Thursday, December 31, 2015

கள்ளச் சோகம் .........

ள்ளக் கணவனோடு 
படுக்கையில் 
சல்லாபித்துக் 
கொண்டிருந்த ஒரு 
காலை 11 மணி 
சமயத்தில் ...
-சாலையில்  
ஆம்புலன்ஸ் 
கடந்த சைரன் 
சற்றே துணுக்குற 
வைத்தன இருவரையும்.. !

'நகரெங்கிலும் 
இந்த ஈன முணகல் 
தொடர்கதையாகி விட்டது'
என்று சொல்கிறவனை 
'ஆமாம்' என்று 
ஆமோதிக்கிறாள் அவள்.. 

காலை புறப்பட்டு 
அலுவல் சென்ற 
கணவன் அடிபட்ட 
செய்தி அவள் 
காது சேர, 
குறைந்த பட்சம் 
இன்னும் பத்து 
அல்லது 
பதினைந்து 
நிமிடங்களாவது 
பிடிக்கக் கூடும்.. !!

Monday, December 28, 2015

புதிய பட்டியல்..


எதற்கேனும்
கர்வம் கொள்ள 
சாத்யப் படுமா
என்று எமது
பட்டியல்களை
மனசுள் அசை போட்டுக்
கொண்டிருந்தேன்..
எதுவும் எடுபடுவதாகத்
தெரியவில்லை..

மேற்கொண்டாவது
அவ்வித சூழலை
அமைத்துக் கொள்கிற
தளங்கள் தேடப் பட்டன..
அதற்கு நிறைய
திறமையும் பொறுமையும்
தேவைப் பட்டன...

பீடியே பழக்கப் படாதவன்
கஞ்சா ஊத மெனக்கெடுவது
மாதிரி..
ஆம்லெட்டே குமட்டுபவனுக்கு
பச்சை மான்கறி புசிக்கிற
புலி என மாறுவது மாதிரி..

கர்வம் என்கிற
அசைவ உண[ர்]வு
பொருந்தாமற் போயிற்று..
இருப்பினும்
என்றேனும் எதற்கேனும்
கர்வப் பட்டே
தீருவது என்கிற
தீர்மானத்தை எடுத்தேன்..

எனது சிறுபிள்ளைத் 
தனங்களுக்காக வெட்கப் பட்ட 
பட்டியல்கள் நிறைய உள்ளன.. 
அவைகளில் மேற்சொன்ன 
தீர்மானமும் கூடிய விரைவில்
இனணயக் கூடும் என்றே
அனுமானிக்கிறேன்''


Wednesday, December 16, 2015

ஒரு பிரபல எழுத்தாளனின் வேண்டுகோள்..

எமது படைப்பின் இடைவெளி ஒவ்வொரு ரசிகனையும் வாட்டி வதைப்பதாக இருக்கும் பட்சத்தில், இடையறாத எமது எழுத்துப் பணி  செவ்வனே நிகழ்ந்த வண்ணமாக  இருந்திருக்கக் கூடும்..  
 
 ஆனால் அவ்வித துரதிர்ஷ்டங்கள் எமக்கில்லை., என்பதோடு இருக்கிற ஒற்றைக் கையளவு ரசிகர்கள் என்ன ஏதென்று கூட கேட்காத சுதந்திர எழுத்தாளனாக உலா வருவது பெருமிதம் எமக்கு.. 

அதென்ன ஒற்றைக் கையளவு ?.. 

அந்த ஒரே கையிலுள்ள ஐந்து விரல்கள் தாண்டி அடுத்த கையின் ஆறாம் விரலுக்குப் போகத் தேவை இல்லை, எமது ரசிக மணிகளின்  எண்ணிக்கை.. !

புகழ் ஒரு கஞ்சா அபினுக்கு ஒப்பான போதை.. அதிலே திளைக்கிற வசீகரம் கனவாயிருக்கிற வரைக்கும் தப்பிக்கலாம்.. அவை உண்மையாக மாறும் ஆரம்பத் தருவாய் வேண்டுமென்றால், ரம்மியம் பிய்த்து உதறக் கூடும்.. பிற்பாடு, ?.. 

என்னவோ புகழின் அனைத்துத் தாத்பர்யங்களையும் அக்கு வேர் ஆணி வேராக அறிந்தவன் போன்று, புகழ் குறித்து என்னென்னவோ நிறையப் பிதற்றப்  பிரயத்தனிக்கிறேன் .. ஹஹா.. 

"தோன்றின் புகழொடு தோன்றுக. அல்லவெனில் தோன்றாதிருத்தல் உத்தமம்" என்று ரெண்டடிக் குரளில் வேறு வள்ளுவன் உசுப்பேற்றுகிறான் 

புகழுக்கென்றே பணம் செலவு செய்கிற செல்வந்தர்கள் உண்டு. புகழும் செழுமைப் பட்டு அதனூடே செல்வமும் குவிகிற மகத்தான பிறவிகள் குறித்து  எமக்கொரு காழ்ப்பு, பொச்சரிப்பு என்பதை எல்லாம் தாண்டி சிருஷ்டித்தவனின்  பார்ஷியாலிட்டி மீது தான் அதீதக் கோபம் எனக்கு.. , இன்னும் பலர்க்கு...! 
[துணைக்கு கொஞ்சம் பேரை சேர்த்துக் கொள்வோம்]

இப்போதைய "கரண்ட்" புகழின்மை ஒழிந்து போய் , புகழ் எம்மை அண்டுகிற தருணம் அந்தப் பார்ஷியாலிட்டி மீதான கோபம் கழன்று போகக் கூடும்.. கடவுள் மீது பாசம் அபரிமிதம் சுரக்கக் கூடும். ஹஹ...

புற சூழல்கள் எம்மை  இவ்வித மேம்பாடுகள் அடைய வைத்தன.. இல்லை என்றால், அனாமதேயத்தின் பிடியில் சிக்கிச் சிதறுண்டு போயிருப்பேன்.. என்கிற யதார்த்தமான அச்சங்களும் சந்தேகங்களுமே மனிதனின் அகம்பாவம் அற்ற சிந்தனைகளாக இருக்க வேண்டும்.. 

ஆனால் அவ்வாறு அற்று, "தன்னை" சுயம்பென்று சிலிர்த்துத் திரிகிற தினவு கொண்ட பற்பல மனிதர்கள், அதுவும் குறிப்பாக அரசியல் வாழ்வினை சார்ந்து இருப்பவர்கள் .... 

மண்ணில் விளைந்ததைத் தின்று அந்த ஷக்தியிலே நமது அப்பன் விந்தில் நாம் ஜனித்தோம்.. நாமும் அதே விதமாகத் தான் நமது சந்ததிகளை ஈன்றோம்.. அதே மண் நமது அப்பாக்களை உள்வாங்கிக் கொண்டன.. அடுத்து நம்மை.. !!

இந்தப் பிராசஸ் ஐந்தறிவு ஜீவராசிகளின் கோட்பாடுகள் படி தான் நடக்கிறது. ஆனால், பீஸா -பர்கர் -ப்ரைட் ரைஸ் -புலாவு -கீ-ரைஸ்- நாண் -ரொட்டி -தந்தூரி -சிக்கன் ப்ரை - பிஸ் ப்ரை .. இதர இதர .. 
நமது ஆறாம் அறிவின் கற்பனைத்திறன் நிமித்தம் வாய்களுக்குப் பற்பல வகையறாக்களில் உணவுகளை அறிமுகப் படுத்துகிறோம்.. சில உணவுகளை கற்பனை செய்தாலே கூட,  நாவில் ஜொள் சுரந்து சட்டை நனைக்கிறோம் .. எவரேனும் இந்த அசிங்கத்தை கவனித்து விட்டனரோ என்று துணுக்குற்று சுற்றுமுற்றும் பார்த்து  கைக்குட்டையில் அவசரமாகத் துடைக்கிறோம் .. வாஷ் பேசின் ஓடி க்ளீன் செய்யத் துரிதப் படுகிறோம்.. 

ஆனால், ஒரு மாடு அன்று முதற்கொண்டு தட்டுப் போரையும் மசால் இலைகளையும்  புற்கள் கீரைகளை மட்டுமே அரவை போட்டுக் கொண்டு ஆனந்தமாக  வாழ்கிறது.. கட்டுத் தாரையில் எத்தனை சாணங்களை கவனிக்க நேர்ந்தாலும் முகம் சுழிக்கவோ மூக்கைப் பிடிக்கவோ நாம் செய்வதில்லை.. 
ஆனால், நம்முடைய மனித இனத்திலே ஒருவன் போய் விட்டு வந்த கக்கூஸுக்கு நாம் அடுத்து செல்ல நேர்கையில், அவனுடைய அசிங்கங்கள் அங்கே ஏதேனும் அடையாளமாக வீற்றிருக்கும் பட்சத்தில், வருகிற அசூயையும்  அவன் மீதான எரிச்சலும் சொல்லி மாளாது.. 

எதையோ சொல்ல என்று ஆரம்பித்து கதை எங்கெங்கோ போய் விட்டது.. தவறுதலாக எதையேனும் சொல்லி இருக்கும் பட்சத்தில் எமது ரசிகப் பெருமக்கள் மனமுவந்து  மன்னிக்க முன்வந்து மேற்கொண்டும் எம்மை ஆதரிக்க வேண்டுமாறு பணிவன்போடு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.. 
நன்றி மக்களே... !!

Saturday, December 12, 2015

மெட்ராஸ்........

