகுதியில் 
என் கால் செருப்புகள் 
உள்ள நிலையில்...
மற்றொரு புதுஜோடி
செருப்புக்கு அவசியமும்
அவசரமும் என்ன என்கிற
கேள்வி என் மனைவியினிடத்து...

கண்காட்சி ஸ்டாலில்
மிகத் தரமானதென்று
உத்தரவாதமாகக் கூவியதைத்
தொடர்ந்து அலைமோதிய 
கூட்டத்தில் நானும் 
மயங்க நேர்ந்ததை விளக்கும்
பொறுமையற்று --
"வாங்கியாச்சு , விடு"
என்று மட்டும் சொன்னேன்...

ஒரு வருடம் வரக்கூடும்
என்று நம்பி ஒன்றரை
வருடம் வரை வந்த
ஒரு ஜோடி செருப்பு 
ஒரு அவசர நடையில் அறுபட்டு
தெருவோரம் ஓரங்கட்ட வேண்டிய
சூழ்நிலை ஏற்பட்டது 
சில வருடங்கள் முன்னர்...
--பிற்பாடு
பொருளாதார பலவீனமோ
அல்லது அந்த செருப்பை இழந்த
வேதனையோ... மேற்கொண்டு
சில மாதங்கள் வெறுங்காலோடு
தான் திரிந்து வந்தேன்... 

அப்போதெல்லாம் என் 
செருப்பில்லாத கால்கள்
குறித்த எந்தப் பிரக்ஞையும்
அற்றிருந்த  என் மனைவி
 இன்று
எனது முன்ஜாக்கிரதையை
கேவலப்படுத்துகிறாள் ..!!

அவளிடமுள்ள 
ஐந்து ஜோடி செருப்புகளில்
எதைத் தேர்ந்தெடுப்பது
என்கிற அவளது
குழப்பங்களை மட்டும் ரகசியமாய்
அன்றாடம் ரசித்துக் கொண்டிருக்கிறேன்
மானங்கெட்டுப் போய்...!!!

சுந்தரவடிவேலு..            

Tuesday, October 25, 2011

பகிரங்க ரகசியம் ....


 --

எல்லா கூட்ட நெரிசல்களிலும்
எல்லா ஆண்களும் 
"தன் முழங்கைகளை பெண்கள் மீது
யதார்த்தமாக ஸ்பரிசிப்பது எங்கனம்?"
என்று ஒரு புத்தகம் போடுமளவு
விஷயங்கள் வைத்திருந்தனர்...

--அதே யதார்த்தங்களுக்கு
பெண்களும் உடந்தை போல
பரஸ்பரம் ஸ்பரிசங்கள் நிகழ்ந்தன..!

கணவன் மார்களோடு வந்த சில பெண்கள்
முறைப்பதாக நடிக்க வேண்டியாயிற்று...
மனைவிகளோடு வந்த சில ஆண்கள்
மனைவிக்குப் பின்னாடி நடந்து 
உரச வேண்டியாயிற்று...!!

தனித்து வந்த இரு பாலருக்கும்
உரசுவதென்பது 
பதற்றமற்ற சுதந்திர நிகழ்வாயிருந்தது..!!

உடன்பாடோடு தனிமையில்
தழுவிக் கொள்வதற்கான 
நிகரில்லை என்றாலுமே கூட
"யதார்த்தம் போன்ற உரசல்களுக்கு"
என்று ஓர் பிரத்யேகமான ரசாயனம்
எல்லோரிலும் சற்று 
வீரியமாகவே வியாபித்துள்ளது தான்..

உணர்வுகள் நிமித்தமாய்
புலன்களுள் புடைத்தெழும் நெருப்பானது
வேள்வி ஜ்வாலைகளுக்கு
சற்றும் குறைந்ததன்று...!!!

சுந்தரவடிவேலு..

Monday, October 24, 2011

கனிமொழி...

நான் எந்தக் கட்சிக்காரனும் அல்ல... என் சிறு மனிதாபிமானம் மட்டுமே இதனை எழுதத் தூண்டிற்று...

மகளின் கைகள் கம்பித்திரி பற்றி இருக்க....
எரிகிற தீபத்தில் அதன் முனையைக் காண்பிக்க..
சற்று நேரத்தில் பூக்க இருக்கிற தீப்பொறி குறித்த
மகிழ்ச்சியைக் காட்டிலும், அதன் நிமித்தமாக --
அந்த மகளின் முகத்தில் பூக்கும் சந்தோஷத்
தீப்பொறியில் குதூகலித்த அந்த தீபாவளிகள்...!!

