பின்னொரு நாளில்
உன்னைப்
பார்ப்பதற்கில்லை
என்கிற பிரக்ஞை
எனக்குள் இல்லவே
இல்லாதிருந்த ஆச்சர்யம்
இன்றைய உமது
தரிசனமற்ற தருவாயில்
பெரிதாக உரைக்கிறது..
உனது
அன்றாட தரிசனம்
என்பது ஒரு பிராய
நிகழ்வாகக் குத்தீட்டி
போன்று என்னுள்
நங்கூரமிட்டிருந்தது..
அதனின்று நானோ
என்னின்று அதுவோ
பிய்ந்து விடும் வாய்ப்பு
அறவே இல்லை என்கிற
நம்பிக்கை ஏன்
அத்தனை அனிச்சையாக
என்னுள் பதிவாயிற்று
என்பது விவரிக்கிற
சாத்யம் இழந்திருக்கிறது .... !
'உன்னைப் பார்த்து
கொஞ்ச நாட்களாயின'
என்கிற ஒரு பிராயத்தில் -
-அந்த இடைவெளி
தற்காலிகம் போன்றும்
'மறுபடி பழையபடிக்கு
உன்னை தரிசிக்கிற வாய்ப்பு'
-நெருங்கி விட்டது போன்றும்
எனக்குள் ஓர்
அணையா சுடர் ஒளிர்ந்த
விதமாகவே வீற்றிருந்தது..
அச்சுடர் நாளடைவில்
மங்கி அணைந்து புகைந்து
காணாமற் போய்..
எண்ணை தீர்ந்ததா
திரி கருகியதா என்கிற
பட்டி மன்றத்துக்கு
அவசியமற்று...
தீபமே களவாடப் பட்டு
விட்ட வெறுமையில்
என் மனது துவளத்
துவங்கிற்று...!
'இனி என்றைக்கும்
உன்னைப் பார்ப்பதற்கில்லை'
என்கிற ஒரு வகையறா சூழலை
ஒருவித அவநம்பிக்கையினூடே
ஏற்றுக் கொள்ளப் பயிற்றுவிக்கப்
பட்டது எமது உடைந்திருந்த
இருதயத்துக்கு....!
நாளடைவில் உடைந்திருந்த
இதயம் ஒட்டிக் கொண்டதை
உணர்ந்தேன்..
எதனையும் மாற்றுகிற
ஆற்றுகிற 'காயகல்பம்'
காலம் என்பதை அறிந்திருக்கிறேன்..!
மறுபடி ஒரு தருவாயில்
உன்னைப் பார்க்க
நேர்ந்தாலுமே கூட
உடைந்து விடமாட்டேன்
என்கிற நம்பிக்கைகளை
காலம் எனக்குள்
திணித்து விட்டிருப்பதாகவே
அனுமானிக்கிறேன்.. !!
No comments:
Post a Comment