Wednesday, April 27, 2016

கோகனட் .. ..

தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள்  தேங்காயில் உள்ளதாக என்றோ உணவு ஆய்வறிக்கையில்  படித்ததாக ஞாபகம்.. 
பால் வற்றிய தாய்மார்களும் அரைகுறையாக மட்டுமே சுரக்கிற தாய்மார்களும் தங்களின் குழந்தைகளுக்கு  தேங்காய்ப் பாலைப் புகட்டலாம் என்றே ஆகிறது.. 

 கோவில் சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு வருகையில், வயிற்றைக் கிள்ளுகிற பசிக்கு .. பொரிகடலை சாப்பிட்ட வண்ணம் நடுவிலே சில்லுத் தேங்காயையும் திணிக்கிற போது வருகிற ஒரு பிரம்மாத ருசி .. எதுவுமில்லை அதற்கீடு.. !

மணக்க மணக்க என்ன தான் இட்லிக்கு சாம்பார் வைத்தாலும், ஒரு தேங்கா சட்னி உடனிழைகையில் வருகிற ஒருவித ஒய்யார ருச்சி தனித்துவம் பொருந்தியது... அதுபோக மிஞ்சியுள்ள சோற்றுக்கு தேங்காய் துவையல் சேர்த்துப் பிசைந்து உண்கையில் அதொரு உன்னதம்.. 

தேங்காயில் தாளித்த சாதம், பனை வெல்லத்தில் தேங்காய் சுரவி, தேங்காய் பர்பி, தேங்கா பன் ..  என்று தேங்காயில் உண்டாகிற அனைத்துப் பதார்த்தங்களும் "பலே பலே" என்றிருக்க.. 
Image result for coconutImage result for coconut
வெள்ளிக்கிழமைகளில் திருப்பூரின் தெருக்கள் எங்கிலும் எவருக்கும் உபயோகமில்லாமல் நாறி நசுங்கிப் போய் கிடக்கின்றன தேங்காய்கள்.. அந்த அற்புதப் பருப்பு நிரம்பிய தேங்காய்களின் மீது கார் சக்கரங்களும் வேன் சக்கரங்களும் ஏறி ... நாய்களுக்குக் கூட உபயோகமற்றுக் கிடக்கின்றன அந்த  வெள்ளை  அமிர்தம்..  

தங்களின் தொழில் அபிவிருத்திக்கு .. இப்படி நடுரோட்டில் தேங்காய் உடைக்க வேண்டும் என்பது எந்த விதமான பகுத்தறிவு? ..
 செழித்து வெற்றி கண்ட தொழிலுக்கும் தேங்காய் உடைக்கப் படுகிறது.. தொய்வு கண்டு தோல்வி தழுவி நிற்கிற தொழிலுக்கும் .. அது சிறக்கப் பெற வேண்டும் என்று வேண்டி உடைக்கப் படுகிற தேங்காய்கள்.. 

சாமான்ய விலையில் கிடைக்கின்றன என்பதற்காக இத்தனை தேங்காய்கள்  உடைக்கப் பட வேண்டுமா  சாலைகளில்?.. ஈடுதேங்காய் போல ஈடுதங்கம்  போடச் சொன்னால் மக்கள் போடுவார்களா?

பிஞ்சுக் காதுகளில் குழந்தைகளுக்கு மாட்டி விட்டால் கூட பாதுகாப்பில்லாத தங்கம், ஆசை ஆசையாகக் கழுத்திலே மாட்டி ஒரு சின்ன மார்னிங் வாக் போவதற்கு வக்கில்லாத ஒரு தங்கம்.. வீட்டில் நிம்மதியாக உட்கார்ந்து இருப்பவர்கள் கழுத்தை அறுத்து உயிரைக் குடித்து விடுகிற தங்கம்... 
பீரோவில் வைத்துப் பூட்டி விட்டு எங்காவது அக்கம் பக்கம் போய் விட்டு வருவதற்குள்ளாக பீரோ உடைபட்டுக் களவு போய் விடுகிற தங்கம்..  அதற்கு பயந்து வங்கியில் வைத்தாலோ, திருப்ப முடியாமல் ஏலம் போய் விடுகிற தங்கம்.. 
எதற்கடா [ டீ ]  இந்தத் தங்கப் பைத்தியம்?.. அதற்குப் பதிலாக தேங்காயின் மீது பயித்தியம் ஆகி, நல்லதாக ஒரு சட்னி அரைத்துப் பழகுங்கள் மக்களே...!

