
இயங்கப் பெறுகிறது
வாழ்க்கை..
யாதொரு ப்ரத்யேகத்
தன்மையிலுமாக
நிலைத்திருப்பதற்கான
சாத்தியக் கூறுகளற்ற
குழப்பங்களைப் பற்றிக் கொண்டே
நீள்கிறது காலம்.. !
பற்றற்றிருப்பதற்கான லாவகம்
பிடிபட்ட தெளிவில் இருக்கையிலேயே
பொருள்கள் மீதான
பேராவல் பீறிடுகிறது..
மௌனத்தை மய்யப் படுத்த
முனைகையிலேயே
ஏதேனும் முணுமுணுக்க
வாய் பிரயத்தனிக்கிறது..
வேசி வீட்டு பூஜையறையில்
வருகிற பக்தி
கோவிலில் அவளைப்
பார்த்துவிட நேர்ந்த போது
வராமல் மறுதலித்து விட்டது.. !
மரணத்திற்கு எதிர்மறையான
இந்த வாழ்க்கை..
மரணத்துடன் ஒப்பிடுகிற
தகுதியையே இழந்து
நிற்பதாகத் தோன்றுகிறது..
மரணம் தெளிவானது ..
குழப்பமற்றது..
புதைப்பதா எரிப்பதா
என்கிற முரண்பட்ட
சடங்குகளுக்குரிய குழப்பங்கள்
வாழ்பவர்களின் பிரச்சினை மட்டுமே.. !

No comments:
Post a Comment