Skip to main content

Posts

Showing posts from August, 2016

முகநூலதிகாரம் ..

முன்னொரு காலத்தில் பரஸ்பர நட்பை நிர்ணயித்தவை கடிதங்களாக . இருந்தன... கல்யாணம் திருவிழாக்கள் என்று நிகழ்கையில் சந்தித்து அளவளாவி நெடு நேரம் உரையாடி .. போன.. வந்த கதைகளை சளைக்காமல் பிதற்றி,  விடை பெறுகையில் மனமில்லாமல் பிரிவது என்று இருந்தன.. மறுபடி கடிதங்களிட்டு விஷயங்களை பரிமாற ஆளாளுக்கு துரிதப் படுத்திக்கொள்ளப் பட்டன...!

பிற்பாடு டெலிபோன் வந்தது.. விரல் நுழைத்து சுழற்றி சுழற்றி .. ஒரு எண்ணை தவறுதலாக சுழற்ற நேர்ந்தாலும் மறுபடி முதலில் இருந்து.. 
பிறகு பட்டன் போன்.. அதிகம் ஒரு எண்ணை அழுத்த நேர்ந்தாலும் அதனை க்ளியர் செய்து விடுவது, மறுமுனையில் பிஸி என்றால் சில நொடி இடைவெளிக்குப் பிறகு ரீடையல் செய்வது.. 

மொபைல் வந்து.. தொடுதிரை வந்து ... மனதில் நினைத்தாலே அழைக்க வேண்டிய நபரின் செல் சிணுங்கும் அளவுக்கு அறிவியல் வளர்ச்சி கண்டுள்ளது.. 

இவைகள் அனைத்தையும் விட சக்தி வாய்ந்ததாக "முகநூல்" இன்றைய தேதியில் மாறி விட்டது என்பதில் எவர்க்கும் எள்ளளவு மாற்றுக் கருத்தும் இருக்க வாய்ப்பில்லை..  

என்றோ விடுபட்ட நண்பர்கள் .. எதற்கோ சண்டையிட்டு வருடங்கள் பல பேச்சு வார்த்தைகளற்று இருந்த எதிரிகள்.. என்ற…

இறுகி விட்டதடி....!

உதட்டூசியால்
முத்த நூல் கோர்த்து 
என் கிழிந்த 
காதலைத் தைக்க 
வந்த தையல் நீ.. 

கிழித்தது நீ என்கிற 
குற்ற உணர்வில் தான் 
தைக்கவும் வந்தாயோ?

மேற்கொண்டு பிய்ந்து 
போகிற சாத்யங்களற்று 
உமது தையல் கெட்டிப்
பட்டிருக்கிறது.. 

இற்றுதிர்ந்து போய் 
விடுமோ என்றிருந்த 
எம் காதல் இப்போது 
இறுகி விட்டதடி.. 

காறி உமிழ்கையில் 
அசூயை கொள்ளச் செய்கிற 
உதட்டெச்சில்---
முத்தப் பரிமாறல்களாக 
பரிணமிக்கையில் 
அமிர்தமெனத் திரிந்து விடுவது 
காதல் அமிலத்தின் 
மர்ம ரசாயன மாற்றமென்று
கொள்வோமாக.. !!

முரண்களின் ராஜ்ஜியம்..

முரண்களினூடே 
இயங்கப் பெறுகிறது 
வாழ்க்கை.. 
யாதொரு ப்ரத்யேகத் 
தன்மையிலுமாக 
நிலைத்திருப்பதற்கான 
சாத்தியக் கூறுகளற்ற 
குழப்பங்களைப் பற்றிக் கொண்டே 
நீள்கிறது காலம்.. !

பற்றற்றிருப்பதற்கான லாவகம் 
பிடிபட்ட தெளிவில் இருக்கையிலேயே 
பொருள்கள் மீதான 
பேராவல் பீறிடுகிறது.. 

மௌனத்தை மய்யப் படுத்த 
முனைகையிலேயே
ஏதேனும் முணுமுணுக்க 
வாய் பிரயத்தனிக்கிறது.. 

வேசி வீட்டு பூஜையறையில் 
வருகிற பக்தி 
கோவிலில் அவளைப்
பார்த்துவிட நேர்ந்த போது
வராமல் மறுதலித்து விட்டது.. !