உங்களை எல்லாம் விட அதியற்புதமாக  பற்பல கோடிகள் லாபம் ஈட்டுகிற தொழில் கொண்ட அதிபர்கள், சிகரம் தொடுகிற மேதைகள் .. சிங்கப்பூரிலும் ஜப்பானிலும் .. சுவிஸ் ஸிலும் பட்டை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.. 
நிச்சயம் அவர்களுக்கு எல்லாம் தேங்காய் என்பது சட்னி சம்பந்தப் பட்ட விஷயமாக மட்டுமே  இருக்கக் கூடும்.. !!



Monday, April 25, 2016

ஆதங்கம்..?

ந்தியாவில் மற்ற மாநிலங்களில் இளைஞர்கள் எவ்விதமோ யாமறியேன்.. நம்முடைய தமிழகத்தில் "இவ்விதம்" என்கிற கண்க்ளூஷனுக்கு என்னால் வர முடிகிறது என்றே கெஸ் பண்ணுகிறேன்.. அதனை இங்கே சொல்வதற்கு முயல்கிறேன்.. 

ஒட்டிய வயிறு .. ஒற்றைக் காதுக்கொரு கம்மல்.. கண்ட கருமாந்திர பேண்டுகள் இடது வலது மணிக்கட்டுகளில்.. உருப்படியாக மணி பார்க்க ஒரு கைக்கடிகாரம் எவனும் அணிவதாகத் தெரியவில்லை.. அதான் மணி பார்க்க 4 பாக்கெட்டில் குறைந்த பட்சம் 2 அல்லது 3 போன்கள் இருக்கின்றனவே.. மூன்றில் ஒரு ஆண்டிராயிடு நிச்சயம்.. 

வாட்ஸ்-ஏஅப்.. அப்புறம் மெசஞ்சர்.. கன்னாபின்னா இடையறாத ச்சாட்டிங்.. பேஸ் புக்.. ஸ்டேட்டஸ் அப்டேட்.. லைக்ஸ், கமெண்ட்ஸ்.. இளைஞர்கள் ஆகட்டும், இளைஞிகள் ஆகட்டும்.. அந்த விரல்கள் சும்மா செமத்தியாக சடுகுடு ஆடுவதைப் பார்க்கையில், நம்முடைய இயலாமை குறித்து சற்றே வெட்கமுறுவதைத் தவிர்ப்பதற்கில்லை.. 

லோயெர் ஹைய்யரை எல்லாம் ஃ பர்ஸ்ட் கிளாசில் கிழித்திருந்தாலும் .. டைப் இன்ஸ்டிடியூட் பக்கமே தலைவைத்துப் படுத்திராத அவர்களது நர்த்தனம் கவனிக்கையில் ஆச்சர்யம்  சும்மா அசத்தி விடுகிறது நம்ம ஜெனெரேஷனை..!

அவர்களது கோதாவிலே என்ன தான் நம்மை  நிறுத்திப் பார்க்க கற்பனை, ஆசை பீரிட்டாலும் அதென்ன அவ்ளோ பாஸிபிலா என்ன? அப்படி நின்று தொப்பையை அறுத்தெறிந்து கடுக்கன் ஒன்றை இடது காதில் மாட்டி இக்காலப் பெண்டிரை இம்சிக்க ஒரு உத்வேகம் பிறப்பதும், அந்த மாயைகளினின்று 'பொளேர்' என்று பிய்ந்து இந்த சாக்ஷாத் 'கிழப் பிராயம்' ஸ்மரணைக்கு ஏறுகையில் ஒரு ஏமாற்ற சூடு மண்டை எங்கும் பரவி இயலாமையின் பிடியில் சிக்குண்டு சின்னபின்னமாகிறோம்.. 

