Wednesday, April 27, 2016

கோகனட் .. ..

தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள்  தேங்காயில் உள்ளதாக என்றோ உணவு ஆய்வறிக்கையில்  படித்ததாக ஞாபகம்.. 
பால் வற்றிய தாய்மார்களும் அரைகுறையாக மட்டுமே சுரக்கிற தாய்மார்களும் தங்களின் குழந்தைகளுக்கு  தேங்காய்ப் பாலைப் புகட்டலாம் என்றே ஆகிறது.. 

 கோவில் சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு வருகையில், வயிற்றைக் கிள்ளுகிற பசிக்கு .. பொரிகடலை சாப்பிட்ட வண்ணம் நடுவிலே சில்லுத் தேங்காயையும் திணிக்கிற போது வருகிற ஒரு பிரம்மாத ருசி .. எதுவுமில்லை அதற்கீடு.. !

மணக்க மணக்க என்ன தான் இட்லிக்கு சாம்பார் வைத்தாலும், ஒரு தேங்கா சட்னி உடனிழைகையில் வருகிற ஒருவித ஒய்யார ருச்சி தனித்துவம் பொருந்தியது... அதுபோக மிஞ்சியுள்ள சோற்றுக்கு தேங்காய் துவையல் சேர்த்துப் பிசைந்து உண்கையில் அதொரு உன்னதம்.. 

தேங்காயில் தாளித்த சாதம், பனை வெல்லத்தில் தேங்காய் சுரவி, தேங்காய் பர்பி, தேங்கா பன் ..  என்று தேங்காயில் உண்டாகிற அனைத்துப் பதார்த்தங்களும் "பலே பலே" என்றிருக்க.. 
Image result for coconutImage result for coconut
வெள்ளிக்கிழமைகளில் திருப்பூரின் தெருக்கள் எங்கிலும் எவருக்கும் உபயோகமில்லாமல் நாறி நசுங்கிப் போய் கிடக்கின்றன தேங்காய்கள்.. அந்த அற்புதப் பருப்பு நிரம்பிய தேங்காய்களின் மீது கார் சக்கரங்களும் வேன் சக்கரங்களும் ஏறி ... நாய்களுக்குக் கூட உபயோகமற்றுக் கிடக்கின்றன அந்த  வெள்ளை  அமிர்தம்..  

தங்களின் தொழில் அபிவிருத்திக்கு .. இப்படி நடுரோட்டில் தேங்காய் உடைக்க வேண்டும் என்பது எந்த விதமான பகுத்தறிவு? ..
 செழித்து வெற்றி கண்ட தொழிலுக்கும் தேங்காய் உடைக்கப் படுகிறது.. தொய்வு கண்டு தோல்வி தழுவி நிற்கிற தொழிலுக்கும் .. அது சிறக்கப் பெற வேண்டும் என்று வேண்டி உடைக்கப் படுகிற தேங்காய்கள்.. 

சாமான்ய விலையில் கிடைக்கின்றன என்பதற்காக இத்தனை தேங்காய்கள்  உடைக்கப் பட வேண்டுமா  சாலைகளில்?.. ஈடுதேங்காய் போல ஈடுதங்கம்  போடச் சொன்னால் மக்கள் போடுவார்களா?

பிஞ்சுக் காதுகளில் குழந்தைகளுக்கு மாட்டி விட்டால் கூட பாதுகாப்பில்லாத தங்கம், ஆசை ஆசையாகக் கழுத்திலே மாட்டி ஒரு சின்ன மார்னிங் வாக் போவதற்கு வக்கில்லாத ஒரு தங்கம்.. வீட்டில் நிம்மதியாக உட்கார்ந்து இருப்பவர்கள் கழுத்தை அறுத்து உயிரைக் குடித்து விடுகிற தங்கம்... 
பீரோவில் வைத்துப் பூட்டி விட்டு எங்காவது அக்கம் பக்கம் போய் விட்டு வருவதற்குள்ளாக பீரோ உடைபட்டுக் களவு போய் விடுகிற தங்கம்..  அதற்கு பயந்து வங்கியில் வைத்தாலோ, திருப்ப முடியாமல் ஏலம் போய் விடுகிற தங்கம்.. 
எதற்கடா [ டீ ]  இந்தத் தங்கப் பைத்தியம்?.. அதற்குப் பதிலாக தேங்காயின் மீது பயித்தியம் ஆகி, நல்லதாக ஒரு சட்னி அரைத்துப் பழகுங்கள் மக்களே...!

உங்களை எல்லாம் விட அதியற்புதமாக  பற்பல கோடிகள் லாபம் ஈட்டுகிற தொழில் கொண்ட அதிபர்கள், சிகரம் தொடுகிற மேதைகள் .. சிங்கப்பூரிலும் ஜப்பானிலும் .. சுவிஸ் ஸிலும் பட்டை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.. 
நிச்சயம் அவர்களுக்கு எல்லாம் தேங்காய் என்பது சட்னி சம்பந்தப் பட்ட விஷயமாக மட்டுமே  இருக்கக் கூடும்.. !!



No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...