Thursday, October 29, 2015

பிய்ந்து போன கனவுகள் ........ [பழைய காதல் கவிதை..]

நீ ஞாபகம் வரும்போது
மாத்திரமே யதார்த்தமாக
எழுத வருகிறது எனக்கு..
Image result for love images
மற்றைய எது குறித்து
எவர் குறித்து எழுதினாலுமே
 வலிய திணிக்கப் பட்ட
செயற்கை அசிங்கம்
அங்கே சப்பணமிட்டு
உட்கார்ந்து கொள்வதை
சுலபத்தில் அடையாளம்
காண்பது சாத்தியமாகி
விடுகிறது எனக்கு.. !

ஆனால் எனது

புனைதலில்  நீ
ஆக்கிரமிக்கப் படுகையில்
ஒரு பூ  செடியில்
பூக்கத் துவங்குகிற
இயல்பு அங்கே
பிறக்கிற ஆச்சர்யத்தை
உணர்கிறேன்..
Image result for love images
உடல்ரீதியாக
அன்றெல்லாம் உன்னை
தரிசிக்க நேர்ந்த
அந்த அற்புதத்
தருணங்கள் கூட
மிக நேர்த்தியான,
நெடிய உபவாசத்திற்குப்
பிறகு வருகிற
பசி போன்று
அலாதி உணர்வுகள்
ததும்பின எனில்
மிகையன்று.. !!

இன்றோ

நாமதேயமற்றுப்
போய் விட்டீர்கள்
நீயும் உமது முகவரியும்..

காலத்தின் கட்டாயமோ

அல்லது உமது தீர்மானமோ
அறியேன்,
பரஸ்பரம் இனி இப்
பிரபஞ்சம் விட்டு
நழுவும் நாள் வரைக்கும்
உன்னை எனக்கு
தரிசிக்கிற வாய்ப்பே
சிறிதும் இல்லை என்கிற
சுடும் உண்மையை
ஒருவகை அவநம்பிகையினூடே
அடைகாத்து வருகிறது
மனது.. !!

Image result for love images

Sunday, October 25, 2015

நாஸ்திகன் டைரியிலிருந்து..

ஆத்திகன் நீ என்பதால் அனேக கடவுள்களையும் பாரபட்சம் பாராது பிரார்த்திக்கிறாய்.. 

ஆனால் உமது பிரச்சினைகளை தீர்க்கவல்ல கடவுள் ஒருவரே.. 
உமது பிரார்த்தனையின் பிரதான அம்சமே, அந்தப் பிரத்யேகமான பிரச்சினை காணாமற்போய் ஒரு நல்ல தீர்ப்பு வந்து சேர்ந்து சந்தோஷம் பிரவகிக்க வேண்டும் என்பதே.. 

அவ்வாறே உமது பிரச்னையும் ஒரு எல்லையை சந்தித்து, ஒரு தீர்க்கமான சூழல் உருவாயிற்று.. 
மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கித் திளைத்து, சில நாட்கள் உம்மைக் காப்பாற்றிய தெய்வத்தைக் கூட நினைவில் கொள்ளாமல் வேறு களியாட்டங்களில் நண்பர்களோடும் உறவினர்களோடும் கொண்டாடித் தீர்த்தாய்.. 

யாவும் கடந்தாக வேண்டிய விதியின் நிமித்தம், உமது கொண்டாட்டத் தருணங்கள் கடந்து கடவுள்களை சிந்திக்கிற நேரம் பிறந்தன.. 

பிரச்சினை தீரவேண்டும் என்று கோரஸாக பார்க்கிற கடவுளை எல்லாம் வேண்டி விடுகிறாய்.. ஆனால், நீ காப்பாற்றப் பட்ட பிற்பாடு, அனைத்து கடவுளும்  கூடித் தான் உம்மைக் கரை சேர்த்தன என்கிற நம்பிக்கை பிறப்பதில்லை.. குறிப்பிட்ட ஒரே கடவுள் மட்டுமே உமது தெளிவுக்கும் மகிழ்வுக்கும் காரணகர்த்தா  என்கிற பிடிவாதமான ஒரு வகை நம்பிக்கை புகுந்து  உம்மைக் குழப்பத் துவங்குகிறது.. 

