Thursday, December 31, 2015

கள்ளச் சோகம் .........

ள்ளக் கணவனோடு 
படுக்கையில் 
சல்லாபித்துக் 
கொண்டிருந்த ஒரு 
காலை 11 மணி 
சமயத்தில் ...
-சாலையில்  
ஆம்புலன்ஸ் 
கடந்த சைரன் 
சற்றே துணுக்குற 
வைத்தன இருவரையும்.. !

'நகரெங்கிலும் 
இந்த ஈன முணகல் 
தொடர்கதையாகி விட்டது'
என்று சொல்கிறவனை 
'ஆமாம்' என்று 
ஆமோதிக்கிறாள் அவள்.. 

காலை புறப்பட்டு 
அலுவல் சென்ற 
கணவன் அடிபட்ட 
செய்தி அவள் 
காது சேர, 
குறைந்த பட்சம் 
இன்னும் பத்து 
அல்லது 
பதினைந்து 
நிமிடங்களாவது 
பிடிக்கக் கூடும்.. !!

Monday, December 28, 2015

புதிய பட்டியல்..


எதற்கேனும்
கர்வம் கொள்ள 
சாத்யப் படுமா
என்று எமது
பட்டியல்களை
மனசுள் அசை போட்டுக்
கொண்டிருந்தேன்..
எதுவும் எடுபடுவதாகத்
தெரியவில்லை..

மேற்கொண்டாவது
அவ்வித சூழலை
அமைத்துக் கொள்கிற
தளங்கள் தேடப் பட்டன..
அதற்கு நிறைய
திறமையும் பொறுமையும்
தேவைப் பட்டன...

பீடியே பழக்கப் படாதவன்
கஞ்சா ஊத மெனக்கெடுவது
மாதிரி..
ஆம்லெட்டே குமட்டுபவனுக்கு
பச்சை மான்கறி புசிக்கிற
புலி என மாறுவது மாதிரி..

கர்வம் என்கிற
அசைவ உண[ர்]வு
பொருந்தாமற் போயிற்று..
இருப்பினும்
என்றேனும் எதற்கேனும்
கர்வப் பட்டே
தீருவது என்கிற
தீர்மானத்தை எடுத்தேன்..

எனது சிறுபிள்ளைத் 
தனங்களுக்காக வெட்கப் பட்ட 
பட்டியல்கள் நிறைய உள்ளன.. 
அவைகளில் மேற்சொன்ன 
தீர்மானமும் கூடிய விரைவில்
இனணயக் கூடும் என்றே
அனுமானிக்கிறேன்''


Wednesday, December 16, 2015

ஒரு பிரபல எழுத்தாளனின் வேண்டுகோள்..

எமது படைப்பின் இடைவெளி ஒவ்வொரு ரசிகனையும் வாட்டி வதைப்பதாக இருக்கும் பட்சத்தில், இடையறாத எமது எழுத்துப் பணி  செவ்வனே நிகழ்ந்த வண்ணமாக  இருந்திருக்கக் கூடும்..  
 
 ஆனால் அவ்வித துரதிர்ஷ்டங்கள் எமக்கில்லை., என்பதோடு இருக்கிற ஒற்றைக் கையளவு ரசிகர்கள் என்ன ஏதென்று கூட கேட்காத சுதந்திர எழுத்தாளனாக உலா வருவது பெருமிதம் எமக்கு.. 

அதென்ன ஒற்றைக் கையளவு ?.. 

அந்த ஒரே கையிலுள்ள ஐந்து விரல்கள் தாண்டி அடுத்த கையின் ஆறாம் விரலுக்குப் போகத் தேவை இல்லை, எமது ரசிக மணிகளின்  எண்ணிக்கை.. !

புகழ் ஒரு கஞ்சா அபினுக்கு ஒப்பான போதை.. அதிலே திளைக்கிற வசீகரம் கனவாயிருக்கிற வரைக்கும் தப்பிக்கலாம்.. அவை உண்மையாக மாறும் ஆரம்பத் தருவாய் வேண்டுமென்றால், ரம்மியம் பிய்த்து உதறக் கூடும்.. பிற்பாடு, ?.. 