ஆனாலும் அப்படி என்ன பொறாமைப் படும் படியாகவா  இருக்கிறது இந்த ஜெனெரேஷன் ?.. நம்காலமே  பொற்காலம் போன்றும், இன்றைய இவர்களின் உலகமெல்லாம் ஒன்றுமற்ற டுபாக்கூர் என்று ஒரே அடியாக  பழித்துக்  கொண்டு வெளியேறுவதும் சுலபமாகிறதா என்ன.. ! அதுவுமில்லை.. 
என்ன இழவானாலும் இன்று பிரபலமாகி இருக்கிற இந்தப் போக்கினுள் நம்மையும் எப்படியாவது  இழைத்துக் கொள்கிற பிரயத்தனம் நம்மையும் மீறி நமது பிரக்ஞையில்  சிலிர்ப்பு மூட்டிக் கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டி இருக்கிறது.. ?

பொற்காலம் என்று பிதற்றப் படுகிற நமது  காலத்தினுள் நுழைகிற சிந்தனைகளும்  நமக்கெல்லாம்  நமுத்துப் போய் விட்டதென்றே தோன்றுகிறது.. 
இவர்களது உலகினுள் நுழைந்து  நியூ வெர்ஷனாக நிகழ்காலத்தினை தரிசிக்கவே  அரும்பாடு படுகின்றன நமது ஊன்றுகோல்களும் சாளேஸ்வரக் கண்ணாடிகளும். !!

Wednesday, April 20, 2016

தெறி .. சினிமா விமரிசனம்..

Image result for theri stillsனைவி அம்மா அனைவரும் சுடப் பட்டு கன்னாபின்னாவென்று இறந்த பிற்பாடு, தமது ஒரே மகளை எடுத்துக் கொண்டு கேரளம் சென்று ஒரு அப்பாவி போன்று வாழ்க்கையை ஓட்டுகிறார் விஜய்.. அந்த அப்பாவி மிடுக்கினூடே, அவ்வப்போது ரவுத்ரம் பீறிட, வில்லன்மார்களை சுலபமாக நய்யப் புடைகிறார். 
இந்த ஸ்க்ரீன் ப்ளே பாட்ஷாவில் ரஜினிக்கு எடுபட்ட ஒரே காரணத்துக்காக வேதாளத்தில் அஜித்தும், இப்போது விஜயும் என்று பட்டியல் . நீள்கிறது.

இப்போதைக்கு இது பக்கா மொக்கையாகத் தெரிகிறது.. 
அதுவும் பிந்தைய ஃப்ளாஷ் பேக் என்பது கர்ண கடூரக் கொடூரமாக சித்தரிக்கப் பட்டுள்ளது.. 'இது யதார்த்த சினிமா இல்லை' என்று உடனே அவசரக் குடுக்கை போன்று சொல்ல முற்பட்டாலும், 'இப்படியான கொடுமையான கொலைகள் நடப்பதை' யதார்த்தமில்லை என்று எங்கனம் சொல்ல?.. இவை நமது செவி வழி செய்திகளாக நுழைகிறது.. செய்தித் தாள்களில் படித்து வெம்புகிறோமே அன்றி, நேரில் பார்க்கிறோமா ?.. 
ஆனால், அவ்வித விபரீத சங்கதிகளை மெனக்கெட்டு சினிமா படுத்துகையில் ஏன்  சுலபத்தில் யதார்த்தத்துக்குப் புறம்பாகப் புரிபடுகிறது நமக்கெல்லாம்?

ஆகவே, இதையும் யதார்த்தம் என்று சூளுரைத்து .. வாதத்தில் நிலைநின்று நிரூபிக்கிற  தார்மீகப் பொறுப்பை ஏற்கிறோமாக ..!!