இன்று--
அதே மகள் கம்பிகளைக் கைப்பற்றி இருக்க..
துக்கத்தீப்பொறி தந்தையின் நெஞ்சுக்குள்...!!
கொப்பளித்துக் கசிந்த அந்தக் கண்ணீர்ச் சூட்டில்
கன்னங்கள் வெந்தன...!!


Saturday, October 22, 2011

நிரந்தரம் என்கிற தற்காலிகம்..

உடலுக்கு நோயென்று ஏதேனும் வருகையில்....
"பற்றற்ற தன்மை" மீதாக ஓர் தனித்துவமான பற்று
வந்து விடுகிறது நமக்கு... இது சற்று வினோதமே..!!

ஆரோக்யமான தருவாய்களில் அல்லாத ஓர் வெறுமையுணர்வு..
பீதி கலவையான ஓர் ஆழ்ந்த அமைதி... நோயில்..!
வாழ்வின் அடர்த்தி நைந்து..,
அறுபடக் காத்திருக்கிற உத்தரவாதமில்லாத
வீணைத்தந்தியின் சாயலில்...

தற்காலிகமான ஆரோக்யமே கூட
நிரந்தரமென்பதான ஓர் மாயத் தோற்றத்தை
நம் எல்லோரின் வசமும் ஏற்படுத்தி விடுகிறது..!!

நிரந்தரமாகி விடுகிற சில நோய்களுமே கூட
தற்காலிகமானது என்பது போல, 
மிகத் துரிதமாக குணமாகி விடுகிற பாவனையிலேயே
மரணம் வரையிலுமாக சமாளித்து வந்து விடுகிறது நம்முடன்..!!!

பணம் சம்பாதிக்கிற ... பொருளீட்டுகிற..
நமது வினய வியாக்யானங்களும் ...
சம்பாதிக்கவே  தடுமாறுகிற நமது பலவீனங்களும்--
மரணத்தின் முன்னிலையில் 
எவ்விதத் தகுதியுமற்றவைகளாகி விடுகின்றன...!!


Saturday, October 15, 2011

கடவுளும் மனிதர்களும்...{நய்யாண்டி}

நம் நிலை குறித்து சந்தோஷப்படுகையிலும் சரி, வேதனைப் படுகையிலும் சரி.. சுலபத்தில் கடவுளைக் காரணம் காட்டி விடுகிற போக்கு நம்மில் பலருக்கும் உண்டு... சந்தோஷப் படுகையிலும் கூட சற்று மறந்து விடுவோம்.. ஏதேனும் சங்கடம் வருகிறபோது மாத்திரம் உடனடியாகக் குற்றவாளிக்கூண்டில் நாம் நிறுத்த முயல்வது கடவுளைத் தான்...
செல்லாத பத்து ரூபாய் கொடுத்து பேருந்தில் பயணிக்க முடியாது.., சினிமா பார்க்கமுடியாது, டீ கடையில் டீ குடிக்க முடியாது... இங்கெல்லாம் அந்தப் பத்து ரூபாய்க்கு இத்தனைப் பிரச்சினை இருக்கையில்.... பூசாரி காண்பிக்கிற தட்டில் போடவோ , கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தவோ சாமி எந்தத் தடையும் போடுவதில்லை... 


--இப்படியாக கடவுளாகப்பட்டவர், எது நாம் செய்தாலும் பொறுத்துப் போகிறவராக இருக்கிற காரணமாக ... நமது பிரச்சினைக்கும் இவரே காரணம் என்று அவர் மீது குண்டு போடுபவராக நாம் இருக்கிறோம்..

வாய் திறந்து பேசுபவராக கடவுள் இருக்கும் பட்சத்தில், நாம் செய்கிற அக்கிரமங்களுக்கு நின்று கொள்ளாமல் அரசன் போல அன்றே கொன்று விடுவாரென்றே அனுமானிக்கிறேன்..
என்னா கொடும சார் இது? என்பது போல, சினிமாவுக்கு செல்கையில் டிக்கட் கிடைக்கணும் என்று சாமியிடம் வேண்டினால் கூடத் தேவலாம்..., நான் போயி உட்கார்ந்த பிற்பாடே படம் போட வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்கள்...

எங்க ஊரு பஸ் இன்னும் போயிருக்கக் கூடாது சாமி... நான் படிச்ச கேள்வி பதிலே எக்சாம்ல வரணும் சாமி, இன்னைக்கு என்னோட ஆளு என்னைப் பார்த்து ஸ்மைல் பண்ணினா, உனக்கு ஒரு ஈடு தேங்கா சாமி..

