Friday, July 31, 2015

அந்த சேலை..

அந்தப் புதிதாகத் திறக்கப் பட்ட ஜவுளிக் கடையில் கூட்டம் அலைமோதியது.. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு ஜவுளி வாங்கும் பட்சத்தில் அதற்கு இனாமாக குண்டா அண்டா தட்டு குக்கர் ஃபிளாஸ்க் என்று வகையறா வகையறாவாக கொடுத்து அசத்தியதில் மக்கள் கடலெனத் திரண்டு அலை பாய்ந்தனர்.. !

நானுமே கூட ஏதாவது தோதாகக் கிடைத்தால் எடுத்து அந்த இனாம் வாங்கும் இலக்கை அடையப் பிரயத்தனித்தேன்...

ஹேங்கரில் தொங்கும் சேலை வகைகள் சொற்ப காசுக்கே பரவாயில்லை என்கிற விதமாக வீற்றிருந்தன.. 
ஒரு சேலை பார்த்ததும் கபளீகரிக்கும் விதமாக இருந்தது.. அதாவது எனக்கு அப்படி இருந்தது.. எல்லாருக்கும் அப்படி இருந்திருக்கும் பட்சத்தில் இந்நேரம் அது பறந்து போயிருக்கும்.. ஆனால், என் ரசனை மிக உன்னதம் அடங்கியது என்கிற பெருமிதம் எனக்கு எப்போதும்.. 

ஆனால் அப்படி எல்லாம் பிரம்மாதம் என்று என் மனைவியிடத்துக் கூட ஒரு சிறு அங்கீகாரம் கிடைக்காதது எனக்கொன்றும் பெரிய கவலை இல்லை.. ஏனெனில்,  எனது  ரசனை புரிபடுவதற்கும் ஏற்பதற்குமே ஒரு தனிப் பட்ட ரசனை தேவை என்கிற கன்னாபின்னா அகந்தை எனக்கே சற்று வெட்கம் சுரக்க  வைத்திற்று.. !!

விஷயத்திற்கு வருகிறேன். ஏனென்றால், ஒருபக்கக் கதை என்பது தான் எனது இலக்கு. அது அடுத்த பக்கம் பரவுவதோ, அல்லது தொடரும் சொல்லி நிறுத்துகிற  அபரிமித எழுத்தாளனோ  அல்ல நான்.. 

அந்த என்னைக் கவர்ந்த சேலை என் மனைவிக்கு எடுப்பாகத் தான் இருக்கும்.. ஆகவே உடனே அதனைக் கவ்விக் கொண்டு விடவேண்டும் என்கிற ஆற்றாமை என்னில் பிரவகித்த போதிலும், எடுத்துச் சென்றான பிறகு புறக்கணிக்கப் படுமாயின் , எனது ரசனை இழுக்கடைவது மாத்திரம் அற்று முன்னூற்று சொச்சம் ரூபாயும் அபேஸ் ஆகிவிட்ட உணர்வு ஆட்கொள்ளும்.. 

ஆகவே 'அவளையே அழைத்து வந்து முயன்று பார்ப்போம்' என்கிற தீர்மானத்தில், அவளை அழைத்துவந்தேன்.. 

திருவிழா கூட்டத்தில் குழந்தை தொலைந்த பீதியில் கவலையில் தவிக்கத் துவங்கிற்று  மனது.. ஆம், அந்த சேலை காணோம்.. எவளோ எனது ரசனை ஒத்தவள் அள்ளிக் கொண்டாள் என்கிற அவசர அனுமானம் எனக்கு.. 
மனைவியிடம் சொன்னதும் என்னை வயிற்றில் கத்தி எடுத்துச் செருகாத குறையாக   சொன்னாள் .. "பார்த்தீங்க. உடனே எடுத்துத் தொலைய வேண்டியது தானே?.. அப்படி எனக்கு பிடிக்கலைனா கூட , எடுத்துட்டு வந்து வேற சேல  மாத்திக்கவா முடியாது? "

அவளது ரௌத்திரத்தில் அர்த்தம் உள்ளதென்று ஒப்புக் கொண்டேன் நான்.. 
ஆகவே, வாயை மூடிக் கொண்டு நின்று கொண்டேன்.. 

ஆனால் சிறிது நாழிகையில் அந்த சேலை எனது கண்களில் பட்டு சிலிர்த்துக் கொண்டேன். உடனே 'இது தான்' என்று குதித்துச் சொல்ல அவா கொண்டவன், உடனடியாக என்ன காரணத்தாலோ, அவளது ரசனையை கவனிக்க வேண்டும் என்று வேடிக்கை பார்க்கத் துவங்கினேன்.. 

ஒவ்வொரு சேலையாக அலசி ஆராய்ந்து கொண்டே வந்தவள், நான் பார்த்து வைத்த அந்த சேலைக்கு வந்ததும் அதனை உருவினாள் .. எனது மனமே வழுக்கிற்று.. அப்படி இப்படி திருப்பிப் பார்த்தாள் .. பிரித்துப் பார்த்தாள் .. 

அதனை மறுபடி அவள் ஹேங்கரில் மாட்டி விட்டதும் என் மனதும் தூக்கில் தொங்கியது  போன்று உணரத் துவங்கியது.. 

அதற்குப் பிறகு அரைமணி நேரம் கழிந்து ஒரு பாடாவதி சேலையை எடுத்து வந்து காண்பித்து, "'இது பாருங்க.. நீங்க நேத்து பார்த்து மிஸ் பண்ணினதை விட  நல்லா இருக்கும்னு  நெனைக்கிறேன்" என்றாள் .. 

"ஹேய்.. வாட் எ மிராக்கிள் .. இத, இதத்தான் நேத்து .." என்று இழுத்ததைப் பார்த்ததும் புளகாங்கிதம் உதிர்த்த அவளது கன்னங்களில் பளீர் என்று போட வெறி  எனக்குள்.. 

அது போக, "முன்னூத்து சொச்சம் ன்னு சொன்னீங்க. இது ஐந்நூத்து இருபது " என்றாள் .. 

'மாத்தி சொல்லிட்டேன் போல' என்று சமாளித்தேன்.. 

அந்த சேலைக்கு பில் போடுவதற்கு முன்னர், நேற்று நான் பார்த்து வைத்த சேலையை எடுத்து வந்து ஒருத்தி பில் போட்டாள் .. 

"அந்த சேலை பாருங்க. இத விட சூப்பரா இருக்கு" என்ற எனது மனைவியை கொஞ்சுவதா கொல்லுவதா என்று திணறிப் போனேன்.. 

'இத்தனைக்கும் இதை நீ வேற கைல எடுத்துப் பார்த்தே!' என்று வாதிட நினைத்தவன் வாயை மூடிக் கொண்டு, ரூ.520 ஐ எடுத்துக் கொடுத்தேன்.. 

Tuesday, July 28, 2015

பொய்யான நிஜங்கள்..

ரிதார ஒப்பனைகளைக் 
காட்டிலும் 
தத்ரூப யதார்த்தங்கள் 
மிக வசீகரிப்பவை.. 

எனிலும் 

நிர்வாண யதார்த்தங்களுக்கு 
ஆடை ஒப்பனைகள் 
தவிர்ப்பதற்கில்லை..!

தனித்திருக்கும் 
நமது அறைக் கண்ணாடி 
ரகசியங்களாக 
அவைகளை நிவர்த்தி செய்வோம்..!!

