Tuesday, June 23, 2015

பெரிய்ய கனவு..

இந்தியாவின் சுகாதார பலவீனத்தை ஒவ்வொரு இந்தியனும் நன்கறிவான் என்ற போதிலும்...
 "இந்தியா முன்னேறுகிறது.. சில வருடங்களில் வல்லரசு ஆகப் போகிறது.. மற்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு பொருளாதாரத்தில் சுகாதாரத்தில் விஞ்ஞானத்தில் என்ற அனைத்து தகுதிகளிலும் முன்னின்று மற்ற நாடுகள் வாயடைத்துப் போய் .. "

இப்படி அதீதமாகக் கனவுகளைக் காணச் சொல்லி எல்லா இளைஞர்களையும் நன்கு பயிற்றுவித்திருக்கிறார் அன்றைய ஜனாதிபதி அப்துல் கலாம்.. அவர் கனவு காணச் சொன்னது மாத்திரம் பிரம்மாதமாகப் பிரபலம் அடைந்து விட்டது போன்றும் மற்றபடி அந்தக் கனவுக்கு செயல் வடிவம் என்பது இன்னும் கிணற்றுக்குள் போட்ட பாறாங்கல் போன்றே தான் உள்ளது என்பது கூட ஒரு சராசரி இந்தியன் அறிந்து வைத்துள்ள விஷயம் என்பதே யதார்த்தமான நிதர்சன உண்மையாகும்.. 
அமெரிக்கா என்பது, ஜெர்மனி என்பது, ருஷ்யா என்பது, சிங்கப்பூர் என்பது துபாய் என்பது ... அவை போன்றே இந்தியா என்பதும் "அஃறிணை" யே ... 
முன்னர் சொன்ன அனைத்து நாடுகளும் அங்கங்கே வசிக்கிற மக்களால் மாத்திரமே அனைத்து துறைகளிலும் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.. அவர்களுடைய அயராத முயற்சியே அனைத்துத் துறைகளிலும் செவ்வனே சிறந்து விளங்குகின்றனவே அன்றி, நாடுகள் சுயம்பு போன்று எவ்வித பிரம்மாண்ட வளர்ச்சியும் காணவில்லை என்கிற அடிப்படை , என்கிற சுடும் உண்மை.. ஒவ்வொரு இந்தியனின் மனச் சான்றுக்கும் மவுன சாட்சியாக அவனுள் வியாபித்து குற்ற உணர்வாக திரண்டு கிடக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு வாய்ப்பே இல்லை .. 

உலகம் தோன்றி இத்தனை ஆயிரம் லட்சம் கோடி யுகங்களுக்குப் பிற்பாடு, பல்முனை அறிவியல் முன்னேற்றங்கள் கண்டான பிறகும் இன்னும் சுகாதார போதனை செய்து கொண்டிருக்க வேண்டிய அடிப்படை தகுதியில் நமது இந்தியா இருந்து கொண்டிருக்க வேண்டிய வலி தருகிற துரதிர்ஷ்டம் நிச்சயம் அனேக நாடுகளுக்கு இல்லை என்பதே உண்மை. 

நமக்கும் கீழே ஆயிரம் பேர் என்கிற 'சொத்தை' ஆறுதல் வார்த்தைகள் அநியாயமானவை.. 
எங்காவது எதற்காவது கியூவில் நின்று கொண்டிருக்கையில் வேண்டுமானால் பொருந்திப் போகும் அந்தப் பிரயோகம்.. 
ஆனால், ஒரு நாட்டின் வளர்ச்சியோடு ஒப்பீடு செய்யப் படுகையில் , நமது இந்தியா அப்படிப் பின்தங்கிக் கிடப்பது  தாங்கொணா வெட்கம் வேதனை அளிக்கிறது ...  

 இந்தியா மீதான இந்தப் பார்வை என்னவோ ஒப்புக்கு சப்பாணி போன்று அல்லாமல், இதனை மாற்றி அமைக்கிற திராணி நம் ஒவ்வொரு நபரிடமும் ஒன்றோ ரெண்டோ சதவிகிதங்களாவது பிறக்கும் பட்சத்தில் நமது தேசம் மாறுகிற வாய்ப்பு உண்டு.. அல்லது இந்த மாதிரியான வெற்றுக் கட்டுரைகளும், வெற்று ஆதங்கங்களும் மாத்திரமே சாத்தியம்.. 

ஏதோ இந்தப் புதிய ஆட்சி, நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையான சுகாதாரத்தை ஊக்குவிக்கிற வேலையைத் துவங்கியுள்ளது.. அதிலும் ஆரம்பகட்ட ஆர்ப்பாட்டம் மங்கிப் போய்  ஓர் சுணக்கம் நிகழ்வதாகப் புரிகிறது. 