சென்னை மழையை விடுத்து வேறொன்றை எழுத யோசிக்கிற திராணி அறவே அற்று விட்டதாகையால், சமீப எமது வெண் தாள்கள் எந்தக் கரைகளும் அற்று வெறுமே கிடக்கின்றன.. 

அந்த அடர்ந்த சோகங்களை கவிதை எழுதி எமது அஞ்சலி சமர்ப்பிக்க ஓர் எண்ணம் இருந்த போதிலும், அதென்னவோ ஒரு பரமானந்தத்தை கவிதையாக்கி குதூகலிக்கிற உற்சாகம் இந்த மழை குறித்து எழுதுவதற்கு நைந்து நமுத்துப் போனது போன்றொரு இறுக்கம் மனம் நெடுக.. 

நொந்து நூலாகிக் கிடக்கிற மக்களை எந்தக் கவிதை கொண்டு நிரப்ப?.. அன்றாட அவஸ்தைகளில் அறுந்து போய்க் கிடக்கிற அவர்களின் வாழ்க்கையை எந்தக் கவிதை ஊசியில் தையலிட??

இந்தத் தருவாயில், மற்றொன்றை யோசித்துப் புனைவதை  சிரமமாகவே மனசு ஏனோ உணர்வது வினோதமே.. 

அவர்களோடும் அவர்களது அவஸ்தைகளோடும் என்னால் ஊடாட சாத்யப் படவில்லை  என்ற போதிலும், இங்கிருந்து கொண்டே அவர்களுடைய வாழ்க்கைப் போராட்டங்களில் நானும் பங்கெடுக்கிற ஒரு சிறு கற்பனையில் மூழ்கித்  திளைக்கப் பார்க்கிறேன்.. 

வீடிழந்து பொருட்கள் இழந்து  ரெயில்வே பிளாட் ஃ பாரத்தில் என் குடும்பமும் தத்தளிக்கிற கற்பனை.. பசிக்குப் பாப்பா அழுகிறாள்.. பசி மயக்கத்தில் அம்மாவும் மனைவியும்....
எதையாவது செய்தே தீரவேண்டிய கட்டாயத்தில் நான்.. 

விபரீதம் நிகழாத பிராந்தியத்தில் உட்கார்ந்து கொண்டு கற்பனை செய்கிறேன்.. நாங்களும் சென்னை வாழ் பிரஜைகளாக இருந்திருக்கும் பட்சத்தில், மேற்சொன்ன யாவும் நிச்சயம் கற்பனைகளாயிருக்க வாய்ப்பில்லை என்றே  கருதுகிறேன்.. 

ஐயோ........................

Monday, November 30, 2015

ஆத்தா --- வாழ்க்கைக் குறிப்பு..


ப்பீசு போறதா தான் 
சொல்றான் பெரிய பய்யன்.. 
ஆனா, அப்பப்ப வந்து 
'எம்புட்டாயா சில்ற 
வச்சிருக்கே ன்னு கேட்டு 
அம்பது நூறுன்னு 
அள்ளிக்கிட்டுப் போயிடறான்.. 
'அப்புறமா தாறேன்.. கணக்குல 
வச்சுக்கன்னு '
பெரிய நேர்மவாதி போல 
பீத்திக்கிட்டுப் போவான்.. 
மறுபடி 
'பெட்ரோல் போட ஒரு 
அம்பது குடு ஆத்தா' ன்னு 
சொரண கெட்டுப் போயி 
சாக்கைத் தூக்கி 
காசை வாரிட்டுப் போயிடுவான் 
படுபாவி.. 
'வயசான காலத்துல 
பெத்தவள வச்சு 
கஞ்சி ஊத்தத் தான் 
வக்கில்ல.. 
ஏதோ அவ ஒட்டுன
வயித்துக்குன்னு நாலு 
காசு சேர்த்து வச்சா 
அதுலயும் வந்து  மண்ணப் 
போடுறானே மானங்கெட்ட 
நாயி. ' ன்னு 
கேவிக் கேவி 
நமுத்துத்தான் போனா 
கெழவி.. 

மருமவ இருக்காளே.. மூதி. 
அதுக்கு மேல.. 
போறப்ப வாரப்ப  
புதுசா என்ன காயி 
அத்த வந்திருக்குன்னு 
அள்ளிப் போட்டுக்கிட்டு.. 
பர்ஸ் ஜிப்பை தெறப்பா..
'ஐயோ சில்றைய வூட்டாண்ட யே 
வச்சிட்டேன்.. வாரப்ப தாரேன்.. 
என்பாள்.. சில சமயங்களில் 
போறப்ப தாரேன்.. என்பாள்..!

ஆனா எல்லாவாட்டியும் 
வெறும் பர்சையே ஜிப்பைத் 
திறந்து காண்பிப்பாள்.. 

வடுகப்பட்டிக்குக் கட்டிக் 
குடுத்த ஒத்த மவ இருக்காளே 
சிறுக்கி.. 
மருமவளே தேவலேன்னு 
பண்ணிடுவா.. 
நடு  ரோட்ல 
நாலு பேரு காயி வாங்குற 
டைம்ல வந்து 
'மாப்ளைக்கு மைனர் செயன் 
எப்ப போடுவியாம்?.. அதுவரைக்கும் 
வந்துடாதேன்னு அனுப்பிச்சு 
விட்டாக ' என்று ஏதாவது 
ஒவ்வொரு தபாவும் 
ஒவ்வொரு புதுக் கதையோட 
வந்து கழுத்தறுப்பா.. 

நாசமாப் போன இந்த 
வுசுரு   போயித் தொலையவும் 
மாட்டேங்குது .. 
ஊட்டுக்காரன் மவராசன் இந்தக் 
கொடுமைய எல்லாம்  கண்ணுல 
பாக்கக் கூடாதுன்னு அப்பவே 
கண்ணை மூடிட்டான்.. 
நாந்தேன் இப்ப சீரழியறேன்.. 

த்தனை இம்சைக்கு 
நடுவிலும் 
3 வயது மகள் வழிப் 
பேரனை மடியில் 
வைத்து அவன் 
சாப்பிட கேரட்டைக் 
கழுவிக் கொடுக்கிற 
ஒரு சுகம் தான் 
இன்னும் அவள் 
ஆயுளை கெட்டிப் 
படுத்தி வைத்திருக்கிறது..!!புகைப்பட உதவி  : திரு. தங்கம் பழனி Saturday, November 28, 2015

நானும் ரௌடி தான்..

நானும் ரௌடி தான்.. 
தெளிந்தநீர் நிலை போன்று ஒரு தேஜஸ்.. எந்தக் கலங்கலும் அற்று ஆழம் கூட மேற்பரப்பிலிருந்து ஈஸியாக விஷுவலைஸ் ஆனது போன்ற ஒரு திருப்தி இந்தப் படம்.. 
இப்படி ஒரு நய்யாண்டி ஸ்லாங்கில் பேசி நடிக்கிற வித்தை விஜய் சேதுபதிக்கு செம கெத்து.. மீசை அற்று ஹாண்ட்சம் வழிகிற இன்னசண்ட் முகம்.. 
நயன்தாராவை அந்தக் கடற்கரையில் கடிந்து கொள்கையில், நயனுக்குக் காது கேட்காது என்பதை மறந்து பேச, பிறகு விசுக்கென்று ஞாபகம் வரவே, 'நான் பேசற போது கொஞ்சம் என்னோட மூஞ்சியப் பாரேன்!' என்கிற கேவல்.. 
Image result for naanum rowdy thaan nayanthara
நயன் ரியல்லி ஆசம் ... இன்னா ஒரு 'செவி கேளா' பெர்ஃ பார்மான்ஸ் .. வொண்டர் .. 
பழி வாங்குகிற அந்த எனெர்ஜியை முகத்தில் ஸ்லிப் ஆகாமல் வைத்துக் கொண்டு , சான்ஸ் மாட்டுகையில், அந்தக் 'கொல்கிற ' மூர்க்கம் தொலைந்த மென்மை ததும்பும்  பெண்மை.. வாவ்.. என்று ரசிக்கத் தூண்டிற்று.. 

சேதுபதியோடு நட்பு பாராட்டும் பாலாஜி.. 
ஆளை மாற்றி சுட்டு விட்டு , என்னவோ பிளாக் போர்டில் கிறுக்கி விட்டு அழித்து மறுபடி சுலபமாக சாக்பீஸில் எழுதுவது போன்று அந்த சைலன்சர் ரிவால்வாரில் சுடவேண்டிய நபரை சுட்டு விஜய் சேதுபதிக்கு டிஸ்ப்ளே செய்து காண்பிக்கிற மொட்டை  ராஜேந்தரனின் குரூர ஹாஸ்யம் .. 'கெக்கே பிக்கே'வென்று  சிரிப்பு முட்டுகிறது.. 

வாவ்.. என்ன லாவகமாக வில்லத் தனம் பார்த்திபனுக்கு?.. சும்மா தி.நெ .வேலி ஹல்வா வை அலேக்காக வாயில் குதப்பி மற்ற வில்லன்களுக்கு சவால் விடும்  நாசுக்கு.. இனி, இதர படங்களில் வில்லன் ரோல் தொடரும் என்றே தோன்றுகிறது..  

அனிருதின் இரைச்சல் இல்லா பொருத்த இசை.. ரெண்டொரு ரசிக்கும் படியான மெலடி.. காமெராவை ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன் என்று நினைக்கிறேன்.. 

செம சென்ஸ் டைரக்டர்.. ட்ராக் தொடரட்டும்.. 
தரமிகு தயாரிப்பில் மறைமுக தனுஷும் மின்னுகிறார்.. 
நன்றி.. 