குறிவைத்து 
இலக்கு நிர்ணயித்து 
தவறுகிற குறிகள் 
மிக இம்சை தருபவை..!

அனிச்சையான வீச்சில் 
தெறித்துப் பிளவு படுகிற 
அந்த விபத்து 
மிகவும் சுவாரஸ்யமானது..!!


அப்துல்கலாம் ..

ன்னுமொரு நூறாண்டு காலங்கள் வாழ்ந்தாலும் போதாது .. மேலும் மேலும் இருந்தவண்ணமே இவ்வுலகின் எல்லா தலைமுறைகளுக்கும் காட்சி தந்த வண்ணமே இருந்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்? !!
என்றே பெருமூச்செறியத் தோன்றுகிறது அப்துல் கலாமை நினைக்கையில்.. !!

இறவாமை வரம் கலாமுக்குப் பொருத்தமாகத் தோன்றுகிறது.. 
நாமெல்லாம் சத்தியமாகப் பிறவாமை வரமே பெற வேண்டும்.. ஆனால், கலாம் மறுபடி பிறந்து வந்தால் பரவாயில்லையே என்று அங்கலாய்க்கிறது மனது.. 
இத்தனைக்கும் பிறவாமை வரமே வேண்டுமென்று நாமெல்லாம் சதா பிரார்த்திக்கிறோம்.. 
நாமெல்லாம் பிறக்கவேண்டும் மறுபடி என்று நினைத்தால் கூட, பிறக்கக் கூடாது.. ஆனால், பற்பல கலாம்கள் இந்தப் பிரபஞ்சத்தில் பிறந்த வண்ணமே இருக்க வேண்டும் என்பதே நமது ஆசைகள் ஆகும்.. 

நேர்மை, எளிமை, திறமை, பகுத்தறிவு, அடக்கம், நுண்ணுணர்வு, செயலாற்றல், என்கிற அத்தனை பட்டியல்களுக்கும் சொந்தக் காரர் இவரே....இவரைத் தவிர்த்து இன்னொரு நபரை  சல்லடை போட்டுத் தேடினாலும் காணக் கிடைப்பதரிது.. !!

பொருள் சார்ந்த இவ்வுலகில், அவைகளை செவ்வனே மக்கள் அனுபவித்தால் போதும் என்று தன்னை அதனில் இழைய வைக்காது, விலகி நின்று ரசித்த மகத்தான மேதை அவர்.. 
அஞ்ஞான குழாம் நடுவே விஞ்ஞான கலாம் என்று தனக்கொரு தனி அடையாளத்தைப் பதித்திருக்கிறது காலம் அவரிடத்து.. 

நாமெல்லாம் நிறையக் கிழித்து விட்டது போன்று, சற்றே வயோதிகம் நெருங்கத் துவங்கும் முன்னரே ஓய்வுக்கான "ஈஸிச் சேர் " களை விலை பேச ஆரம்பித்து விடுகிறோம்.. 
ஆனால், உடலில் உபாதைகளை வைத்து அதற்கான மருத்துவங்களை மேற்கொண்டு, இந்தத் தள்ளாத 83 வயதிலும் பிற மாநிலம் சென்று அங்குள்ள மாணவர்களுக்கு தமது கருத்துக்களைப் பகிர்ந்து நேரத்தை உபயோகமாக செலவிட வேண்டுமென்ற  மாண்புமிகு நோக்கமதை என்ன வார்த்தைகள் இட்டு வர்ணிக்க? 

சாதி மதங்களைக் கடந்த அந்த வெள்ளந்திப் புன்னகை.. சமத்துவங்களைப் பரப்ப முயல்கிற ஒருவித அன்னியோன்யம்... பள்ளிக் குழந்தைகளினிடத்து அவர் காண்பிக்கிற காருண்யம்.. 

ஆனால் ஒரே மகத்தான துரதிர்ஷ்டம் என்னவென்றால், இப்போது பதவியில் உள்ள ஆளும் கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரிடத்தும் இவருடைய தன்மை கிஞ்சிற்றும் கூட இல்லை என்பதே.. 

இவர்களுக்கெல்லாம் மக்கள் கோவிலைக் கட்டி சாமி போன்று உட்கார வைத்திருக்கிறார்கள்.. ஆனால் அந்த சாமி எப்போது கோவிலை விட்டு ஓடும் என்று எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள்.. தாம் சென்று சாமியாக அமர்கிற களவாணித் திட்டங்கள் தீட்டி வன்மம் ததும்பிக் கிடக்கிறார்கள்.. 

ஆனால் கலாம் போன்றவர்கள், சாமி பதவியையே  தூக்கி எறியத் துணிந்தவர்கள்.. 
மக்களாகிய நாம், இவர்களைப் போன்றவர்களின் கால்களைப் பற்றியே அடைக்கலமாக விரும்புகிறோம் என்றென்றும்..!!
Saturday, July 25, 2015

பாகுபலி...

மெகா பிஸிக்கல் அனிமேஷன் என்று இந்தப் படத்தை சொல்லப் பொருந்துமா?
அருவியும் பாறைகளும் கதாநாயகன் பறப்பதும் .. என்று எல்லாமே அனிமேஷன் என்ற போதிலும், மரகதமணியின் பின்னணி இசையும் ஒளிப்பதிவும் யாவற்றுக்கும் ஒருவித உயிரோட்டத்தை, ஒருவித நம்பகத் தன்மையை சமர்ப்பிக்கின்றன..

போர்க்காட்சிகள் மிகவும் சவுண்ட் பொல்யூஷன் .. 
போருக்கான அந்த உத்திகளும் அதற்கான வரைபடங்களும் முன்னேற்பாடுகளும் பிரம்மாதம் பிரம்மாண்டம் என்றால், அவை நிகழ்கையில் நமக்குள் நிகழ்கிற உணர்வுகளும் அதை விட.. 

தத்ரூபம் படம் நெடுக தாண்டவம் ஆடுவது போன்றொரு மாயை.. ஆனால் உற்றுப் பார்த்தால் யாவும் அட்டையில் அலங்கரித்து ஒட்ட வைத்த ஒரு வித மறைமுக செயற்கை .. அந்தக் கொட்டுகிற அருவி உட்பட ..!
கார்ட்டூனில்  குதூகலித்து லயிக்கிற மழலை உணர்வோடு பெரியவர்களும் அகமலர்ந்து கொஞ்ச நாழிகை அரங்கினுள் ரசிக்கலாமே அன்றி, யதார்த்தத்தின் விலை என்ன என்று கேட்கிற வகையில் நாயகன் நாயகி என்று எல்லாரும் பட்டாம்பூச்சியாகப்  பறந்து பந்தாடுகிறார்கள்.. 

இவர்கள் செய்த செலவின் உதிரிகளைப் பொறுக்கினாலே கூட  நூற்றுக் கணக்கான "காக்கா முட்டை" போன்ற யதார்த்த சினிமாக்களை சுலபத்தில் எடுத்து விடமுடியும்.... 

ஆனால் தொடர் யதார்த்தங்களும் கூட சுவை குன்றியும் சலிப்பு ஏற்படுத்தியும்  யதார்த்த சினிமாவை அசுவாரஸ்யமான  ஒரு தளத்தில் சென்று விட்டுவிடக் கூடும்.. அதனால் தான், இப்படியான பிரம்மாண்டமான ஒரு "க்ளவுட் பர்ஸ்ட்"ட்டில்  சிக்கிச் சீரழிந்துவிட்டு.. 