இந்தியா ஒளிர்கிறது .. என்பது , ஒரு சினிமா அரங்கு A /C என்று விளம்பரப் படுத்தி விட்டு மின்விசிறியைக் கூட ஓடவிடாமல் எல்லாரையும்  உப்புசத்தில் சீரழிப்பது போன்றதாகும்.. 
எவ்வித அறிவிப்புக்களும் இன்றி, வியர்த்து ஒழுகி , கொஞ்சம் காற்று வீசினால் தேவலாம் என்றிருக்கிற  ஒரு நபருக்கு "சும்மா.. ச்சில் .." என்று ஏ .ஸி அந்த அரங்கினுள் பரவி இருந்தால் எப்படி இன்பமாக இருக்கும்?.. 

அப்படி ஒரு அறிவிப்பில்லாத ஆனந்தம் படரவும் தொடரவும் வேண்டும் என்பதே எனது சிறு கனவு.. அல்லது பெரிய்ய கனவு.. 

Sunday, June 21, 2015

யோகா.....

இன்று தந்தையர்  தினம்.. மற்றும் யோகா தினம்.. 
நான் யோகா செய்வதில்லை.. எனது தந்தை இறந்து 20 வருடங்கள் ஆயிற்று.. 
எனது அப்பா யோகா தெரிந்து வைத்திருந்தார்.. நீச்சல் தெரிந்து வைத்திருந்தார்.. ஆனால் எனக்கு எதுவும் கற்றுத் தந்ததில்லை.. 

தோளுக்கு மீறி வளர்ந்தும் கூட தோழனாகவில்லை அவர்.. தொந்தரவு தருகிற நபராகவே தான் இருந்து வந்தார்.. 
ஆனால் என் அம்மா சொல்வாள்.. "வெளிய தான் அவரு உம்மேல எரிஞ்சு விழறாரு தவிர, மனசுக்குள்ள ரொம்பப் பாசம் வச்சிருக்காரு"
--- இது ஒரு மோசமான முறை.. உள்ளே அன்பை இறுகப் பூட்டி வைத்துக் கொள்வதாம்.. , வெளியே இம்சை தருவது போன்று நடிப்பதாம்.. 
அதற்கு இம்சையை அப்படிப் பூட்டிவிட்டு, அன்பைக் கூட நடிப்பது உத்தமம்.. 
ஏனெனில் குழந்தை மனசு, உள்மனதை ஆராய்கிற திராணி அற்றது. அது, வெளிவேஷத்திலேயே எதையும் நம்பி சந்தோஷம் கொள்வது.. 
குழந்தைக்கு அதுபோதும்... அதுவே மட்டும் கூடப் போதும்.. 

உள்ளேயும் வெளியேயும் அன்பை மாத்திரமே பொழிகிற பெற்றோரின் குழந்தைகள் மிகவும்  கொடுத்து வைத்தவர்கள்.. 
அன்பை வேஷமாக்கி நடிக்கிற பெற்றோரின் குழந்தைகள் கூட ஓரளவு கொடுத்து வைத்தவர்கள். 
ஆனால் .. உள்ளேயும் வெளியேயும் அன்பற்ற பெற்றோரும் சரி, உள்ளே மட்டுமே அன்புள்ள பெற்றோரும் சரி... அவர்களது குழந்தைகள் நிறைய சிரமப் படுபவர்கள்.. 

தான் பெற்ற குழந்தைகளினிடத்து  தாய்க்கோ தந்தைக்கோ அப்படி என்ன ஒரு வன்மம்.. ? அப்படி என்ன ஒரு ஈகோ?.. அன்பாய் அரவணைத்து 'என்னடா செல்லம் உனக்கு வேணும்.. எதுவானாலும் கேளு.. டாடி உனக்கு வாங்கித் தர்றேன் ' என்று சொல்கிற மாண்பு நிரம்பிய தந்தைமை சிலருக்கு வாய்க்கப் பெறாத துரதிர்ஷ்டங்களை கண்ணீர் மல்க கவனிக்கிறேன்.. 