Tuesday, November 24, 2015

ஒரு மொக்கைக் கவிதை..

தினசரி காய்கறி 
மார்க்கெட்டில் 
முனைகளை உடைத்து 
வெண்டைக்காய் 
பொறுக்கிக் கொண்டிருந்தவன் ... 
Image result for LADYS FINGER
என் போன்றே 
பொறுக்குகிற உமது 
விரலொன்றைப் 
பிடித்து .. 
முனை உடைக்க வளைத்தேன்.. 
படக்கென்ற நெட்டிச் 
சப்தம் கேட்டதும் தான் 
அது உன் விரல் என்று 
உணர்ந்து திகைத்தேன்.. 
Image result for GIRLS FINGER
'லேடீஸ் ஃபிங்கர் '
என்று நினைத்து.... 
ரியல்லி ஸாரி " 
என்றேன்.. 

'இதுவும் 
லேடீ'ஸ் பிங்கர் தானே?'
என்ற உமது 
நய்யாண்டியில் கிறங்கி 
மறுபடி உமது  
அத்தனை விரல்களையும் 
ஒருங்கே கோர்க்க 
நேர்ந்தது.. 
நமது திருமணத்தில்.. !!

Monday, November 23, 2015

முரண் மூட்டை..

குடம் குடமாகக் 
கொட்டப் படுகிறது 
பால்...!
பால் கரவா 
கல் நந்திக்கு...!!

குடம் குடமாய் 
பால் தரும் 
பசுவுக்கோ .. 
சரிவரக் குளித்து 
விடுவது கூட இல்லை.. !

இருந்த சில்லறைகளை 
மொத்தமாக 
கோவில் உண்டியலில் 
திணித்து விட்டு.. 

ஒரு ரூபாய் 
சில்லறையை 
இறங்கும் போது 
தருவதாக சொல்கிற 
நடத்துனரை 
களவாணி என்றே 
அனுமானிக்கிறோம்.. !

சவாரிக்கு முந்துகிற 
ஆட்டோ ஓட்டுனர்கள் 
போன்றே அர்ச்சகர்கள்.. 
அர்ச்சனை கிராக்கிக்கு 
தட்டை ஏந்திக் கொண்டு  
அலை பாய்கிறார்கள்.. !

மதிய அன்ன தானத்திற்கு  
சரியாக 100 டோக்கன்கள்.. 
அந்த நூறில் அரைப் பசியோடும் 
பசியே அற்றும் 
பலரும் இருக்கக் கூடும்.. 
ஆனால் குடலைப் பிடுங்கும் 
பசியோடு வருகிற 
101 வது நபருக்கு 
என்ன போராடியும் 
டோக்கனில்லை.. !

ஆன்மிகம் தழைத்தோங்கும் 
இந்தியக் கோவில்களில் 
பெண்களை கவனிக்கிற 
ஆண்களின் கூட்டமும் 
ஆண்களை கவனிக்கிற 
 பெண்களின்  கூட்டமும் 
இல்லை என்றால், 
கோவில் குடமுழக்குகள் 
கூட - ஒரு 
பிரபல திரைப் படத்தின் 
கடைசி நாள் கூட்டம்  
போன்று தான் இருக்கக் கூடும்.. !!

Thursday, November 19, 2015

பிரபல அநாமதேயம் .......

 வள்ளுவன் காந்தி  பாரதி போன்றவர்களின் திறன்கள் எம்மைக் கவர்ந்ததை விட அதீதம் அவர்களின் அழியாப் புகழ் எனக்குள் ஓர் மகோன்னதக் கிறக்கத்தை நிகழ்த்தச் செய்துள்ள நிதர்சன உண்மையை சொல்லிக் கொள்ள அவா கொள்கிறேன்..

தோன்றின் புகழொடு தோன்றுக.. அல்லவெனில் தோன்றாதிருத்தல் உத்தமம் என்கிற வள்ளுவன் குறளே கூட ஒன்றுண்டு..

ஒரு பிராயத்தில் எனக்கென இந்தப் பிரபஞ்சம் வரிந்து கட்டிக் கொண்டு அதையும் இதையும் செய்யத் தான் போகிறது என்கிற அடாத நம்பிக்கையில் கழிந்திருப்பதை இன்று அசைபோடுகிறேன்..

அவ்வாறான "புகழ் தாக"த் தருணங்கள் மிகவும் உயிர்ப்பானவை, எம்மை அற்புதமாக இயக்கவல்ல க்ரியா ஹூக்கிகளாக எம்மில் வீற்றிருந்தன..

ஆனால் சற்றும் நான் எதிர்பாராமல் ஒரு தருவாயில் நான் புகழற்ற சாதாரணப் பனாதியாக நேர்ந்தது.. அந்த சுடும் உண்மை என் மனசுக்குள் தீக்காயங்கள் ஏற்படுத்தின.. ஆறா ரணமாக மிக நெடிய காலங்கள் சீழ் பிடித்து  வலி உண்டு பண்ணிற்று..

ஆனால் காலம் அனைத்தையும் ஆற்றும் வல்லமை கொண்டது.. அந்த ரணங்கள் சொஸ்தம் அடைந்தன.. தழும்புகள் கூட அற்று காயமாற்றின.. சாகக் கிடந்தவனுக்கு ஊதும் முஸ்தீபில் கிடந்த சங்கு, பிற்பாடு சாகக் கிடந்தவனே எழுந்து 'தம்' பிடித்து ஊதுவதற்கு உதவிற்று..

ஆக , எமது அனாமதேயம் பிரபலமாயிற்று.. சீந்துவாரற்று ரோட்டில் நடக்கிறேன்.. கைகுலுக்கும் தொந்தரவில்லை, ஆட்டோகிராப் அவஸ்தை இல்லை, நான் இன்னார் என்று எவரும் என்னை அறிமுகப்  படுத்துகிற இம்சை இல்லை.

இந்த சுதந்திரம் ஆசுவாசமாக இருக்கிறது.. இதுவே நிறைவு வரை நீடித்தால் போதும்  என்கிற அவா வந்துவிட்டது..

எனக்கிருக்கிற கிஞ்சிற்று 'ஓவியம் வரைகிற'  திறனைக் கொண்டு என்னை நான் புதுவிதமாக வரைய ஆசைப் பட்டு உருமால் கட்டிய மண்டையோடு முறுக்கிய மீசையும், நீண்ட தாடியும் விட்டிருப்பதாக கற்பனை செய்து தத்ரூபமாக வரைந்து முடித்த திருப்தியில் எனது மகளிடத்துக் காண்பித்தேன்..

"பாரதி தாடி வளர்த்த மாதிரி இருக்கு.. அப்புறம், வள்ளுவன் உருமால் கட்டிய மாதிரி  இருக்கு" என்கிறாள்..


Wednesday, November 11, 2015

வேதாளம்.......

பாட்ஷா, விஸ்வரூபம் படங்களை சுலபமாக ஞாபகத்துக்குக் கொணர்கிற திரைக் கதை..
வி.ரூபத்தில் கமல் போடுகிற அந்த சண்டையின் டெம்ப்ட் இந்த வேதாளத்தில் நான்கைந்து மடங்குகளாக படர்ந்து ரசிகர்களை கும்மாளமூட்டச் செய்து விடும் போலும்..
Image result for VEDHAALAM
பாசக் கார அண்ணனாக.. ரௌடி ஸார் வேதாளமாக ... "ஹன்க்" போல மாறி வில்லன் வகையறாக்களை பீஸ் பீஸ் ஆக்குகிற பிஸ்தாவாக ..
அஜித்தின் இவ்ளோ பரிணாமங்கள் சற்றே இம்சிக்கின்றன.. இன்னவகை உணர்வென்று விவரிக்க சாத்யப் படாத ஒருவித அவஸ்தை.

என்ற போதிலும் இந்தக் கதைக்கு விலாவாரியாக ஸ்க்ரீன் ப்ளே செய்து, சளைக்காத காமெரா கோணங்கள் வைத்து, காட்சி வாரியாக இசையையும் பொருத்தமாக செருகி ... டைரக்டர் சிவாவின் சக்ஸஸ் ஃபார்முலா பின்னர் வருகிற புதியவர்களையும் தொற்றிக் கொள்கிற வாய்ப்பு நிறையவே தென்படுகிறது படம் நெடுகிலும்..

இம்மாதிரி யதார்த்தம் என்ன விலை என்று கேட்கிற தமிழ் படங்களை ஏற்கனவே நிறையப் பார்த்துப் பழகிய நமது ரசிகர்களுக்கு இந்தப் படமும் அதே ஜாதி  என்பது மிகவும் ஆறுதல் எனிலும், நல்ல சினிமாவை யதார்த்த சினிமாவை நேசிக்கிற நபர்களுக்கு மிகப் பெரும் ஏமாற்றமே..

ஆனால் சிகரெட் ஸ்மோகிங் இஸ் இஞ்ஜூரீயஸ் டு ஹெல்த் என்று சிகரெட் பெட்டி மேல் பிதற்றி யாது பயன்?.. உருவி, பற்றவைத்து உள்ளே வரைக்கும் இழுத்து  புகையை வெளித் தள்ளுகிற கூட்டம் ஒன்றும் குறைந்த பாடாகத் தெரியவில்லை..
நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று மதுப் புட்டி மீது லேபிள் ஒட்டி என்ன பண்ண? சந்திர மண்டலத்தில் ஒயின் ஷாப் ஆரம்பித்தாலும் ராக்கெட் வைத்துப் போக ரெடியாக இருக்கிற குடிமகன்கள் குறைந்த பாடில்லை..