மென்காற்றில் வந்தொரு அமைதிப் பூங்காவில் அமர்ந்து இளைப்பாறுகிற அனுபத்தைத் தருகிற இயல்பான சினிமாவினுள் இழைகிற சுவாரஸ்யம் அமையப் பெறும் .. 

படத்தைப் பார்த்து கதை சொல்க.. .. .. !


ன்பே ராசா.. ஒனக்காகத் தாண்டா இந்தப் பாலைவெளியில வெய்யில்ல குப்புறப் படுத்துட்டு கூலிங் கிளாஸோட யோசிச்சிட்டு இருக்கேன்.. நீ எப்ப வருவே இந்தப் பூவை எப்ப தூக்கிட்டு போகப் போறேன்னு தவியா தவிச்சுக்கிட்டு கெடக்கேண்டா செல்லம்..
நீ இல்லாம இந்தத் தனிமைல வாழுறது ரெம்பச் சிரமண்டா கண்ணு.. புரிஞ்சுக்க.. இந்த தேவதைய தனியா உட்டுப்பிட்டு எப்பட்றா ஒனக்கு போக மனசு வந்திச்சு? நான் ஆம்பளையா இருந்து, எனக்கு இப்புடி ஒரு சிட்டு கெடச்சுதுன்னா அப்டியே அலேக்கா தூக்கிட்டு அந்த வானத்துல பறந்துட்டு இருப்பேன் இந்நேரம்.. நீ என்னடான்னா ..?
உன்னோட ஏக்கத்துல உடலு கருத்து , இந்த வாழ்க்க வெறுத்து, துக்கம் பருத்து, தவிக்குதுடா தென்னங்குருத்து..
போதும்  உன்னோட கருத்து.. இத்தோட இத நிறுத்து" ன்னு நீ சொல்றது இந்தக் குயிலுக்குக் கேக்காம  இல்லே..

ஒன்னே தனியா விட்டுப் பிட்டு வந்தது குத்தம் தான் புள்ள.. . ஒத்துக்கறேன்.. அத நெனச்சு தானே ராவா இந்த பீரை ஊத்தி ஊத்தி நெதமும் ஊறுகா கூட இல்லாம,  ஊத்திக்கிட்டே கெடக்கேன்.. போதும் புள்ள நீ குப்புறப் படுத்துக் கெடக்கறது.. மல்லாக்கப் படு தாயி , அப்டியே அந்தக் கூலிங் கிளாஸை ஸ்டைலா மாட்டிக்கிட்டு வானத்தை ஒரு சைன்டிஸ்ட் மாதிரி லுக்கு விட்டின்னா எடுப்பா இருக்கும் மயிலு..     
கவ்லய வுடு கண்ணு.. இங்கிட்டு ஒன் நெனப்புல நான் படுக்க முடியாம நின்னுக்கிட்டு அல்லாடறேன்.. நீ அங்குட்டு என் நெனப்புல எந்திரிக்க முடியாம குப்புறக் கெடக்குறே.. என்னாடா செல்லம் விதி இது?
                                                                                                                                                                                                                   
ஐயோ நிக்க முடியல புள்ள.. இப்ப ஒன்ன நெனச்சுட்டு வோட்கா சாப்பிடறேன்.. பீரு ரொம்ப போரு கண்ணு.. டாஸ்மாக் இல்லாமலே சரக்கு கைக்கு சும்மா சரக்கு சரக்குன்னு வருதுன்னா அதுக்கு காரணமே நீயும் உன்னோட நெனப்பும் தாண்டி ராசாத்தி. நீ பக்கம் இருந்தா கூட இவ்ளோ ஜில்லுன்னு ஒடனே ஒடனே கெடைக்கும்மான்னு டவுட்டு.. தள்ளியே கெடடி ராசாத்தி.. அடுத்ததா ஒயினு விஸ்கி எல்லாம் வருதான்னு பார்ப்பம்.. 


அட போடா உங்கொய்யாலெ .. நீயெல்லாம் ஒரு மனுஷனா.. சரக்குக்காக இந்தப் பூங்குயிலையே வேணான்றியே .. உன்னயெல்லாம் உசுரோட பொதைக்கனுண்டா இத்த நாயி.. நீ அங்கியே எக்கேடோ கெடு  .. என்னெ ஆள வுடு .. எனக்கொரு மவராசன் ஆப்பீஸ் போகச் சொல்லி ஹேண்ட் பேக் கொடுத்திருக்காரு.. அங்குட்டு ஒரு பயல மடக்கிப் புடறேன். என்னடா குப்புறக் கெடந்தவ ஒருக்களிச்சு  படுத்திருக்கான்னு தானே பார்க்கறே?.. இவுக ஸ்டோரிய படிச்சா சிரிப்பு சிரிப்பா வருது, ஏன் புள்ளே?.. நம்மள மாதிரி அன்யோன்யமா இருக்கத் தெரியாத சென்மங்களா இருக்கே.. சரி சரி வாயக் கொப்புளிச்சுட்டு  பெட்டுக்கு வா.. லிப்லாக்ல சித்த நாழி கெடப்போம்.. ஹிஹி.. 

Wednesday, July 22, 2015

கரைதல்..ன்னில் ஊடுருவும் 
சாத்யக் கூறுகளை யோசிக்கிறேன்..
என்னிலேயே பிறந்தநாள் தொட்டு 
இருந்திருந்து அலுத்துப் போயிற்று 
எனக்கு.. 

உமது அவயவத்தின் ஏதோ 
ஒரு பிராந்தியமாக என்னால் 
வீற்றிருக்க முடியாமற்போனது  
எமது துரதிர்ஷ்டம் ...

கண்கள் மாதிரி உடனே 
ஸ்பரிசிக்கிற யோக்யதை 
கைகளுக்குக் கிடைக்காத 
சாபம் .. உன்னைத் தொடுகையில் 
தீரத் தான் தீரும்.. 

உன்னைத் தொடுகையில் 
உன்னில் நானும் 
கரைந்துவிடுவேன் என்பது 
எனது உத்தேசம் .. 
விடவேண்டும் என்பது  
எனது பிரார்த்தனை.. 

மறுபடி நானாக அற்று 
நீயே என்றாகி 
நிறைவு வரைக்கும் 
இருந்து சாகும் எண்ணம் எனக்கு..!!

Tuesday, July 21, 2015

பஞ்சாயத்து..

அந்தக் காய் வண்டிக் காரனிடம் ஜானகியின் பேரம் எனக்குள் ஒருவகை இனம்புரியா இம்சை தருவதாக இருந்தது..
நான்கைந்து வீட்டு வாடகைகள் வருகின்றன.. அவை போக வட்டிக்காசு வருகிறது வீடு தேடி.. நகரின் பிரதான பிராந்தியத்தில் காம்ப்ளெக்ஸ் கடைகள் வாடகை வேறு வருகிறது..

