Monday, September 26, 2011

ஒவ்வொரு வீதியிலும்...

விதிகளின் நிமித்தமான
பேதங்கள் அபேதங்கள்
யாவுமே --
காரண காரியங்களுக்கு
அப்பாற்பட்டவை...

பேரன் பேத்தி எடுத்த
பக்கத்து வீட்டுத் தாத்தா
இன்னும் தீவிர
புணர்ச்சியில் ஈடுபடுகிற
சங்கேதம் அனைத்தையும்
என் செவிகள் உணரும்...

ஐந்துமாதக் குழந்தை
வயிற்றில் இருக்கையில்
பைக் விபத்தில் சில மாதங்கள்
முன்னர் இறந்து போன
இளவயதுக் கணவன்
எதிர் வீட்டில்...

கள்ளக்காதலைக் 
கண்டும் காணாத
வீரப்புருஷன் ஒரு வீட்டில்..

நல்ல மனைவியை
சந்தேகப்பட்டுக் கொல்லாமல்
கொல்கிற கொடூரன்
இன்னொரு வீட்டில்...

மூன்றாவதும் பெண்ணாகவே
பிறந்ததால் தொட்டில்
குழந்தை அமைப்பிடம்
ஒப்படைக்கிற தீர்மானம்
ஒரு வீட்டில்...

கல்யாணமாகி
வருடம் ஆறாகியும்
புழுப்பூச்சி இல்லை என்று
சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிற
தம்பதி ஒரு வீட்டில்....

குதூகலம் கும்மாளம்
ஒரு வீட்டில், 
குடிகாரன் தொந்தரவு
மற்றொரு வீட்டில்...

ஒவ்வொரு வீட்டிலும்
இத்தனை வில்லங்கத்தை
வைத்துக்கொண்டு --
ஒன்றுமே நடக்காத மாதிரி
நாசுக்காய் நீண்டு
கிடக்கிறது வீதி...!!  

பலூன்காரனும் குழந்தைகளும்....


விற்பதற்கு முன்னர்
வெடிக்காமலிருக்க 
வேண்டும்!....
விற்றபின் வெடிக்குமானால்
பிரச்னையில்லை...
அடுத்த பலூனுக்கு
உடனடி ஆர்டர் கிடைக்கும்...!!

அவன் தாத்தா பலூன் 
விற்ற காலங்களில்
ஊதி ஊதியே 
சாகவேண்டியாயிற்று...
--அவன் அப்பன்
சோம்பேறி .. 
ஆள் போட்டு 
ஊதவைத்துக்கொண்டிருந்தான்..

நவீன காலம்
அவனை ஊதுவதை 
சுலபமாக்கியிருந்தது..
சைக்கிள் பம்பும்
இன்னபிற காற்றுநிரப்பும்
உபகரணங்களும் 
சந்தையில் சல்லிசாகக் 
கிடைக்கப் பெற்றன...

எல்லா குழந்தைகளும்
அவனது பலூனுக்காக 
அழுதுகொண்டிருக்கையில்
அவனுக்கேனோ 
இன்னும் குழந்தைப்
பேறில்லை...

அவன் மனைவி
அடிக்கடி தூக்கத்தில்
உளறு வாளாம்..
"அந்த மஞ்ச பலூன்
யாரு கேட்டாலும் 
கொடுத்துடாதீங்க.. நம்ம
பாப்பாவுக்கு வேணும்"
அடுத்த ஒரு நாளில்
அதே மாதிரி 
சிகப்பு பலூனுக்கு...

-இதனை எங்களிடம்
சொல்லிக்கொண்டு 
சிரிப்பான்...
அவனது உள் அழுகையை
நான் அறிவேன்..

Sunday, September 25, 2011

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்..

இன்று ஞாயிற்றுக்கிழமை ... மாலை மணி 4 .30 க்கு திருப்பூர் அரோமா ஹோட்டலில் பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை நேர்காணல் நிகழ்ச்சியில் சந்திக்கிற வாய்ப்புக் கிடைத்தது.... 

மிகவும் அற்புதமான நிகழ்வாக இருந்தது... 3 மணி நேரம் நழுவியது தெரியாத லாவகம்... இன்னும் சில மணி நேரங்கள் தொடர்ந்திருந்தாலுமே கூட நழுவுவது தெரியாத ரம்மியமாக இருந்தது அவர் பேசியது... 