அதே விதமாகத் தான். இந்த அதரப் பழசான அரைவேக்காட்டுப் படங்களுக்கு என்று எப்போதுமே ஒரு கும்பல் குதூகலக் குலவை ஓத தாரை தப்பட்டை சகிதமாக இருந்து கொண்டே தான் இருக்கின்றன..

இந்த மாதிரி படங்களுக்கு நெகட்டிவ் ரிவ்யூ வருவது குறித்த கவலையோ, அக்கறையோ சற்றும் அற்று அது என்ன கண்றாவியாக இருந்து தொலைந்தாலும் அரங்கதிர விசிலூதி அல்லோல கல்லோலப் படுத்துவதென்பது எம்ஜியார் காலந்தொட்டு தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகிற சாபக் கேடு..

"இந்தப் படம், செம சக்ஸஸ் .. சும்மா அள்ளு அள்ளுன்னு அள்ளப் போவுது.. வேணா பாருங்களேன்"
என்கிற தல ரசிகர்களின் ஒய்யார சவால்கள் ...

"பு லி  மாதிரி இதுவும் ஊத்திக்கணும்" என்கிற சிலரின் சாபங்கள்..

'ஊத்துனா என்ன , ஆத்துனா என்ன ?' என்கிற அசால்டோடு இருக்கிற மீடியேட்டர் ரசிகர்கள்..

"நாம" எப்டி?...                                                                                                

Saturday, November 7, 2015

கமல் ..ஸிக்ஸ்டி ஒன்


Image result for kamal hassan

ரமக் குடி தந்த 
பரம நடிகன்.. 
பரம குடி காரன் கூட 
பரம ரசிகனாகி 
விடுவான் கமலுக்கு.. 

சிரமமே அற்று 
அனாயாசமாய் எவ்விதப் 
பாத்திரத்தையும் 
தன்வசப் படுத்திய 
தந்திர சாலி.. 

அரசியல் உரசிட 
அனுமதியா தங்கம்.. 
சினிமா சிரத்தை 
தவிர்த்து 
வேறெதிலும் 
நுழைப்பதில்லை 
தமது 'சிர' த்தை.. 

சினிமாவுக்கு மட்டுமே 
உயர்த்தும் 
தமது கரத்தை 
இந்த சிறுத்தை.. 
அனைவருமே 
ஆதரிப்பர் அரவணைப்பர் 
இந்த எமது கருத்தை..!!

[ஹிஹி.. அப்பப்ப, எல்லாருக்குள்ளேயும் இப்படி ஒரு "ராஜேந்தர்" குபுக்குன்னு பூந்துக்கத் தான் செய்றாங்க].. 

Wednesday, November 4, 2015

ஈரக் கவிதை..

லைக்குச் செருப்பாக 
-குடை.. 
சேறு ஆவதற்கு முன்பான 
மழையைத் தவிர்க்க.. 

கால்களுக்குக் குடையாக 
செருப்பு.. 
சேறாக மாறிவிட்ட 
மழையைத் தவிர்க்க.. 

குடையோ செருப்போ 
அற்று முழுதுமாக 
மழையில் 
நனைந்து கரைந்திடும் 
மழலைமை 
நம் ஒவ்வொருவருள்ளும் 
ஒவ்வொரு 
மழை நாளின் போதிலும்.. !!

Image result for rainy day

Thursday, October 29, 2015

பிய்ந்து போன கனவுகள் ........ [பழைய காதல் கவிதை..]

நீ ஞாபகம் வரும்போது
மாத்திரமே யதார்த்தமாக
எழுத வருகிறது எனக்கு..
Image result for love images
மற்றைய எது குறித்து
எவர் குறித்து எழுதினாலுமே
 வலிய திணிக்கப் பட்ட
செயற்கை அசிங்கம்
அங்கே சப்பணமிட்டு
உட்கார்ந்து கொள்வதை
சுலபத்தில் அடையாளம்
காண்பது சாத்தியமாகி
விடுகிறது எனக்கு.. !

ஆனால் எனது

புனைதலில்  நீ
ஆக்கிரமிக்கப் படுகையில்
ஒரு பூ  செடியில்
பூக்கத் துவங்குகிற
இயல்பு அங்கே
பிறக்கிற ஆச்சர்யத்தை
உணர்கிறேன்..
Image result for love images
உடல்ரீதியாக
அன்றெல்லாம் உன்னை
தரிசிக்க நேர்ந்த
அந்த அற்புதத்
தருணங்கள் கூட
மிக நேர்த்தியான,
நெடிய உபவாசத்திற்குப்
பிறகு வருகிற
பசி போன்று
அலாதி உணர்வுகள்
ததும்பின எனில்
மிகையன்று.. !!

இன்றோ

நாமதேயமற்றுப்
போய் விட்டீர்கள்
நீயும் உமது முகவரியும்..

காலத்தின் கட்டாயமோ

அல்லது உமது தீர்மானமோ
அறியேன்,
பரஸ்பரம் இனி இப்
பிரபஞ்சம் விட்டு
நழுவும் நாள் வரைக்கும்
உன்னை எனக்கு
தரிசிக்கிற வாய்ப்பே
சிறிதும் இல்லை என்கிற
சுடும் உண்மையை
ஒருவகை அவநம்பிகையினூடே
அடைகாத்து வருகிறது
மனது.. !!

Image result for love images

Sunday, October 25, 2015

நாஸ்திகன் டைரியிலிருந்து..

ஆத்திகன் நீ என்பதால் அனேக கடவுள்களையும் பாரபட்சம் பாராது பிரார்த்திக்கிறாய்.. 

ஆனால் உமது பிரச்சினைகளை தீர்க்கவல்ல கடவுள் ஒருவரே.. 
உமது பிரார்த்தனையின் பிரதான அம்சமே, அந்தப் பிரத்யேகமான பிரச்சினை காணாமற்போய் ஒரு நல்ல தீர்ப்பு வந்து சேர்ந்து சந்தோஷம் பிரவகிக்க வேண்டும் என்பதே.. 

அவ்வாறே உமது பிரச்னையும் ஒரு எல்லையை சந்தித்து, ஒரு தீர்க்கமான சூழல் உருவாயிற்று.. 
மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கித் திளைத்து, சில நாட்கள் உம்மைக் காப்பாற்றிய தெய்வத்தைக் கூட நினைவில் கொள்ளாமல் வேறு களியாட்டங்களில் நண்பர்களோடும் உறவினர்களோடும் கொண்டாடித் தீர்த்தாய்.. 

யாவும் கடந்தாக வேண்டிய விதியின் நிமித்தம், உமது கொண்டாட்டத் தருணங்கள் கடந்து கடவுள்களை சிந்திக்கிற நேரம் பிறந்தன.. 

பிரச்சினை தீரவேண்டும் என்று கோரஸாக பார்க்கிற கடவுளை எல்லாம் வேண்டி விடுகிறாய்.. ஆனால், நீ காப்பாற்றப் பட்ட பிற்பாடு, அனைத்து கடவுளும்  கூடித் தான் உம்மைக் கரை சேர்த்தன என்கிற நம்பிக்கை பிறப்பதில்லை.. குறிப்பிட்ட ஒரே கடவுள் மட்டுமே உமது தெளிவுக்கும் மகிழ்வுக்கும் காரணகர்த்தா  என்கிற பிடிவாதமான ஒரு வகை நம்பிக்கை புகுந்து  உம்மைக் குழப்பத் துவங்குகிறது.. 

திருச்செந்தூர் முருகன் தான்  உம்மைக் காப்பாற்றிய கடவுள் என்கிற தீர்க்கமான நம்பிக்கைக்குள் சிறைப்பட்டு, தி.செந்தூர் சென்று ஒருவாரம் தங்கி இருந்து எல்லா நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றி விட்டுத் திரும்புகிறாய்.. 

ஆனால் உம்மை முழுதுமாகக் காப்பாற்றியது நீ அனுமானித்தது போன்று  திருசெந்தூர் முருகன்  அல்ல.., நீ குடி இருக்கிற தெருவுக்கு 2 தெருக்கள் தள்ளி  வீற்றிருக்கும்  'காமராஜ் நகர் சுப்பிரமணியர் கோவில் முருகன்' என்கிற உண்மையை எவர் சொல்லி உமக்குப் புரிய வைப்பது?.. 

அடுத்த நாள் தி.செந்தூர் மொட்டைத் தலையோடு நீ அந்தக் கோவிலைக் கடக்கையில், அந்த சுப்பிரமணியரை ஏறெடுத்தும் பார்க்காமல் சென்றது கண்டு கடுப்பாகி, ஒரு ஜல்லிக் கல் எடுத்து உமது மொட்டை மண்டையில் அடித்து கிஞ்சிற்று ரத்தம் கசிய வைத்தார் முருகன்.. 

நீ, உன்னைக் கடந்து சென்ற சுகுமாரை சந்தேகித்து, அவனோடு சண்டையிட்டு பிரச்சினை செய்தாய்.. 
இப்படித்தான், எல்லாவற்றையும் தவறுதலாகவே புரிந்து கொண்டு நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.. 

சுகுமார் நான்கு தடியன்களை அழைத்துவந்து உம்மை பேதி கிளப்பி, மறுபடி பிரச்சினைகள் உருவாக்கி ... உம்முடைய அடுத்த பிரார்த்தனை களத்துக்கு ஏற்பாடு செய்து விட்டான். 

