சிறகுகள் கொடுத்தும்
பறக்க சாத்தியமில்லாத
சாபக்கேட்டில் நாங்கள்...
சிட்டாய்ப் பறக்கிற
சாதுர்யத்தை எங்களுக்கும்
வழங்கியிருந்தால்
உங்கள் அடுப்பில்
ஒவ்வொரு ஞாயிறும்
குழம்பாகக் கொதித்துக்
கொண்டிருக்க மாட்டோம்...
எங்கள் பசிக்கென்று நினைத்துவிட்டோம்..
கஸ்டமர் கேட்கிற
எடைக்கூடுதலுள்ள கோழிக் கென்பதை
கால்கள் பிடித்து தராசில்
வைக்கையில் தான் புரிகிறது
இந்த ஐந்தறிவு ஜடத்துக்கு....
எந்த ஜீவகாருண்ய இயக்கத்துக்கும்
எங்களுக்காக வாதாட வக்கில்லை..
வக்கீலில்லை...
கொஞ்சகாலம் கோயிலில்
கொல்வதை நிறுத்திப்பார்த்தனர்...
அப்புறம் சாமிக்கே அது
பொறுக்கவில்லை போலும்...
சீக்குகோழியாயிருந்தாவது
செத்துப்போலாமே தவிர
கறிக்கடைக்கூண்டில்
வெளியே கையில் பையை
வைத்துக்கொண்டு நிற்கிற
பிணந்தின்னிப் பசங்கள்
மூஞ்சியில் முழிக்கவே
கூடாதென்பது எங்கள் பிரார்த்தனை..
No comments:
Post a Comment