எனது வீட்டு ஜன்னல் வழியே இந்த அசூயை தருகிற "பேர சினிமா" அரை மணிக்கும் மேலாக விளம்பர இடைவெளி அற்று ஓடுகிறது..
ஜன்னலை சார்த்துகிற திராணி எனக்கு அற்றுப் போயிற்று.. ஏனெனில், ஜானகி என்பவள் பேரம் பேசி கொஞ்சம் அசிங்கமாகத் தெரிந்தாலும், அவளது உடல்மொழி அலசி ஆராய உகந்ததாகவே இருந்தது..
என்னுடைய சபலங்கள், அவளது பேரத்தைக் கூட நியாயப் படுத்தி விடுகிற அக்கிரமம் நிரம்பியவை..

இப்போது கூடப் பாருங்கள்.. அவளது பேரத்தை மையப் படுத்தி அவளைக் கேவலமாக சித்தரித்து ஒரு சிறுகதை புனைகிற நோக்கில் தான் இதனை எழுத விழைந்தேன்.. ஆனால், சற்றே பிசகி அவளது பேரக் கட்சியில் இணைந்து அவளது கொள்கை பரப்பும்  செயலாளனாக செயல்படும் தீவிரத்தில் என்னால் இப்போது இயங்க முடிகிறது..

ஆரம்ப கட்டமாக என்னுடைய பரிதாபத்துக்குப் பாத்திரமாக அந்தக் காய்க்காரன் இருந்தான் என்ற போதிலும், இந்தக் காட்சி அமைப்பில் அவனை பேசாது வாய்மூடி இருக்கச் சொல்லி என் இதயம் பரபரத்தது..

முன்டாஸ் பனியனில் இருந்த நான், சட்டை மாட்டிக் கொண்டு அந்த ஜானகியை நெருங்கி.. "என்ன பிரச்சினை?" என்றேன்..
மனம் கவர்ந்த ஒருத்திக்காக ஒரு பஞ்சாயத்துத் தலைவனாகவே மாறிவிட முடிகிறது என்னால் .. !
வீட்டில் நடக்கிற அற்பப் பிரச்சினைக்குக் கூட எந்தத் தீர்வையும் எளிதில் காண சாத்தியப் படாத என்னால், எப்படி ரோட்டுக்கு வந்ததும் சிங்கம் போன்று கர்ஜித்து . கேட்பவரை துவம்சம் செய்கிற வகையிலே உரையாடி ஒன்றுமில்லாமல்   செய்து விட முடிகிறதோ என்று என் மனைவி குழந்தைகள் ஆச்சர்யம் த்வனிக்க என்னை அதே ஜன்னல் வழியே வந்து  நோட்டமிடுவதை ஒருவகைப் பெருமிதமும்  லஜ்ஜையும் கொண்டு தான் காண முடிகிறது ...

நன்றி நவில்கிற நாகரீகம் புரியாத ஜானகி அவளது பேரத்தில் ஜெயித்து நகர்ந்து விட, கொலைவெறியில் காய்க்காரன் வெறிப்பதைத் தவிர்க்கும் பொருட்டு "இந்தத் தேங்கா என்ன வெலைப்பா?" என்கிற எனது சுரத்தற்ற கேள்விக்கு  "நகரு சாரு .. நீ தேங்கா வாங்கிக் கிழிச்சது போதும் ' என்று சொல்லாமல் சொல்லி நகர்ந்தான் காய்க்காரன் .. 

'இனி என்ன ஆனாலும் வேடிக்கை பார்ப்பது மட்டும் தான் எனது வேலை '  என்கிற கொள்கையோடு என் வீட்டிற்குத் திரும்பினேன்.. 

எனது மனைவியின் மௌன நக்கல்கள் வலி ஏற்படுத்துபவை.. 
இருப்பினும் 'இதெல்லாம் சகஜமப்பா' என்கிற ரீதியோடு வாழப் பழகியவன் நான்.. 

Monday, July 20, 2015

ஹைக்குப் பயித்தியம்..

ஒரு முரட்டுச்
சோம்பேறிக் கவிஞனின்
கண்டுபிடிப்பு...

மூன்று வரி தாண்டி
நான்காம் வரிக்குத்
திணறுகிறவனின் சாக்காடு..

சுருங்கச் சொல்லி
விளங்க வைக்க மெனக்கெடுகிற
புத்திசாலித்தனம்..

மயிலேறி உலகை வலம் வரும்
முருகனை கேலி பேசுகிற
விநாயகன்..

ஆயுதங்கள் வைத்துக் கொண்டே
அஹிம்சை போதிக்கிற
காந்திகள்..

Wednesday, July 15, 2015

கபடக்காரி..

காதலித்தது 
நாமெனிலும் 
காதலில் ஜெயித்தது நீ.
தோற்றது நான்.. 

என் இதயம் 
உன்னைக் கவர்ந்ததாக 
நம்பியிருந்தேன்.. 
என் சொந்த வீடும் 
சொகுசுக் காரும் 
என்பதை பின்னர் அறிந்தேன்.. 

என்னை மயக்கிய 
உனது நளினத்தை 
மலினமென்று 
இன்றுணர்ந்து உடைகிறேன்.. 

அன்றைய எனது 
அறியாமைகளுக்கான  
இன்றைய வெட்கங்கள் 
பெரு நோயாக இம்சிக்கிறது.. 

ஆனாலும் கூட 
உனது நடிப்பை 
உண்மை என்று நம்பிய 
அந்த நாட்கள் 
எனக்கு மிக 
ரம்மியமானவையே..!

ஆனால் 
அன்றும் இன்றும் 
கபடங்களினூடே 
காதலின் உன்னதங்களை 
உணராமலே வாழ்கிற 
உமது சாபக் கேடுகள் 
குறித்து எனக்கும் 
உன்னை தோற்கடித்த 
உணர்விருக்கிறது.. 

இருப்பினும் 
இந்த வெற்றி என்னில் 
ஒருவித அசூயை 
பரப்புவதாகவே  உள்ளது..!!

Monday, July 13, 2015

அற்புதமான சிறுகதை [இத நீ சொல்லக் கூடாதுடா.. நாங்க படிச்சு சொல்லணும்.. ]

  அற்புதமான சிறுகதை 
[1]

இந்தக் கருவை நான் பலவாறாக யோசித்து, சிறுகதையாக, குறுநாவலாக, நெடுந்தொடராக.. பற்பல வடிவங்கள் சேர்க்க அவா கொண்டு எதுவும் எனது திறனுக்குப் பிடிபடுகிற லாவகத்தில் இல்லை என்பதைக் கண்டறிய நிறைய நாட்கள் செலவிட நேர்ந்து.. இப்போது, சிற்சில பத்திகளில் மட்டுமே அதனை எழுதி விடுகிற முடிவுக்கு வந்து விட்டேன்.. 

ராஜேஷுக்கு 'பணத்தேவை' இன்றைய நாட்களில் தீவிரமடைந்து கிடக்கிறது.. அது எல்லாருக்கும் எப்போதும் குறைந்த பாடில்லை, மற்றும் அதிகம் இருந்தாலும் இன்னும் இன்னும் தேவை என்கிற மனோபாவத்தில் சிக்குண்டு கிடக்கிறோம்.. 
இந்த சர்ப்ளஸ் போறும் .. இனி மேற்கொண்டு இல்லாதவாளுக்கு கொடுத்திடலாம் " என்கிற பாங்கு, என்கிற போக்கு இன்னும் புழக்கத்தில் வராமல் புழுக்கத்திலேயே இருக்கிற துரதிர்ஷ்டங்கள் மனிதத்துக்கு நேர்ந்த பெரிய சாபக் கேடு என்றே அனுமானிக்க முடிகிறது.. 