இந்தமுறையாவது காமராஜ் நகர் சுப்ரமணியரை நீ அடையாளம் காண்பாயாக.. யார் கண்டது, அவர் காண்டாகி இந்த முறை உன்னைக் காப்பாற்றுகிற பொறுப்பை அந்தப் பழனி தண்டாயுதபாணி இடத்தில் ஒப்படைக்கிறாரோ என்னவோ எவர் கண்டது.. ?

Wednesday, October 21, 2015

தேய்மானம்..

சுற்றிலுமாக 
ஆச்சர்யங்கள் 
விரிந்து பறந்து 
கிடக்க.. 

விரல் வைத்து வைத்து 
தேய்ந்தது என் மூக்கு.. 

பிளந்து பிளந்து 
மூட மறந்த வாய்... 
அகல விழித்து 
இமைகள் இழந்த 
கண்கள்.. 

எனது அவயவச் 
சிதைவுகள் 
என்னை 
ஆச்சர்யமூட்டும் 
வஸ்துக்களுக்குப் 
பொருட்டன்று..!

இன்னும் இன்னும் 
நான் வியந்து விரியவும் 
வெடித்துச் சிதறவுமே 
அதன் செயற்பாடுகள் 
அனைத்தும்...

நான் மரணித்த 
பிறகும் கூட 
எனது ஆன்மாவிற்கு 
சொர்க்கத்தை 
அறிமுகம் செய்து 
அலட்டிக் கொண்டன 
எம்மைப் 
புடை சூழ்ந்த 
ஆச்சர்ய வெறி 
பிடித்த சூழல்கள்.. !!

Tuesday, October 20, 2015

சில நேரங்களில்.. [ ஒருபக்கக் கதை.. ]

கள்ளக் காதலன் மீதான அபரிமித காதலால் தனது கணவனையே கூலிப் படை வைத்துத் தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டுகிறாள் முன்னாள் தர்மபத்தினி.. 

வீட்டிற்கு மின்விசிறி மாட்ட வந்த கதிரை வேண்டா வெறுப்போடு தான் வரவேற்றாள் சுபா.. 
அலுமினியம் லேடரில் நின்ற வண்ணம் ஸ்பேனர் இண்டிக்கேட்டர் இன்சுலேட்டட்  டேப் என்று ஒரு சாமானிய எலெக்ட்ரீஷியன் வைத்திருக்க வேண்டிய சகல சாமான்களையும் சுபாவிடம் கேட்டுக் கேட்டு வாங்கவே செமக் கடுப்பாகி ' நீ எல்லாம் எதுக்குய்யா இந்த வேலை செய்ய வர்றே?' என்று கேட்டே விட்டாள் அவள்.. 

ஆனால் கதிரிடம் யாவும் இருந்தனவே எனிலும், சுபாவின் மெல்லிய விரல்களை ஸ்பரிசிக்க மறுபடி மறுபடி ஆர்வம் பிறக்கவே, ஒவ்வொன்றையும் கிஞ்சிற்றும் கூச்சநாச்சமின்றி கேட்டுக் கேட்டு வாங்கினான் .. 

பிற்பாடு அங்கீகரிக்கப்  பட்ட கள்ளக் காதலன் ஆகிவிட்ட ஒரு கட்டத்தில் சுபாவிடம் இதனை  அவன் விளித்த போது , "செம ஆள்டா நீ" என்று அவனது மீசை முடியை பற்களால் பிடித்திழுத்தாள்.. 
"ஐயோ" என்று அவன் பதறிய போது , அவனது நிக்கொட்டீன் மணம் கமழ்ந்த உதடுகளுக்கு விழுந்தன கடிகள்.. 

யானை தன் தலையில் மண் வாரி இறைத்துக் கொண்ட கதை மாதிரி, குணசேகர் தான்  கதிரை வீட்டிற்கு மின்விசிறி மாட்ட அனுப்பி வைத்தான்.. அவன் பணிபுரிகிற பிரபல அலுவலகத்தின் ஆஸ்த்தான மின்சார நிபுணன் கதிர்  என்கிற வகையிலே .. 

கதிருக்கும் 'குணாவுக்கு ஆப்பு வைக்க வேண்டும்' என்கிற எண்ணங்கள் எல்லாம் எதுவுமில்லை.. மிக யதார்த்தமாக எல்லா விபரீதங்களும் செவ்வனே நடந்தேறின.. 

மின்விசிறி மாட்ட என்று துவங்கி, கிரைண்டர் சுற்றவில்லை, மிக்ஸி ஸ்லோ ஸ்பீடில் ஏதோ சத்தம் வருகிறது, வாஷிங் மெஷினில் காசு மாட்டிக் கொண்டது, ரெப்ரிஜ்ஜ ரேட்டரில் கூலிங் ஆவதில் தகராறு என்று குணசேகரனின் வீட்டு  உபகரணங்கள் அனைத்தும் அவனது மனைவியின் கள்ளக் காதலுக்கு  உறுதுணையாய் நின்று செயல்பட்டன.. 

ஆனால் அந்த உபகரணங்கள் எவ்வித உபத்திரவங்களையும் செய்யவில்லை, அப்படி அவைகளை நடிக்க செய்த சுபாவின் கைங்கர்யம் அந்த அப்பாவி குணாவுக்கு எங்கே விளங்கப் போகிறது?

சற்றும் எதிர்பாரா தருவாயில் குணா கொஞ்சம் எர்லியராக முந்தாநாள் சாயங்காலம் வந்துவிட்டான்.. வரும்போதே 'சுபா.. இன்னைக்கு ஹெட் ஏக் ன்னு  பெர்மிஷன் போட்டுட்டு வந்துட்டேன்' என்றவாறே கேட்டைத் திறந்து வந்தான்.. 

கதிரின் பைக்கும் செருப்பும் இருப்பது கண்டான்.. உள்ளே கதிர் பனியனில் இருப்பது  கண்டு சற்றே குழம்பினான்.. 

'வாஷிங் மெஷின் டெஸ்ட் பண்றப்போ தண்ணி தெறிச்சு ஷேர்ட் ஃபுள்ளா வெட்  ஆயிடிச்சு.. அதனால வெளிய காயுது' என்று சுபா சூழலை தெய்வீகமாக மாற்றினாள் .. 

ஹோ.. ஐ .. ஸீ . என்னோட சட்டை ஏதாவது ஒன்றை  எடுத்துக் கொடேன் "

"அதானே...!எனக்குக் கூட தோணலை"  என்று ஒரு நமட்டுச் சிரிப்போடு கதிருக்கு தனது கணவனின் சட்டை ஒன்றை எடுத்துக் கொடுத்தாள் .. அப்புறம் அலுவல் பணி நிமித்தம் குணா மதுரை செல்லவேண்டி வரவே, பரஸ்பரம் கதிர்-சுபாவுக்கு அந்தத் தருணங்கள் தேனிலூறிக் கிடந்தன.. 

சுபா தான் சொன்னாள் .. " இந்த மாதிரி எப்பவும் டென்ஷன் இல்லாம விளையாடணும் .. அதான் மனசுக்கு உடலுக்கு நல்லது.. புருஷன் வந்திடுவானோ .. வானோ ன்னு பயந்துட்டே இருந்தோம்னா நெர்வ்ஸ் வீக்கா போயிடும்.. மனசும் கெட்டுப் போயிடும்.. அதனால"

'அதனால?' 

'எதாச்சும் பண்ணி நீயே கதைய ஃபினிஷ் பண்ணிடே கதிர்' 

ஐயோ சுபா.. நான் எப்டி..?'

'ஓகே.. நீ ரிஸ்க் எடுக்க வேணாம். நான் பார்த்துக்கறேன்.. எங்க ஊருப் பசங்க 2 பேரு  எனக்குப் பழக்கம்.. எதைக் கேட்டாலும் செய்வாங்க.. நாளைக்கே கூட மதுரை போக சொல்லிடறேன்'

ஐயோ சுபா?'

நீ ஏண்டா இப்டி பதர்றே?.. நீயே காட்டிக் கொடுத்துடுவே போல.. ஒனக்காகத் தாண்டா எரும ! "ஒங்க ஆப்பீஸ்ல ஆப்பீசரா இருக்கறாரே , குணசேகர் ன்னு ஒருத்தர்.. ?'
"ஆமா"
"நானும் பாப்பாவும் 4 நாளுக்கு முன்னாடி கடவீதி போயிட்டு நடந்து வர்ற போது  டிராப் பண்ணவா ன்னு கேட்டாரு.. நாந்தான் பதறிட்டேன் .. வேண்டாம்னு சொல்லிட்டேன்.. "
என்றாள் கதிரின் மனைவி லலிதா .. 
"அப்புறம்?"
"அப்புறம் அவரே சொன்னாரு.. 'நீங்க எங்க ஆஃபீஸ் எலெக்ட்ரிஷியன் கதிரோட  ஒய்ஃப் தானே?.. என்ன சிஸ்டர் என்னைத் தெரியலையா.. ஒருவாட்டி நீங்க கதிரோட எங்க  ஆபீஸ்க்கு பாப்பாவ தூக்கிட்டு வந்திங்களே.. "
"நான் கவனிக்கலை ஸார் ..'
இட் இஸ் ஓகே.. எனக்கு தெரிஞ்சுது.. அதனால யதார்த்தமா கேட்டேன்.. தவறா நினைக்காதீங்க.. 
"சொல்லிட்டு போயிட்டாரா?"
"அவர் போகத்தான் பார்த்தாரு. நான் தான், அவர்கிட்ட ஸாரி கேட்டுக்கிட்டு பாப்பாவ நடுவில உட்கார வச்சுட்டு பின்னாடி நான் உட்கார்ந்து வந்தேன்.. நல்ல மனுஷன்"


மதுரை சென்று சுபா ஏவி விட்ட கூலிகளை தடுத்து நிறுத்தி குணாவைக் காப்பாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பு வந்து சேர்ந்தது கள்ளக் காதலன் கதிருக்கு.. 