ஆனால் அட்லீ ... எத்தனையோ நிம்மதியான யதார்த்த விஷயங்கள் உள்ளன இந்த உலகிலே.. இந்த மாதிரி விபரீதங்களைத்  தத்ரூபப் படுத்தி 2 மணிநேர ரிலேக்ஸ் க்காக செலவு செய்து வருகிற மக்களுக்கு எதற்காக அனாவசியத்துக்குட்  டெம்ப்ட் ஏற்றி மனதை சிதிலப்  படுத்த விழைகிறீர்?

வாழ்க்கையில் இத்தனை அநியாயக் குரூரங்களை சந்திக்கிற ஒரு நபர், மறுபடி ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு அவ்ளோ ஜாலியாக பேபி பேபி என்று  கொஞ்சி வலம் வருவதும் .. அவ்வப்போது எதிர்ப்படுகிற கேரளா தாதாக்களை வேறு துவம்சம் செய்வதும் .. பிறகு அவர்களிடமே மன்னிப்பு கேட்பதும்.. பெரிதாக மனதில் ஒட்டவில்லை.. 

பாடல்களுக்கு இடங்களை மென்மையாகத் தேர்ந்தெடுத்து விட்டு எல்லா பாடல்களும்  சப்பையாகப் போட்டிருக்கிறார் ஜி.வி.. 50வது படமாம்.. மெலடியாக 2 பாடல்கள் கூட யோசிக்க முடியாத அவசரம் என்னவோ?

80-90 களின் யதார்த்த சினிமாக்களுக்கு தந்தையாக விளங்கிய மகேந்திரன் எதற்கிந்த விபரீத வில்லத்துவத்தை ஏற்று நடித்திருக்க வேண்டும் என்கிற ரகசிய தர்ம  சங்கடம் மனசுள் வியாபிக்கிறது.. இருப்பினும் இத்தனை  பெரிய இடைவெளிக்குப் பிற்பாடு கூட 'இந்த ஒரு கொடிய' பரிமாணத்தை தத்ரூபப் படுத்தி இருக்கிற அவரது பங்கு-பாங்கு  அனைத்தும் பிரம்மாதம்.. 

சமந்த்தா கூட கொஞ்சம் நன்கு கீ கொடுத்த பார்பீ பொம்மை போன்று நடித்திருக்கிறார்.. ஆனால், அந்த எமி ஜேக்சன் பொம்மைக்கு சுத்தமாகக் கீ கொடுக்க  மறந்து விட்டார்கள் போலும்.. வெறுமே லிப்ஸ்டிக் மட்டும் மிடுக்காகப் பூசிக்  கொண்டு நடக்கிறது.. 

வசனத்தின் வீரியமும் அதன் நியாயங்களும் மனசைக் கவ்வுகின்றன.. அதனை உச்சரித்துப் பேசியும் உடல் மொழியில் ஒருவித ஆளுமையை நிலைநிறுத்துவது  என்பதும் , சாதாரண நடிகனால் அசாத்யமான ஒன்று.. விஜய்  அதனை அனாயாசமாக பல இடங்களில் செய்து அசத்தி இருப்பது அஜித்  ரசிகனாலும் மறுக்க முடியாத உன்னதம்.. 

மென்மை ததும்பும் யதார்த்தங்களை அடுத்த முறை அட்லி முயலவேண்டுகிறேன்.. இந்த வன்முறை யதார்த்தங்கள் செய்தித் தாள்களிலும்  நம்முடைய அனுமானங்களிலும் மாத்திரமே இருந்து விட்டுப் போகட்டும். 

நன்றி.. 

Sunday, April 17, 2016

அசுவாரஸ்யமாய் ஒரு காதல் கவிதை..


பின்னொரு நாளில் 
உன்னைப் 
பார்ப்பதற்கில்லை 
என்கிற பிரக்ஞை 
எனக்குள் இல்லவே 
இல்லாதிருந்த ஆச்சர்யம் 
இன்றைய உமது 
தரிசனமற்ற தருவாயில் 
பெரிதாக உரைக்கிறது.. 

