Tuesday, June 26, 2012

வழக்கு எண் பாலாஜி சக்திவேல் ....

22.06.2012 வெள்ளிக்கிழமை அன்று வடகோவை குஜராத் சமாஜ் மண்டபத்தில் வழக்கு எண் 18/9 படத்தை டைரக்ட் செய்த டைரக்டர் பாலாஜி சக்திவேல் அவர்களை பாராட்டி கோவை மக்கள் நடத்திய ஓர் விழாவில் பங்கேற்கிற வாய்ப்பொன்று எனக்குக் கிட்டிற்று... மிக எளிமையான விழா.. ஆனால் இனிமையான சுவாரசியமான விழா...
மாலை ஆறு மணிக்குத் துவங்குவதாக அறிவித்திருந்த விழா ஏழு மணிக்குத் துவங்கிற்று.. .. அவரைப் பாராட்ட இன்னபிற சினிமா டைரக்டர்கள் முதற்கண் பாராட்டிப் பேச, பிற்பாடு இன்னும் சிலர் பேசினர் ..
நிறைவில் பாலாஜி அவர்கள் பேசுகையில் கேட்பதற்கு மிக யதார்த்தமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது..

பலவற்றை அவர் பேசினார் என்றபோதிலும், சிலவற்றை மாத்திரம் நான் ஹை லைட்ஸ் ஆக இங்கே பகிர்ந்து கொள்ள பிரியப் படுகிறேன்..

"நீங்கெல்லாம் என்னை ஹா ஹோ வென்று பாராட்டும் வகையில் பெரிதாக சாதித்த உணர்ச்சியே இல்லை... எனக்குத் தெரிந்த சில விஷயங்களை விஷ்வல் ஆக்கி சமர்ப்பித்தேன்... கதையைக் கூட எவரிடமும் தெளிவாக சொல்லவில்லை..அவ்வப்போது எனக்குத் தோன்றிய  காட்சிகளை சுட்டுக் கொண்டே வந்தேன்..."
"
"ஷங்கர் வழங்கும் ... லிங்குசாமி வழங்கும்.. என்கிற பானர்களோடு வந்தால் தான் பார்க்க வருகிறார்கள்... நமக்கென்ன.. எப்படியோ மக்களை வரவழைத்த பிறகு நமது சாராம்சங்களை அவர்களில் திணிப்பது ... அதனை அவர்கள் ரசனைக்கு ஏற்ப ஏற்றுக் கொள்வது, அல்லது புறக்கணிப்பது.. அவ்வளவே"


என்னைப் பாராட்டிப் பேசியவர்களில் பலரும் என்னைவிட மேதைகளாக அறிவுக் கூர்மை உடையவர்களாகத் தெரிகிறார்கள்..ஆனால் இங்கே நான் படம் எடுத்து ஜெயித்துக் கொண்டிருக்கிறேன்..


எனது பட்ஜெட் பத்துக் கோடி இல்லை .. என்னால் வெறும் பத்து லட்சத்தில் கூட ஓர் உன்னதமான உருப்படியான படத்தினை எடுத்துவிட முடியும்..--கூட்ட முடிவில் அவரிடம் ஆடோக்ரப் வாங்க அலைபாயும் கூட்டம், அவரிடம் அசிஸ்டன்ட் ஆக சேர்கிற சாத்யம் உள்ளதா என்று பதறுகிற கூட்டம், நடிக்கிற வாய்ப்பு கிடைக்குமா என்று ஆர்ப்பரிக்கிற கூட்டம்..

நடிகர்களையும் இயக்குனர்களையும் இப்படி ஈயென மொய்க்கிற மக்களை பார்க்கையில் எனக்கு எப்போதுமே  ஓர் வார்த்தைப் படுத்த வியலாத அசூயை ஒன்று பிறக்கும்... அந்த கும்பலை விட்டு உடனடியாக வெளியேறி விடத் தோன்றும்..  

Saturday, June 16, 2012

மக்குப்பயலின் ஹைக்கூ..

எங்க வகுப்பு வாத்தியார்
ஆம்பளையா இருந்தும் கூட
முட்டை போடறார்..


Monday, June 11, 2012

காதலிப்பவர்களின் நாகரீகம்..!!

பேருந்து நிறுத்தத்தில்
உன்னோடு இருப்பது
எனது காதலுக்குக்
கிடைத்திருக்கிற
மகோன்னத
வாய்ப்பென்பேன்...

அனர்த்தமாகவேனும்
எதையேனும் உன்னோடு
பேசுகிற அற்புத
சந்தர்ப்பம் அது...