அவரது படைப்புகள் எனக்கு பரிச்சயம் இல்லாத காரணத்தால் அவரிடம் எது பற்றி கேட்பதென்கிற தெளிவின்றி எதுவும் கேட்காமல் கேட்பவர்களையும், அதற்கான அவரது நாசுக்கான பதில்களையும் ரசித்துக்கொண்டிருந்தேன்...
மேற்கொண்டாவது அவரது படைப்புகளை வாசித்துப் பார்க்கவேண்டும் என்கிற அவா பிறந்தது...

இப்படித்தான் எவ்வளவோ நல்ல எழுத்தாளர்களின் எழுத்துக்கள் அடையாளம் தெரியாத அனாமதேயத்தில், அசந்தர்ப்பமாகக் கூட அறிமுகம் ஆகாமல் விரயமாகி விடுகிற விபரீதங்கள் அநேகம் நேர்ந்து விடுவதுண்டு...

நல்ல வேலையாக என் நண்பர் ரவி அவர்கள் சொன்ன தகவலின் அடிப்படையில் நான் விஜயம் செய்து மாலைப்பொழுதை சோலைப் பொழுதாக்கி மகிழ்ந்தேன்...ஆனால் ரவி அவர்கள் ஏதோ காரியம் நிமித்தம் நிகழ்ச்சிக்கு வர இயலவில்லை..

தேசாந்திரியாக ஊர் சுற்றுகிற தன்மையை அவர் விவரித்த விதம் அபரிமிதமான சுவாரஸ்யமாக இருந்தது... ஏற்பாடு செய்திருந்த இயக்கத்தின் இலக்கிய ரசனை மெய் சிலிர்க்கச் செய்தது...

இப்படியெல்லாம் அங்கங்கே கூட்டங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன... தகவல் பரிமாற்றம் இல்லாமல் யாவும் தவறி விடுகின்றன... பொன்னாகக் கழிய வேண்டிய மணித்துளிகள் பொறுப்பற்றுக் கழியவிழைகின்றன...

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கட்கு தாகூர் விருது கிடைத்ததாக அறிவித்திருந்தார்கள்..அது மிகவும் உயரிய விருது, உலக நாடுகள் தோறும் அவரது எழுத்துக்கள் அந்தந்த நாட்டின் மொழிகளில் பெயர்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் , பிற்பாடு அது உலக அங்கீகாரம் பெரும் வாய்ப்பும் உள்ளதாக தெரிவித்தார்கள்...அதற்கான முழுத் தகுதியும் உள்ளடங்கிய நபர் தான் அவர் என்பதை உணர்கிறேன்.

Saturday, September 24, 2011

நடிகன்...



அவன் மிகவும்
அற்புதமான நடிகன்..
பல படங்களில்
பிணமாக நடித்திருக்கிறான்
தத்ரூபமாக...!

நிஜத்தில் ஒருநாள்
வழக்கத்துக்கு மாறாக
அல்லது வழக்கமாக
செத்துப் போனான்..

நடித்த போதிலிருந்த
தத்ரூபம் நிஜத்தில்
தொலைந்து போயிருந்தது... 
                  
குறட்டை விட்டவாறு
தூங்குவது போல
தெரிகிறது --
அவன் இறந்து கிடப்பது!!  

Wednesday, September 21, 2011

சேவல் கோழி..

சிறகுகள் கொடுத்தும்
பறக்க சாத்தியமில்லாத
சாபக்கேட்டில் நாங்கள்...
சிட்டாய்ப் பறக்கிற
சாதுர்யத்தை எங்களுக்கும்
வழங்கியிருந்தால்
உங்கள் அடுப்பில் 
ஒவ்வொரு ஞாயிறும்
குழம்பாகக் கொதித்துக்
கொண்டிருக்க மாட்டோம்...

வீசி வீசி தானியம் போட்டது
எங்கள் பசிக்கென்று நினைத்துவிட்டோம்..
கஸ்டமர் கேட்கிற
எடைக்கூடுதலுள்ள கோழிக் கென்பதை
கால்கள் பிடித்து தராசில்
வைக்கையில் தான் புரிகிறது
இந்த ஐந்தறிவு ஜடத்துக்கு....

எந்த ஜீவகாருண்ய இயக்கத்துக்கும் 
எங்களுக்காக வாதாட வக்கில்லை..
வக்கீலில்லை...
கொஞ்சகாலம் கோயிலில் 
கொல்வதை நிறுத்திப்பார்த்தனர்...
அப்புறம் சாமிக்கே அது 
பொறுக்கவில்லை போலும்...