திருச்செந்தூர் முருகன் தான்  உம்மைக் காப்பாற்றிய கடவுள் என்கிற தீர்க்கமான நம்பிக்கைக்குள் சிறைப்பட்டு, தி.செந்தூர் சென்று ஒருவாரம் தங்கி இருந்து எல்லா நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றி விட்டுத் திரும்புகிறாய்.. 

ஆனால் உம்மை முழுதுமாகக் காப்பாற்றியது நீ அனுமானித்தது போன்று  திருசெந்தூர் முருகன்  அல்ல.., நீ குடி இருக்கிற தெருவுக்கு 2 தெருக்கள் தள்ளி  வீற்றிருக்கும்  'காமராஜ் நகர் சுப்பிரமணியர் கோவில் முருகன்' என்கிற உண்மையை எவர் சொல்லி உமக்குப் புரிய வைப்பது?.. 

அடுத்த நாள் தி.செந்தூர் மொட்டைத் தலையோடு நீ அந்தக் கோவிலைக் கடக்கையில், அந்த சுப்பிரமணியரை ஏறெடுத்தும் பார்க்காமல் சென்றது கண்டு கடுப்பாகி, ஒரு ஜல்லிக் கல் எடுத்து உமது மொட்டை மண்டையில் அடித்து கிஞ்சிற்று ரத்தம் கசிய வைத்தார் முருகன்.. 

நீ, உன்னைக் கடந்து சென்ற சுகுமாரை சந்தேகித்து, அவனோடு சண்டையிட்டு பிரச்சினை செய்தாய்.. 
இப்படித்தான், எல்லாவற்றையும் தவறுதலாகவே புரிந்து கொண்டு நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.. 

சுகுமார் நான்கு தடியன்களை அழைத்துவந்து உம்மை பேதி கிளப்பி, மறுபடி பிரச்சினைகள் உருவாக்கி ... உம்முடைய அடுத்த பிரார்த்தனை களத்துக்கு ஏற்பாடு செய்து விட்டான். 

இந்தமுறையாவது காமராஜ் நகர் சுப்ரமணியரை நீ அடையாளம் காண்பாயாக.. யார் கண்டது, அவர் காண்டாகி இந்த முறை உன்னைக் காப்பாற்றுகிற பொறுப்பை அந்தப் பழனி தண்டாயுதபாணி இடத்தில் ஒப்படைக்கிறாரோ என்னவோ எவர் கண்டது.. ?

Wednesday, October 21, 2015

தேய்மானம்..

சுற்றிலுமாக 
ஆச்சர்யங்கள் 
விரிந்து பறந்து 
கிடக்க.. 

விரல் வைத்து வைத்து 
தேய்ந்தது என் மூக்கு.. 

பிளந்து பிளந்து 
மூட மறந்த வாய்... 
அகல விழித்து 
இமைகள் இழந்த 
கண்கள்.. 

எனது அவயவச் 
சிதைவுகள் 
என்னை 
ஆச்சர்யமூட்டும் 
வஸ்துக்களுக்குப் 
பொருட்டன்று..!

இன்னும் இன்னும் 
நான் வியந்து விரியவும் 
வெடித்துச் சிதறவுமே 
அதன் செயற்பாடுகள் 
அனைத்தும்...

நான் மரணித்த 
பிறகும் கூட 
எனது ஆன்மாவிற்கு 
சொர்க்கத்தை 
அறிமுகம் செய்து 
அலட்டிக் கொண்டன 
எம்மைப் 
புடை சூழ்ந்த 
ஆச்சர்ய வெறி 
பிடித்த சூழல்கள்.. !!

Tuesday, October 20, 2015

சில நேரங்களில்.. [ ஒருபக்கக் கதை.. ]

கள்ளக் காதலன் மீதான அபரிமித காதலால் தனது கணவனையே கூலிப் படை வைத்துத் தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டுகிறாள் முன்னாள் தர்மபத்தினி.. 

வீட்டிற்கு மின்விசிறி மாட்ட வந்த கதிரை வேண்டா வெறுப்போடு தான் வரவேற்றாள் சுபா.. 
அலுமினியம் லேடரில் நின்ற வண்ணம் ஸ்பேனர் இண்டிக்கேட்டர் இன்சுலேட்டட்  டேப் என்று ஒரு சாமானிய எலெக்ட்ரீஷியன் வைத்திருக்க வேண்டிய சகல சாமான்களையும் சுபாவிடம் கேட்டுக் கேட்டு வாங்கவே செமக் கடுப்பாகி ' நீ எல்லாம் எதுக்குய்யா இந்த வேலை செய்ய வர்றே?' என்று கேட்டே விட்டாள் அவள்.. 