ஆனால் ராஜேஷ் மாதிரி நெஜமாலுமே பற்றாக்குறையோடு இந்தக் காலத்தை அனுசரிப்பது என்பது அதைவிடப் பெரிய 'கர்ஸ்' என்றே சொல்லணும்.. 

எல்லாரையும் குத்தம் சொல்றதா  கோவிச்சுக்காதீங்கோ.. கொஞ்சம் பேரு, மனசாறக் கொடுக்கத்தான் கொடுக்கறா.. ஆனா, அந்த மாதிரி நடமாடுகிற கலியுக தெய்வங்கள் ரொம்ப சொற்பப் பேருன்னு சொல்றேன்.. 
மெஜாரிட்டி- செல்ஃபிஷா, பத்தாக்குறையா, தட்டிப் புடுங்கறவாளா தான் இருக்காங்கோ.. மைனாரிட்டி தான்  தன்னுடைய தேவை மீறி கொஞ்சம் இருந்தாலும் விநியோகம் செஞ்சுடறா .. இன்னும் செல பேரு, தனக்குத் தேவை இருந்தாக்கூட இல்லாத மத்தவாளுக்கு டிஸ்ட்ரிபியூட் செய்யற தன்மையோட இருக்கா.. அவாதான் சத்தியமா ISI , ISO 9001, அக்மார்க், அசல் நெய்ங்கற மாதிரி, அசல் மனுஷா.. இல்லைல்ல ... அசல் காட் .. 

இப்பக் கூடப் பாருங்க.. ஒருபக்கக் கதையா இதை முடிச்சிடலாம்னு பார்த்தா காவியமா நீளப் பார்க்குது.. 

ராஜேஷ் தனக்கொரு குறைந்த விலை பைக் வாங்குவதை 'கனவாக' விதைத்து வருடங்கள் தாண்டிக் கூட இன்னும் முளை விடாது முடங்கி மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்க் கிடந்தது அவனது கனவு.. 
இவை போக மனைவி குழந்தைகள் தேவைகள்  .. எப்போது எங்காவது குடும்பமாக வெளியே செல்ல நேர்கையிலும், அண்டை வீட்டாரிடம் மொபெட்டை கடன் வாங்கி பெட்ரோல் நிரப்பிப் போய்  வரவேண்டியதாகவே உள்ளது.. 

கோவில், ஹாஸ்பிடல், சினிமா, பார்க் என்று எதையாவது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் கொட்டிக் கொண்டே கிடக்கிற மூர்ச்சை அவனை இந்தக் காலகட்டம்  "பைக்" என்கிற ஒன்றை மறுபடி வீரிய விதையாக மனதுள் மாற்றி  விதைத்து , இந்த முறை முளைத்தே தீருவது என்கிற தீர்மானத்தோடு பயணிக்க வைத்திற்று.. 
ஆனால் எங்கனம் என்கிற கேள்வி தான் பெரிய  ஆதங்கமாக அவனில் இடம் பிடித்திருந்தது.. 

வெறும் கையை நக்கிக் கொண்டிருந்தவனுக்கு கொம்புத் தேன் உள்ளங்கையில் வார்க்கப் பட்டால்?
 மரணவிலாஸில் மைதாப்
பரோட்டாவை மாங்கு மாங்கென்று பிய்த்து குருமாவைக் குழைந்தடித்துப்  பசியாற்றிக் கொண்டிருந்தவனுக்கு லீ-மெரிடியனில் தினசரி விருந்தென்றால்?

அப்படியாயிற்று ராஜேஷுக்கு நேற்று இரவு.. யெஸ் .. வேலையிலிருந்து இரவு நடந்தவாறு வீடு திரும்பிக் கொண்டிருந்தவனுக்குக் கீழே ஒரு தங்கப் புதையல் கிடைத்தது.. 

1 லட்சம் ரூபா ரொக்கம்.. மற்றும் ஆறேழு சவரனில் அட்டிகை என்று அந்த மஞ்சள் பை  அவனது கஷ்ட காலத்திற்கு என்றே சிருஷ்டிக்கப் பெற்றிருந்தது..

[2]

இடைவேளை முடிந்த பிறகாவது ராஜேஷ் பைக்கில் பறப்பானா மாட்டானா என்று எனது ரசிகர்ப் பட்டாளம் ஏங்கிக் கிடப்பதை என்னால் சுலபத்தில் அனுமானிக்க முடிகிறது.. 
ஆனால் ரசிகர்களே, அப்படி இல்லை என்கிற வருத்த செய்தியை உங்கள் முன்னிலையில் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன்.. 

பிரபல எழுத்தாளரான நான் சிருஷ்டிக்கிற இந்தக் கதையில் வருகிற நாயகன்  அப்படி  ஈவிரக்கமற்றவனா என்ன?

இப்பவும் அவன் அதே பைக்" கனவில் தான் உலா வந்து கொண்டிருக்கிறான். அன்று  இரவு முழுதும் மனைவியிடம் குழந்தைகளிடம் பற்பல திட்டங்களை இனி சுலபத்தில்  நிவர்த்தி செய்து கஷ்டங்களில் இருந்து ரிலீஸ் ஆகப் போவதாக பிதற்றித் தீர்த்தான்.. 

ஆனால், அந்த மஞ்சள் பையை இழந்தவர்களின் அழுகையும் கேவலும் அடுத்த நாள்  செய்தியாக எல்லா ஊடகங்களிலும் வியாபிக்கத் துவங்கி.. நம்ம ஹீரோ ராஜேஷ், அந்தக் குறிப்பிட்ட நபரிடம் சென்று அதனை ஒப்படைத்து "நேர்மையின் மாவீரன்" என்கிற மெடலைப் பெற்று திரும்பி வந்தான்.. 

அந்தப் பணத்தைத் தொலைச்ச பேமானி, ஒரு டென் பெர்செண்டேஜ் போட்டு ஒரு பத்தாயிரம் ரூபா  அன்பளிப்பா கொடுத்திருந்தா கூட ஏதோ பைக் வாங்க முன்பணமா கட்டி   'ஈ.எம். ஐ - ல ஒரு 24 மாசமோ 36 மாசமோ போட்டு எடுத்திருக்கலாம்.. 
"ஒங்க நேர்மை தான் ஸார் இந்த இந்தியாவுக்கு நிறையத் தேவை" என்று பிரம்மாதமாகப் பாராட்டி  ரூ.500 ஐ சட்டைப் பாக்கெட்டில் அவன் 'வேண்டாம் சார்' என்று சொல்ல சொல்லத் திணித்து அனுப்பினார் அந்த சிமெண்ட் ஃபேக்டரி  ஓனர் ... 

ஹை ..கூ.. ஹைக்கூ..

[01]

தீர்ந்து விடுமென்கிற அவசரம் 
கோவில் பிரசாதத்திற்கு 
வரிசை கட்டி நிற்கிற 
எல்லாருக்குமே வந்துவிடுகிறது..!!

