Friday, July 31, 2015

அந்த சேலை..

அந்தப் புதிதாகத் திறக்கப் பட்ட ஜவுளிக் கடையில் கூட்டம் அலைமோதியது.. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு ஜவுளி வாங்கும் பட்சத்தில் அதற்கு இனாமாக குண்டா அண்டா தட்டு குக்கர் ஃபிளாஸ்க் என்று வகையறா வகையறாவாக கொடுத்து அசத்தியதில் மக்கள் கடலெனத் திரண்டு அலை பாய்ந்தனர்.. !

நானுமே கூட ஏதாவது தோதாகக் கிடைத்தால் எடுத்து அந்த இனாம் வாங்கும் இலக்கை அடையப் பிரயத்தனித்தேன்...

ஹேங்கரில் தொங்கும் சேலை வகைகள் சொற்ப காசுக்கே பரவாயில்லை என்கிற விதமாக வீற்றிருந்தன.. 
ஒரு சேலை பார்த்ததும் கபளீகரிக்கும் விதமாக இருந்தது.. அதாவது எனக்கு அப்படி இருந்தது.. எல்லாருக்கும் அப்படி இருந்திருக்கும் பட்சத்தில் இந்நேரம் அது பறந்து போயிருக்கும்.. ஆனால், என் ரசனை மிக உன்னதம் அடங்கியது என்கிற பெருமிதம் எனக்கு எப்போதும்.. 

ஆனால் அப்படி எல்லாம் பிரம்மாதம் என்று என் மனைவியிடத்துக் கூட ஒரு சிறு அங்கீகாரம் கிடைக்காதது எனக்கொன்றும் பெரிய கவலை இல்லை.. ஏனெனில்,  எனது  ரசனை புரிபடுவதற்கும் ஏற்பதற்குமே ஒரு தனிப் பட்ட ரசனை தேவை என்கிற கன்னாபின்னா அகந்தை எனக்கே சற்று வெட்கம் சுரக்க  வைத்திற்று.. !!

விஷயத்திற்கு வருகிறேன். ஏனென்றால், ஒருபக்கக் கதை என்பது தான் எனது இலக்கு. அது அடுத்த பக்கம் பரவுவதோ, அல்லது தொடரும் சொல்லி நிறுத்துகிற  அபரிமித எழுத்தாளனோ  அல்ல நான்.. 

அந்த என்னைக் கவர்ந்த சேலை என் மனைவிக்கு எடுப்பாகத் தான் இருக்கும்.. ஆகவே உடனே அதனைக் கவ்விக் கொண்டு விடவேண்டும் என்கிற ஆற்றாமை என்னில் பிரவகித்த போதிலும், எடுத்துச் சென்றான பிறகு புறக்கணிக்கப் படுமாயின் , எனது ரசனை இழுக்கடைவது மாத்திரம் அற்று முன்னூற்று சொச்சம் ரூபாயும் அபேஸ் ஆகிவிட்ட உணர்வு ஆட்கொள்ளும்.. 

ஆகவே 'அவளையே அழைத்து வந்து முயன்று பார்ப்போம்' என்கிற தீர்மானத்தில், அவளை அழைத்துவந்தேன்.. 

திருவிழா கூட்டத்தில் குழந்தை தொலைந்த பீதியில் கவலையில் தவிக்கத் துவங்கிற்று  மனது.. ஆம், அந்த சேலை காணோம்.. எவளோ எனது ரசனை ஒத்தவள் அள்ளிக் கொண்டாள் என்கிற அவசர அனுமானம் எனக்கு.. 
மனைவியிடம் சொன்னதும் என்னை வயிற்றில் கத்தி எடுத்துச் செருகாத குறையாக   சொன்னாள் .. "பார்த்தீங்க. உடனே எடுத்துத் தொலைய வேண்டியது தானே?.. அப்படி எனக்கு பிடிக்கலைனா கூட , எடுத்துட்டு வந்து வேற சேல  மாத்திக்கவா முடியாது? "

அவளது ரௌத்திரத்தில் அர்த்தம் உள்ளதென்று ஒப்புக் கொண்டேன் நான்.. 
ஆகவே, வாயை மூடிக் கொண்டு நின்று கொண்டேன்.. 

ஆனால் சிறிது நாழிகையில் அந்த சேலை எனது கண்களில் பட்டு சிலிர்த்துக் கொண்டேன். உடனே 'இது தான்' என்று குதித்துச் சொல்ல அவா கொண்டவன், உடனடியாக என்ன காரணத்தாலோ, அவளது ரசனையை கவனிக்க வேண்டும் என்று வேடிக்கை பார்க்கத் துவங்கினேன்.. 

ஒவ்வொரு சேலையாக அலசி ஆராய்ந்து கொண்டே வந்தவள், நான் பார்த்து வைத்த அந்த சேலைக்கு வந்ததும் அதனை உருவினாள் .. எனது மனமே வழுக்கிற்று.. அப்படி இப்படி திருப்பிப் பார்த்தாள் .. பிரித்துப் பார்த்தாள் .. 

அதனை மறுபடி அவள் ஹேங்கரில் மாட்டி விட்டதும் என் மனதும் தூக்கில் தொங்கியது  போன்று உணரத் துவங்கியது.. 

அதற்குப் பிறகு அரைமணி நேரம் கழிந்து ஒரு பாடாவதி சேலையை எடுத்து வந்து காண்பித்து, "'இது பாருங்க.. நீங்க நேத்து பார்த்து மிஸ் பண்ணினதை விட  நல்லா இருக்கும்னு  நெனைக்கிறேன்" என்றாள் .. 

"ஹேய்.. வாட் எ மிராக்கிள் .. இத, இதத்தான் நேத்து .." என்று இழுத்ததைப் பார்த்ததும் புளகாங்கிதம் உதிர்த்த அவளது கன்னங்களில் பளீர் என்று போட வெறி  எனக்குள்.. 

அது போக, "முன்னூத்து சொச்சம் ன்னு சொன்னீங்க. இது ஐந்நூத்து இருபது " என்றாள் .. 

'மாத்தி சொல்லிட்டேன் போல' என்று சமாளித்தேன்.. 

அந்த சேலைக்கு பில் போடுவதற்கு முன்னர், நேற்று நான் பார்த்து வைத்த சேலையை எடுத்து வந்து ஒருத்தி பில் போட்டாள் .. 

"அந்த சேலை பாருங்க. இத விட சூப்பரா இருக்கு" என்ற எனது மனைவியை கொஞ்சுவதா கொல்லுவதா என்று திணறிப் போனேன்.. 

'இத்தனைக்கும் இதை நீ வேற கைல எடுத்துப் பார்த்தே!' என்று வாதிட நினைத்தவன் வாயை மூடிக் கொண்டு, ரூ.520 ஐ எடுத்துக் கொடுத்தேன்.. 

2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...