மற்றவர்கள் எல்லாம்
பேருந்து வரவேண்டும்
என்று காத்திருக்க --
நானும் நீயும்
வந்த பேருந்தை
தவற விட்டுக்
காத்திருக்கிறோம்...

காதலித்த ஆரம்ப
வெட்க நாட்களில்
உமது துரிதம் மற்றும்
பதட்டம் எனக்குள்
இம்ஸை ..

இன்றைய உமது
சாவகாசம்
என்னுடைய
அவசரங்களைக்
கூட நான்
அவமதிக்க வேண்டியுள்ளது..

இங்கே சில
அவஸ்தைகள்
இல்லாமல் இல்லை..
தெரு நாய்கள்
கூச்சலிட்டவாறு
புணர்கின்றன...
சில்லறை இல்லை
என்றாலும் விடாப்பிடியாக
பிச்சைக் காரன்
நச்சரிக்கிறான்...
--நமது பொருத்தம்
குறித்த சிலரது
இங்கிதமற்ற
அப்பட்ட விமரிசனங்கள்..

இவைகளை எல்லாம்
தவிர்த்தோ ..
தவிர்ப்பது போல
நடித்தோ
நாமும் என்னென்னவோ
பகிர்ந்து கொண்டு தான்
இருக்கிறோம்...
--இது தான்
காதலிப்பவர்களின்
நாகரீகம்..!!

சுந்தரவடிவேலு..

Sunday, June 10, 2012

ஆண்மை என்கிற பொய்மை

என் கோபங்களும்
வெறுப்புக்களும்
ஓர் இழையில்
எனக்குள் தாங்கொணா
குற்ற உணர்வை
நிகழ்த்துகிற
வல்லன்மை கொண்டவை..

ஆனால் அவைகள்
அரங்கேறுகையில்
நம் வீரமும் ஆண்மையும்
செவ்வனே செயல்படுவதாக
ஓர் தினவு...
--அவ்விதம் நடவாமல்
அமைதி காப்பது
"பொட்டத்தனம் "
என்கிற அனுமானம்..

ஒவ்வொரு
கோபத் தருவாயும்
இப்படியே தான்
கடக்கின்றன...

கோபங்களும்
தவிர்க்கப்படும் போல
தெரியவில்லை..
கூடவே
குற்ற உணர்வுகளும் ...!!


சுந்தரவடிவேலு..

Friday, June 8, 2012

அப்பா

அப்பா இறந்து பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன என்ற போதிலும் , அவருடைய புகைப் படத்திற்கு என்றேனும் மாலை அணிவிக்க நேர்கையில் ....கண்களில் ஓர் கசிவையும் மனசுள் ஓர் ஏக்க ஊற்று சுரப்பதையும் உணர முடியும்...
அவர் இருந்த போதிலான ஞாபக அலைகள் .. அந்தப் புகைப் படத்தின் தத்ரூபமான புன்னகை, அதைப் பார்க்கிற ஒவ்வொரு தருவாயிலும் நேரில் மறுபடி அவர் வந்து விட்ட ஓர் மாயையை நிகழ்த்திக் கொண்டே இருக்கும்...

மரணம் என்ன தான் இயல்பான மிகவும் இயற்கையான நிகழ்வென்ற போதிலும் அதென்னவோ தவிர்த்தே தீர வேண்டிய கட்டாயப் பட்டியலுக்குள் வந்து விடுவது வினோதமான ஓர் தன்மை..

நம்முடைய பட்டியல் எவ்வளவு பலவீனமானது என்பது அதைப் போடும் போதே நமக்கு சுலபத்தில் புரிந்தும் விடுகிறது...
காலம் நமக்களிக்கிற அந்த சாபப் பரிசை ஏற்றே ஆகவேண்டிய தருணம் எல்லாருக்குமான அனுபவம்..

சாவதற்கு நியாயமே இல்லை என்கிற கூற்றனைத்தும் நம்முடையதே தவிர காலத்தின் கூற்றுக்கு அடிபணிய வேண்டிய மிக சாதாரண மனிதர்கள் நாம்...
காலம் போடுகிற பட்டியல் அரங்கேறி விடுகையில், நாம் வெறும் ஆசுபத்திரி பில்லை மட்டுமே செட்டில் செய்ய வேண்டி  ஆகிவிடுகிறது..

வைரம் போன்ற மாயை..

========================= வா ழ்க்கை நெடுக  இழைகள்...  துயரம் தொலைந்து  சந்தோஷம்..  நோய் தொலைந்து  ஆரோக்கியம்..  வறுமை தொலைந்து  வ...