Wednesday, February 22, 2012

அற்பனின் ஆயுள்....

தற்கொலைக்கு
ஆயத்தமானவனுக்கு
தலைவலிக்கான
தைலம் எதற்கு??


வாழ்ந்தே
ஆகவேண்டும்
என்று பிடிவாதமாக
வாழ்ந்த நாட்களில்
கூட எவ்வளவோ
தலைவலிகளைப்
பார்த்தாயிற்று..
தைலங்களைத்
தவிர்த்துமாயிற்று...

ஆனால் ஒரே
முடிவாக சாவைத்
தேர்ந்தெடுத்த
பிற்பாடு
தைலம் வாங்க
சில்லறை தேடுவது
விநோதமாக உள்ளது
அவனுக்கே...


தேடிய சில்லறை
காணாததால்
நூறு ரூபாய் கொடுத்து
தைலம் கேட்டான்..
நூறுக்கு சில்லறை
இல்லை என்றதும்
தலைவலியோடே
செத்துவிடுவோமா என்று
யோசித்தான்...


தைலத்தை மட்டும்
வாங்கிக்கொண்டு மிச்ச
சில்லறையை வாங்காமல்
விட்டால் தான் என்ன
என்று மறுபடி 
கடைக்கு வந்தான்...


சில்லறை வேண்டாமென்று
தைலம் வாங்கித் தடவியவன்
தலைவலி தீர்ந்ததும்
மிச்ச சில்லறை கேட்டு
கடைக்காரனுக்கு தலைவலி
உண்டு பண்ணினான்...


கோபத்தில்
சில்லறை தராத கடைக்காரன்
மாரடைப்பில் செத்துப் போனான்..
இவன்..
-மிச்ச சில்லறையை 
வாங்கமுடியாமல் 
தற்கொலையைத் 
தள்ளிப் போட்டான்...!!
                                                       

சுந்தரவடிவேலு..

Friday, February 17, 2012

நன்றிகள்..

மதிப்பிற்குரிய அனைவருக்கும்...
நான் சுந்தரவடிவேலு... நலம் நலம் அறிய அவா...
இப்பவும் என் இதயம் மறுபடி ஓர் மெல்லிய தொந்தரவு கொடுத்ததன் நிமித்தம் angioplasty என்கிற ஓர் சிகிச்சையினை மேற்கொண்டு திரும்பியுள்ளேன்..

எனது உடல் நலம் தேறுவதற்கான நம்பிக்கைகளையும் பிரார்த்தனைகளையும் எனது இனிய வலைதள நண்பர்கள் மேற்கொள்வதற்கு கைம்மாறாக நான் என்ன செய்யக் கூடுமோ தெரியவில்லை... இப்போதைக்கு நன்றி சொல்வதை தவிர எனக்கு வேறு வார்த்தைகள் பிடிபடவில்லை...


சேர்தளம் சார்ந்த இனிய நண்பர் வெண்புரவி அருணா, சிவா மற்றும் அனைவருக்கும் எனது நன்றிகளை காணிக்கை செய்யக் கடமைப் பட்டுள்ளேன்...


நன்றி..
நலமுடன்.. சுந்தரவடிவேலு.. 

Sunday, February 5, 2012

ஆசை[கள்]



நிராசைகளின்
பேரிரைச்ச்சல்
மனசெங்கிலும்...

ஆசைகளின் 
நீண்ட பட்டியலில்
விரல் விட்டு
எண்ணும்படியாக
நிறைவேறிய 
சில ஆசைகளெல்லாம் 
பிரக்ஞையில் இல்லை...

நிறைவேறாதவற்றின்
மீதாகத் தான் 
அபரிமித பிரக்ஞை
குவிந்திருக்கிறது...
--அவைகளின்
அயராத இரைச்சல்களே
என்னை ஒட்டுமொத்த
செவிடாக்கும் வல்லன்மை
கொண்டுள்ளன.

புறமிருந்து தரிசிப்பவர்களுக்கு
எனது அமைதியும் மென்மையும்
எவ்வளவு முரணானவை
என்பதை நானே அறிவேன்...!

உலக ஆசைகளினின்று
விலகி நின்று 
பற்றற்று வாழ்தல் வேண்டும்
என்கிற மேன்மையான
சித்தாந்தங்களோடு
வாழ்வைத் துவங்கியதாகவே
கருதுகிறேன்...

ஆனால் நாளடைவில்
எப்படி இப்படி 
புறம்போக்குக்கு எல்லாம்
பட்டா தயாரிக்க
மனசு தாவிற்றோ அறியேன்..

அமைதியான குளத்தின்
சிறு சலனத்தையே
சலிப்பாய் உணர்ந்தவன்  நான்..
---இன்றைக்கு 
எப்படி அவைகளை
சிற்றலைகளாய் ரசிக்கப்
பயிற்றுவிக்கபபட்டேனோ..!?..

---எனக்கே நான்                      
முரணாகப் புரிபடுகிறேன்..!!
!
சுந்தரவடிவேலு..

Friday, February 3, 2012


..
அமைதி..

வெண்கலக் கடைக்குள்
அமைதியாக இருந்தது
யானை..!
பரவாயில்லையே 
என்று பார்த்தால் 
அது 
வெண்கல யானை..!!

Thursday, February 2, 2012

சில நேரங்களில் சில கவிதைகள்...


       

பிரார்த்திப்பது
பல கடவுள்களை
என்பதால்---
எதிலாவது
வெற்றி பெறுகையில்
காப்பாற்றியது
எந்தக் கடவுள்
என்கிற குழப்பம்
எப்போதுமே...!!
--------xxxxx--------

அனிச்சையாக
நடந்து கொள்ள 
முயல்கிறேன்...
---விபத்துக்களை
எதிர்பார்க்கிறேன்;
--விழிப்பினூடே
கனா காணுகிறேன்..,
---உறக்கத்தில்
உன்னோடு உரையாடுகிறேன்..;
---இறந்து 
இரண்டு மணி நேரம்
கழித்து 
எழுந்து கொள்ள 
யத்தனிக்கிறேன்...??
--------++++++---------

மறுபிறப்பு 
உண்டென்கிற 
அனுமானங்கள் 
சலிப்பை ஏற்படுத்துகின்றன..!
--இந்த மாதிரி
எத்தனை பிறவிகள்
எவ்வளவு முறைகள்
சலித்துக் கொண்டேனோ??
-------========---------             


சுந்தரவடிவேலு 

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...