மரணத்திற்கு எதிர்மறையான 
இந்த வாழ்க்கை.. 
மரணத்துடன் ஒப்பிடுகிற
தகுதியையே இழந்து 
நிற்பதாகத் தோன்றுகிறது.. 

மரணம் தெளிவானது .. 
குழப்பமற்றது.. 

புதைப்பதா எரிப்பதா 
என்கிற முரண்பட்ட 
சடங்குகளுக்குரிய குழப்பங்கள் 
வாழ்பவர்களின் பிரச்சினை மட்டுமே.. !

காதலிக்கத் தெரியாதவன் எழுதிய கவிதை..

காதல் வயதைக் கடந்து.. 
காதலற்ற வாழ்வைக் கடந்து.. 
'காதலற்ற' எனில் 
'பரஸ்பர காதலற்ற'... !

ஓராயிரம் ஒருதலைக் காதல்களில் 
தோற்ற சுகானுபவங்கள் 
குவிந்து கிடக்கின்றன என்னுள்.. 

எதிரினத்தை நம்மைக் காதலிக்க 
வைக்கிற நாசுக்குத் தெரியாத 
நபரின் சோம்பேறி த் தனம் தான் 
இந்த ஒருதலைக் காதல் என்பது...!

ஓர் ஆண் தெரு சொறி நாய் கூட 
அன்றாடம் குளித்து மொசுமொசுவென்று 
பங்களாவுக்குள் வலம் வருகிற 
பெட்டை நாயை சரி செய்வது 
சாத்யத்தில் இருக்க.. 
--பெண்ணை அணுகும் சாதுர்யம் புரியாத 
புண்ணாக்காக நான் மட்டுமே 
காதலிக்கிறேனாம்.. கட்டுக் கட்டாய்க்
கவிதை புனைந்து கிழிக்கிறேனாம்.. 
என் காதல் தோல்விக் கவிதை புத்தகம்
நான்கு தாண்டி ஐந்தாம் பதிப்புக்கு 
எகிறுகிறதாம்.. !!

பெட்டி  க் கடையை மளிகை க் கடையாக 
மாற்றி.. அதையே டிப்பார்ட்மெண்ட் ஸ்டோராக
மாற்றி .. மொபெட் போய், பைக் போய், கார் 
என்று உச்சம் போகிற நச்சென்ற மனிதர்கள் 
நிரம்பிய சமூகத்தில் ... 
பெட்டிக் கடையே கடனில் மூழ்கி 
சரக்குப் போட்டவர்கள் காறித்துப்புவது 
தான் கையாலாகாத ஒருதலைக் காதல் என்பது.. !

மனதையும் உடலையும் மாண்போடு வைத்திருந்தால் 
காதலிக்க வயதேது ? மண்ணேது ?
கூனிக் குறுகி…

இன்று துவங்கிய காதல்.

இளைப்பாறல் 
என்பதை உமது 
மடி  எனக்கு இன்று 
அறிமுகப் படுத்திற்று ..

உன்னைக் கனவில் 
காண்பதற்காக விரும்பி 
உறங்கிய இரவுகள் 
நேற்றோடு விடைபெற்றன.. 

உறங்கியும் நீ அற்ற 
வேறு கனவுகளால் 
எமதுறக்கம் நோய்வாய்ப்
பட்டதாகவே தோன்றிற்று..!

ஓரிரவில் கடும் காய்ச்சலெனக்கு..
ஆனால் அன்றைய கனவில் 
நீ வந்ததும் காணாமற் 
போயிற்றென் காய்ச்சல்...

நீ கிடைக்கப் போராடிய 
அந்தக் காலகட்ட
மலரும் நினைவுகள் என்பன 
இன்று நீ கிட்டியதற்கு 
ஒப்பானவையே.. 

பின்னொரு நாளில் 
எதற்கேனும் நிகழவுள்ள 
நம்முடைய  மனஸ்தாபங்களை 
அனுமானிக்க முடிகிற 
என்னுடைய 
தீர்க்க தரிசனங்களை 
அபசகுணமாக சித்தரிக்க 
முயல்கின்ற உன்னுடைய 
இந்த க்ஷண  காதல் என்பது..
என்னுடைய அனைத்த 
தருணங்களை விடவும் 
முக்கியத் துவம் வாய்ந்தது.. !!