தன்  மனைவி மாதிரி நல்லவளாக சுபா இல்லையே என்கிற கவலையும், சுபாவின் கணவன் குணா மாதிரி நானில்லையே என்கிற கவலையும் முதல் முறையாக ஒன்று சேர்ந்து அவஸ்தைப் படுத்தின கதிரை..!!

Friday, October 9, 2015

காலத் தாய்..

நம்மை ஈன்றவள் 
நடுவிலேயே நம்மை 
விட்டுப் போய் விடுகிறாள்.. 

நிறைவு வரைக்குமாக
நம்மோடு வந்து 
நம்மை அரவணைத்துக் 
கொண்டிருக்கிற 
காலத் தாய்.. 

நம் தாயோடு 
தாயாக நாம் 
பிறந்த நாள்தொட்டு 
நம்மோடு பயணிக்கிற 
காலம் .. 
-நம் தாய் 
சென்ற பிற்பாடும் 
தாயாய் நின்று 
தாலாட்டுப் பாடுகிறது. !

நாம் சென்றாலும் 
காலம் நம்மை 
வழியனுப்பி வைத்தவாறே 
நின்று கொண்டிருக்கிறது.. 

ஆம், 
அவளுக்கு இன்னும் 
எத்தனையோ  தாலாட்டுக்கள் 
பாட வேண்டியுள்ளது.. !

Tuesday, October 6, 2015

"குற்றம் கடிதல்" Tamil movie review..

ம்பவ நிகழ்வுகளும் அதனைக் கையாண்ட நடிப்புக் கலைஞர்களும், அவர்களை எல்லாம் மிக இயல்பாக நடிக்கச் செய்த டைரக்டர் பிரம்மாவும் அனைத்துப் போற்றுதலுக்கும் உரியவராவர்.. இத்தனை நேர்த்தியும் இயல்பும் முன்னர் வந்த எந்தத் தமிழ் படங்களிலும் இல்லவே இல்லை என்று சொல்லிவிடத் தோன்றுகிறது.. மேற்கொண்டும் இதே மாதிரி பொக்கிஷங்கள் தமிழ் திரையில் தொடரும் என்று நம்புகிறோம்.. இந்த சூட்சுமங்களும் யதார்த்தங்களும் தமிழ் ரசிகர்களால்  வரவேற்கப் பட வேண்டும்.. மற்றோரிடத்தும் இதன் மேன்மையை ப் பகிர்தல் அவசியம்.. தமிழ் சினிமாவின் ஆரோக்கியம் கண்டு மற்ற நோய்வாய்ப் பட்ட அண்டை மாநில சினிமா உலகங்களும் பூரண குணமடைந்து விடக்கூடும்.. 
ஒவ்வொருவரையும் இந்தப் படத்தில் பாராட்டியாக வேண்டும் என்றாலும், குறிப்பாக டைரக்டர் பிரம்மாவையும் கதாநாயகியாக வரும் ராதிகா பிரசிண்டாவையும் அபரிமிதம் பாராட்டியாக வேண்டும்.. 
இந்த டைரக்டர் திரையுலக  பிரம்மா தான்.. சந்தேகமில்லை.. 

ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும், பின்னணி இசையும், எடிட்டிங்கும், திரைக் கதையும்... 
அனைத்துமே அக்மார்க் தரத்தில் ஒளிர்கின்றன.. 
ஒட்டு மொத்த மெச்சூரிட்டியின் அடையாளம் தான் இந்தக் "குற்றம் கடிதல்"

Image result for kutram kadithal directorImage result for kutram kadithal directorImage result for kutram kadithal director

Sunday, October 4, 2015

எழுதுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள்..

வள்ளுவனுக்கோ பாரதிக்கோ எந்த "பிளாகு"களும் இல்லை, ஃபேஸ் புக்கும் இல்லை.. ஆனால் அவர்கள் எழுதிக் குவித்தவையோ சொல்லி மாளாது..

சொந்தமாக அவர்களது கைகளில் எழுதுகோல் இருந்திருக்குமா, இருந்திருந்தாலும் "இன்க்" இருந்திருக்குமா அதனையும் இரவல் வாங்கி எழுதிக் குவித்தனரா, நன்கு எழுதிக் கொண்டிருக்க இருக்க இரவல் கொடுத்தவர் ஓடி வந்து வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டனரா?...
Image result for WRITING
யாவும் கற்பனையாக சொல்கிறேன் எனிலும், இவை எல்லாம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்று ஆணித் தரமாக வாதங்கள் வைக்க முடியுமா?

வள்ளுவன் மனைவி வாசுகி கணவன் சொல் தட்டாதவள், கிணற்றில் வாளியில் ஜலத்தை இரைத்துக் கொண்டிருக்க இருக்க வள்ளுவன் வா என்று அழைத்ததும் அப்படியே விட்டுவிட்டு ஓடியதாகவும் அந்த வாளி ஜலம் அந்தரத்தில் அப்படியே நின்றதாகவும் வரலாறுண்டு..

மயிலாப்பூரில் பிறந்தாரா அல்லது இன்னபிற பிராந்தியமா என்பதிலும் இன்னும் குழப்ப விவாதங்கள் உண்டு..

இப்படி அனுமானங்கள் பலவற்றில் நான் மேற்சொன்ன விஷயங்களும் என்றேனும் ஒரு நாளில் நிகழ்ந்திருக்க வாய்ப்பற்றா போயிருக்கும்?..

அதனோடு ஒப்பிடுகையில் இன்றைய காலகட்டங்களை ஒப்பீடு செய்து பார்ப்பின், பிரம்மிப்பு புரண்டோடுகிறது..

ஓலைச் சுவடியிலே 1330 குரல்களை எழுதிய வள்ளுவனாகட்டும், அபரிமித கவிதைகளை சளைக்காமல் எழுதிக் குவித்த பாரதி ஆகட்டும்.. இவர்கள் போன்று அக்காலத்தில் பற்பலரும் இவ்விதமே தான் எழுதிக் குவித்தனர்.. 
Image result for WRITING
ஆனால் இன்று எழுதுவதற்கு உபகரணங்கள் பல்கிப் பெருகி விட்டன.. இன்னும் கணினி என்ற ஒன்று வந்த பிற்பாடு எழுதுகிற பேனா பென்ஸில் பேப்பர் போன்ற  உபகரணங்களும்  பின்தங்கி அனேக விரல்களும் கீ-போர்டையே  பின்னிப் பிசைகின்றன.. 

நாம் என்ன கருமாந்திரத்தை எழுதிக் குவித்தாலும் அது நமது கை எழுத்துப் போன்று கசமுசா வென்று இல்லாமல் தெளிவாக இருக்கிறது.. அதை அப்படியே பிரிண்டரில் அச்சிடுகிறோம்.. அசட்டு விஷயங்களும் அனர்த்த விஷயங்களும் கூட சும்மா தேஜஸ் ததும்பி வழிந்து.. பார்க்கிற நபர்களை கொள்ளை இட்டு விடுகின்றன.. 

யார் வேண்டுமானாலும் எதனை வேண்டுமானாலும் எழுதுகிற சுதந்திரங்களும், அதற்கொரு 'கவர்ச்சி ததும்பும்' தலைப்பிட்டு கிரானைட் போட்ட மாதிரி முகப்பட்டை தயாரித்து 100 பக்கங்கள் நிரப்பி ரூ. 72 என்று விலை நிர்ணயித்து முதல்பதிப்பு மூன்றாம் பதிப்பு என்று நீள்கிற  வினோத அலங்கோலங்களும் மிக சுலபமாக நிகழ்ந்து "எழுத்தாளன்" கோதாவில் நின்று விடுவது சாத்தியமாகி விடுகிறது.. 

ஒரே பாராகிராப் எழுதி நிரப்ப முடியாதவர்கள் BLOG வைத்திருக்கிறார்கள்.. மற்ற அபத்தங்களை போஸ்ட் செய்வதற்கு என்றே பலரும் facebook இல் அக்கவுண்ட் ஓப்பன் செய்கிறார்கள்.. தங்களின் சிருஷ்டி என்று ஒரு துரும்பை வீசக் கூட கூச்சப் படுகிறார்கள்.. 

சிலர் தெனாவெட்டாக எதையேனும் எழுதி அதிகப் பிரசங்கம் செய்யவே பிளாகும் ஃபேஸ் புக்கும் திறக்கிறார்கள்.. 

இப்படி விஞ்ஞானம் வழங்கியுள்ள மிக அற்புதமான வெற்றிடங்களை எல்லாம், நமது அஞ்ஞானங்களால் நிரப்பி அதற்கு 'காலர்களை' வேறு தூக்கிக் கொள்கிறோம். 

நாம் வள்ளுவனோ பாரதியோ ஆகிவிட முடியாது.. 
ஆனால் ஓரளவுக்கு அறிவுப் பூர்வமாக ஓரளவுக்கு உணர்வுகளை வார்த்தைப் படுத்துகிற முயற்சியாக, ஓரளவுக்கு படிப்பவர்கள் ஏற்க முடியும் வகையிலே நிச்சயம்  எதையேனும் அவ்வப்போது எழுதிக் குவிக்க முடியும் என்று மிகவும்  நம்புகிறேன்.. 
நன்றி.. 