உனது 

அன்றாட தரிசனம் 
என்பது ஒரு பிராய 
நிகழ்வாகக் குத்தீட்டி 
போன்று என்னுள் 
நங்கூரமிட்டிருந்தது.. 

அதனின்று நானோ 

என்னின்று அதுவோ 
பிய்ந்து விடும் வாய்ப்பு 
அறவே இல்லை என்கிற 
நம்பிக்கை ஏன் 
அத்தனை அனிச்சையாக 
என்னுள் பதிவாயிற்று 
என்பது விவரிக்கிற 
சாத்யம்  இழந்திருக்கிறது .... !

'உன்னைப் பார்த்து 

கொஞ்ச நாட்களாயின'
என்கிற ஒரு பிராயத்தில் -
-அந்த இடைவெளி 
தற்காலிகம் போன்றும் 

'மறுபடி பழையபடிக்கு 

உன்னை தரிசிக்கிற வாய்ப்பு'
-நெருங்கி விட்டது போன்றும் 
எனக்குள் ஓர் 
அணையா சுடர் ஒளிர்ந்த 
விதமாகவே வீற்றிருந்தது.. 

அச்சுடர் நாளடைவில் 

மங்கி அணைந்து புகைந்து 
காணாமற் போய்.. 
எண்ணை தீர்ந்ததா 
திரி கருகியதா என்கிற 
பட்டி மன்றத்துக்கு 
அவசியமற்று... 
தீபமே களவாடப் பட்டு 
விட்ட வெறுமையில் 
என் மனது துவளத் 
துவங்கிற்று...!

'இனி என்றைக்கும் 

உன்னைப் பார்ப்பதற்கில்லை'
என்கிற ஒரு வகையறா சூழலை 
ஒருவித அவநம்பிக்கையினூடே 
ஏற்றுக் கொள்ளப் பயிற்றுவிக்கப்
பட்டது எமது உடைந்திருந்த
இருதயத்துக்கு....! 

நாளடைவில் உடைந்திருந்த 

இதயம் ஒட்டிக் கொண்டதை 
உணர்ந்தேன்.. 
எதனையும் மாற்றுகிற 
ஆற்றுகிற 'காயகல்பம்'
காலம் என்பதை அறிந்திருக்கிறேன்..!


மறுபடி ஒரு தருவாயில் 

உன்னைப் பார்க்க 
நேர்ந்தாலுமே கூட 
உடைந்து விடமாட்டேன் 
என்கிற நம்பிக்கைகளை 
காலம் எனக்குள் 
திணித்து விட்டிருப்பதாகவே 
அனுமானிக்கிறேன்.. !!

Friday, April 15, 2016

தோல்வி..........

 

தோல்விகளுக்கும் 
எனக்குமான சிநேகிதம் 
'தாயும் புள்ளையும்' போல.. 

அதனிடையே கிஞ்சிற்று 
அவ்வப்போது எட்டிப் 
பார்க்கிற வெற்றிகள் என்பன 
'புற்றுப் பாம்பு' போல.. 

மடியினில் சாய்த்து 
தாய் அக்கறையோடு 
உறங்க வைப்பன தோல்விகள்.. 

தட்டி எழுப்பி 
உறக்கம் கலைத்து 
தடுமாறச் செய்வன வெற்றிகள்.. 

பழக்கமான சொந்தங்கள் போல 
பரஸ்பரம் ஆரத் தழுவச் 
செய்கின்ற தோல்விகள்.. 

பணக்காரத் திமிரோடு 
பாராமுகமாய் அலட்டிக் 
கொள்கிற வெற்றிகள்.. 

படுதோல்விக் கற்கள் வீசி 
இந்த வெற்றி நாய்களை 
விரட்டியடிப்பதில் நான் 
கைதேர்ந்தவனாக்கும்.. !!

Sunday, April 10, 2016

காதலிக்கக் கூடாதவனின் காதல்..