'உன்னோட வயசுல எனக்கு நேரத்துக்கு சாப்பிட சரியான சாப்பாடு கிடைக்காது.. குளிச்சிட்டு நேத்துப் போட்ட பேண்ட் சட்ட தான் போட்டாகணும் ..உனக்கு என்னடான்னா , போதுங்க போதுங்க நாலு வேள சோறு.. நடுவுல வேற ஸ்நாக்ஸ்... டிஸைன் டிஸைனா துணிமணிக... ' 
என்று சொல்கிற பெற்றோர், பெற்றோரே அன்று.. எதற்கு அவர்கள் பிள்ளை பெற வேண்டும்? 
தான் அன்று அடைந்த இடர்களையும் துயர்களையும் தமது  மக்களும் செவ்வனே அனுபவித்து வருவதே சாலச் சிறந்தது ..' என்று கருதுகிற மூடப் பெற்றோரின்  நடுவே ..
'நாம தான் இல்லாத கஷ்டப் பட்டுட்டோம்.. நம்ம புள்ளைங்களாவது அப்டி இல்லாம  கொஞ்சம் நல்லபடியா அனுபவிக்கட்டும்' என்கிற மனோபாவமுள்ள பெற்றோரே  பெற்றோர்.. 

உடனிருக்கும் பெற்றோரும் அருகாமையில் உள்ள மற்றோரும் ஆனந்தம் அளிப்பவர்களாக  இருக்கும் பட்சத்தில் அதனைவிட சிறந்த யோகா  வேறென்ன?

என்ன தான் பிரம்மாதமாக ஆசனங்களும் யோகாக்களும் பயின்று அதிலொரு  பக்கா நிபுணத்துவம் அடைந்தாலுமே கூட, அண்டை அயலாரின் ஏய்ச்சலும் எரிச்சலும்  நக்கலும் நய்யாண்டியும் கேலியும் கிண்டலும் நம் மனத்தைக் கீறி விடும் ...

அதனையும் தாண்டி அவர்களை மண்டியிட்டு  மன்னிப்புக் கேட்க வைக்கிற தினவு  அந்த யோகக் கலைக்கு இருக்கும் பட்சத்தில்.... 
யோகாவை வணங்குவோம்.. யோகாவில் ஐக்கியமாவோம்.. !!
நன்றி..

Friday, June 19, 2015

நாயின் முதலாளி..

அந்த வீதி கடக்கிற 
ஒரு அலுவலக 
முதலாளியைக் கண்டு 
குலைக்கிற அந்தத்
தெரு நாய்.. 
அதே அலுவலகப் 
பியூனைக் கண்டு 
வாஞ்சையோடு 
வாலாட்டிப் பார்க்கிறது...!

முதலாளிக்கு 
அந்த நாய் மீது 
'செமக் கடுப்பு'..
பியூனுக்கோ 
அந்த நாயின் மரியாதை 
'செம கெத்து'.. 

நாய் மதிக்காத 
முதலாளியை 
அலுவலில் 'நாம்'
மதித்தாக வேண்டிய 
சூழல் பியூனுக்கொரு 
வினோத எரிச்சல்.. 

நம்மை மதிக்காத நாய் 
இந்தப் பணியாளிடம் 
ஆட்டுக்கற  வாலினைத் 
தரித்து விட வெறி 
மூள்கிறது முதலாளியிடம்.. 

நாயைப் பொருத்தமட்டில் 
வருக்கி போடுகிறவனே  
முதலாளி. 
மிரட்டிக் கல்லெறிபவன் 
பிச்சைக்காரன்.. !!

Friday, June 12, 2015

நடுவில்..

டலின் நடுவே 
தணியாத தாகத்தோடு.. 

கடவுள்களின் நடுவே 
நிறைவேறா பிரார்த்தனையோடு... 

வெற்றியாளர்களின் நடுவே 
தழுவிய தோல்வியோடு.. 

கடுந்துயர்களின் நடுவே 
சற்றே மகிழ்வோடு.. 

வாழ்க்கையின் நடுவே 
மரண பயங்களோடு .. !!
         
"திருப்பூரின் நடுவே ... 
இன்னும் வேலை தேடிக் கொண்டு" 
என்கிற ஒரு விஷயம் மனசில் தோன்றவே, மேற்கண்ட சில முரண்களும் இங்கே கவிதையாக முயல்கின்றன.. !

Wednesday, June 10, 2015

காக்கா முட்டை

என்ன விமரிசித்தாலும் அதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு தோரணையில் இந்தப் படம் புரிபடுவதாகவே எனக்குப் புரிகிறது.. ஆகவே....

Image result for kaaka muttai

இந்தப் படம் குறித்து எழுத, பொன்னியின் செல்வன் போன்று பல பாகங்கள் அடங்கிய புத்தகங்கள் தேவை...
இதனை விமரிசிப்பதற்கு என்றே பிரத்யேக ஆற்றல் மூளைக்குத் தேவைப் படுகிறது.. 
ஏனோ தானோ வென்றோ, போகிற போக்கிலோ, பத்தோடு 11 ஆகவோ, ஒப்புக்கு சப்பாணியாகவோ இந்தப் படம் குறித்து விமரிசிப்பது என்பது  நமது எழுதுகிற திறனுக்கே ஊறு விளைவிக்கிற செயல்.. 