சாமி என்பவர் முன்னர் இவ்வுலகில் இருந்தாரா என்கிற ஆய்வுகள் புளித்துப்போனவை... இப்போதும் இருக்கிறார் என்கிற நம்பிக்கைகள்...
-- இருக்கிறார் .. ஆனால் எதுவும் பேசாமல், நாம் நம் இஷ்டத்துக்கு எதனை செய்தாலும் பேசாமல்... 

அப்படி நம் செய்கைகள் குறித்து உடனடி விமர்சனம் செய்கிற சாமி இப்போது இருக்குமேயானால் ... அது பேஜார் சாமி... 
சாமி கல்லாக இருக்கிற வரைக்கும் தப்பித்தார்...ஏதோ ஒரு நேரத்தில் கோபித்துக் குற்றவாளிக் கூண்டில் சாமியை நிறுத்தினாலும், இன்னொரு முறை ஜட்ஜ் ஆக உட்கார வைத்து கை கட்டி வாய் பொத்துகிற பக்குவமும் மனுஷப் பசங்க கிட்ட உண்டு... 

யுகம் யுகமா ஒவ்வொரு தினுசா இவுங்க வேண்டுறதை எல்லாம் சாமியும் பார்த்துக்கிட்டே தான் இருக்கார்...
ஸ்தபதி செதுக்கிய சிலை தான் என்றாலும், அதனையும் மறந்து .. அந்தக் கல்லையும் சாமியாக பாவித்துப் பார்க்கிற மனிதனின் பெருந்தன்மை, நிச்சயம் சாமிக்கே சிலிர்க்க வைக்கிற சமாச்சாரம்....

செதுக்கிய ஸ்தபதியே கோவில் திருவிழா கூட்டத்தில் வரிசையில் நின்று தான் சாமியைப் பார்த்தாக வேண்டும்... 
அட நீங்க வேற... அந்த சாமியே வந்து நடுவில் புகுந்தாலும், .. "யோவ்.. யார்யா அது.. இங்க நிக்கிறவங்க என்ன இளிச்சவா பசங்களா? நீங்க தான் ரொம்ப புத்திசாலியா?.. பின்னாடி வாயா லைன்ல..."   

Monday, October 10, 2011

இன்று வந்ததும் அதே நிலா?? SHORT STORY....

இரண்டாமாண்டு கல்லூரி சென்று கொண்டிருக்கிற எனது மகளின் தோழி, என்னை காதல் வசப்படுத்திய விபரீதத்தை நான் எனது டைரியில் எழுதுவதைக் கூடத் தவிர்க்க வேண்டியாயிற்று..."அங்கிள்" என்று வெள்ளந்தியாக என்னிடம் பேசுகிற, அப்பா ஸ்தானத்தில் என்னை நிறுத்திப் பார்க்கிற அந்த என் மகள் போன்ற பெண்ணிடத்து என் பொருந்தா காதல் மீது எனக்கே ஓர் தாங்கொணா அசூயை...

குற்ற உணர்வோடு சரிவர சாப்பிடக்கூட பிடிபடாமல் அலுவல் கிளம்புகிறேன்... என் நடவடிக்கையின் மாறுதல்களை சுலபத்தில் அடையாளம் கண்டு கேள்வியாகப் பார்க்கிற என் மனைவியின் முகம் ஓர் அவஸ்தை என்றால், என் தன்மை குறித்த எவ்வித சந்தேகங்களும் அற்ற என் மகள் சுபா முகமாகட்டும், அந்தத் தோழிப் பெண் கவிதா வாகட்டும்... பேரவஸ்தை எனக்கு...!!

இவ்வித சூழல்களோடு டிவி நாடகமோ, சினிமாவோ வேண்டுமானால் சுவாரஸ்யத்தோடு பார்த்துக் கொண்டிருக்கலாம், ஆனால் உண்மையாக எனக்கே நடக்கிறதென்றால், .. எங்கே போய் கொட்டித் தீர்க்க?

