Wednesday, October 31, 2012

போராடும் பெண்மணிகள்..விஷுவலாக நாம் இந்தப் புகைப் படத்தை ரசிக்கிற நமது ரசனை பாராட்டத் தக்கது தான்... இதன் வாயிலாக மனசைத் தொடுகிற ஓர் கவிதையைப் புனைந்து அப்ளாஸ் வாங்கிவிடுவதும் கவிஞர்களுக்கு மிக சுலபம் தான்...

ஆனால் அவர்கள் அனுபவிக்கிற அவஸ்தையை நாம் சற்று கற்பனை செய்யவேண்டும்...
பள்ளிக்கு அனுப்பிவைக்க வேண்டிய குழந்தைகள் வீட்டில் இருப்பர்..
கணவன் நனையாமல் இருக்க அலுவல் வரை இந்த மிதிவண்டியில் அமர்ந்தவாறு குடையைப் பிடித்துக்கொண்டு  செல்லவேண்டும்... பிறகு தலைவர்  சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு அலுவலிலே நிறுத்திவிடுவார்... அந்தப் பெண்மணி குடையைப் பிடித்தவாறு திரும்பி நடந்து  வீடுவந்து குழந்தைகள் பள்ளி செல்ல  துரிதப் படுத்தவேண்டும்...

பக்கத்து வீட்டுப் பார்வதி அக்காவை கொஞ்ச நேரம் குழந்தைகளை கவனிக்கச் சொல்லிவிட்டு  வந்திருப்பாள் இவள்... பார்வதியக்காவோ , "இதென்னடா சனியன்  போனது இன்னும் திரும்பி வரலை?.. இதுக வேற நொய் நொய் ன்னு அனத்துதுக...நமக்கு வேற ஆபீஸ்க்கு நேரமாச்சு.." என்று வெள்ளம் போகிற சாலை மீது  கண்களை மேயவிட்டு எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள்..

தரக்கன் புறக்கான் என்று வெள்ளத்தில் கால்கள் இழுபட இந்தப் பெண் வருவதைப் பார்த்த  பார்வதிக்கு "அப்பாடா" என்றிருக்கும்...

அவசர அவசரமாக யாவற்றையும் ஒப்பேற்றி பள்ளிக்கு அனுப்பக் காத்திருக்கையில் சுரேஷின் குரல் ஒலிக்கிறது.."இன்னைக்கு ஸ்கூல் லீவக்கா" ..
பொடிசுக ரெண்டுக்கும் ஒரே கொண்டாட்டம், கும்மாளம்..
"இந்த ஈரத்துல இனி இதுகளை வச்சு மேய்க்கனுமே சாமி" என்று வயிற்றில் புளியைக் கரைக்கிறது  அம்மாவுக்கு...  

புகைப்படம்: THE HINDU வில்..

Sunday, October 28, 2012

வாழைமரங்கள்.

சரஸ்வதி பூஜைக்காக..ஜோடி முப்பது ரூபாய் என்று கறாராக அடித்துப் பேசி விற்கப்பட்ட வாழைக்கன்றுகள் .. இருபத்தைந்து ரூபாய்க்குக் கூட குறைத்துக் கொடுக்கப் படவில்லை. எந்த பேரத்துக்கும் இறங்கி வராமல், அந்த பூஜை நேரம் நழுவ நழுவ ... ஜோடி இருபதாகி, பதினைந்தாகி, பத்தாகி .. ஐந்தாகி..

கேட்க நாதியற்று சாலைகள் எங்கிலும் அதே இரவில் வாழைத் தோப்பு போல வியாபித்து.. விடியலில் பார்க்கையில் .. வாழைத் தோப்பே எழுந்து நகரவீதிகளுக்கு ஊர்வலம் வந்து நிற்கிறதோ எனத் தோன்றும் அளவு .. நின்றிருந்தன..

திருவிழாவுக்கு அழைத்துவரப் பட்ட குழந்தைகள் .. வாழைக் கன்றுகள்..
பிறகு பெற்றவர்களே விட்டுவிட்டு சென்றது போல அப்பாவிகள் போல நின்றிருந்தன கன்றுகள்...

வழக்கமாக எச்சிலை அந்தஸ்தோடு மட்டுமே குப்பைத்தொட்டிக்கு வருகிற இலைகள்..... இந்த சரஸ்வதி பூஜை காலங்களில் மட்டும் சுத்தமாக வந்து விழுந்து கிடக்கும்..

