Sunday, August 29, 2010

சம்பந்தமற்றவை....

விபத்துக்களில்
பிரசவமாகிற மரணங்கள் 
சவக்கிடங்கில் 
சங்கமிக்கின்றன....

கதறிக்கொண்டு 
வருகிற உறவினர்களுக்கு 
சிதைந்த அடையாளங்களோடு சில,
சிரித்த முகங்களோடு கூட சில.....       

பிரசவக்கூடத்தில் 
ஒலிக்கிற சுகமான 
அழுகைக்கும் 
சவக்கூடத்தில் ஒலிக்கிற
வேதனையான ஓலங்களுக்கும்
எந்த சம்பந்தங்களும் இல்லை...

Friday, August 27, 2010

ஆதங்கம்

காதல் -
புது மெருகு
போட்டது போல
இந்த வயோதிகத்திலும்..!!.
ஆனால்
அவயவங்களின் சுருக்கத்தில்
அந்த மெருகு
பிரதிபலிக்காதது
துரதிர்ஷ்டம்..!!          
                                                

Saturday, August 21, 2010

நின்று கொல்லும் தெய்வம்....

கோயிலை விட்டு
வெளியே  வந்த 
பிறகு தான் 
கர்ப்பக்ரஹத்துக்குள்
சுவாமியைப் பார்க்கவே 
மறந்தது ஞாபகம்
வருகிறது....                                      
பிரச்சினைகளுக்கான 
பிரார்த்தனைகளோடு
கோயிலை எல்லாரும் 
அணுகிக்கொண்டிருக்க -
பிரார்த்திப்பதே 
பிரச்சினை என்பதாக
நான் முரண்படுவது 
எந்த லட்சணத்தில் 
சேர்த்தி என்பது புரியவில்லை..

எதிர்வரிசை பெண்களில் 
லயித்து விடுகிறது என் பக்தி..

நாயைக்கண்டால் 
கல்லைக்காணோம்  என்பது
மனிதனின் பிரச்சினை..
--கல்லாயிருக்கிற 
கடவுளுக்கு அது பிரச்சினையே அல்ல...
--ஒரு நாள் 
தன்னையே பெயர்த்து 
'நங்'கென்று என் தலையில் 
ஒரு சிதிலம் 
விழக்கூடுமென்றே அனுமானிக்கிறேன்...!!

Saturday, August 14, 2010

பற்று..

மிகவும் ரகளை
என் மகள்...
குறைந்த பட்சம்
நறுக்கென்று
கிள்ளி விடவோ
'சட்'டென்று
ஒரு அடி வைத்து
விடவோ
தோன்றி விடுகிறது...

முடிந்த வரைக்கும்
அவ்விதம் செய்வதைத்
தவிர்த்து விடுகிறேன்
என்ற போதிலும்,
மனக்குமைச்ச்சலை
வார்த்தைகளில் கொட்டித்
தீர்க்க நேர்கிறது....

அர்த்தம் புரியாத
அந்த வார்த்தைகளுக்காக அல்ல,
-அதட்டலாக அது தொனிக்கிற
ஸ்தாயியில்
மிரண்டு விடுகிறது
அந்தப்பிஞ்சு...
அந்தக்குஞ்சு உதடுகளைக்
குவித்து அழத் துவங்குகிறது...
-அதனையும் அடக்க
ஓர் 'உஷ்' மிரட்டல்,
ஆள்காட்டி விரலைக்காட்டி...

அப்படியே பாலைக்குடித்து விட்டு
கண்ணயர்ந்து விடுகிற
அவளைப்பார்க்க ..
தாங்கவே முடிவதில்லை
ஒவ்வொரு முறையும்..!!
--உடனே
விழிக்க வைத்துக்                              
கொஞ்சவில்லை என்றால்
உயிரே போவது போலிருக்கும்...
ஆனபோதிலும் அவள்
உறக்கத்தைக்கலைப்பதில்லை...!!

Wednesday, August 11, 2010

நீள்கிற பட்டியல்கள்..

எப்படி எல்லாம்
வாழ வேண்டும் என்கிற
எனது பால்ய காலப்
பட்டியல்கள் இன்றளவும்        
மறப்பதற்கில்லை....