சில விஷயங்கள் ஓர் பிரத்யேகமான பின்புலத்தோடு தான் நடக்கிற சாத்தியம் கொண்டுள்ளன... இந்த விஷயமும் அப்படி ஓர் பின்புலத்தோடு தான் நிகழ்கிறது என்கிற உள்ளுணர்வொன்று என்னுள் கிளர்ந்து கொண்டே தான் இருக்கிறது... 
இந்த மாதிரியான காதல் உணர்வுகள் யாவும் ஓர் பிராயத்தில் எனக்குள் நேர்ந்தவை தான்... ஒரு தலையாகவும், பிறகு இருதலையாகவும் அந்த அனுபவம் அடர்த்தி கண்டது... அதில் சிலிர்த்து இறுகிய இருதயம் இன்னும் அதே பாறையின் திணவில் தான் என்னுள் படிமானமாகிக் கிடக்கிறது..

காதல் இருதலையாகிக் கூட தோல்வி காண நேருமாயின் அது மாபெரும் சாபமன்றோ?... ஒருதலைக் காதல்கள் கூட வெற்றிவாய்ப்பினை எட்டிப்பார்த்த சம்பவங்களை எல்லாம் தரிசித்து வியந்தவனுக்கு... இருவரும் ஓடி ஓடி ஆசை தீரக் காதலித்த ஜோடிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அறுபட்டுப் பிரிவதென்பது உலகமகா சோகமல்லவா??

அதற்கான காரணிகள் பெற்றோர் என்றால் கூட ஜீரணிக்கலாம்..., சம்பந்தப் பட்ட காதலியே காரணம் என்றால்?.. அப்படி ஆயிற்று என் காதல் கதை... என் தகுதியும் செல்வாக்கும் அவளுக்கு நான்காம் தரமாகி விட்டன... அவளைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையின் அந்தஸ்த்தை ஒப்பிடுகையில்..!!

பெண் பார்க்க வருகிற வைபவத்தையே ஓர் இழவு சேதி போல என்னிடம் புலம்பிக்கொண்டிருந்தாள்... எப்படியோ அதனைத் தவிர்க்கச் சொல்லியும், ஊருக்குள்ளேயே அவர்களை விடாமல் விரட்டி விடுமாறும் தான் என்னிடம் அழாத குறையாக கட்டளைகள் விடுத்துக் கொண்டிருந்தாள்...நான் தான் கேனப்பயல், "விடுடி .. சும்மா பொலம்பாதே.. வந்தா வந்து பார்த்துட்டுப் போகட்டும்.. நீயும் பார்க்கற மாதிரி பார்த்துட்டு புடிக்கலைன்னு சொல்லிடு" என்று புத்திசாலி போல ஐடியா கொடுத்தேன்..

ஆனால் வந்தது ஆப்பு... மாப்பிள்ளையின் ஆஜானுபாகு, அரசாங்க உத்தியோகம், சம்பளம், எல்லாம் அம்மணியை தலைகுப்புறத் திருப்பி விட்டது.. மேற்கொண்டு என்னைப் பார்ப்பதை ஓர் இழவு போல உணர ஆரம்பித்து விட்டாள்...

என்னென்னவோ செய்யத் திட்டமிட்டு , "என் கையால உன்னை கொல்றேன் பாரு" என்றெல்லாம் வீர சபதமேற்று...
ஓர் தருவாயில்--- சீ போடி நாயே..போயும் போயும் உன்னைக் கொன்னு என்னோட வாழ்க்கையை நான் தொலச்சுக்கனுமா? என்கிற தீர்மானத்தில், என் வாழ்க்கையை வேறு கோணத்தில் நான் செலுத்த நேர்ந்த .. ... அந்த சம்பவங்கள் யாவும் நிழலாடுகிறது... 

இன்று எனக்கும் ஓர் நல்ல மனைவி, வெளியூரில் படிக்கிற மகன், உள்ளூர் கல்லூரியில் படிக்கிற மகள் என்று நேர்த்தியாகத் தான் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது... ஆனால் பாருங்கள் --

இப்படி ஓர் காதல் இப்பொழுது...
அதற்கான காரணத்தை நான் திடீரென்று ஓர் நடுராத்திரியில் தூக்கத்தின் நடுவே உணர நேர்ந்தது... 
--அந்தக் கவிதாவினிடத்து, என் முன்னாள் காதலி கல்பனாவின் முகச்சாயல்..

முன்னாளில் உயிருக்கு உயிராகக் காதலித்த ஓர் பெண்ணின் முகம் இவ்வளவு தாமதமாக நினைவில் எழுகிற விபரீதம் அதிசயமாக இருக்கிறது எனக்கு... அந்த முகத்தைப் பார்த்த மாத்திரத்தில் அல்லவா கல்பனா அங்கே வந்திருக்க வேண்டும்?.. அப்படி அப்பட்டமாகவா  இருக்கும் முகம்? ஏதோ சாயல்கள் தானே??