ஹிந்துக்களின் பல சுவாரசிய விழாக்களில் இந்த ஆயுத பூஜையும் ஒன்று... தனது இருப்பிடங்களை, தொழில்புரிகிற நிறுவனங்களை அதற்கு உபயோகமாக இருக்கிற உபகரணங்களை .. இன்னபிற அனைத்த விஷயங்களையும் சுத்தப் படுத்தி புணரமைக்கிற இந்த விழா ஓர் தலையாய விழா என்றே சொல்லவேண்டும்..
இதுவும் கடந்து, குழந்தைகளின் எழுத்தறிவை ஆரம்பித்து வைக்கிற வித்யாரம்பம் என்கிற ஓர் விழாவினையும் இதனோடு இணைத்து ஓர் பரவசக் கிளர்ச்சியை  நிகழ்த்துகிற இந்த விழாவினை எவ்வளவு மெச்சினாலும் தகும்..

இது முடிந்து ரெண்டோரு வாரங்களில் தீபாவளி ... பிற்பாடு பொங்கல்..
இப்படி ஓர் குறிப்பிட்ட சிறு சிறு இடைவெளிக்குப் பிற்பாடு ஒவ்வொரு ஆனந்த விழாவையும் திணித்திருக்கிற  ஹிந்துக்களின் பண்பாடு ஓர் அலாதி சுகந்தம்...

அந்த இடைவெளியைக் கூட விழாவாக வரித்து நாம் வாழப் பழகுவோம்..
விழாவினையே ஹிம்சையாக மாற்றிவிடுகிற சில கயமை நிரம்பியவர்களும் இருக்கவே செய்கிறார்கள்... அப்படியானவர்களைக் களைந்து அவர்களுக்கும் வாழ்வின் ஆரோக்கிய  தன்மைகளைப் பயிற்றுவிப்போம்..

இதனை எனது சின்ன மெசேஜ் ஆக இங்கே பதிக்க விரும்புகிறேன்.. நன்றி..

Saturday, October 20, 2012

வார்த்தைகள் அற்ற கவிஞன்..

வார்த்தைகள்
பிடிபடாமல் ஓர்
நல்ல கவிதை ...
மனசுக்குள்..!

தேடிக் கிடைத்த 
வார்த்தைகள் யாவும்
அந்த உணர்வுகளை
நிரப்புகிற
திறன்கள் அற்றுத்
திணறுகின்றன..!!

ஆகவே
மௌனம் சிறந்ததென்று
முடிவாயிற்று..
என் தனிப்பட்ட
மனசுக்கு அதுசரி...
வாசிப்பவர்கள் உணர
வார்த்தைகள் இட
வேண்டுமல்லவா??

இப்போதைக்கு
முடியாதென்று
சொல்லிப் பார்க்கிறேன்...
"இவ்வளவு தானா
உன் திறன் ?"
ஏளனமாகக் கேட்கின்றன
எல்லாரது கண்களும்..

"அவகாசம் கொடுங்கள்..
அம்சமாக எழுதிவிடுவேன்"
சொல்லிவிட்டு
நழுவித் தொலைகிறேன்..

இப்படி எழுதி
எப்படியோ ஒரு
கவிதை ...
எனது கவிதைகளின்
எண்ணிக்கையில்
கூடிவிட்டது..??!!


Saturday, October 13, 2012

பயணங்கள் முடிவதில்லை...----- திருமலை நாயக்கர் மஹால் ---- மதுரை.

எப்போது மதுரை செல்ல வாய்க்கையிலும் திருமலை நாயக்கர் மகாலை சென்று ஓர் தரிசனம் செய்துவிட்டு வருவது எனது சுபாவம்...
மனத்தைக் கொள்ளை கொண்டு கபளீகரித்து விட்ட அதன் கட்டிடக் கலை.. அதனை வர்ணிக்க என் வார்த்தைகளுக்குத் திறனில்லை என்பதை விட அதற்கான வார்த்தைகளே இல்லை என்னிடம்...

ஆத்திசூடி மறந்து போய் ஊமையாக, மெளனமாக, பிரம்மித்துப் போய் பேயறைந்தார் போல நிற்பேன் அதன் பிரும்மாண்டத்தில்...
எனது அற்ப வார்த்தைகள் நிரப்பி அதன் வசீகரத்தை விளக்க முனைவதே என்னுள் ஓர் லஜ்ஜை ஏற்படுத்தும்... ஆதலால் மௌனமே உத்தமம் என்பதாக எதுவும் அது குறித்து நான் இதுவரை எழுதியதில்லை...

