Tuesday, July 28, 2015

அப்துல்கலாம் ..

ன்னுமொரு நூறாண்டு காலங்கள் வாழ்ந்தாலும் போதாது .. மேலும் மேலும் இருந்தவண்ணமே இவ்வுலகின் எல்லா தலைமுறைகளுக்கும் காட்சி தந்த வண்ணமே இருந்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்? !!
என்றே பெருமூச்செறியத் தோன்றுகிறது அப்துல் கலாமை நினைக்கையில்.. !!

இறவாமை வரம் கலாமுக்குப் பொருத்தமாகத் தோன்றுகிறது.. 
நாமெல்லாம் சத்தியமாகப் பிறவாமை வரமே பெற வேண்டும்.. ஆனால், கலாம் மறுபடி பிறந்து வந்தால் பரவாயில்லையே என்று அங்கலாய்க்கிறது மனது.. 
இத்தனைக்கும் பிறவாமை வரமே வேண்டுமென்று நாமெல்லாம் சதா பிரார்த்திக்கிறோம்.. 
நாமெல்லாம் பிறக்கவேண்டும் மறுபடி என்று நினைத்தால் கூட, பிறக்கக் கூடாது.. ஆனால், பற்பல கலாம்கள் இந்தப் பிரபஞ்சத்தில் பிறந்த வண்ணமே இருக்க வேண்டும் என்பதே நமது ஆசைகள் ஆகும்.. 

நேர்மை, எளிமை, திறமை, பகுத்தறிவு, அடக்கம், நுண்ணுணர்வு, செயலாற்றல், என்கிற அத்தனை பட்டியல்களுக்கும் சொந்தக் காரர் இவரே....இவரைத் தவிர்த்து இன்னொரு நபரை  சல்லடை போட்டுத் தேடினாலும் காணக் கிடைப்பதரிது.. !!

பொருள் சார்ந்த இவ்வுலகில், அவைகளை செவ்வனே மக்கள் அனுபவித்தால் போதும் என்று தன்னை அதனில் இழைய வைக்காது, விலகி நின்று ரசித்த மகத்தான மேதை அவர்.. 
அஞ்ஞான குழாம் நடுவே விஞ்ஞான கலாம் என்று தனக்கொரு தனி அடையாளத்தைப் பதித்திருக்கிறது காலம் அவரிடத்து.. 

நாமெல்லாம் நிறையக் கிழித்து விட்டது போன்று, சற்றே வயோதிகம் நெருங்கத் துவங்கும் முன்னரே ஓய்வுக்கான "ஈஸிச் சேர் " களை விலை பேச ஆரம்பித்து விடுகிறோம்.. 
ஆனால், உடலில் உபாதைகளை வைத்து அதற்கான மருத்துவங்களை மேற்கொண்டு, இந்தத் தள்ளாத 83 வயதிலும் பிற மாநிலம் சென்று அங்குள்ள மாணவர்களுக்கு தமது கருத்துக்களைப் பகிர்ந்து நேரத்தை உபயோகமாக செலவிட வேண்டுமென்ற  மாண்புமிகு நோக்கமதை என்ன வார்த்தைகள் இட்டு வர்ணிக்க? 

சாதி மதங்களைக் கடந்த அந்த வெள்ளந்திப் புன்னகை.. சமத்துவங்களைப் பரப்ப முயல்கிற ஒருவித அன்னியோன்யம்... பள்ளிக் குழந்தைகளினிடத்து அவர் காண்பிக்கிற காருண்யம்.. 

ஆனால் ஒரே மகத்தான துரதிர்ஷ்டம் என்னவென்றால், இப்போது பதவியில் உள்ள ஆளும் கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரிடத்தும் இவருடைய தன்மை கிஞ்சிற்றும் கூட இல்லை என்பதே.. 

இவர்களுக்கெல்லாம் மக்கள் கோவிலைக் கட்டி சாமி போன்று உட்கார வைத்திருக்கிறார்கள்.. ஆனால் அந்த சாமி எப்போது கோவிலை விட்டு ஓடும் என்று எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள்.. தாம் சென்று சாமியாக அமர்கிற களவாணித் திட்டங்கள் தீட்டி வன்மம் ததும்பிக் கிடக்கிறார்கள்.. 

ஆனால் கலாம் போன்றவர்கள், சாமி பதவியையே  தூக்கி எறியத் துணிந்தவர்கள்.. 
மக்களாகிய நாம், இவர்களைப் போன்றவர்களின் கால்களைப் பற்றியே அடைக்கலமாக விரும்புகிறோம் என்றென்றும்..!!
1 comment:

  1. ஆழ்ந்த அஞ்சலிகள்... அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...