Sunday, January 31, 2010

இப்படி எல்லாம் வேண்டாமே....

ஓர் மனிதன் இந்த உலகில் இருந்து ஒன்றை சாதிக்க வேண்டுமேயன்றி, தீயில் கொடுமையாக கருகி தன்னை மாய்த்துக்கொண்டு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியவில்லை எனக்கு... காலம் நமக்கு கொடையாக வழங்கியுள்ள இந்த விலை மதிப்பற்ற உயிரை வைத்துக்கொண்டு இந்த சமுதாயத்தை அற்புதமாக வழிநடத்துகிற திறனை வளர்க்க வேண்டும், நமக்கு இந்த நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் உண்மையான அக்கறை இருக்கும் பட்சத்தில்.. அதனை விடுத்து இப்படி தியாகம் என்கிற பெயரில் எல்லாரும் உயிர் நீக்கத்துணிந்தோமானால் அப்புறம் அட்டூழியங்களுக்கு விடிவே பிறக்காது...
இதனை தியாகம் என்று இளம் நெஞ்சங்களில் வீரத்தை விதைப்பதாகக் கருதி நாம் நம்மையும் அறியாமல் ஊக்குவிப்பதைத் தவிர்த்து இந்த உலகில் இருந்து சாதிக்கிற விவேகத்தையும், வீரத்தையும் இனி வருகிற தலைமுறைகளுக்கு புகட்ட வேண்டுமேயன்றி இந்தத்தற்கொலையை விடுதலை தாகமென்றும் வீர மரணமென்றும் தவறுதலாக அடையாளப்படுத்தி மீண்டும் ஒரு முறை இவ்வித விபரீதத்தை நடைபெறாமல் இருக்க செய்வதே நாம் இந்த நாட்டிற்கு ஆற்ற வேண்டிய தலையாய கடமை தியாகம் பகுத்தறிவு எல்லாமும் ஆகும்....
நன்றி.. ஜெய் ஹிந்த்..

ஒ மை காட்....

ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதை இன்னொரு நபர் நம்புவதில்லை மற்றும் விரும்புவதில்லை... தங்கள் மகிழ்ச்சிகளையே அவநம்பிக்கைகள் கொண்டும் பயந்து கொண்டும் அனுபவிக்கிற மனோபாவத்தில் தவித்துக்கொண்டிருப்பவர்களுக்கு மற்றவர்களது ஆனந்தம் சந்தேகமானதாகவும் பொய்யானதாகவும் தான் அடையாளப்பட்டிருக்கும்....
அடிக்கடி ஜகி வாசுதேவ் சொல்லுவார்.. ஆனந்தம் என்பது எவரும் எங்கும் தேடி அலைகிற விஷயம் அல்ல.., அது இயல்பாகவே எல்லார் வசமும் குடி கொண்டிருக்கிற தன்மை.... ஆனால் எனக்கென்னவோ மனிதர்களுக்கு பயம் தான் இயல்பாக குடி கொண்டுள்ளதென்றும் , ஆனந்தம் என்பது இப்படி சில ஞானிகள் அவ்வப்போது சொல்லித்தான் நம்மிடம் குடி கொண்டுள்ளது என்றெல்லாம் நினைக்க முடிகிறது...
ஞானமற்றும் மானமற்றும் கூட இருக்கலாம்.. ஆனந்தமற்றும் அமைதியற்றும் இருப்பது தான் பெரும் பாபம் என்பது என் அனுமானம்...!!

இது குறித்து ஓர் சின்ன நய்யாண்டி ஒன்றுண்டு...

ஓர் மனோதத்துவ டாக்டரை ஒருவர் சந்திக்க செல்கிறார்...
"எனக்கு எல்லாமே நல்லபடியா அமைஞ்சிருக்கு டாக்டர்.. நல்ல தொழில், அழகான குணவதியான மனைவி, அறிவான குழந்தைகள்... நிம்மதியான அமைதியான வாழ்க்கை..சண்டை வழக்கு இல்லாத சமரச வாழ்வு..."

அந்த மனோதத்துவ டாக்டர் கேட்கிறார்..:
"ஒ மை காட்....இதெல்லாம் உங்களுக்கு எத்தனை நாட்களாக?"

--சுந்தரவடிவேலு..

Saturday, January 30, 2010

சொல்வதற்கில்லை..

உன்னை
வசீகரிப்பதற்கான என்
எல்லா பிரயத்தனங்களும்
தழுவிய தோல்விகள்----

--ஓர் இனம் புரியாத
அனுபவமுதிர்ச்சியை
என்னில் ஊடுருவச்செய்துள்ளது...!