எப்படி இது சாத்யம் ஆயிற்று?.. நம்மால் ஒரு சின்ன சுவரை எழுப்பவே ஆயிரத்தெட்டு யோசனை செய்து, கடைசியில் அதுவும் தவிர்க்கப் பட்டு வெட்ட வெளியாகவே இருந்து விட  அனுமதிக்கிற பரந்த எண்ணம் கொண்டவனாக இருக்கிறேன்... ஆனால் ஆயிரத்தெட்டு தூண்களை அலேக்காகக் கொண்டு வந்து நிறுத்தியது போல அங்கங்கே நிறுத்தி அசத்தி இருக்கிறார்களே...

இது ஓர் தனிப் பட்ட மனிதனின் சிந்தனையா?.. கூடிப்பேசி திட்டமிட்ட ஓர் குழுவின் யோசனையா?.. எது எவ்வாறாயினும், இதற்கான முழுமுதல் ஆற்றலும் திருமலை நாயக்கரையே சாரும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க நியாயமில்லை..

வியப்பு நம்முள் தாண்டவமாடுகிறது... 
எத்தனை எத்தனை நபர்களும், யானைகளும், துவக்கம் முதலே செயல்பட்டு இந்தப் பிரம்மாண்டத்தை  சாத்தியப் படுத்தியிருக்கக் கூடும்?

தான் மிகப் பெரிய கட்டிடம் கட்டிவிட்டோம் என்று அகம்பாவத்தில் உலவித் திரிகிற பொறியியல் வல்லுனர்களும், தன்னைப் போல எவரும் இதுவரை வீடே கட்டவில்லை  என்று பிதற்றித் திரிகிற பலரும் இந்த தி.நா மகாலை ஒருமுறையாவது சென்று பார்த்துவிட்டு வரவேண்டியது மிக அவசியம்...
நிச்சயம் வெளியே வருகையில், தனது அனுமானம், அகம்பாவம், ஆணவம் எல்லாம் மௌனமாகக் கரைந்து.. ஓர் மகா ஞானி போல பற்றற்ற தன்மையோடு வெளிவருவதற்கான  எல்லா சூட்சுமங்களும் அடங்கியுள்ளன இந்த மகாலில் எனில் அது மிகையே அன்று.. !!.. 

Tuesday, October 9, 2012

இருளிலும் புலனாகிற வண்ணங்கள்...

நிசப்தங்களின் 
நாராசாரம் ... 
வெடித்தே விடும் போல 
இதயம் ...!

ஏதேனும் 
உளறலோ 
அனர்த்தக் கூப்பாடோ 
கவைக்குதவாத 
கதறல்களோ 
எதிர்பார்க்கிற காதுகள்..!

பயித்தியம் போல 
எவருமற்றுப் புன்னகைக்கிற 
காட்டுப் பூக்கள்...
கவிஞனை எதிர்பார்க்காமல் 
கவிதை காண்பிக்கிற 
முழுநிலா...

-இருளிலும் 
புலனாகிற வண்ணங்கள்...

தெளிந்து நெளிந்தோடுகிற 
மழைநீர்...
தாகமிருந்தும் அருந்தும்
பிரயத்தனமில்லை...                

--மின்சாரம் பறிபோய் ....
குப்பைக் காற்றை 
விநியோகித்த மின்விசிறி 
நின்று போய் .....
ஆழ்ந்த உறக்கம் 
தடம்புரண்டு ..
அதன் நிமித்தம் 
நிகழ்ந்த ஓர் அற்புதக் 
கனவில்... 
இப்படியெல்லாம் 
ஓர் இன்பாவஸ்தை.....!

அரைத்தூக்கமும் 
அவிழ்ந்து போய் 
பானை ஜலம் மொண்டு 
பருகினேன்...
கனவில் புரண்ட 
மழைநீர் - எனது வீட்டின் 
பானையில் வந்து 
நிரம்பிய கற்பனையோடு..!! 

Friday, October 5, 2012

கொடிகள் கிழிவதில்லை ....