இந்தக் குழப்பங்களின் நிமித்தமாக எனக்கு கவிதாவை உடனடியாகப் பார்த்தாக வேண்டும் போல அவசரம் தொற்றிக்கொண்டது...

என்னவோ சொல்லி வைத்தாற்போல கவிதா அடுத்த நாள் அவள் அம்மாவோடு என் வீடு வந்தாள்... அவள் அம்மா, ---- கல்பனா..

என்னைப் பார்த்துக் கும்பிட்டாள்... நானும் பதிலுக்குக் கும்பிட்டேன்..
எனக்கு உடனடியாக ஞாபகம் வந்து விட்டது.. அவள் என்னை சுத்தமாக மறந்து விட்டாள் போலும்..!!  எந்தப் பழைய சங்கதிகளும் அவளில் பிரதிபலிக்கவில்லை..

--கல்பனாவிற்கு மறப்பதென்பது அப்போதும் சரி, இப்போதும் சரி .. பெரிய விஷயமில்லையே!!!

வழக்கம் போல மறுபடி ஒரு நாள் கவிதா என் மகள் சுபாவைப் பார்க்க என் வீட்டிற்கு வந்தாள்.. 

அனிச்சையாக நான் அவளைப் பார்த்துப் புன்னகைத்தேன்.. அவளும் பதில் புன்னகை செய்தாள்..  இந்த முறை அவளது புன்னகையில் அந்தப் பழைய வெள்ளந்தி மறைந்து விட்டிருப்பதாகத் தோன்றியது எனக்கு..!!


Wednesday, October 5, 2011

எங்கேயும் எப்போதும் .. {பட விமரிசன முயற்சி}

உண்மை சம்பவம் கூட இவ்வளவு வேதனைகளும் கோரங்களும் நிரம்பி இருக்குமா என்பது சந்தேகமே... ஆனால் திரைக்காக மெனக்கெட்டு , அதனைப் பார்க்கிற ரசிகர்கள் எல்லாரையுமே சிறிது நேரம் திகைக்கவும் வேதனைப்படவும் வைத்து விட்டார் டைரக்டர்... இது அவருக்கும் அவரது திரைக்கதைக்கும் மிகப்பெரிய வெற்றி என்ற போதிலும், ஓர் தாங்கொணா சோகத்தை இப்படித் தத்ரூபப்படுத்துகிற முயற்சி வேண்டாமென்றே தோன்றுகிறது.....

இன்னும் விமானத்திலும் சொகுசுக் கப்பல்களிலும் பயணம் மேற்கொண்டு மாபெரும் விபத்துக்களுக்கு உள்ளாகி மரணிப்பவர்களை யோசிப்போமேயானால் இந்த உலக வாழ்க்கை அற்ப புல்லைக் காட்டிலும் கேவலமாகப் புரிபடத் துவங்கி விடும்.... தியான முறைகளும் யோகா முறைகளும் இம்மாதிரியான பற்றற்ற தன்மைகளை ஊக்குவிப்பதில் தான் பிரயத்தனங்கள் மேற்கொள்கின்றன... ஆனால் இம்மாதிரி எந்த விபரீதங்களும் நிகழாமலே அம்மாதிரியான பற்றற்ற தன்மைகளுள் பயணிப்பதற்கான தளங்களை அமைத்துத் தருகின்றன...

ஆனால் இயல்பில் ஒரு மனிதன் இவ்வித கோர சம்பவத்திற்கு பிற்பாடே வாழ்க்கை மீதான நம்பிக்கைகளையும் பிடிப்பையும் இழக்க நேர்கிறது...அதுவும் கூட, சில வாரங்களோ மாதங்களோ...மீறினால் சில வருடங்களோ...!!

ஆனால் பற்றற்ற தன்மைகளை பின்பற்றுகிற குழாமிடம் பொருளீட்டுகிற திறன் இருக்குமா மற்றும் எதையேனும் புதிதாகக் கண்டுபிடித்து சமுதாயத்திற்கு நன்மை பயக்க வைக்குமா  என்பதெல்லாம் பதில் சொல்ல முடியாத கேள்விகள்...

பற்றும் வேண்டும், பொது நல நோக்கும்  வேண்டும், எதையேனும் சாதித்து அதனை சமுதாயத்திற்கு சமர்ப்பிக்கிற மாண்பு வேண்டும்...