ஒய்யாரமாக ஒரு நல்ல திரை அரங்கு சென்று 2 மணி நேரம் தன்னையே மறந்து இந்த சேரி உலகில் கிறங்கி அந்த இரு சிறுவர்களோடு நாமும் பவனி வந்து முடிந்தால், அவர்களுக்கு பிஜா வாங்கித் தருவதற்கு தயார் செய்து கொண்டு, .. தனக்கு முன்னால்  நிகழ்வது நிழலோ பிம்பமோ என்கிற வியாக்கியானங்களை ஓரங்கட்டிவிட்டு நாமும் அந்தக் கூவத்தில் மூழ்கி விட்ட மூர்ச்சையில் தவித்துப் பார்ப்போம்.. கூட்ஸ் சுமந்து வருகிற கரிகளை திருடி காசு செய்து புது சட்டை வாங்கப் பார்ப்போம்.. 

சம்பவங்களும் அதனை சார்ந்து நடிப்பவர்களும் யதார்த்த கதியின் ஸ்வரங்களாக ஒலிக்கின்றனர்.. 
இந்தப் படம் குறித்தோ , இதன் கதை குறித்தோ எவரோடும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.. நீங்கள் பார்த்து விட்டு வந்து மற்றவரையும் போய் பார்க்க சொல்லுங்கள்.. 
பார்த்த பிற்பாடு, யாருக்கும் கதையை சொல்ல வேண்டாம் என்று வற்புறுத்துங்கள்.. ஒவ்வொருவரும் அவரவர்கள் பார்த்தே  இதன் வீரியத்தை உணர்ந்து கொள்ளட்டும்.. 

Tuesday, June 9, 2015

நல்லவர்களும் கெட்டவர்களும் ... [one page story]

எனக்கு மூணே முக்கால் லட்சம் தரவேண்டிய சிவகுருநாதன் முந்தாநாள் வந்து கொடுத்துவிட்டு சென்றான்.. கடந்த இரண்டரை வருட இழுபறிக்குப் பிற்பாடு இந்தப் பணம் கைக்கு வந்திருக்கிறது.. ஒரு வருடம் முன்னரெல்லாம் 'அவ்ளோதான் இந்தக்காசு.. கால்வாசிக் கூட கைக்கு வரப் போவதில்லை ' என்கிற மோசமான செய்தி கேள்விப் பட்டு இடிந்து போய் நாட்கள் நகர நகர , 'தொலையுது போ' என்கிற ரீதிக்கு மனசு தயாராகத் துவங்கி, பிறகு அதைக் குறித்து கிஞ்சிற்றும் நினைத்திராத இந்தத் தருவாயில் சிவகுருவே வீடு தேடி வந்து பணத்தைத் தந்தது லாட்டரி சீட் விழுந்தது கணக்காக விம்மிற்று மனசு..

"ஹோ.. ரியல்லி தாங்க் யூ ஷிவா .. கொஞ்சம் கூட எதிர்பார்க்கலே" என்றதும்,
"ரொம்ப சாரி முருகேஷ்.. தொடர்ந்து எல்லா பிஸினசும் செம அடி.. எப்டியோ 6 மாசம் முன்னாடி சீட் கம்பெனி ஸ்டார்ட் பண்ணி கொஞ்சம் தேறீட்டு வர்றேன்.. பழைய கடனாளிகள் பேர்களை லிஸ்ட் அவுட் பண்ணி ஒவ்வொருத்தரா கிளியர் பண்ணிட்டு வர்றேன்.. " என்ற அவனுடைய நேர்மை என்னில் மெய் சிலிர்க்க வைத்தது..

ஆனால் காலத்தின் குரூரம் தாங்கொணா தர்மசங்கடம் விளைவிப்பதாக அமைந்து  விட்டிருந்தது.. ஆம், இன்று அதிகாலை, ஹார்ட் அட்டாக்கில் சிவகுரு மறைந்து போனதாக தகவல்..
என்னுடைய அதிர்ஷ்டம் அற்பமாகப் புரிபட்டது.. ஆனபோதிலும், அந்தக் காசு வராது போயிருப்பின் என்னுடைய சிந்தனை இப்படி இருந்திருக்கும்?.. .
'என் காசை வாயில போட்டவனுக்கு இது தான் கதி'
'ஐயோ. நாசமாப் போனவன் என் காசைக் குடுக்காமப் போயி சேர்ந்துட்டானே'..