என்னவோ புகழின் அனைத்துத் தாத்பர்யங்களையும் அக்கு வேர் ஆணி வேராக அறிந்தவன் போன்று, புகழ் குறித்து என்னென்னவோ நிறையப் பிதற்றப்  பிரயத்தனிக்கிறேன் .. ஹஹா.. 

"தோன்றின் புகழொடு தோன்றுக. அல்லவெனில் தோன்றாதிருத்தல் உத்தமம்" என்று ரெண்டடிக் குரளில் வேறு வள்ளுவன் உசுப்பேற்றுகிறான் 

புகழுக்கென்றே பணம் செலவு செய்கிற செல்வந்தர்கள் உண்டு. புகழும் செழுமைப் பட்டு அதனூடே செல்வமும் குவிகிற மகத்தான பிறவிகள் குறித்து  எமக்கொரு காழ்ப்பு, பொச்சரிப்பு என்பதை எல்லாம் தாண்டி சிருஷ்டித்தவனின்  பார்ஷியாலிட்டி மீது தான் அதீதக் கோபம் எனக்கு.. , இன்னும் பலர்க்கு...! 
[துணைக்கு கொஞ்சம் பேரை சேர்த்துக் கொள்வோம்]

இப்போதைய "கரண்ட்" புகழின்மை ஒழிந்து போய் , புகழ் எம்மை அண்டுகிற தருணம் அந்தப் பார்ஷியாலிட்டி மீதான கோபம் கழன்று போகக் கூடும்.. கடவுள் மீது பாசம் அபரிமிதம் சுரக்கக் கூடும். ஹஹ...

புற சூழல்கள் எம்மை  இவ்வித மேம்பாடுகள் அடைய வைத்தன.. இல்லை என்றால், அனாமதேயத்தின் பிடியில் சிக்கிச் சிதறுண்டு போயிருப்பேன்.. என்கிற யதார்த்தமான அச்சங்களும் சந்தேகங்களுமே மனிதனின் அகம்பாவம் அற்ற சிந்தனைகளாக இருக்க வேண்டும்.. 

ஆனால் அவ்வாறு அற்று, "தன்னை" சுயம்பென்று சிலிர்த்துத் திரிகிற தினவு கொண்ட பற்பல மனிதர்கள், அதுவும் குறிப்பாக அரசியல் வாழ்வினை சார்ந்து இருப்பவர்கள் .... 

மண்ணில் விளைந்ததைத் தின்று அந்த ஷக்தியிலே நமது அப்பன் விந்தில் நாம் ஜனித்தோம்.. நாமும் அதே விதமாகத் தான் நமது சந்ததிகளை ஈன்றோம்.. அதே மண் நமது அப்பாக்களை உள்வாங்கிக் கொண்டன.. அடுத்து நம்மை.. !!

இந்தப் பிராசஸ் ஐந்தறிவு ஜீவராசிகளின் கோட்பாடுகள் படி தான் நடக்கிறது. ஆனால், பீஸா -பர்கர் -ப்ரைட் ரைஸ் -புலாவு -கீ-ரைஸ்- நாண் -ரொட்டி -தந்தூரி -சிக்கன் ப்ரை - பிஸ் ப்ரை .. இதர இதர .. 
நமது ஆறாம் அறிவின் கற்பனைத்திறன் நிமித்தம் வாய்களுக்குப் பற்பல வகையறாக்களில் உணவுகளை அறிமுகப் படுத்துகிறோம்.. சில உணவுகளை கற்பனை செய்தாலே கூட,  நாவில் ஜொள் சுரந்து சட்டை நனைக்கிறோம் .. எவரேனும் இந்த அசிங்கத்தை கவனித்து விட்டனரோ என்று துணுக்குற்று சுற்றுமுற்றும் பார்த்து  கைக்குட்டையில் அவசரமாகத் துடைக்கிறோம் .. வாஷ் பேசின் ஓடி க்ளீன் செய்யத் துரிதப் படுகிறோம்.. 