Wednesday, September 23, 2015

அம்மாக்களின் சுபாவங்கள்..

அங்கொன்றும் 
இங்கொன்றுமாய் 
பிஞ்சுப் பாதங்களின் 
ஒற்றை செருப்புக்கள் 
பாதை எங்கிலும் 
அனாமதேயாமாய்க் 
கிடக்கின்றன.. 

அம்மா மடியில் 
அயர்ந்து போய்  
அப்படியே நழுவி 
இருக்கக் கூடும்.. 
அல்லது 
தெரிந்தே கூட 
நழுவி .. 
சொல்லத் தெரியாமல் 
பார்த்துக் கொண்டே கூடப் 
போயிருக்கும்.. 

வீட்டிற்குப் போய் 
இறங்கும் போது தான் 
காலிலுள்ள ஒற்றை 
செருப்பை அம்மா 
கவனிப்பாள் .. 
'சனியனே.. இப்பத் 
தான் வாங்கிக் 
கொடுத்தோம்.. அதுக்குள்ள 
தொலச்சுட்டியே'
என்று திட்டுவதை 
எதற்கென்று புரியாமலே 
அழும்.. 

மறுபடி மற்றொரு ஜோடி 
செருப்பு.. 

குழந்தையே 
தொலைந்து போய்க் 
கிடைத்தாலும் 
'சனியனே எங்க 
போயித் தொலைஞ்சே?'
என்று திட்டிவிட்டு 
பிறகு அதற்கும்  
சேர்ந்தாற்போன்று 
கொஞ்சுவது தான் 
அம்மாக்களின் சுபாவங்கள்.. !!
Image result for mother and child

Tuesday, September 22, 2015

ர "களைகள்"....

ராவணனை 
ஹிட்லரை 
கோட்சேவை 
நல்லவர்கள் என்று 
சூளுரைக்கிற 
கெட்டவர்கள் 
இருக்கத் தான் 
இருக்கிறார்கள்.. 

ஆனால் 
காந்தியைக் கூட 
அவதூறு சொல்கிற 
ஹிம்ஸாவாதிகள் 
குறித்துத் தான் 
நமது கவலைகள் 
யாவும்.. 

பிச்சை 
எடுப்பதை 
ஊக்குவிக்கத் 
தெரிந்தவர்களுக்கு 
தர்மம் குறித்த 
பிரக்ஞை 
எங்கனம் இருக்கப்
போகிறது ?

நீர்நிலையின் 
அமைதியை 
சலனப் படுத்தி 
சிற்றலை நிகழ்த்தும் 
ஆவல் தென்றலுக்குக்  
கூட வந்து விடுகிறது..!

பிடுங்கி வீசவேண்டிய 
களைகள் 
வழிநெடுக வாழ்வுநெடுக 
வீற்றிருந்தாலும் 
நல்லவைகளை 
அடையாளப் படுத்த 
அவசியமாகி விடுகிற 
வினோதம் 
சுவாரஸ்யமே..!!

Sunday, September 20, 2015

வாஞ்சை..

சிக்கு நான் 
பிஸ்கட் சாப்பிட்டுக் 
கொண்டிருந்த போது.. 
வாஞ்சையோடு 
வாலாட்டிக் கொண்டு 
வந்து நிற்கிறது
சென்ற மாதம் என்னைக் 
கடித்து .... தொப்புளைச் 
சுற்றி ஊசிகள் போடச் 
செய்த அந்த 
காவி வண்ணத் தெருநாய்.. 

பற்பல பணி நிமித்தங்கள் 
நடுவே 
நாய்க்கடி மருத்துவத்தையும் 
கவனித்தாகவேண்டிய 
அவஸ்தைகளும் சூழ்ந்து 
எமது சூழலை 
இம்ஸிக்கச் செய்த 
நாயை .. 
தக்க தருணம் பார்த்து 
கழுத்தறுக்க என் 
மனிதபுத்தி ஆயத்தமாயிற்று.. 

வசமாக இன்று 
மாட்டிக் கொண்டதாக 
பீறிட்டுச் சிலிர்த்தது மனது.. 

'கடிச்சுட்டு வெக்கமில்லாம 
பிஸ்கட்டுக்கு வந்து வேற 
வாலாட்டுற நீ?' 
என்று முனகின உதடுகள்.. 

சப்தமில்லாமல் 
பின்புறக் கதவைத் 
திறந்து .. கைக்குச் சிக்கிய 
இரும்புத் தடி ஒன்றை  
எடுத்துக் கொண்டு 
நாய் நின்று கொண்டிருந்த 
முன்வாசலுக்கு வந்தேன்.. 

நான் பிஸ்கட் எடுக்க 
உள்ளே சென்றிருப்பதாகக் 
கருதி அது இன்னும் 
வாலை ஆட்டியவண்ணமே 
நின்றிருந்ததைப் பார்க்கையில் 

-உடனடியாக 
இரும்புத் தடியை கீழே போட்டுவிட்டு 
கையிலிருந்த 4 பிஸ்கட்டுகளை 
மட்டுமே போட முடிந்தது.. 

என்னைக் கடித்த வாய்
பிஸ்கட்டில் லயித்திருக்க 
அதன் நெற்றியை 
நீவுவதில் 
எனது வாஞ்சையும்  
நாயைப் போன்றே 
சிறந்து விளங்கிற்று.. !!

Friday, September 18, 2015

ஒரு தடவை செத்துப் போனப்ப.....

சுவாரஸ்யமான நாவலின் 
கடைசிப் பக்கம் 
கிழிஞ்சு  போயிருப்பது போல.. 

தரம் விலை 
எல்லாம் உயர்ந்த 
சொக்காய் ஒன்றுக்கு 
நான்காம் வரிசை 
பட்டனுக்கான காஜா 
எடுக்க மறந்திருப்பது போல.. 

டுபாக்கூர் என்று 
நினைத்திருந்த ஒரு கம்பெனி 
திடீரென்று 
'இலவச சிங்கப்பூர் பயண'
அறிவிப்பில் மூர்ச்சையாக்கி 
கிறங்கி மயங்கி.. 
-- பயண நாளில் 
துரிதகதியில்
பயண ஏற்பாடு நிகழ்ந்து 
கொண்டிருக்கக் கொண்டிருக்க.. 
அப்பனப் பெத்த அப்பத்தா 
பொசுக்குன்னு மண்டையப் 
போட்டது போல.. 

இப்டியே நெகட்டீவ் 
அடையாளங்களை அடுக்கிக்கிட்டே 
போயி.. 
செத்து மின்மயானம் 
தூக்கிக்கிட்டுப் போனா 
பவர் கட்டு.. ஜெனரேட்டர் ரிப்பேர்.. 

சரி, பொதச்சுடுவோம் னுட்டு 
ஏற்பாடாகி 
குழியத் தோண்டி.. 
'தொபுக்கடீர்' னு 
என்னைப் போட்டுட்டாங்களாம்.. 
நல்லவேளை, செத்துக் 
கெடந்ததால 
வலியோ வீக்கமோ இல்லாமத் 
தப்பிச்சுட்டதா  
பேசிக்கிட்டாங்களாம்...!!

Friday, September 4, 2015

தனி ஒருவன் ------------[சினிமா விமரிசனம்]

இடை வேளை  வரையிலுமாக அம்புலி மாமா கதை போன்று நகர்கிற கதை, இ.வே க்குப் பிற்பாடு சுஜாதா ஸ்டோரி மாதிரி மிக நயமாக நகர்கிறது.. 

சமீபத்திய டிரெண்டாக ஜெயம் ரவி, இந்த நாட்டைத்  திருத்துவதான பாத்திரங்களில் அதீத அக்கறை காண்பிப்பது சற்றே அமெச்சூராகத் தென்பட்டாலும் இந்த ஒரு கான்ஷியஸ் வெல்கம் செய்ய உகந்ததாகவே தோன்றுகிறது..
Image result for thani oruvan stills
வில்லனாக அரவிந்த்சாமி ... அதற்குரிய முகமோ, அவருக்கான தந்தையோ சற்றும் சம்பந்தமில்லாமற் தெரிந்தாலும், இப்படியான ஒரு மாறுதல் அவருடைய வெர்ஸாடிலிட்டி யைப் பின்னிப் பெடலெடுத்துக் காண்பிக்கிறது.. 

நயன்தாராவின் அந்த வீச்சான நடிப்பையும் புகழ்ந்தாக வேண்டும்.. இந்தக் கதையின் ஆழத்தை நன்கு அப்சார்ப் செய்து, அதற்குரிய விதத்தில் தன்னுடைய பாத்திரத்தை மெருகேற்றும் விதமாக செய்திருக்கிற அவருடைய பாங்கு, அற்புதம்.. அந்த ரெடிமேட் ஸ்மைல் மற்றொரு ப்ளஸ்.. 

நூறு சதவிகித சினிமா தனம் ஆரம்பம் முதல் நிறைவு வரைக்குமாக அப்பட்டமாகத் தெரிந்தாலும் அவ்வப்போது இந்த சமுதாயத்தின் மீதான பிரக்ஞைகளும், அதில் விழைகிற தீமைகளை செவ்வனே களைந்தாக வேண்டுமென்கிற அவசரங்களும் திரைக் கதையை இம்சை இல்லாமல் இழுத்துச் செல்கிறது.. 

