காதல் வயதைக் கடந்து..
காதலற்ற வாழ்வைக் கடந்து..
'காதலற்ற' எனில்
'பரஸ்பர காதலற்ற'... !
ஓராயிரம் ஒருதலைக் காதல்களில்
தோற்ற சுகானுபவங்கள்
குவிந்து கிடக்கின்றன என்னுள்..
எதிரினத்தை நம்மைக் காதலிக்க
வைக்கிற நாசுக்குத் தெரியாத
நபரின் சோம்பேறி த் தனம் தான்
இந்த ஒருதலைக் காதல் என்பது...!
ஓர் ஆண் தெரு சொறி நாய் கூட
அன்றாடம் குளித்து மொசுமொசுவென்று
பங்களாவுக்குள் வலம் வருகிற
பெட்டை நாயை சரி செய்வது
சாத்யத்தில் இருக்க..
--பெண்ணை அணுகும் சாதுர்யம் புரியாத
புண்ணாக்காக நான் மட்டுமே
காதலிக்கிறேனாம்.. கட்டுக் கட்டாய்க்
கவிதை புனைந்து கிழிக்கிறேனாம்..
என் காதல் தோல்விக் கவிதை புத்தகம்
நான்கு தாண்டி ஐந்தாம் பதிப்புக்கு
எகிறுகிறதாம்.. !!
பெட்டி க் கடையை மளிகை க் கடையாக
மாற்றி.. அதையே டிப்பார்ட்மெண்ட் ஸ்டோராக
மாற்றி .. மொபெட் போய், பைக் போய், கார்
என்று உச்சம் போகிற நச்சென்ற மனிதர்கள்
நிரம்பிய சமூகத்தில் ...
பெட்டிக் கடையே கடனில் மூழ்கி
சரக்குப் போட்டவர்கள் காறித்துப்புவது
தான் கையாலாகாத ஒருதலைக் காதல் என்பது.. !
மனதையும் உடலையும் மாண்போடு வைத்திருந்தால்
காதலிக்க வயதேது ? மண்ணேது ?
கூனிக் குறுகிய குற்ற உணர்வுகளும் ..
திறந்துவைக்க முனைந்தாலும்
தாழிடத் தவிக்கிற தாழ்வு மனப்பான்மைகளும்
ஒருதலைக் காதலை ஒய்யார நடைபயில செய்வன..
இன்றும் நான் கடக்கிற சாலைகளில்
நான் நடைப் பயிற்சி புரிகிற பூங்காக்களில் என்று
காதலில் திளைக்கிற ஜோடிகள் பார்க்கையில்
அந்தப் பரஸ்பர அனுபவமற்ற எமது
தனிமைப் பட்ட காதல் விக்கிச் சாக விழைகிறது...!
காதலிக்குக் காத்திருக்கையில் புரியாத கொசுக்கடி ..
காதலி வந்ததும் பேசிக் கொண்டிருக்கையில் புரியாத கொசுக்கடி ..
ஒருதலைக் காதலில் கடிக்கிற கொசுவை அடிப்பதே வேலை என்றாகி..
--நாட்கள் கடந்து..
மனைவியோடு உரையாடுகையில் கொசுக்கடி இல்லை.. கொசுவே இல்லை.. .. ஆயினும் --
எங்கெங்கிலும் அரிப்பெடுக்கிற உணர்வை ...
உண்மையாக அரிக்கவில்லை.. ஆனால் அம்மாதிரியான
உணர்வை ஏனோ தவிர்ப்பதற்கில்லை.. !! ??..
No comments:
Post a Comment