இதுபோக இன்னொரு கொடிய விதத்தில் எனக்கு மற்றுமொரு அதிர்ஷ்டம் வந்து சேர்ந்தது அடுத்த 2 வாரங்களிலேயே..
நான் ஐந்து லட்சம் தரவேண்டிய பாண்டிவேல் தன்னுடைய மனைவியாலேயே சரமாரியாக வெட்டிக் கொல்லப் பட்டதாக செய்தி..
தனது கள்ளக் காதலைக் கண்டித்ததன் காரணமாக என்று ஒரு செய்தித் தாள் பக்கம் பக்கமாகப் பிதற்றித் தள்ளியிருந்தது..
குடித்துவிட்டு அன்றாடம் ரகளை..., சதா நேரமும் சந்தேகப் படுவதும் அதன் நிமித்தமாக சித்திரவதை செய்வதாகவும் .. அதனாலேயே தூங்கத் தூங்கப் போட்டெறிந்ததாகவும் .. மற்றொரு தாள் கதை கோர்த்திருந்தது..

தீர விசாரித்ததில் தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்து ரவுண்டு கட்டிக் குடிக்கிற வழக்கம் பாண்டிவேலுக்கு சமீபமாக வந்திருக்கிறது.. மப்பில் மைனர் பயல்கள் பாண்டிவேல் சம்சாரம் ருக்குவை சீண்டிப் பார்க்கவே, அதில் காட்டமான ருக்கு பாண்டியிடம் பலமுறை இது குறித்து எச்சரிக்கை விடுத்தும் கூட அதனைப் பொருட்படுத்தாத பாண்டி, தனது மப்பு சிநேகிதர்களுக்கு மனைவியை இணங்கச் சொல்லியதன் காரணமாகவே சாகடிக்கப் பட்டான் என்கிற உண்மை புரிபட்டது..

ஒரு பத்தினிப் பெண்ணை, பத்திரிக்கைகள் உத்தேசமாகக் கூட ஒழுக்கமானவர்கள்  என்று சொல்வதற்குத் தயங்குகிற விநோதத்தை முதல் முதலாக எனது வாழ்நாளில் நேரில் கவனித்து வேதனைப் பட்டேன்..

பாண்டியும் செத்துப் போய் , ருக்குவும் அதன் நிமித்தம் சிறைக்குப் போய் , அவர்களுடைய  2 குழந்தைகளான -ஐந்து வயது ஐஸ்வர்யாவும் மூன்று வயது குமரேசனும் எனக்குள் நிறைய அழுகை முட்ட வைத்தனர்..

பலமுறை பாண்டி என்னிடம் பணம் கேட்டுத் தொந்தரவு செய்து மிரட்டல் விட்டு, பயமுறுத்தி இருக்கிறான்.. சிவகுரு கொடுத்த அடுத்த நிமிடமே வந்து பணத்தை  ஒப்படைப்பதாக பலமுறை சொல்லியும் கூட நம்பாமல் வசவுகளை உதிர்த்து என்னை தற்கொலைக்கே யோசிக்க வைத்திருக்கிறான்..

ருக்குவின் கொலை நியாயங்கள் நிரூபிக்கப் பட்டு தண்டனைக் காலங்கள் குறைக்கப் பெற்று வெளியே வந்த போது  அவளது குழந்தைகள் எனது கஸ்டடியில் என்  குழந்தைகளோடு குழந்தைகளாக பள்ளி சென்று பயின்று வந்தனர்.. அதுகண்டு அகமகிழ்ந்து என் கால்களைப் பற்ற குனிந்த ருக்குவை தடுத்து நிறுத்தி .. " ஹே ருக்கு. இது என்னோட கடமை.. " என்று சொல்லி பாண்டிக்கு சேர வேண்டிய பணத்தை குழந்தைகள் பேருக்கு டெப்பாசிட் செய்த விஷயத்தையும் சொல்ல, நிறைய அழுதாள் ருக்கு..

என்னைக் கொல்வதற்கு பல நாட்கள் ஆட்களை ஏவி விட்டதாக பாண்டி பற்றி சொன்னாள் ..
அந்த ஏவி விட்ட நபர்கள் இன்னாரென்று அடையாளம் கண்டு அவர்களிடம் 'அனைத்தும் சுமூகமாக முடிவுற்றது' என்கிற தகவலை சொல்ல வேண்டும் என்கிற  ருக்குவின் மெனக்கெடல் எனக்குள் வார்த்தைகள் பிடிபடாத உணர்வுகளைக் கிளர்ந்தெழ வைத்தன..