Indian Stock Market Shares
Indian Stock Market Shares


Indian Stock Market SharesIndian Stock Market Shares
Indian Stock Market Shares
மற்ற நாடுகளோடு நமது இந்தியாவை அவ்வப்போது ஒப்பீடு செய்து ஓர் மௌனமான குற்ற உணர்வில் மனதை நனைய விடுகிற அனுபவம் இந்த தேசத்தின் ஒவ்வொரு பிரஜைக்கும் உரித்தான ஓர் அனுபவமென்றே கருதுகிறேன்...
Indian Stock Market Shares
ஆனாலும் இந்த மூவர்ணக் கொடி கண்டு மனசுள் எழுகிற பரவச உணர்வை எந்த இந்தியனாலும் புறக்கணிக்க முடியாது...

உலகத்தில் உள்ள அனைத்த நாடுகளின் கொடிகளும் அந்தந்த நாட்டு மக்களின் மனதுள் ஓர் மிகப் பெரும் ஆளுமை செய்த வண்ணம் பறந்து கொண்டிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை...
Indian Stock Market Shares
நாம் இங்கே நமக்கு நேர்ந்த அனுபவங்களைப் பகிர்வதில் தான் ஓர் உன்னதம் பொதிந்துள்ளதாக உணர்கிறோம்..

ரத்தம் ஒரே நிறம், எல்லா மக்களும் ஒரே இனம், நாம் எல்லாரும் சகோதர சகோதரிகள், என்றெல்லாம் வீராவேசத்தோடு பல முழக்கங்களை கிளப்பினாலும், காற்றிலே பறக்கிற கொடியைக் கூட வேறுபடுத்தி அடையாளம் காண்பிப்பதில் தான் .. பேதங்களின் மீதாக மனிதனுக்குள்ள இயல்பான ரகசியமான காதல்  பகிரங்கப்படுகிறது..

வானம் மாதிரி ஒரே அடையாளம் எவருக்கும் சுவாரஸ்யப் படுவதில்லை... பிறை மாதிரி, பௌர்ணமி மாதிரி, உதயசூரியன் மாதிரி, அஸ்தமன சூரியன் மாதிரி, நட்சத்திரங்கள் மாதிரி, முகில்கள் மாதிரி,வானவில் மாதிரி...இப்படி பல வகையறா அடையாளங்களை அலசுவது தான் அவனது ரசனைக்கான பெருந்தீனி... இதனையெல்லாம் விடுத்து ஓர் சாவகாச தருணத்தில் வானத்தை மட்டுமே ஏகாந்தமாக ரசிக்கிற பாங்கும் மனிதன் வசம் உண்டு..! அந்த ஓர் தன்மையின் போதில் தான் அவனது பிரக்ஞை சமத்துவத்தில் ஈடுபாடு கொள்கிறது... பிறகு அவனையும் அறியாமல் பாகுபடுத்துகிற பந்தாட்டம் அவனுள் புகுந்து அதற்குமிதற்குமாக விளையாடத் தூண்டுகிறது.

இவன் கத்திக் கதறித் தான் இனி இந்தியாவே வாழப் போவது போல.. , "இந்தியா வாழ்க".. "வாழிய பாரதம்".. "வாழ்க இந்தியா.. வளர்க அதன் புகழ்" என்றெல்லாம் அரற்றித் தீர்ப்பதில் அவனது தேசபக்தி பூர்த்தியாகிறது அவனுள்...
-பிடித்த கொடியை விடாமல் இருப்பதும், கொடியைக் காப்பதும்,.. கொடிகாத்த குமரன் போல கொடிநாட்ட முயல்வதும்...

ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் கொடிகளைத் தவிர எல்லாமே கிழிந்து விடுகின்றன... ஆனால் கிழிந்துவிடுகிற பலவீனத்தில் இருப்பது போல தெரிவதென்னவோ கொடிகள் மாத்திரமே..!!

Thursday, October 4, 2012

என் அபிப்ராயம் சரியா??

இளம்பிராயம் சிறுபிள்ளைத் தனங்களின் ஓர் அற்புதத் தளம்..
அந்தத் தளத்தில் நின்றவாறு நமது அனாவசிய சேஷ்டைகளை
அரங்கேற்றினோம்... நமது அதிகப் பிரசங்கங்களை முழங்கித் தீர்த்தோம்..