சீக்குகோழியாயிருந்தாவது 
செத்துப்போலாமே தவிர
கறிக்கடைக்கூண்டில்
வெளியே கையில் பையை
வைத்துக்கொண்டு நிற்கிற
பிணந்தின்னிப் பசங்கள் 
மூஞ்சியில் முழிக்கவே 
கூடாதென்பது எங்கள் பிரார்த்தனை..

Sunday, September 11, 2011

திருட்டுப்பயலின் டைரியிலிருந்து..

உன் மெல்லிய சங்குக் கழுத்து காயமாவதில், அதில் நீ வலியில் தவிப்பதில் எனக்கு உடன்பாடில்லை... 
வன்முறைகள் ஏதுமற்று உன் கழுத்துச் சங்கிலியை கபளீகரித்தாக வேண்டும்...
உடனடியாக தொலைந்தது புலப்படாமல் நீ சற்று நிமிடங்கள் கழித்து உணர்ந்து , அதற்காக மற்ற பெண்கள் போல வருத்தமுறாமல் மிக சாதரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்...

நல்ல  வேளை.. கழுத்து சேதப்படாமல் போயிற்றே , வாழ்க திருடன் என்று நீ மலர்ச்சியோடு வாழ்த்தவேண்டும்...
அதில் நானும் என் தொழிலும் செழிப்புற வேண்டும்...
நகை புனைவதில் சேதாரம் இருக்கலாம்... ஆனால் அது ஓர் பெண்ணால் அணிந்திருந்து  பிடுங்கப்படுகையில் எவ்வகை சேதாரமும் அவளது  உடலுக்கோ மனசுக்கோ நேரக்கூடாது என்பது இந்தத் திருடனின், அவா மற்றும் பிரார்த்தனை..

ஒவ்வொரு முறை வழிப்பறி செய்கையிலும், எவரது கையிலும் மாட்டி தர்மடி வாங்குகிற கற்பனைகள் மேலோங்கும் என்றாலும், அவ்விதம் அசம்பாவிதம் எதுவும் நிகழக்கூடாது என்பதற்காக  அரசமர விநாயகருக்கு நூற்றியெட்டு ஈடு தேங்காய்கள் போடப்படும் என்பதாக பிரார்த்தனை... 
படித்த காலங்களில் பாஸாக வேண்டும் என்கிற வேண்டுதலைக்கூட செவ்வனே நிறைவேற்றாத விக்னேஸ்வர் , இன்றைய என் கபடக் கபடிகளில் வெற்றிப்புள்ளிகளைக் குவிக்கத் துணை வருவது பரமாச்ச்சர்யம்.....

நான் அந்தப்பெண்ணிடம் களவாடுவதை அவளே ரசித்து என் மீது காதல் வசப்பட வேண்டும் என்பது என் மற்றுமொரு நூற்றியெட்டுத் தேங்காய்களுக்கான பிரார்த்தனை..

அதனையும் செவ்வனே நிறைவேற்றுகிற ஆற்றல்களும் உரிமைகளும் கடவுள் வசமுண்டு என்பதை என் களவாணி பய நெஞ்சரியும்...

எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறுகிறதே என்ற போதிலும் வேண்டிக்கொண்டது போல தேங்காய் போடுகிற கெட்ட பழக்கம் என்னிடமில்லை.. சாமியை ஏமாற்றுவதால் தான் "இவன் நம்மையே ஏமாற்றுகிறான்... மக்களும் இவனிடம் ஏமாறட்டும்" என்று சபித்திருப்பாரோ?? அவரது சபிப்பு கூட எனக்கு வாழ்த்தாக மாறியிருக்கிற விஷயத்தை கடவுளே கூட புரிந்து கொள்ளவில்லையோ???


Friday, September 9, 2011

.ரௌதிரம் பழகாதே..!!

இட்லிக்கு
வரவேண்டிய
சாம்பாரின் தாமதத்தால்
கன்னாபின்னாவென்று
சர்வரைத் 
திட்டியாயிற்று....

சாம்பாரில்
உப்பதிகம் என்று
மறுபடி  
திட்ட ஆரம்பிக்கையில் 
தான்....                                                    

பர்ஸை
 வேறு பான்ட்
பாக்கெட்டில் வீட்டில்
மறந்து வைத்து
விட்டு வந்தது
ஞாபகத்துக்கு 
வருகிறது...!!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...