ஆனால் கதிரிடம் யாவும் இருந்தனவே எனிலும், சுபாவின் மெல்லிய விரல்களை ஸ்பரிசிக்க மறுபடி மறுபடி ஆர்வம் பிறக்கவே, ஒவ்வொன்றையும் கிஞ்சிற்றும் கூச்சநாச்சமின்றி கேட்டுக் கேட்டு வாங்கினான் .. 

பிற்பாடு அங்கீகரிக்கப்  பட்ட கள்ளக் காதலன் ஆகிவிட்ட ஒரு கட்டத்தில் சுபாவிடம் இதனை  அவன் விளித்த போது , "செம ஆள்டா நீ" என்று அவனது மீசை முடியை பற்களால் பிடித்திழுத்தாள்.. 
"ஐயோ" என்று அவன் பதறிய போது , அவனது நிக்கொட்டீன் மணம் கமழ்ந்த உதடுகளுக்கு விழுந்தன கடிகள்.. 

யானை தன் தலையில் மண் வாரி இறைத்துக் கொண்ட கதை மாதிரி, குணசேகர் தான்  கதிரை வீட்டிற்கு மின்விசிறி மாட்ட அனுப்பி வைத்தான்.. அவன் பணிபுரிகிற பிரபல அலுவலகத்தின் ஆஸ்த்தான மின்சார நிபுணன் கதிர்  என்கிற வகையிலே .. 

கதிருக்கும் 'குணாவுக்கு ஆப்பு வைக்க வேண்டும்' என்கிற எண்ணங்கள் எல்லாம் எதுவுமில்லை.. மிக யதார்த்தமாக எல்லா விபரீதங்களும் செவ்வனே நடந்தேறின.. 

மின்விசிறி மாட்ட என்று துவங்கி, கிரைண்டர் சுற்றவில்லை, மிக்ஸி ஸ்லோ ஸ்பீடில் ஏதோ சத்தம் வருகிறது, வாஷிங் மெஷினில் காசு மாட்டிக் கொண்டது, ரெப்ரிஜ்ஜ ரேட்டரில் கூலிங் ஆவதில் தகராறு என்று குணசேகரனின் வீட்டு  உபகரணங்கள் அனைத்தும் அவனது மனைவியின் கள்ளக் காதலுக்கு  உறுதுணையாய் நின்று செயல்பட்டன.. 

ஆனால் அந்த உபகரணங்கள் எவ்வித உபத்திரவங்களையும் செய்யவில்லை, அப்படி அவைகளை நடிக்க செய்த சுபாவின் கைங்கர்யம் அந்த அப்பாவி குணாவுக்கு எங்கே விளங்கப் போகிறது?

சற்றும் எதிர்பாரா தருவாயில் குணா கொஞ்சம் எர்லியராக முந்தாநாள் சாயங்காலம் வந்துவிட்டான்.. வரும்போதே 'சுபா.. இன்னைக்கு ஹெட் ஏக் ன்னு  பெர்மிஷன் போட்டுட்டு வந்துட்டேன்' என்றவாறே கேட்டைத் திறந்து வந்தான்.. 

கதிரின் பைக்கும் செருப்பும் இருப்பது கண்டான்.. உள்ளே கதிர் பனியனில் இருப்பது  கண்டு சற்றே குழம்பினான்.. 

'வாஷிங் மெஷின் டெஸ்ட் பண்றப்போ தண்ணி தெறிச்சு ஷேர்ட் ஃபுள்ளா வெட்  ஆயிடிச்சு.. அதனால வெளிய காயுது' என்று சுபா சூழலை தெய்வீகமாக மாற்றினாள் .. 

ஹோ.. ஐ .. ஸீ . என்னோட சட்டை ஏதாவது ஒன்றை  எடுத்துக் கொடேன் "

"அதானே...!எனக்குக் கூட தோணலை"  என்று ஒரு நமட்டுச் சிரிப்போடு கதிருக்கு தனது கணவனின் சட்டை ஒன்றை எடுத்துக் கொடுத்தாள் .. அப்புறம் அலுவல் பணி நிமித்தம் குணா மதுரை செல்லவேண்டி வரவே, பரஸ்பரம் கதிர்-சுபாவுக்கு அந்தத் தருணங்கள் தேனிலூறிக் கிடந்தன.. 