Monday, June 8, 2015

மேகி ...... [noodles]

"நொந்து நூடுல்ஸ் ஆவது" என்பது தான் பேச்சு வழக்கு.. 
ஆனால் அது மாறி இன்று "நூடுல்ஸ் நொந்து போய் கிடக்கிறது" என்று சொல்லலாம்?.. 

கால் நூற்றாண்டு காலங்களுக்கும் மேலாக குழந்தைகளுடைய மற்றும் பெரியவர்களுடைய உணவில் மிக முக்கிய பங்கு வகித்து வந்த இந்தப் பண்டத்தின் சாதனை ஆச்சர்யமே.. 
உள்ளே காய்கறிகள் இட்டு 'வெஜிடபிள் நூடுல்ஸ்'. முட்டைகளை உடைத்து ஊற்றி 'எக் நூடுல்ஸ்' .. கோழிக்கறியை சேர்த்து 'சிக்கன் நூடுல்ஸ்' என்று நமது சுவைகளுக்கு ஏற்றார் போன்று தன்னை ஒரு பச்சோந்தி போன்று மாற்றிக் கொண்டு நமக்கெல்லாம் விருந்தளித்த பெருமை நூடுல்ஸையே  சாரும்.. !!

இவ்வளவு தீமை அளிக்கக் கூடிய இதன் உட்செறிவை ஆய்வாளர்கள் கண்டுணர்ந்து பிரகடனப் படுத்திய பிற்பாடே, இதன் குரூரத் தன்மை நமக்குப் புரிபடுகிறது.. அல்லவெனில், இன்னும் இன்னும் சளைக்காமல் இந்த உணவை உட்கொண்டு அகமகிழ்ந்து திரிவோம்.. 
சாதாரண போக்குவரத்து முறைகளைக் கூட நம்மால் ஒரு காவலாளி இல்லாமல் அனுசரிப்பது சாத்தியப் படுவதில்லை.. ஒன்று சந்தைக் கடை போன்று கூடி, போகிறவர் போக முடிவதில்லை வருகிறவர் வர முடிவதில்லை.. அடைத்துக் கொண்டு அப்படியே நின்று ஆளாளுக்கு ஒருவரயொருவர் பரஸ்பரம் திட்டிக் கொண்டு நிற்கிறோம்.. போக்குவரத்துப் போலீஸ் பார்த்து வரிசைக் கிராமமாக சீர் செய்யவில்லை என்றால் மிக சுலபமாக யாவும் ஸ்தம்பித்து நெருக்கடி பெருத்து விடுகிறது.. 

இந்த அற்ப போக்குவரத்து விஷயமே இப்படி இருக்கையில், மற்றவற்றை சொல்லவும் தான் வேண்டுமோ?

மது நாட்டுக்கு வீட்டுக்குக் கேடு என்கிற முத்திரை குடிக்கிற எவர் கண்களுக்குப் புலனாகாமல் இருக்கிறது? 'சிகரெட் ஸ்மோக்கிங் இஸ் இன்ஜூரியஸ் டு ஹெல்த்' என்பதை தம்மடிக்கிற எல்லா பேமானிகளும் படிக்கத் தான் செய்கிறார்கள்.. 
இவ்வளவு போதாது என்று 'பஞ்சு போன்ற நுரையீரலில் நிக்கொட்டீன் படிகிற' நியூஸ் ரீல்களையும்  காண்பித்து அருவருக்க வைக்கிறார்கள் என்ற போதிலும் இன்றளவும் புகை விடுதல் என்கிற வழக்கம் ரசிக்கப் படுவதாகவும் பின்பற்றப் படுவதாகவுமே இருந்து வருகிறது.. 

இதையெல்லாம் காட்டிலும் நூடுல்ஸ் நமது ஆரோக்கியத்துக்குக் கேடு என்பதாக இன்று உணவுக் கட்டுப்பாட்டுக் கழகம் நமக்கெல்லாம் அறிக்கை விடுவித்து நம்மை எல்லாம் உப்மா கிண்டி சாப்பிட வைக்கிறார்கள்.. 

32 வருடங்களாக ஆய்வறிக்கைகள் இவர்கள் செய்ய மறந்தனரா அல்லது செய்தும் மறைத்து விட்டனரா? இன்றைக்கு இவர்களுக்கு வந்து சேர வேண்டிய டிப்ஸ் வராத காரணம் நிமித்தம் நெஸ்லே சிக்கிக் கொண்டதா ?.. 