இசை, துஷ்ப்ரயோகம் செய்யப் படாமல் அவ்வப்போது தேவையான சமயங்களில் மாத்திரம் வந்து நமது காதுகளை இம்சிக்காமல், மொத்தத்தில் சவுண்டு பொல்யூஷன் இல்லாமல் இருப்பது மிக ஆறுதல்.. அந்த ஹிப்ஹாப் இசை அமைப்பாளருக்கு ஒரு பாராட்டு.. அந்த "கண்ணாளனே " மெலடி கூட கேட்க இதம்.. பிக்ச்சரைசெஷன் செம... 

ஒரு ஜெனுயினான பிராண்டட் மொபைல் போன்று இந்தப் படம், அதீத டெக்னிக்கல்  ஸ்பெஸிஃபிக்கேஷன் நிரம்பி வழிகிறது.. 

உடன் வருகிற அந்த சிநேகிதப் பட்டாளங்களும் இந்தக் கதைக்கு ஈடு கொடுத்து  அரும்பாடு பட்டுக் கலக்கி இருக்கிறார்கள்.. 
Image result for thani oruvan stills
இன்னும் ஏதாவது படத்தின் ஹைலைட் விட்டுப் போயிருந்தால், அது என்னுடைய  கவனமின்மையே தவிர வேறென்ன?.. 

படம், மிக கவனமாகவும், இண்டெலிஜென்ஸ் கன்டென்ட் ஆகவும் பிரம்மாண்டமாயும் பிரம்மிப்பாயும் உள்ளது.. 

மன்னிக்க முடியாத ஒரே விஷயம் சற்று வன்முறையின் தூக்கல்.. 
அதுவும் அநேகமாக ஆந்திராவுக்குத் தேவையான மிளகாய் என்று நினைக்கிறேன்.. ஆனால், தமிழர்களுக்கு சற்று அதிக "காரம்" தான்.. 

இவ்ளோ மெனெக்கெட்டு சொல்லி,  படத்தின் டைரக்டரை மறந்தது  எனக்கே  ஆச்சர்யம்.. யெஸ் .. ஜெயம் ரவியின் சகோதரர்  ராஜா முன்னர். மோகன் ராஜா  இப்பொழுது.. ஆஸம்  பாஸ் .. இதே மாதிரி இனி கன்டினியூ  பண்ணுங்க.. 

Tuesday, August 25, 2015

ஜாலியோ ஜிம்கானா..

70th Anniversary of La Tomatina

க்காளி மாதிரி தங்கமும் தூக்கி வாரி அடித்து விளையாட நேர்ந்தால்?
வாவ்.. கற்பனையே கம்பீரமாக இருக்கோல்லியோன்னோ ?
அதுசரி, தங்கமும் இந்த மாதிரி வந்துச்சுன்னா அப்றமா வேற எதைத் தான் வேல்யூ உள்ளதா வச்சுக்கறதாம் ??
இப்ப குப்பையா கெடக்கற ஜல்லிக் கல்லு பத்தாக்குறையா மாறி, கிராம் 3000 ன்னு மாறிடப் போறதா யோசிங்கோ.. 
காதுல கையில கழுத்துல நெத்தியில இடுப்புல ன்னு எங்க பார்த்தாலும் டிஸைன் டிஸைனா கருங்கல் ஜல்லி பளீர்னு மின்னாமப் போயிடுமா என்னா ?

"குமரன்  ஜல்லி ஸ்டோர்ஸ்".. "ஜாய் ஆலுக்காஸ் ஜல்லி மாளிகை"  "கல்யாண் ஜல்லீஸ்" 

'கல் டிசைன் நல்லா இருக்கா?'
'சூப்பர்.. இதே மாதிரி நானும் வெங்கச்சான் கல்லுல செஞ்சு  போடலாம்னு இருக்கேன்.. '
'ஐயோ அது இன்னும் ரேட் கூட வருமே டி? 
'வரட்டும்.. இந்தக் கஸ்மாலம் செஞ்சு போடட்டும்.. பக்கத்து வீட்டு பரமேஷ் , எதுத்தாப்புல இருக்கற விக்கி இவுங்க எல்லாம் பித்தளைல பைக் வாங்கி ஓட்டறாங்க. இந்த தரித்திரம் இன்னும் தங்க சைக்கிளையே வச்சுக்கிட்டு நம்ம  மானத்த வாங்குது.. போதாக் குறைக்கு ஹெட் லைட்டை வைரத்துல செஞ்சு போட்டிருக்கு.. எவ்வளவோ சொன்னேன், அதையாச்சும் கண்ணாடியில மாட்டுங்கன்னு.. சொன்னா கேட்டா தானே?'

'எங்க ஆத்துகாரர் இரும்புல எதாச்சும் செஞ்சுக்கறையா கண்ணு ன்னு ஆசையா கேக்கறாரு.. '

'ஐயோ ஐயோ.. நீ கொடுத்து வச்சவா .. இந்த சனியனைக் கட்டிக்கிட்டு இன்னும்  நான் பிளாட்டினத் தட்டு வாங்கி தான் பிச்சை எடுக்கணும்.. '

ஹிஹி.. 

Monday, August 17, 2015

ரகசிய அலறல்கள்..

றியாமையின் சுவடுகள் அனைவரின் வசமும் பத்திரமாக நிறைவு வரைக்குமாக பயணம் செய்யும் அவர்களோடு...!
 பகுத்தறிவுகளும் மன முதிர்ச்சிகளும் ஓரிழையில் நுழைந்து விடுமெனிலும் அந்த அறியாமையின் மழலைமை நம்மில் தவழ்ந்த வண்ணமே ஒருவகை சுவாரஸ்யம் நிகழ்த்திக் கொண்டே தான் இருக்கக் கூடும்.. !

சில விஷயங்கள் இன்னும்  உருவமாக, இன்னபிறவாக நம்மோடு இருக்கும்.. சில விஷயங்களோ, பொருள் தன்மை இழந்து இதயத்துள் நினைவாக வியாபித்து வீற்றிருக்கக் கூடும்..

என்னிடம் பொருள் சார்ந்து நிறைய அறியாமைகள் குவிந்து கிடக்கின்றன.. ஆம், எமது இளம்பிராயம் தொட்டே, எதனையேனும் கவிதை என்றும், கதை என்றும், கட்டுரை என்றும் நான் மெனக்கெட்டுப் புனைந்தவை எல்லாம் .. அன்றைய எமது "அறியாமை" என்கிற மலரும் நினைவுகளாகத் திரண்டு கிடக்கின்றன இன்று..

இன்றைக்கு முளைத்திருக்கிற சிறு அறிவொன்று அவைகளை ரகசியமாக கேலி செய்து ஒரு நமட்டுச் சிரிப்பை உதடுகளில் உதிர்க்கச் செய்கின்றன..

ஆனால் மிக வியப்பாக அந்தப் பிராயங்களிலுமே கூட இன்றைய ஆழ்ந்த சிந்தனைகளுக்கு ஒப்பாக சிலவற்றை சிந்தித்து நான் எழுதி இருப்பது என்னைப் பொருத்தமட்டில்  உலகின் ஏழு அதிசயங்களோடு இணையப் பெறுகிற தகுதி கொண்டவையே..

அன்றைக்கு இருந்த என் அறிவு கூட இத்தனை நம்பிக்கைகளோடும்  அகந்தைகளோடும் இருந்ததில்லை என்று இன்று அனுமானிக்க முடிகிறது.. கனமான ஒன்றைக் கூட மிக யதார்த்தமாக , போகிற போக்கில் சொல்ல முடிந்திருக்கிறது என்னால்... 
ஆனால், இன்றோ எதையேனும் சற்றே ஆழ்ந்து சொல்லவோ எழுதவோ  நேர்ந்து விட்டால் போதும்.. என்னவோ, மகாகவி எனக்கும்  கீழே நின்றாக வேண்டும் என்று கூக்குரலிடுகிறது எமது போலி கவுரவம்.. 

இன்றைக்கென்னவோ நான் மிகவும் அங்கீகரிக்கப் பட்ட பிரபல எழுத்தாளனாக  உலா வருவது போன்ற மாயையை எனக்கு நானே ஏற்படுத்திக் கொண்டு விட்டேனோ என்று தோன்றுகிறது.. 

'அன்னைக்கு ஒரு வார்த்தை இன்னைக்கு வேற ஒரு வார்த்தை.. ' என்கிற பாகுபாடுகள் எனக்கு உடன்பாடில்லாதது .. ஆகவே அன்று எவ்வண்ணம்  கனவுகள் குவித்த வண்ணம் எதையேனும் சிறுபிள்ளைத் தனமாக கற்பிதம் செய்து கொண்டு திரிந்தேனோ, அதே மனநிலை, சூழ்நிலை கொண்டு தான் இன்றளவும் எனது 'எழுத்தாளன் கனவு' மிளிர்ந்த வண்ணமே உள்ளது.. 

ஆனால் இளமை அன்று எனக்குள் ஒரு எதிர்கால வேட்கையை மிக அடர்த்தியாக செருகி வைத்திருந்தது.... ஆனால், கால நழுவலில் யாவும் நீர்த்து கானலாகி ... இன்றைய அடர்த்தியான அறிவு, 'ஏதோ இந்த அளவுக்கு ஆச்சே!' என்கிற சமாதான சமாதியை ஏற்படுத்தி உயிரோடு புதையுண்டு போகிற ஆற்றல்களும் பொறுமைகளும் பெற்றிருப்பது  பரம ஆச்சர்யம் நிகழ்த்துபவை.. !!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...