மேற்கொண்டு
என்ன செய்வது என்கிற
புதிய சிந்தனை ஓட்டங்களையும்
கழிகிற நேரங்களை
சுவாரஸ்யமாகவும்
மாற்றியமைத்த பேறு
உன்னையே சேரும்...

என் காதல்
மிகவும் ரசனை நிரம்பியதென்றும்
வண்ண மயமானதென்றும்
வர்ணித்த நீயே தான்
---- அந்த என் அன்புக்காதலி
நீ என்று நான் சொன்னதும்
பார்வைத்தீயில் என்னை
சுட்டுப்பொசுக்கினாய்...

ஆக --
பிறரையும் பிறவற்றையும்
நான் ரசிக்கையில்
மிகுந்த வாஞ்சையோடு
அங்கீகரிக்கிற நீ
உன்னை ரசிக்கிறேன்
என்கிற போது மட்டும்
தடுமாற்றமடைவதும்
என்னைத் தவிர்க்க
முயல்வதும் ..

அப்படி என்ன
உன்னைக்குறித்த
என் ரசனைகள்
உனக்கு அசுவாரசியமாகி
விட்டதென்கிற பெரிய
கேள்வி என்னிடம்
இருக்கிறது என்றாலும்....

--உன் இந்தத்தன்மை
உன்னை எனக்கோர்
சுயநலமியாக அடையாளம்
காண்பிக்கத்துவங்கியுள்ளது
சமீப நாட்களாக...

சொல்வதற்கில்லை...
என்னையும் என் காதலையும்
நீ ஏற்கிற ஓர் தருவாய்
வரும் பட்சத்தில்
உன்னை நான்
தவிர்த்து விடக்கூடுமோ
என்று கூட அஞ்சுகிறேன்...!![???]

சுந்தரவடிவேலு...

Wednesday, January 27, 2010

என் அபஸ்வரங்கள்..

என் முரண்கள்
எனக்கே சங்கடம்
அளிப்பவை...!
-வாயில் பீடியை
ஊதிக்கொண்டே
புகை பிடிக்காதீர்கள்
விளம்பரப்பலகை
எழுதிக்கொண்டிருப்பது
போல...

கும்பாபிஷேக
நெரிசலில்
மறந்து போகிற
தெய்வ பக்தி..
பெண்கள் மார்பகங்களில்
ஒன்றிப்போகிற மனசு..!!

மாய்ந்து மாய்ந்து
படித்து விட்டு
பரீட்சை நாளில்
புது ரிலீஸ் பட
தியட்டரில் வரிசையில்
நின்று கொண்டிருப்பது...

இழவு வீட்டில் போய்
இனிப்புப் பலகாரம்
கேட்டது போலிருக்கிறது
எனக்கிந்த வாழ்க்கை..!!



சுந்தரவடிவேலு..

Friday, January 22, 2010

மனித கபடுகள்...

நாம் எல்லாரும் இந்த வாழ்க்கை ஓர் அற்புதமான மாயை என்பதை நன்கறிவோம் என்ற போதிலும் இதன் மீதான அபரிமிதமான பற்று காரணமாக மாயை என்பதை மறந்து வாழ்க்கை குறித்து மிகவும் தீவிரமான போராட்டங்களை நிகழ்த்த பிரயத்தனிக்கிறோம்...

அதுவும் சரிதான். பிறந்தாயிற்று... மாயை என்று சும்மா குந்திக்கினு கெடந்தா எந்த நாயி மதிக்கும் நம்மை? அதுக்கும் இதுக்கும் அலஞ்சு திரிஞ்சு நாலு காசை ஊட்டண்டை கொண்டந்தாத்தான் கட்டினவ மதிப்பா.. பெத்த புள்ளைங்க மதிக்கும்... இல்லேன்னா தெருநாயை உட்டே கடிக்க வச்சுருவாக...

பற்றற்ற தன்மையுடன் இருக்கச்சொல்லி வலியுறுத்துகிற ஞானிகளுக்கே நம் பற்றை சாகடிக்க வைப்பதில் ஏக பற்றென்று கருதுகிறேன். அவர்களது பற்றுகளை மௌனமான ரகசியங்களாக்கிக்கொண்டு தன் சீடர்களுக்கும் தன்னை பின்பற்றுகிற அப்பாவிகளுக்கும் வெளிப்படையாக விலாவாரியாக பற்றற்ற தன்மைகளை உபதேசித்து அதில் வெற்றியும் கண்டு விடுகிற ஞானிகள் ஏராளம் நம் நாட்டில்....

