Monday, November 23, 2015

முரண் மூட்டை..

குடம் குடமாகக் 
கொட்டப் படுகிறது 
பால்...!
பால் கரவா 
கல் நந்திக்கு...!!

குடம் குடமாய் 
பால் தரும் 
பசுவுக்கோ .. 
சரிவரக் குளித்து 
விடுவது கூட இல்லை.. !

இருந்த சில்லறைகளை 
மொத்தமாக 
கோவில் உண்டியலில் 
திணித்து விட்டு.. 

ஒரு ரூபாய் 
சில்லறையை 
இறங்கும் போது 
தருவதாக சொல்கிற 
நடத்துனரை 
களவாணி என்றே 
அனுமானிக்கிறோம்.. !

சவாரிக்கு முந்துகிற 
ஆட்டோ ஓட்டுனர்கள் 
போன்றே அர்ச்சகர்கள்.. 
அர்ச்சனை கிராக்கிக்கு 
தட்டை ஏந்திக் கொண்டு  
அலை பாய்கிறார்கள்.. !

மதிய அன்ன தானத்திற்கு  
சரியாக 100 டோக்கன்கள்.. 
அந்த நூறில் அரைப் பசியோடும் 
பசியே அற்றும் 
பலரும் இருக்கக் கூடும்.. 
ஆனால் குடலைப் பிடுங்கும் 
பசியோடு வருகிற 
101 வது நபருக்கு 
என்ன போராடியும் 
டோக்கனில்லை.. !

ஆன்மிகம் தழைத்தோங்கும் 
இந்தியக் கோவில்களில் 
பெண்களை கவனிக்கிற 
ஆண்களின் கூட்டமும் 
ஆண்களை கவனிக்கிற 
 பெண்களின்  கூட்டமும் 
இல்லை என்றால், 
கோவில் குடமுழக்குகள் 
கூட - ஒரு 
பிரபல திரைப் படத்தின் 
கடைசி நாள் கூட்டம்  
போன்று தான் இருக்கக் கூடும்.. !!

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...