[02]

சிட்டுக்குருவிகளைப் 
பார்க்கும் போதெல்லாம் 
உடனே வந்துவிடுகிறது 
சிறகுகளற்ற வெட்கம்..!!
Sunday, July 12, 2015

இன்று... நேற்று.... நாளை.... [LATEST TAMIL CINEMA LATE REVIEW]

எம்ஜியார் டித்து அன்று வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆன , அதே "நேற்று இன்று நாளை" படத்தை டிட்டோவாக ஈ அடிச்சான் காப்பி செய்து இப்போது வெளியாகியுள்ள "இன்று நேற்று நாளை" படத்தை வெளியிட்டு வெற்றி கண்டிருக்கிறார்கள்..
பாடும் போது நான் தென்றல் காற்று " பாடலைப் போலவே "நீ ஐ-போன் சிக்ஸ் , நான் செங்கல் செட்டு" "நான் கட்டக்காப்பி. நீ கப்பிக்சீனோ " என்று சோலோவாக ஆண்குரல் ஒலிக்கிறது..

இந்தப் படத்தின் டைரக்டர் மேற்கண்ட இந்தப் பத்தியைப் படிப்பார் எனில்  என்னைக் கொல்லவும் துணிவார் என்பேன்..

அவர் மாத்திரம் நம்மை எல்லாம் சற்றும் எதிர்பாரா ஒரு தளத்திற்கு இழுத்துச் சென்று ஒருபுது வகை சிலிர்ப்பை நிகழ்த்துவாராம்.., நாம் அவரை அப்படி கொஞ்சம் டென்ஷன் செஞ்சு பார்த்தா தான் என்னவாம்??


அதீத மாயையின் அரவணைப்பில் தமிழ் ரசிகர்களைத் திக்குமுக்காடச் செய்த ரவிக்குமாரின் வரவு கோலிவுட்டுக்கு நிச்சயம் ஒரு வரப் பிரசாதம் ..

ஆனால், இவருடைய ஹோம் வொர்க்கைப் பார்க்கையில் ஹாலிவுட் இவரை இந்தக் கொத்தவா சாவடியில் விட்டு வைக்குமா என்பது சந்தேகமே..

பகுத்தறிவு எத்தனை நமக்கிருந்தாலும் சற்றே கழற்றி ஓரமாக வைத்துவிட்டு  அந்தட்  டைம் மெஷினில் ஏறி ஜம்மென்று உட்கார்ந்து விடுவது சாலச் சிறந்தது.. அதர்வைஸ் அநியாயத்துக்கு லாஜிக்கில் சிக்கி சீரழிய வேண்டியது தான்..

நானுமே கூட கொஞ்ச நேரம் அந்த 'லாஜிக்' கோதாவில் தான் தர்க்கத்திற்கான விவாதங்களை தயார்ப் படுத்திக் கொண்டிருந்தேன்.. கொஞ்ச நாழிகையிலேயே அதையெல்லாம் கிழித்துப் போட்டு விட்டு இவர்களது இடையறாத 'மேஜிக்'கில் சிக்குண்டு வண்டெனத் தேன் சுவைத்தேன்..

இதனை ஒரு கன்செப்ட்' டாக மனசுள் செருகிக் கொண்டு ப்ரொட்யூசரிடம் கன்வே செய்து ஓகே வாங்கி, இப்போது பொதுஜனங்களிடம் தொடர்ந்து அப்ளாஸும் வாங்கிக் கொண்டிருக்கிறது இந்தப் படம்..

பக்கா ப்ரொ ஃபஷனல் சைன்டிஸ்ட் ஆரியா .. அவரது அந்தட் டைம் மெஷின் ஆராய்ச்சி.. அவரது திறனை சந்தேகிக்கிற ஒரு மனித மின்பிம்பம்.. பிற்பாடு அது ஒரு  மிக்ஸி ரிப்பேர் செய்கிற அமெச்சூர் விஞ்ஞானி வசம் கிடைக்கப் பெற்று.. அந்த விஞ்ஞானி அதனைப் பெற உறுதுணையாக இருக்கிற நமது கதாநாயகன், அவனது உற்ற தோழன்..

நாயகி, வில்லன், பிறகு.. காமெரா , திரைக்கதை, எடிட்டிங் , பின்னணி இசை, வசனங்கள், .. இப்படி அனைத்து அம்சங்களும் நச்சென்று பொருந்திப் போய் .. டைரக்டர்  ரவிக்குமாருக்கு சுக்ரன் சும்மா செம ட்ரீட் வைத்துள்ளார்.. 
வாழ்க வளமுடன்.. 

Thursday, July 9, 2015

HEL(L) MET...

ஹெல்மெட் பெரிய தலைவலியாக எல்லாருக்கும் மாறி விட்டிருக்கிறது..
எவனோ லூஸுத் தனமாக கண் மண் தெரியாமல் ஸ்பீடிங் போய் விழுந்து சாவதற்கு மொப்பெட்டில் 30 கூடப் போகாத நோஞ்சான் ஓட்டுனர்களும் அணிந்து தொலைய வேண்டிய இக்கட்டிற்கு ஆளாகி அலறிக் கொண்டிருக்கிறார்கள்..

கோவில் பூங்கா என்று குடும்ப சகிதமாகப் போகிற எல்லா குடும்பங்களிலும் மனைவிமார்கள் வண்டியை விட்டு கீழே இறங்கிய நொடியிலிருந்து  நடமாடும் ஹெல்மெட் ஹேங்கர்களாக வலம் வருவதைப் பார்க்கையில் இன்னும் தமாஷாக இருக்கிறது..

கணவர்கள் வண்டியில் தைரியமாக மாட்டிவிட்டு வருவதாக சொன்னாலும் அதனை ஏற்காமல், பூக்கூடை போன்று கைகளில் ஏந்திக் கொண்டிருப்பதைப் பார்த்தால்.. ஒருமாதிரி சங்கடமாகக் கூட உள்ளது.. சமுதாயத்தின் மீதான பெண்களின் சந்தேகப் பார்வை ஏற்படுத்துகிற சங்கடமது..

ஹெல்மெட் லாக்கர்களை வண்டிகளில் பொருத்துகிற பொறுமை மிக சிலருக்கே உள்ளது.. அரசாங்கம் அதையாவது இலவசமாக செய்து கொடுத்தால் புண்ணியமாகப் போகும்..

இந்தக் கூத்து இன்னும் எத்தனை நாட்களோ என்கிற  சந்தேகம் சில தீர்க்க தரிசிகளுக்கு உதிக்கிறது.. இந்தமுறை சட்டம் மிகக் கடுமையாக செயலாற்றும் என்கிற வதந்தி வேறு பலமாக உலவுகிறது..

துவக்கத்தில் எல்லா இழவுகளும் கொஞ்சம் வருத்தமளிக்கும்.., அழுகாச்சு மூட்டும்.. அப்புறம் போகப் போக "இந்தக் கருமாந்திரம்" சகஜாமகி விடுமென்பதே நிதரிசன உண்மை.... இது,  ஹெல்மெட் விஷயத்தில் மாத்திரம் அல்ல, யாவற்றுக்கும் பொருந்தும்..