எது எவ்வாறாயினும் இனி மேற்கொண்டு நூடுல்ஸ் வகையறாக்கள் ஆரோக்கியம் சுமந்து வந்தாலுமே கூட  மக்கள் அதற்கு ஆதரவு கொடுப்பார்களா என்பது கேள்வி.. MSG என்று சொல்லப் படுகிற மோனோ சோடியம் குளுக்கோமைட் , அஜினமட்டோ போன்றவை நமது நாக்குகளுக்கு அதீத சுவை பரப்பி , நமது ராகி சோளம் கோதுமை சாமை வரகு திணை கம்பு போன்ற பாரம்பரிய  உணவு முறைகளையே புறக்கணித்து வந்தோம்.. 

ஏதோ ஒரு நல்லதுக்காகத் தான் இப்படி எல்லாம் நடந்துள்ளது என்கிற விதமாக மேற்கொண்டாவது  நமது உணவு முறைகளை மாற்றி அமைத்து விடுவது நம்முடைய மற்றும் நமது  சந்ததிகளின் ஆரோக்கியத்துக்கு சாலச் சிறந்தது என்றே கருத்தில் கொள்வோம்.. ~

Friday, June 5, 2015

அவளது இடை ....

பொசுக்கென்று 
என் வலது கை 
அவளது 
இடது இடையை 
அழுத்திற்று.. 

அதே 
துரிதகதியில் 
அவளது 
வலது கை 
எனது 
இடது கன்னத்தைப் 
பளீரென்று 
பதம் பார்த்தது.. 

இந்தத் தாக்குதலை 
எந்த அளவுக்கு 
நான் எதிபார்க்கவில்லையோ 
அந்தளவுக்கு 
எதிர்பார்த்தேன் என்பதும் 
உண்மை தான்.. 

கொசுவையும் 
ரத்தத்தையும் 
அவள் இடை பதித்த 
எனது உள்ளங்கையை 
அவளிடம் காண்பித்த 
மாத்திரத்தில் 
கண்களிலும்   
வாய் திறந்தும் 
அவள் கேட்ட மன்னிப்புக்கள்  
"அப்பாடா " என்றிருந்தன.. 

சற்று முன்னர் என்னைக் 
கடித்த கொசுவை 
நசுக்கியது .. இப்படி 
ஒரு சம்பவத்துக்கு 
உதவிற்று.. 

ற்றொரு நாள் 
நிஜமாகவே 
அவளது இடையைக் 
கடித்துக் கொண்டிருந்த 
கொசுவை 
கண்டும் காணாமலே இருந்தேன்.. 
அவளே பிற்பாடு 
சொறிந்து கொண்டாள் .. 
--மனைவி என்று 
ஆன பிற்பாடு 
கொசுக் கடித்தால் என்ன.. 
தேள் கடித்தால் தான் 
என்ன?? ... 

Monday, June 1, 2015

அடிமை ..

ல்லாருக்கும் போலவே எனக்கும் அணிந்தால் ஒருவித பிரத்யேக ஆனந்தம் அளிக்கக் கூடிய சட்டை வகையறாக்கள் உண்டு.. 
நாளடைவில் அந்த வகையறாக்களும்  தங்களின் அந்தப் பிரத்யேக அந்தஸ்த்தை இழந்த வண்ணமோ, அல்லது குறைந்த வண்ணமோ மாறி விடுகிற யதார்த்தங்கள் தவிர்க்க இயலாத ஒன்று.. 

அப்படியாக படிப் படியாக இறங்கி கடைசியில் ரெண்டோ மூன்றோ சட்டைகள் அவ்வித அந்தஸ்த்தில் சற்று ஆயுள் பலம் காணக் கூடும்.. 

அந்த மூன்றுமே கூட முதல் இரண்டாம் மூன்றாம் என்கிற வரிசைக் கிரமத்தோடு நமது தேகத்தோடு வலம் வரக்கூடும்.. 

அப்படி முதல் பரிசு பெற்ற சட்டையாக 'நீலக் கோடுகள் போட்ட ' ஒரு சட்டை இடம்பெற்று 'காலரைத்' தூக்கிக் கொண்டு திரிந்தது.. 