சுபா தான் சொன்னாள் .. " இந்த மாதிரி எப்பவும் டென்ஷன் இல்லாம விளையாடணும் .. அதான் மனசுக்கு உடலுக்கு நல்லது.. புருஷன் வந்திடுவானோ .. வானோ ன்னு பயந்துட்டே இருந்தோம்னா நெர்வ்ஸ் வீக்கா போயிடும்.. மனசும் கெட்டுப் போயிடும்.. அதனால"

'அதனால?' 

'எதாச்சும் பண்ணி நீயே கதைய ஃபினிஷ் பண்ணிடே கதிர்' 

ஐயோ சுபா.. நான் எப்டி..?'

'ஓகே.. நீ ரிஸ்க் எடுக்க வேணாம். நான் பார்த்துக்கறேன்.. எங்க ஊருப் பசங்க 2 பேரு  எனக்குப் பழக்கம்.. எதைக் கேட்டாலும் செய்வாங்க.. நாளைக்கே கூட மதுரை போக சொல்லிடறேன்'

ஐயோ சுபா?'

நீ ஏண்டா இப்டி பதர்றே?.. நீயே காட்டிக் கொடுத்துடுவே போல.. ஒனக்காகத் தாண்டா எரும ! "ஒங்க ஆப்பீஸ்ல ஆப்பீசரா இருக்கறாரே , குணசேகர் ன்னு ஒருத்தர்.. ?'
"ஆமா"
"நானும் பாப்பாவும் 4 நாளுக்கு முன்னாடி கடவீதி போயிட்டு நடந்து வர்ற போது  டிராப் பண்ணவா ன்னு கேட்டாரு.. நாந்தான் பதறிட்டேன் .. வேண்டாம்னு சொல்லிட்டேன்.. "
என்றாள் கதிரின் மனைவி லலிதா .. 
"அப்புறம்?"
"அப்புறம் அவரே சொன்னாரு.. 'நீங்க எங்க ஆஃபீஸ் எலெக்ட்ரிஷியன் கதிரோட  ஒய்ஃப் தானே?.. என்ன சிஸ்டர் என்னைத் தெரியலையா.. ஒருவாட்டி நீங்க கதிரோட எங்க  ஆபீஸ்க்கு பாப்பாவ தூக்கிட்டு வந்திங்களே.. "
"நான் கவனிக்கலை ஸார் ..'
இட் இஸ் ஓகே.. எனக்கு தெரிஞ்சுது.. அதனால யதார்த்தமா கேட்டேன்.. தவறா நினைக்காதீங்க.. 
"சொல்லிட்டு போயிட்டாரா?"
"அவர் போகத்தான் பார்த்தாரு. நான் தான், அவர்கிட்ட ஸாரி கேட்டுக்கிட்டு பாப்பாவ நடுவில உட்கார வச்சுட்டு பின்னாடி நான் உட்கார்ந்து வந்தேன்.. நல்ல மனுஷன்"


மதுரை சென்று சுபா ஏவி விட்ட கூலிகளை தடுத்து நிறுத்தி குணாவைக் காப்பாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பு வந்து சேர்ந்தது கள்ளக் காதலன் கதிருக்கு.. 

தன்  மனைவி மாதிரி நல்லவளாக சுபா இல்லையே என்கிற கவலையும், சுபாவின் கணவன் குணா மாதிரி நானில்லையே என்கிற கவலையும் முதல் முறையாக ஒன்று சேர்ந்து அவஸ்தைப் படுத்தின கதிரை..!!

Friday, October 9, 2015

காலத் தாய்..

நம்மை ஈன்றவள் 
நடுவிலேயே நம்மை 
விட்டுப் போய் விடுகிறாள்.. 

நிறைவு வரைக்குமாக
நம்மோடு வந்து 
நம்மை அரவணைத்துக் 
கொண்டிருக்கிற 
காலத் தாய்.. 