ஹெல்மெட் அணிய சங்கடப் படுகிற ஒவ்வொரு நபருக்கும் ஒரு சஸ்பென்ஸ் ட்ரீட்மென்ட்  கொடுக்க வேண்டும் என்பது எனது அவா.. அதாகப் பட்டது, அந்த நபர் வண்டியில் கடந்து போகும் போது , நச்சென்று அவரின் மண்டையில் கல்லிலோ, அல்லது வேறொரு கன பரிமாணமான ஒரு வஸ்துவிலோ "ணங் "கென்று  ஒரு அடியை இறக்கி.., மனிதர் ஆடிப்போய் வண்டியை ஓரங்கட்டி நிறுத்தி ஹெல்மெட்டை கழற்றி சுழற்றி அதன் சேதாரத்தை கவனித்து விடவேண்டும்.. அந்த அடி இந்நேரம் வெறும் மண்டையில் பட்டிருக்கும் பட்சத்தில், நிச்சயம் க்ளோஸ் ஆகியிருப்போம் என்கிற ஒரு ஊர்ஜிதத்தைக் கொணர்ந்து .. சாகிற வரைக்கும் ஹெல்மெட்டும் கையுமாக இருக்கும்படி நிலைமை மாறிவிடும்.. ஓட்டுவதற்கு டூவீலரே இல்லை என்றாலும் கூட ஹெல்மெட்டை மண்டையிலிருந்து இறக்க முடியாத அளவுக்கு மனநல பாதிப்பை  ஏற்படுத்தக் கூடும்.. ஹிஹி..  

Tuesday, July 7, 2015

மறதிகளும் ஞாபகங்களும்..

காலையில் நடைப் பயிற்சி மேற்கொள்கையில் மனசுக்குள் பற்பல அற்புதக் கருத்துக்கள் புடைத்தெழுகின்றன .. யாதொன்றையும் விட்டுவிடாமல் பிளாகில் இறக்கி எனது அறிவுச் சுமையைக் குறைத்தாக வேண்டும் என்கிற வேகம் வெறி ஒன்றாகப் புறப்பட்டு... 

வீடு வந்து கணினி திறந்து பிளாக் எழுத உட்கார்ந்தாலோ, அனுமானித்திருந்த எல்லா அற்புதங்களும் காற்றடித்த  மேகங்களாக நழுவித் தொலைந்து விட்டிருந்தன.. 
கருத்துக்கள் மனசுக்குள் பிடிபடுகிற போது , என்னவோ உடும்பாக, நங்கூரப் பாய்ச்சலாக உணர முடிகிறதே அன்றி, சற்று மணித்துளிகள் கடக்கையில், யாவும் எங்கோ பஸ்பமாகி விடுகிற இந்த 'கேவல-சுழற்சி' அன்றாட நிகழ்வெனிலும், என்னவோ பெரிய அறிவுஜீவி போன்ற எண்ணத்தில், எதனையும் ஒரு குறிப்பாக எழுதி வைத்துக் கொள்வதில்லை நான்.. 
Image result for forget
கணினி முன்னர் அமர்கையில் தான் புலனாகிறது, என்னுடைய "என் பற்றிய" பலவீனம்.. சிலர் தான் மனதளவிலும் பார்த்த மாத்திரத்தில், நினைத்த மாத்திரத்தில் ஒரு புகைப் படக் கருவி போன்று பதித்து வைத்துக் கொள்கிற சாதுர்யம்  கொண்டுள்ளனர் .. 

என்னுடைய திறன்கள் எல்லாம் உடனடியாக நீர்த்து விடுகிற தன்மையே கொண்டுள்ளன என்பதை என்றோ நான் நன்கறிவேன் என்ற போதிலும், இந்தத் தவறுகள் தொடர் நிகழ்வாக என்னை ஆக்கிரமித்துள்ளதை நான் உணர்கிறேன்.. 
இருந்த போதிலும் சிலவற்றை தத்துப்பித்தென்றாவது இங்கே கொணர்ந்து சேர்க்கும் திராணியில் முயல்கிறேன்.. 

அன்றே கொல்கிற அரசனே ஒரு 'கொலைக் குற்றவாளி'யாகவும்,  நின்று கொல்கிற  தெய்வம் சும்மா நின்றவாறாக மட்டுமே இருப்பது போன்றும்  தோன்றுகிறது.. 
களவாணிகளுக்குத் துணை போகிற அரசன், எங்கே போய் தண்டனை கொடுப்பதாம்?.. 

இருக்கிறவனுக்கே மேற்கொண்டும் அள்ளிக் கொட்டுகிற கடவுள், இல்லாமையில் கெஞ்சிச் சாகிறவனுக்கு சற்றேனும் ஆதரவு காண்பிப்பது பரம  அசாத்தியம் போன்றே தான் விடாப்பிடியாகத் தோன்றுவதேன்?

ஒரு குடும்பத்தின் "ரொட்டி ஜெயிப்பாளரை " [bread winner ] சதா நேரமும் போராட்டத்தில் தவிக்க விட்டு , என்ன போராடியும் கொஞ்சமே ஜெயிப்பதும், அல்லது முழுதுமாகத் தோற்பதும் என்றவாறே வெறுப்பேற்றி  வெம்பிக் கிடக்கிற வாழ்க்கை..

ஏற்கனவே பற்பல நிறுவனங்களுக்கு எம்.டி யாக இருக்கிற பனாதி, மேற்கொண்டும் தொட்டதெல்லாம் துலங்கி ... லாப லட்சம் கோடிகளை திருப்பதி ஸ்ரீ வாரி உண்டியலில் கவிழ்ப்பதும்.... இல்லாத ஏழை எளியோருக்கு கிஞ்சிற்றே தான தர்மங்கள் புரிவதும்.. அந்த தர்மம் இல்லாதவனுக்கு தொட்டு நக்கவே போதாமல் மேற்கொண்டும் அவனை அவஸ்தை பிடுங்கி சாகடிப்பதும்.. 

இப்போதைக்கு இந்த ஒற்றை சிந்தனையைக் கொட்டி விட்டிருக்கிறேன்..

[இது ஒன்றும் எனக்கு வருகிற புது சிந்தனை அன்று.. அன்றாடம், எல்லாருக்கும் நிழாடுகிற சகஜ சிந்தனையே]

பார்ப்போம்.., மறுபடி ஒன்று ஞாபகம் வருகையில் அதனையும் பதிவிறக்கம் செய்ய விழைகிறேன்.. 

மேற்கொண்டு காகிதம் பேனா கைவசம் வைத்துக் கொள்வது உசிதம் என்கிற முடிவுக்கு  வந்துள்ளேன்.. ஆனால், இப்படி ஒரு முடிவு வந்து பல வருடங்கள் ஆகின்றன.. 

Saturday, July 4, 2015

தெரு நாய்....

தெரு நாயின் பாசம் என்னை ஷணத்தில் அதனிடத்து கவிழ்த்துப் போட்டது.. 
கடை வீதி போய் விட்டு பைக்கில் வீடு சேர்ந்த போது வாசலின் குறுக்கே ஒய்யாரமாக நீட்டிப் படுத்துக் கிடந்தது அந்தக்  காவிக் கலர் தெரு நாய்.. 
நான் வந்ததும் ஒரு காவலாளி போன்று எழுந்து கதவைத் திறந்து விட்டிருக்க வேண்டுமென்று எனது ஆறாம் அறிவு கேவிற்று.. பழக்கப் படுத்திய வீட்டு நாய்களே அவ்விதம் செய்வது அரிது என்றிருக்க தெருத் தெருவாக சுற்றித் திரிகிற அந்த நாயிடம் அப்படி ஒரு விஷயத்தை எனது மரமண்டை எப்படி எதிர்பார்க்கலாம்?