காம உணர்வுக்கு 
முன்னரே நீ 
எனக்கு அறிமுகமானாய்.. 
பிற்பாடாக 
காமக் கசிவு என்னில் 
வற்றிப் போய் .. 
காதல் மட்டுமே 
அதீதம் சுரந்தது.. 

காமத்திற்கான 
திறவுகோல் .. 
மற்றும் முதற்படி 
தான் காதல் 
என்பன வசவுகள் 
போன்று என்னில் 
நுழைந்தன.. 

உன் மீதான 
காதலை இழப்பதற்கு 
என்னுடைய காமம் 
உதவப் போவதில்லை 
என்பதை உத்திரவாதமாக 
என்னால் சொல்லமுடியும்.. 

சமூக அனுமானங்களைத் 
தாண்டி எனக்குள்ளாக 
சில அபிப்ராயங்கள் 
என்றைக்கும் வைரம் 
பாய்ந்து நிலைத்திருப்பதை 
நான் எனது அனைத்து 
நிலையான உணர்வுகளிலும் 
அடையாளம் கண்டுள்ளேன்.. 
அதில் இந்தக் 
காதல் காமம் உட்பட அடங்கும். !!

ஒரு தருவாயில் 
நீயும் எனது 
காதலின் வசம் 
விழுந்தாய்.. 
பரஸ்பரம் வார்த்தைப் 
பரிமாறல்கள் மட்டுமே 
அடாது நிகழ்ந்தன.. 
விரல் ஸ்பரிசங்கள் கூட 
விட்டொழிக்கப் பட்டன.. 

உரிமைகள் அற்றே 
கபளீகரிக்கிற சூது கொண்ட 
காமம் - இன்றைய 
சமுதாயத்தில் மிகப் 
பிரபலம் மற்றும் யதார்த்தம் 
என்றிருக்க ..

தொடவேண்டிய .. அணைக்க 
வேண்டிய இதழ்ப் பரிமாற்றங்கள் 
நிகழ்த்தவேண்டிய 
 உரிமை வழிகிற 
இந்தக் காதல் தளத்திலே.. 
நானுனக்கு பத்தாம்பசலியாகப்
புரிபட்டுப் போனதில்.. 
பம்மாத்து செய்வதாகப் 
புரிபட்டுப் போனதில் 
ஆச்சர்யங்கள் எதுவுமில்லை தான்.. 

ஆகவே.. 
ஒரு பிராயத்தில் நீ 
உன் காதலனை மாற்றிக் 
கொள்கிறாய்.. 

காமத்தோடு காதலும் 
கசிவது நின்றுபோன 
வெறுமையில் 
அமிழ்ந்து போகிறேன் 
நான் .. !!
Image

Tuesday, April 5, 2016

பிறவி...


Image result for butterfly with a man
சிறகுகள் பிய்ந்து 
உதிர்ந்து சீக்கிரமே 
காணாமல் போனாலும் 
நான் ஏன் 
பட்டாம் பூச்சியாகப் 
பிறக்காமல் போனேன் 
என்கிற வருத்தம் 
தவிர்க்க முடியவில்லை.. 

இந்த ஆறாம் 
அறிவுள்ள மனித 
உடல் தவிர்த்து 
பிற எந்த உடலாயினும் 
அதனில் தரித்து  
இந்தப் பிரபஞ்சத்தை 
தரிசித்திருக்கலாம் 
என்கிற அங்கலாய்ப்புக்கு
அருகதையாகிறது 
இந்த மனிதப் பிறப்பு.. 

வசந்த அனுபவங்களும் 
கசந்த அனுபவங்களும் 
வாழ்நாள் நெடுக 
இழைந்தவாறே 
பீடுநடை போடுகின்றன 
நம்மோடு என்றாலும்-- 

மாற்றுப் பிறப்புக்கு 
ஏங்குகிற சுகத்துக்காகவே 


மனிதப் பிறப்பெடுத்துப்
பார்க்கலாம் 
பட்டாம்பூச்சி உட்பட...!!
Image result for butterfly with a man

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...