நம்ம மக்களையும் ரொம்ப சாதாரணமா எடை போட்றாதிங்க... அந்த டுபாக்கூரு ஞானிகள் கிட்ட நெசமாலுமே முற்றும் தொறந்த தன்மையை வெளிக்காட்டி விட்டு , இங்கிட்டு வந்து நம்ம கிட்ட மெயின் ரோட்டு மேல நாலு ஏக்கரா எடம் இருக்கறதா பீத்திக்குவாக...


சுந்தரவடிவேலு..

Tuesday, January 19, 2010

மயிலிறகு..

காதல் என்ற
மயிலிறகு வருடல்
வாழ்வு நெடுக
எத்தனை பேர்க்கு
வாய்க்கும்?
--நெடுக வேண்டாம்..,
ரெண்டொரு வருடங்கள்..?
அந்தக்கொடுப்பினை
கூட அற்று வெறுமனே
நகர்கிற கொடுமை,
பிறப்புக்கே இழுக்கென்று
அபிப்ராயிக்கத்தோன்றுகிறது...

குறைந்த பட்சம்
ஒருதலைக்காதலிலாவது
பொழுதுகள் கழிந்திருக்குமாயின்
அது கூட வாழ்க்கையை
சற்று நிரப்பி விட்ட மாயை...

மயிலிறகாக உணராமல்
மயிராக உணர்ந்து எவ்வளவோ
காதல்கள் செய்யப்படுகின்றன.,
--பின்னொரு நாளில் கொச்சை
படுத்தப்பட்டு , காதல் என்பதற்கான
தாத்பர்யமே சீரிழந்து ...
ஆனால் அப்படி இங்கிதமில்லாத-
வர்களுக்கெல்லாம் காதல்
துவக்கத்தில் சுலபத்தில்
சாத்யப்பட்டு விடுகிற
விபரீதம் ..

எவ்வளவோ மயிலிறகுக்காதல்கள்
ஒருதலைப்பட்சமாக மட்டுமே
ஏங்கி சாகடிக்க வைத்து விட்டு
நடை பிணமாக்குகிற
அவலங்கள் யாவும்....
--- காதலே அற்று வாழ்ந்து
சாவதை விட மேன்மையானதென்றே
அடித்துக்கூற முடியும்
காதல் உணர்ந்த எல்லாராலும்...!!


சுந்தரவடிவேலு

Friday, January 15, 2010

சோகத்தீவு

ஹைத்தி தீவில் நடந்த மிக மோசமான பூகம்பம் நம் மனசுகளையும் உலுக்கியது என்றால் மிகையன்று..
தீவெங்கும் பிணங்கள் படர்ந்து கிடக்கிறது... பெரிதாக புதைகுழிகள் தோண்டப்பட்டு , அதே புல்டோசர் அந்தப்பிணக்குவியல்களையும் கொத்தாக அள்ளி அள்ளி அந்தக்குழிக்குள் போடப்படுகிறது.., சில பிணங்கள் தாறுமாறாக குழிக்குள் விழாமல் மேற்பகுதியிலேயே விழ, மறுபடி அதனை அந்த புல்டோசரின் கை தூக்கி குழிக்குள் வீசுகிறது..!!
இல்லை என்றால் அழுகி நாறி நோய்களைப்பரப்பக்கூடும்...

--அய்யஹோ.. மனித உயிர்களை இயற்கை எவ்வளவு துச்சமாக மதித்து விட்டது???
மாண்டவர்கள் கூட கொடுத்து வைத்தவர்கள்.., மீண்டவர்களோ... அதுவும் அவயவங்களை இழந்து, உறவுகளை இழந்து... காதலன் காதலியை இழந்து, காதலி காதலனை இழந்து... அந்த மன ; உடல் வேதனைகளை சுமந்து மேற்கொண்டும் அந்தத்தீவில் வாழ்க்கையை மறுபடி வாழத்துவங்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு... அதை விட வேறொரு நரகம் அவர்களுக்கு எங்கும் இல்லை என்றே தோன்றுகிறது...

பொருளுதவிகளும் ஆதரவு வார்த்தைகளும் மாத்திரமுமே நம்மால் அவர்களுக்கு விநியோகிக்க முடியும்...
தெறித்து விழுந்து விடுமோ என்கிற அளவுக்கு நெஞ்சு பதறுகிறது..,

எல்லா காயங்களையும் காலம் ஆற்றும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.. ஆனால் இந்தக்கோர தாண்டவத்தில் காலமே கதிகலங்கிப்போயிருக்கக்கூடும்...

சுந்தரவடிவேலு..

Monday, January 11, 2010

தோற்கிற ஹீரோ....