எங்கேனும் திருவிழா என்றாலோ, கல்யாணம் , பார்ட்டி என்றாலோ என்னில் அந்த சட்டை இடம் பெறவே என் மனது பிரயத்தனிக்கும்... 
'ஒன்றையே அனேக முறை திரும்பத் திரும்ப அணிவது அணிபவனுக்கு சௌகர்யப்  பட்டுப் போகலாம்.. ஆனால், அடிக்கடி அந்த சட்டையில் நீ இருப்பதை --சிற்சில நபர்களாவது-- தொடர்ந்து கவனிக்கக் கூடும்.. மௌனமாக அவர்களுக்குள்ளேயே உன்னைக் காறித் துப்பக் கூடும்.. நீ அதனை அத்தனை புத்திசாலித் தனமாக அடையாளம் காண்பது அரிது.. ஆகவே உன்னிடம் நல்லவை என்று அடையாளப் பட குறைந்த பட்சம் நான்கைந்து  சட்டைகளையாவது வரிசைப் படுத்தி வைத்துக் கொள்வது சாலச்  சிறந்தது.. '   என்றெல்லாம் எனது புத்தியில் ஏற்றிக் கொள்ளவேண்டியது கடமையாயிற்று.. 

பிற்பாடு அந்த நீலக் கோடுகள் இழுக்கப் பெற்ற சட்டை முதல் தரமிழக்கத் துவங்கிற்று.. ஆயினும் அதனை எப்படியாவது அணிந்து விடவேண்டும் என்கிற அனாவசியப்  பிரேமை என்னில் ஆட்கொண்டு எனக்கே என்னை அற்பப் பிறவி போன்று அடையாளப் படுத்திற்று.. 

பீடி சிகரெட் மது பெண் சினிமா பான்பராக் ஹான்ஸ் புகையிலை மூக்குப் பொடி என்று ஏதோ ஒரு விஷயத்தில் ஈர்க்கப் பெற்று அதனின்று வெளிவரும் வழி  தெரியாமல் சிக்கிச் சீரழிய நேர்ந்து, அதுவே ஒரு குற்ற உணர்வாகவும் மனதினை ஆக்கிரமிக்கும் சூழல், எப்படி ஒருவித அவஸ்தையோ அதே அவஸ்தை அந்த  ப்ளூ லைன் ஷர்ட் பற்றிய பிரக்ஞை என்கிற உறுத்தல் ஒருமுறை  என்னில் தீவிரமடையவே, அதனை அப்புறப் படுத்தியாக வேண்டும் உடனடியாக என்கிற அவசரம் என்னை ஆட்டுவித்தது.. 

சரி அதனை பீரோவில் ஒரு ஓரமாக மடித்து வைத்துவிட்டு  தக்கதருணம் வருகையில் எவருக்கேனும் சமர்ப்பித்து விடவேண்டும் என்கிற அனுமானத்தில் அதனை விடுத்து மற்ற வகையறா சட்டைகளை மட்டுமே அணிகிற வழக்கத்துக்கு என்னை நான் மாற்றிக் கொண்டேன்.. 

ஆனால் எந்த சட்டை அணிந்தாலும்  அந்த நீலக் கோடுகள் சட்டையை என்னால் ஒப்பீடு செய்ய முடியாமல் இருப்பது அசாத்யமாயிற்று .. சரி போகிறது போ என்று வெறுமே ஒப்பீடு மாத்திரம் செய்து விட்டு பிற சட்டைகளுள்  நுழைகிற பாங்கு எனக்கு வந்திருப்பது சற்று பெருமையாகக் கூட  இருந்தது.. 

ஒரு ஓய்வான ஞாயிறு  அதனை எங்கேனும் சென்று ஒப்படைத்து விட்டு வரலாம் என்கிற ஞாபகம் வரவே, அந்த சட்டையை 'பாக்' செய்வதற்கு பாலித்தீன் பை  ஒன்றைத் தேடினேன்.. 

அதற்குள்ளாக இந்த அடிமை மனசு அரட்டிற்று.. "கடேசி கடேசீ ன்னு ஒரே வாட்டி இன்னைக்குப் பூரா அதை மாட்டிட்டு சுத்துவோம்.. அப்புறம் மறுபடி ஒருக்க  நல்லா தொவச்சு அயன் பண்ணி யாருக்காச்சும் கொடுத்துடுவோம்"

பிறகென்ன.. இந்த மானங்கெட்ட மனசு, இந்த மானங்கெட்ட உடலுக்கு எடுத்து மாட்டி விட்டது.. 

போதாக்குறைக்கு எதிர்ப்பட்ட ராஜகோபாலன் வேறு ..
"இந்த சட்டைல நீ எப்பவுமே ஹாண்ட்சம் டா " என்கிறான்.. 

அப்புறம் ஒருவார கால அவகாசத்தில், மறுபடி முதலிடத்தைப் பிடித்து விட்டிருந்தது  அந்த 'நீலக் கோடுகள் ' வரையப் பட்ட சட்டை.. !!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...