அவ்விதம் இல்லாது போனால் கூடப் பரவாயில்லை.. வீட்டு எஜமானன் வந்திருக்கேன், கொஞ்சம் பவ்யமா நகர்ந்து அந்தப் பக்கமோ இந்தப் பக்கமோ போயிருந்தால் இங்கே எதுவும் எழுத நேர்ந்திருக்காது என்றே கருதுகிறேன்.. 


நகராமல் என்னை வேறு முறைத்து ... குரைத்து .... கலவரப் படுத்திற்று.. எங்கேனும் கபக்கென்று பிடித்துக் கவ்வி, குன்னூர் போக நேருமோ என்றெல்லாம் சிந்தனைகள் மிக அவசரமாக என்னை வந்து கபளீகரித்தன .. இந்தவாட்டி யாவது இந்த "பழக் கண்காட்சி நடக்கிற சிம்ஸ் பூங்கா " வுக்கு சென்று வந்து விட வேண்டும் என்றெல்லாம் திட்டம் போட்டு விட்டேன்.. 


இளிச்சவா நாயி, கல் எடுத்து விரட்டுவது போன்று நடித்த மாத்திரத்தில் வாலைக் குறுக்கிக்கொண்டு வாசலை காலி செய்தது.. 


பாவம், வீடு என்னுடையது என்பது அந்த நாய்க்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது.. !!


என்னவோ தெரியவில்லை, சட்டென்று அந்த நாயின் மீதான எனது காருண்யம் எனக்கே ஆச்சர்யம் கொப்பளிக்க வைத்திற்று.. 


விரல்கள் இரண்டை நெறுக்கி சடக்கென்று போட்ட சொடுக்கில், பயந்தோடிய அந்தத் தெரு நாய் திரும்பவும் 'நிறைய நாட்கள் பழகியது' போன்று திரும்ப வந்து குறுக்கிய அந்த வாலை வெளிக் கொணர்ந்து நேசமாக ஆட்ட ஆரம்பித்து, முன்னங்கால்களை உரிமையோடு எனது வயிற்றுப் பகுதி, மற்றும் மார்புப் பகுதிகளில் பதிக்க ஆரம்பித்து என்னை நிலைகுலைய வைத்தது.. உடனே எனது கைகள் அதன் நெற்றியை நீவி அதனிடத்தே என்னை முழுதுமாக  ஒப்படைக்க நேர்ந்தது.. 


உள்ளிருந்த மனைவியை அழைத்து அதற்கு சில பிஸ்கட்டுகள் போடச் செய்தேன்.


இப்படி பழக்கினால் அது அன்றாடம் வந்து இம்சை செய்யும் என்கிற எனது மனைவியின் எச்சரிக்கை எனக்குப் பொருட்டாகப் படவில்லை.. 


ஆனால், அப்படி எல்லாம் அந்த நாய் திரும்ப வரவில்லை.. இத்தனைக்கும் வரட்டும் என்று கூட எதிர்பார்த்தேன்.. 


இன்னும் எத்தனையோ வாசல்கள் இருக்கின்றன அந்த நாய்க்கு. 


Wednesday, July 1, 2015

யதார்த்தங்கள் வலியன ...

நாம் என்றேனும் ஏதேனும் கிஞ்சிற்று எழுதவதற்கே மலையளவு யோசிப்பதும், எழுதினால் எடுபடுமா என்று சந்தேகிப்பதும், பிறகு எழுதித் தான் பார்ப்போமே என்று எழுதி, ரெண்டொரு கைகளாவது  அப்ளாஸ் செய்கிறதா என்று கவனிப்பதும், அப்படி அப்ளாஸ் கிட்டாத பட்சத்தில் உடைந்து மேற்கொண்டு எழுதும் திராணி இழந்து மவுனித்துக் கிடப்பதும், நான்கு கைகள் சேர்ந்து தட்டி உற்சாகப் படுத்தும் பட்சத்தில் கர்வத்தில் மீசை முறுக்கி 'கவிதை எனது தொழில் .. கதைகள் எனது எழில்' என்று பாரதி போன்று முழங்கி மூர்ச்சை அடைவதும்... தட்டுத் தடுமாறி ஆசுவாசமடைவதும்.. 

அதிகம் எழுதாமலும் , எழுத்து ரீதியாக எவ்வகைப் பிரபலங்களும் கிடைக்கப் பெறாத என் போன்றோர்க்கே எழுதுவது என்பது இவ்வளவு ரசாயன சுனாமிகளை நிகழ்த்துகையில் ..
பிரபல எழுத்தாளர்களும், பற்பல பதிப்புக்கள் பெற்று அவை நிமித்தம் ராயல்டி பெறுகிற.. எழுதுவதையே சுவாசமாகக் கொண்டுள்ள அவர்களை நிச்சயம் வியந்தாக வேண்டும், அவர்களைக் கண்டு சற்றே பயந்தாகவும் வேண்டும்.. 

அந்த கோதாவில் நாமில்லையே என்கிற அங்கலாய்ப்பு தவிர்க்க அசாத்யமான உணர்வாக  மனசுள் விக்கி நிற்பது சற்று வெட்கமும் வேதனையும் ஊட்டுவன.. 

யாவற்றுக்கும் அதிர்ஷ்டக் காற்று .. நேரம்.. என்றெல்லாம் தோராயணமாக ஏதோ  சொல்வது இன்னும் என்னுள் அசூயை நிகழ்த்துவதாக உள்ளது.. 

அதனதன் போக்கில் சூழல்களை விட்டு விடுவதே ஆரோக்கியமாக உள்ளதே அன்றி, நல்லவற்றை எல்லாம் நம்வசமாக்கும் முஸ்தீபில் வேரோடு பிடுங்குகிற பேராவல்களும் தாகங்களும் குற்ற உணர்வுகளை விதைப்பனவே அன்றி வேறென்ன? 

அந்தந்த இலக்கை அடையப் பிரயத்தனிப்பதும், கிடைக்கப் பெற்றதும் அகமகிழ்வதும், சாத்தியமற்றுப் போகையில் சுணங்கிப் போய்க்  கிடப்பதும், மறுபடி ஒரு வெறி  பூத்து சாதித்தே தீருவதும்.. இதெல்லாமே ஒருவித அறியா பிராயத்தில்  நடந்தேறி விட்டால் தேவலாம்.. 

காலக் கடத்தலில் , பிரத்யேகமான ஒருவகை முதிர்ச்சியில் அவ்விதம் பிரயத்தனிப்பது என்பதெல்லாம் சிறுபிள்ளைத் தனமாகவும் நமது சுய கவுரவங்களும்  சுய மரியாதைகளும் நமக்கே அலங்கோலப் பட்டு விடுகிறது.. 

ஆகவே, இந்த வாழ்வில் எந்தத் தகுதி நிலவினும், அதனூடே யதார்த்தமாகப் பிரயாணிக்கக்  கற்பதே உயர்தர சுபாவமே அன்றி, அதனின்று பிய்ந்து போய் பிரபலத்தில் மிளிர்பவர்கள் பின்னாடி ஓடவாரம்பித்தால் இந்த வாழ்க்கை, அனாவசிய  வலிகளையும் கவலைகளையும் நமக்கு அன்பளிப்பாகக் கொடுக்கும் என்பதே எனது அனுமானங்களும் எச்சரிக்கைகளும் ஆகும்.. !!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...