நம் தாயோடு 
தாயாக நாம் 
பிறந்த நாள்தொட்டு 
நம்மோடு பயணிக்கிற 
காலம் .. 
-நம் தாய் 
சென்ற பிற்பாடும் 
தாயாய் நின்று 
தாலாட்டுப் பாடுகிறது. !

நாம் சென்றாலும் 
காலம் நம்மை 
வழியனுப்பி வைத்தவாறே 
நின்று கொண்டிருக்கிறது.. 

ஆம், 
அவளுக்கு இன்னும் 
எத்தனையோ  தாலாட்டுக்கள் 
பாட வேண்டியுள்ளது.. !

Tuesday, October 6, 2015

"குற்றம் கடிதல்" Tamil movie review..

ம்பவ நிகழ்வுகளும் அதனைக் கையாண்ட நடிப்புக் கலைஞர்களும், அவர்களை எல்லாம் மிக இயல்பாக நடிக்கச் செய்த டைரக்டர் பிரம்மாவும் அனைத்துப் போற்றுதலுக்கும் உரியவராவர்.. இத்தனை நேர்த்தியும் இயல்பும் முன்னர் வந்த எந்தத் தமிழ் படங்களிலும் இல்லவே இல்லை என்று சொல்லிவிடத் தோன்றுகிறது.. மேற்கொண்டும் இதே மாதிரி பொக்கிஷங்கள் தமிழ் திரையில் தொடரும் என்று நம்புகிறோம்.. இந்த சூட்சுமங்களும் யதார்த்தங்களும் தமிழ் ரசிகர்களால்  வரவேற்கப் பட வேண்டும்.. மற்றோரிடத்தும் இதன் மேன்மையை ப் பகிர்தல் அவசியம்.. தமிழ் சினிமாவின் ஆரோக்கியம் கண்டு மற்ற நோய்வாய்ப் பட்ட அண்டை மாநில சினிமா உலகங்களும் பூரண குணமடைந்து விடக்கூடும்.. 
ஒவ்வொருவரையும் இந்தப் படத்தில் பாராட்டியாக வேண்டும் என்றாலும், குறிப்பாக டைரக்டர் பிரம்மாவையும் கதாநாயகியாக வரும் ராதிகா பிரசிண்டாவையும் அபரிமிதம் பாராட்டியாக வேண்டும்.. 
இந்த டைரக்டர் திரையுலக  பிரம்மா தான்.. சந்தேகமில்லை.. 

ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும், பின்னணி இசையும், எடிட்டிங்கும், திரைக் கதையும்... 
அனைத்துமே அக்மார்க் தரத்தில் ஒளிர்கின்றன.. 
ஒட்டு மொத்த மெச்சூரிட்டியின் அடையாளம் தான் இந்தக் "குற்றம் கடிதல்"

Image result for kutram kadithal directorImage result for kutram kadithal directorImage result for kutram kadithal director

Sunday, October 4, 2015

எழுதுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள்..

வள்ளுவனுக்கோ பாரதிக்கோ எந்த "பிளாகு"களும் இல்லை, ஃபேஸ் புக்கும் இல்லை.. ஆனால் அவர்கள் எழுதிக் குவித்தவையோ சொல்லி மாளாது..

சொந்தமாக அவர்களது கைகளில் எழுதுகோல் இருந்திருக்குமா, இருந்திருந்தாலும் "இன்க்" இருந்திருக்குமா அதனையும் இரவல் வாங்கி எழுதிக் குவித்தனரா, நன்கு எழுதிக் கொண்டிருக்க இருக்க இரவல் கொடுத்தவர் ஓடி வந்து வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டனரா?...
Image result for WRITING
யாவும் கற்பனையாக சொல்கிறேன் எனிலும், இவை எல்லாம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்று ஆணித் தரமாக வாதங்கள் வைக்க முடியுமா?

வள்ளுவன் மனைவி வாசுகி கணவன் சொல் தட்டாதவள், கிணற்றில் வாளியில் ஜலத்தை இரைத்துக் கொண்டிருக்க இருக்க வள்ளுவன் வா என்று அழைத்ததும் அப்படியே விட்டுவிட்டு ஓடியதாகவும் அந்த வாளி ஜலம் அந்தரத்தில் அப்படியே நின்றதாகவும் வரலாறுண்டு..