அனுமாநித்திருந்தவாறு
நடந்திருந்தால் கூட
பட்டியல்கள் மறந்திருக்குமோ
என்னவோ....
எதுவும் நினைத்தது போல
நடை பெறாத காரணத்தால்         
பட்டியல்களின் பதிவு
ஆணித்தரமாயிருக்கிறது..

இட்ட பட்டியல்களைக்
காட்டிலும் மேம்பட்ட விதமாக
வாழ்க்கை அமைந்திருந்தால்
என் அதிர்ஷ்டங்களுக்காகப்
புல்லரித்துப்போயிருக்கலாம்..
என் திறன்கள் மீதாக
தாறு மாறாக மதிப்புகள்
குவிந்திருக்கலாம்...
தகுதியும் புகழும் பொருளாதாரமும்
பிறர் பொறாமை கொண்டு
மூர்ச்சையாகும் சூழல் கூட
ஏற்பட்டிருக்கலாம்...

ஆனாலும் என்ன...
இன்றைக்கும் கூட
நீண்ட பட்டியல்கள் உண்டு...
பால்யகாலப்பட்டியல்கள் போன்ற
சிறுபிள்ளைத்தனங்கள் அற்ற
அறிவுப்பூர்வமான,
மிக நேர்த்தியான பட்டியல்கள்...

இதே மாதிரி எதுவும்
நிறைவேறாமல்
ஆதங்கப்பட்டுக்கொண்டிருக்கும்
என் வயோதிகம்...
அந்த நடுங்குகிற விரல்கள்
கூட அன்றைய சூழலுக்கேற்ற
பட்டியல்களை தயாரித்துக்
கொண்டிருக்கும் ...??

சுந்தரவடிவேலு...

Saturday, August 7, 2010

காதல் தோல்வி...

எந்த தருவாயிலும்
உன்னை இனி நினைப்பதில்லை
என்கிற தீவிர முடிவை
எடுக்க செய்தது
உன் உதாசீனம்..

உன் உதாசீனம்
ஆரம்பம் முதலே
நிகழ்கிறது என்றபோதிலும்
ஏதேனும் ஒரு தருணத்தில்
அது மாறுபட்டு
என் மீதான காதலாக
உருவெடுக்கும் என்கிற
எனது அனுமானத்திற்கு
நேற்றோடு கெடு முடிந்து விட்டது...

இந்த தோல்வி
எதிர்பார்த்தது தான்
என்ற போதிலும்..
வெற்றியுமே கூட
எதிர்பார்க்கப்பட்டது தான்...
-வெற்றி பெறுகிற
பட்சத்தில்
நல்லதொரு விருந்து
வைப்பதாக என் நண்பர்களிடம்
நான் உறுதியளித்திருந்தேன்...
--பிற்பாடு
என் தோல்வியை நான்
மாத்திரம் கொண்டாட நேர்கிறது
ஊரின் ஓரத்தில்
இருக்கிற டாஸ்மாக்கில்...                      