ஆனால், ஒரு மாடு அன்று முதற்கொண்டு தட்டுப் போரையும் மசால் இலைகளையும்  புற்கள் கீரைகளை மட்டுமே அரவை போட்டுக் கொண்டு ஆனந்தமாக  வாழ்கிறது.. கட்டுத் தாரையில் எத்தனை சாணங்களை கவனிக்க நேர்ந்தாலும் முகம் சுழிக்கவோ மூக்கைப் பிடிக்கவோ நாம் செய்வதில்லை.. 
ஆனால், நம்முடைய மனித இனத்திலே ஒருவன் போய் விட்டு வந்த கக்கூஸுக்கு நாம் அடுத்து செல்ல நேர்கையில், அவனுடைய அசிங்கங்கள் அங்கே ஏதேனும் அடையாளமாக வீற்றிருக்கும் பட்சத்தில், வருகிற அசூயையும்  அவன் மீதான எரிச்சலும் சொல்லி மாளாது.. 

எதையோ சொல்ல என்று ஆரம்பித்து கதை எங்கெங்கோ போய் விட்டது.. தவறுதலாக எதையேனும் சொல்லி இருக்கும் பட்சத்தில் எமது ரசிகப் பெருமக்கள் மனமுவந்து  மன்னிக்க முன்வந்து மேற்கொண்டும் எம்மை ஆதரிக்க வேண்டுமாறு பணிவன்போடு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.. 
நன்றி மக்களே... !!

Saturday, December 12, 2015

மெட்ராஸ்........

சென்னை மழையை விடுத்து வேறொன்றை எழுத யோசிக்கிற திராணி அறவே அற்று விட்டதாகையால், சமீப எமது வெண் தாள்கள் எந்தக் கரைகளும் அற்று வெறுமே கிடக்கின்றன.. 

அந்த அடர்ந்த சோகங்களை கவிதை எழுதி எமது அஞ்சலி சமர்ப்பிக்க ஓர் எண்ணம் இருந்த போதிலும், அதென்னவோ ஒரு பரமானந்தத்தை கவிதையாக்கி குதூகலிக்கிற உற்சாகம் இந்த மழை குறித்து எழுதுவதற்கு நைந்து நமுத்துப் போனது போன்றொரு இறுக்கம் மனம் நெடுக.. 

நொந்து நூலாகிக் கிடக்கிற மக்களை எந்தக் கவிதை கொண்டு நிரப்ப?.. அன்றாட அவஸ்தைகளில் அறுந்து போய்க் கிடக்கிற அவர்களின் வாழ்க்கையை எந்தக் கவிதை ஊசியில் தையலிட??

இந்தத் தருவாயில், மற்றொன்றை யோசித்துப் புனைவதை  சிரமமாகவே மனசு ஏனோ உணர்வது வினோதமே.. 

அவர்களோடும் அவர்களது அவஸ்தைகளோடும் என்னால் ஊடாட சாத்யப் படவில்லை  என்ற போதிலும், இங்கிருந்து கொண்டே அவர்களுடைய வாழ்க்கைப் போராட்டங்களில் நானும் பங்கெடுக்கிற ஒரு சிறு கற்பனையில் மூழ்கித்  திளைக்கப் பார்க்கிறேன்.. 

வீடிழந்து பொருட்கள் இழந்து  ரெயில்வே பிளாட் ஃ பாரத்தில் என் குடும்பமும் தத்தளிக்கிற கற்பனை.. பசிக்குப் பாப்பா அழுகிறாள்.. பசி மயக்கத்தில் அம்மாவும் மனைவியும்....
எதையாவது செய்தே தீரவேண்டிய கட்டாயத்தில் நான்.. 

விபரீதம் நிகழாத பிராந்தியத்தில் உட்கார்ந்து கொண்டு கற்பனை செய்கிறேன்.. நாங்களும் சென்னை வாழ் பிரஜைகளாக இருந்திருக்கும் பட்சத்தில், மேற்சொன்ன யாவும் நிச்சயம் கற்பனைகளாயிருக்க வாய்ப்பில்லை என்றே  கருதுகிறேன்.. 

ஐயோ........................

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...