திருக்குறள் வலியுறுத்திய நாவடக்கம் குறித்த பிரக்ஞையற்று-- வந்தது வார்த்தை என்று வாயோயாமல் உளறிக் கொட்டிக் கிளறி அலப்பறை செய்தோம்... கீ கொடுத்தால் சுற்றுகிற பொம்மைகளாக, தூண்டிவிட்டால் எரிகிற நெருப்பாக, கவைக்குதவாத விஷயங்களை எல்லாம் பெரிதாக்கி கறார் பேசி அரசியலாக்கினோம்..

ஆனால் ஓர் இழையில் இந்த மடத்தனங்கள் எல்லாம் நமது அறிவுக்கு "மடத்தனம்" என்று புரிகிற தருணம் எல்லாருக்கும் வாய்க்கும்... அப்போதைய நமது தர்மசங்கடங்களின் வீச்சு மழைக்கால மின்னலின் அதீதத் தன்மையோடு நம்மில் பதுங்கி நம்மைக் கிடுகிடுக்க வைக்கக் கூடுமென்றே எனக்குத் தோன்றுகிறது...

அவ்வித சிறுபிள்ளைத் தனங்களை அடையாளம் காணமுடியாமல் கூட சிலரது வளர்ச்சி இருந்துவிடுமோ என்றொரு சந்தேகம் எனக்குண்டு... அப்படியாயின் அது சாபமென்றே கருதுகிறேன்... அப்படி அடையாளம் காணவே முடியாத வகையில் அவனது வளர்ச்சி இருக்கும் பட்சத்தில்  அது வளர்ச்சி என்று கொள்ளவே லாயக்கில்லை என்றும் , அவன் இன்னும் அந்த சிறுபிள்ளைத்தனங்களின் இழையினின்று  அறுபடவில்லை என்றுமே அனுமானிக்க வேண்டியுள்ளது..

அவன் தான் கரைவேட்டி கட்டி ராயல் என்பீல்ட் புல்லட்டில் வலம்  வருகிற திவ்யமான அரசியல் வாதி என்று என்னால் அடித்து சொல்லமுடியும்... மனரீதியாக ஓர் பக்குவம் பெற்று நாகரீகமாக நடந்து கொள்கிற மனிதனுக்குக் கூட அவ்வளவு சுலபத்தில் மதிப்போ மரியாதையோ இந்த சமூகத்தில் வந்துவிடுவதில்லை.., ஆனால், இந்தக் கரைவேட்டி ஆசாமிக்கு அலேக்காக எல்லா சீர்வரிசையும் நிகழ்ந்து விடுகிற கொடுமை தமிழ்நாடெங்கிலும் பட்டிதொட்டி எல்லாம் அரங்கேறுகிறது..

வார்டுக் கவுன்சிலர் ஆகிறான் முதற்கண்... பிறகு, எம்.எல்.எ. தேர்தலில் வேட்பாளராக நின்று ஜெயிக்கிறான்... எம்.பி ஆகிறான்... இப்படி நீள்கிறது அவனது செல்வாக்கும் அரசியல் வாழ்க்கையும்... வாயும் குண்டியும் சேர்ந்து பேசுகிறான்., தொகுதிக்கு அதை இதை எதையும் தன்னால் செய்து  சாதிக்கமுடியும் என்று பேசி, பேசிய வண்ணமே சாதித்தும் காண்பிக்கிற அவனது மாண்பில் மயங்கி மக்களும் அவனுக்கு சுலபத்தில் அடிபணிந்து விடுகிற  சூழ்நிலை கண்கூடு... அப்புறம் ஓர் கட்டத்தில் மக்களை சந்திக்கவே முடியாத ஓர் பெரும்பதவியில்  அவன் காலடிவைத்து மலரும் நினைவாகக் கூட தனது தொகுதிக்குத் திரும்ப  வந்து தரிசனம் செய்யாத அவனது கயமை மொத்தமாக உணரப்படும்.... இவனையா  இவ்ளோ தூக்கிக் கொண்டாடினோம் என்று லபோதிபோ என்று அடித்துக் கொள்கிற அப்பாவி மக்கா  ஒரு பக்கம்.... , இவன வச்சு நாமுளும் பெரிய ஆளா ஆகிடலாம் என்று கைத்தடி ஆகி, கூஜாவாகி, மானம்கெட்டு மரியாதை கெட்டு .. காசு பணம் மட்டும் கொறபாடு இல்லாத .. பச்சோந்தி வர்க்கம் ஒரு பக்கம்....!!


"

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...