ஓர் படத்தை விமர்சிக்கத் துவங்கி, வேறெதையோ யோசிக்க நேர்கிற அளவு ஆழமாகவும் அழகாகவும் இருக்கிறது எங்கேயும் எப்போதும்...

ஜெய்யின் நடிப்பு ஓர் அற்புதமென்றால், அஞ்சலியின் நடிப்பு ஓர் அற்புதம்... அது போக சென்னையை கண்டு மிரள்கிற, மிகவும் யதார்த்தமாக சந்தேகப்படுகிற அனந்யாவும், அவரது guide ஆக செயல்பட்டு காதலனாகிறவராகட்டும், ஆனந்யாவின் அக்கா, ஜெய்யின் அம்மா, ... 

இத்தனை பாத்திரங்களை வடிவமைத்து, அவர்களுக்கெல்லாம் ஓர் முந்தைய 
சுவாரஸ்யமான வரலாறுகளைப் பதிவு செய்து,.. இவர்களுடைய அந்த வரலாறுகளோடு இந்தக் கொடுமையான விபத்துக்களை இணைத்து நமக்குக் காண்பிப்பது கண்ணீர் வரவழைக்கிறது..

பேருந்தில் பயணிக்கிற அந்தப் புதுமணத்தம்பதிகள், துபாய் சென்று திரும்புகிற தந்தை, அவருக்கான அவருடைய மகளின் போன் கால், ...

ஐயோ...தமிழில் இப்படி ஒரு படம் .. யாரும் இது வரை பார்த்திருக்க வாய்ப்பில்லை...

Tuesday, October 4, 2011

வெப்பம்...


 

என் அந்தரங்க டைரி
வீட்டில் அங்கும் இங்குமாக
எறிந்தபடி தான் கிடக்கிறது...

என் டீன் வயது
சபலங்கள் துவங்கி,
ஓர் பிராயத்தில்
நான் காதல்வசப்பட்டது,
என் காதல் வெற்றிபெற்றது
பிற்பாடு தோல்வியுற்றது,
இன்னபிற எனது
சேஷ்டைகள் அனைத்தும்
அடங்கிய அந்த டைரியை
நானே மறுபடி வாசிக்க
பயப்படுவேன், மற்றும்
சங்கடப்படுவேன்...

மலரும் நினைவுகளில்
உழல அவ்வப்போது
அவா பிறக்குமேயானாலும்
அந்த டைரி தவிர்த்து
பிறவற்றில் லயிக்கவே முனைவேன்...!!

அப்படியான
அந்த டைரியை
மாற்று நபர் படிக்க நேர்கையில்
அதன் நிமித்தமான எனது
தர்மசங்கடங்கள் சொல்லி மாளாது..
பல முறைகள்
அதனை எனது பெட்டியில் 
அடைப்பதற்கான திட்டம் வரும்..
ஆனால் ஏனோ அது
நடைமுறை சாத்யப் படாத
விதமாகவே முடிந்து போகும்..

சில விஷயங்கள் 
சுலபத்தில் தீர்வு காண்பவை..,
ஆனால் ஒருவித சோபை யின்மையால்
அது நிறைவேறாத , 
நிறைவேறும் வாய்ப்பே அற்றதாக
நிலைபெற்றுவிடுகிற தன்மை
ஆச்சர்யமானது..

அப்படித்தான் அந்த எனது
டைரி, மனைவி கண்ணிலும்
வீட்டிற்கு வருகிற நபர்கள்
கண்ணிலும் ஊசலாடிக்கொண்டே
இருப்பது, எனக்குள் ஓர் வகை
அச்சத்தை உண்டு பண்ணிக்கொண்டே 
இருக்கிறது...

ஒரு நாள் தீவிர முடிவெடுத்து
எறிந்து கிடக்கிற அந்த 
டைரியை எரித்துவிடுவதே
உசிதம் என்று கருதி
--அதற்கு முன்னர்
ஒரேமுறை அதனைப்
படித்துவிட முடிவுசெய்து..
படித்து முடித்து....

ஒருவழியாக
எனது பீரோவின் 
உள் அறையுள் வைத்துப்
பூட்டப்பட்டது அந்த டைரி...

"இன்னும் கொஞ்சம் 
பாக்கி இருக்கிறது படிக்க, 
அதற்குள் அந்த டைரியை
எங்கே போட்டீர்கள்?"
என்று என் மனைவி 
கேட்ட போது..
நான் உயிரோடு எரியூட்டப்
படுவதாக உணர நேர்ந்தது...!!!    

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...