மயிலாப்பூரில் பிறந்தாரா அல்லது இன்னபிற பிராந்தியமா என்பதிலும் இன்னும் குழப்ப விவாதங்கள் உண்டு..

இப்படி அனுமானங்கள் பலவற்றில் நான் மேற்சொன்ன விஷயங்களும் என்றேனும் ஒரு நாளில் நிகழ்ந்திருக்க வாய்ப்பற்றா போயிருக்கும்?..

அதனோடு ஒப்பிடுகையில் இன்றைய காலகட்டங்களை ஒப்பீடு செய்து பார்ப்பின், பிரம்மிப்பு புரண்டோடுகிறது..

ஓலைச் சுவடியிலே 1330 குரல்களை எழுதிய வள்ளுவனாகட்டும், அபரிமித கவிதைகளை சளைக்காமல் எழுதிக் குவித்த பாரதி ஆகட்டும்.. இவர்கள் போன்று அக்காலத்தில் பற்பலரும் இவ்விதமே தான் எழுதிக் குவித்தனர்.. 
Image result for WRITING
ஆனால் இன்று எழுதுவதற்கு உபகரணங்கள் பல்கிப் பெருகி விட்டன.. இன்னும் கணினி என்ற ஒன்று வந்த பிற்பாடு எழுதுகிற பேனா பென்ஸில் பேப்பர் போன்ற  உபகரணங்களும்  பின்தங்கி அனேக விரல்களும் கீ-போர்டையே  பின்னிப் பிசைகின்றன.. 

நாம் என்ன கருமாந்திரத்தை எழுதிக் குவித்தாலும் அது நமது கை எழுத்துப் போன்று கசமுசா வென்று இல்லாமல் தெளிவாக இருக்கிறது.. அதை அப்படியே பிரிண்டரில் அச்சிடுகிறோம்.. அசட்டு விஷயங்களும் அனர்த்த விஷயங்களும் கூட சும்மா தேஜஸ் ததும்பி வழிந்து.. பார்க்கிற நபர்களை கொள்ளை இட்டு விடுகின்றன.. 

யார் வேண்டுமானாலும் எதனை வேண்டுமானாலும் எழுதுகிற சுதந்திரங்களும், அதற்கொரு 'கவர்ச்சி ததும்பும்' தலைப்பிட்டு கிரானைட் போட்ட மாதிரி முகப்பட்டை தயாரித்து 100 பக்கங்கள் நிரப்பி ரூ. 72 என்று விலை நிர்ணயித்து முதல்பதிப்பு மூன்றாம் பதிப்பு என்று நீள்கிற  வினோத அலங்கோலங்களும் மிக சுலபமாக நிகழ்ந்து "எழுத்தாளன்" கோதாவில் நின்று விடுவது சாத்தியமாகி விடுகிறது.. 

ஒரே பாராகிராப் எழுதி நிரப்ப முடியாதவர்கள் BLOG வைத்திருக்கிறார்கள்.. மற்ற அபத்தங்களை போஸ்ட் செய்வதற்கு என்றே பலரும் facebook இல் அக்கவுண்ட் ஓப்பன் செய்கிறார்கள்.. தங்களின் சிருஷ்டி என்று ஒரு துரும்பை வீசக் கூட கூச்சப் படுகிறார்கள்.. 

சிலர் தெனாவெட்டாக எதையேனும் எழுதி அதிகப் பிரசங்கம் செய்யவே பிளாகும் ஃபேஸ் புக்கும் திறக்கிறார்கள்.. 

இப்படி விஞ்ஞானம் வழங்கியுள்ள மிக அற்புதமான வெற்றிடங்களை எல்லாம், நமது அஞ்ஞானங்களால் நிரப்பி அதற்கு 'காலர்களை' வேறு தூக்கிக் கொள்கிறோம். 

நாம் வள்ளுவனோ பாரதியோ ஆகிவிட முடியாது.. 
ஆனால் ஓரளவுக்கு அறிவுப் பூர்வமாக ஓரளவுக்கு உணர்வுகளை வார்த்தைப் படுத்துகிற முயற்சியாக, ஓரளவுக்கு படிப்பவர்கள் ஏற்க முடியும் வகையிலே நிச்சயம்  எதையேனும் அவ்வப்போது எழுதிக் குவிக்க முடியும் என்று மிகவும்  நம்புகிறேன்.. 
நன்றி.. 

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...