Tuesday, August 3, 2010

குடிகாரப்பசங்களுக்கு

சிலர்.. அல்லது நிறையப்பேர்கள், மதுவிற்கும் புகைப்பதற்கும் சுலபத்தில் அடிமையாகி விடுகிறார்கள்... படிப்பிலும், நல்ல தொழில் செய்து பொருள் ஈட்டுகிற வல்லன்மையிலும் கெட்டிக்காரர்களாக  இருக்கிற மிகப்பலரும் கூட அந்த இரண்டிற்கும் ஏனோ தன்னை இழந்தவர்களாகி விடுவது சற்று வேதனை அளிப்பதாக உள்ளது...
இந்த பிரபஞ்சத்தில் இருப்பது கொஞ்ச காலம், அதற்குள்ளாக அனைத்த விஷயங்களையும் அனுபவித்து விட வேண்டும் என்கிற சித்தாந்தம் வேறு சொல்கிறார்கள்...  
மது, மாது, புகை இதெல்லாம் இல்லாமல் .... அது என்ன வெறுமை வாழ்க்கை.. அப்படி வாழ்ந்து என்ன ஸ்பெஷலாக வாரிக்கட்டிக்கொண்டு போகப்போகிறார்கள் என்கிற நய்யாண்டி வேறு செய்கிறார்கள், நல்லவர்களைப்பார்த்து இந்தக் களேபரத்தில் ஈடுபடுகிற புத்திசாலிகள்....
குடும்பத்தில்  மனைவி பிள்ளைகள் சங்கடப்படுவார்களே என்கிற பிரக்ஞை கூட நாளடைவில் காணாமல் போகும் அளவிற்கு தன் சுய மரியாதை இழக்கிறார்கள்...
இதற்கான காரணங்களை உடன் இருக்கும் நண்பர்கள் என்று சொல்லலாம், அல்லது தனது மன உளைச்சல்களும் இன்ன பிற பிரச்சினைகள் என்று ஏதேனும் ஒன்றை சுலபத்தில் கை காட்டி விடலாம்.. ஆனால் , இப்படியான தன்மைகளால் தன் வாழ்க்கை சின்னாபின்னமாகி விடுகிற சூழ்நிலைகளை ஏன் உணர மறுக்கிறார்கள், அல்லது உணர்ந்தும் அது குறித்து அக்கறை கொள்ளாமல் இருக்கிறார்கள்... வியப்பாயிருக்கிறது...

நான் புகைக்கத்துவங்கி, மற்றும் மது அருந்தத்துவங்கி இருபது வருடங்களுக்கும் மேலாகி விட்டது... ஆனால் அவை யாவும் என் அடிமை தானேயன்றி அவைகளின் அடிமை நான் இல்லை... ஒரு நாளைக்கு ரெண்டொரு சிகரெட்டோ அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு சிகரெட்டோ தான் நான் புகைக்கிறேன்.. அதே போல மதுவும் ஆடிக்கொரு முறையும் அம்மாவாசைக்கொரு முறையும் சாப்பிடுவேன்... அந்த போதையில் பிறரை காயப்படுத்த முனைவதில்லை... பற்பலரும் மற்றவர்களை காயப்படுத்துவதை குறிக்கோளாக்கி அருந்துகிறார்கள்.. தெளிந்து மன்னிப்புக்கேட்கிறார்கள்.... தேவையா இது?..   
அமிர்தமே என்றாலும் அபரிமிதமானால் ஆபத்து தான்... விஷமே கூட அளவாக மருந்து போல உட்கொண்டு வந்தோமேயானால் அது ஆரோக்கியம்...
-- இதென்னவோ நான் புதிதாக ஒன்றும் கண்டுபிடித்து எழுதவில்லை, இப்படி என் போன்ற அனுபவத்தில் உள்ள பலரும் இது போல தங்களது கருத்துக்களில் வெளிக் காண்பித்துள்ளனர்.. . ஆனால் அடிமையாகிக்கிடப்பவர்கள் இதைப்படித்து திருந்துவது என்பதெல்லாம் ஆயிரத்தில் ஒன்று நடந்தால் கூட அதிசயம் தான்..
ஆனால் என் போன்ற நல்லவர்கள் {?} இப்படி எல்லாம் பீற்றிக்கொண்டு தான் இருப்போம்... ப்ளோகில் ஏதாவது எழுதி நிரப்ப வேண்டும் அல்லவா??

Sunday, August 1, 2010

what is this

நிகழக்கூடும்
என்கிற அனுமானங்களும்
எதிர்ப்பார்ப்புகளும்
அனிச்ச்சையை
துவம்சம் செய்பவை..

எதிர்பார்த்து நிகழ்கிற
சந்தோஷங்களைக்காட்டிலும்
அனிச்சையாய் நிகழ்பவை
ஆவேசம் நிரம்பியவை...

அனிச்சை யதார்த்தமானது,
ஆனால் கொன்று விடும்
ஆற்றல் கொண்டது...!!

பொய்கள்..

சலனமில்லா
சூறாவளி..
கர்ஜிக்கிற கற்சிலை...
மௌனிக்கிற
மாலை நேரப்பறவைக்
கூட்டம்...                                   
ஆர்ப்பரிக்கிற
தோட்டத்துப் பூக்கள்..

என் மீது
உயிரையே வைத்துக்
காதலிக்கிற நீ..!!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...