பிறர் அறிவுரை
கேட்கிற பிராயங்களை
கடந்து வந்ததாக நினைத்தாலோ
இன்னும் ஏதேதோ அறிவுறுத்துகிற
நபர்களையே சந்திக்க வேண்டிய
விதிகள் குறித்து சற்று கோபம் எனக்கு...

அடங்கிப்போகிற விஷயங்கள்
எல்லாம் சலிப்புத்தருகிறது, ஆகவே
அடக்கி ஆனந்தம் காண நினைத்தாலோ
மனைவியும் பிள்ளையுமே
கட்டாயக்கட்டளைகள் விதிக்கிறார்கள்
எதற்கேனும்... அடி பணிவதே
சாலச்சிறந்தது என்று மனசு வேறு
மௌனமாய் நியாயம் சொல்கிறது...!!

இறுமாப்பில் மார் தட்டி என் வழி தனிவழி
என்று பீற்றிய வீறாப்பெல்லாம் நாறிப்போய்
அற்ப விஷயங்களுக்கெல்லாம் பீதியடைந்து
வாயடைத்துப்போய் கிடக்கிறது வாழ்க்கை இங்கே..

மறுபடி முதலிலிருந்து வாழ்க்கையை ஆரம்பித்து
வாழ்கிற சந்தர்ப்பம் வாய்க்குமேயானாலுமே கூட
இதே தவறுகள் தான் தொடர்ந்து என்னை
அபகரித்துக்கொள்ளும் என்பது என் திடமான அனுமானம்...

நம்பிக்கைகளை வைத்துக்கொண்டே இந்த வாழ்க்கையை
வாழ்தல் எளிதல்ல என்பது நிதர்சனமாயிருக்க
இத்தனை அபத்தமான அவனம்பிக்கைகளோடு
எப்படி அன்றாடம் என்னால் வாழ சாத்யப்படுகிறது?

---எல்லாமே ஓர் அடர்ந்த அனுபவம் தான்...!!!!


sundaravadivelu

Saturday, January 9, 2010

ஹலோ ... மைக் டெஸ்டிங்....

குருட்டாம்போக்கில் மூன்று ப்லோகுகள் திறந்து விட்டேன். உருப்படியாக ஒரு ப்ளோகில் எழுதிக்கிழிப்பதே பெரும்பாடாக இருக்கையில் மூன்று எதற்கு என்று மீதி இரண்டை பஸ்பமாக்கிவிட்டேன்.. ஆனாலும் ஒரு சபலம்.. ஒரு ப்லோகை நமது நாலாந்தர சிந்தனைகளை வெளியிட வைத்துக்கொண்டால் என்ன என்று.
இமேஜ் ஸ்பாயில் என்று ஒரு நெருடல் இருந்தாலும் அப்படி ஸ்பாயில் ஆகும் அளவு நம்மிடம் என்ன இமேஜ் வாழுகிறது என்று ஒரு நக்கலும் தோன்றியது..
சரி.. அப்படி நமது அவ்வித அல்ப சிந்தனைகளையும் ஒரே ப்ளாகில் வெளியிட்டால் போகிறது.. யார் என்ன சொல்லப்போகிறார்கள், என்கிற நியாயமான ஓர் கோட்பாட்டின் அடிப்படையில் என் இதர இரண்டு ப்லாகுகளையும் வெட்டிவிட்டேன்.

ஆகவே மக்களே, இந்த ஒரே பிளாகில் தான் என் பயணம் இனி. தொடர்ந்து தங்கள் ஆதரவுகளை எனக்கு நல்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்....

"யாருடா இந்த டுபாக்கூரு.. போட்டுச்சாத்துங்கடா"....
என்கிற உங்கள் கூக்குரல்களை , அசரீரிகளை இந்த காதுகள் நன்கு கேட்கிறது நண்பர்களே...


sundaravadivelu

Wednesday, January 6, 2010

நாமெல்லாம் மனிதர்களா?.....

பிறவிகள் குறித்த பிரக்ஞை நம் அனைவர் வசமும் உள்ளன..
சென்ற பிறவியில் நாம் என்னவாக இருந்திருப்போம்?.. அடுத்த பிறவியில் என்னவாக பிறப்போம்?.. என்பதாக ஓர் பீதி நிரம்பிய அனுமானப்பட்டியல்கள் நம் அனைவரின் வசமும் ...

ஆனால் இந்த மனிதப்பிறவி குறித்த வியப்புகளோ சந்தோஷங்களோ மாத்திரம் எவரிடமும் இருப்பதாகத்தெரியவில்லை....
மனிதனாகப் பிறப்பது அரிதென்று பெருமை பிதற்றுகிற நாம் தான் .. பிறவியில்லா பெருநிலை வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறோம்...

எத்தனை கண்டுபிடிப்புகள்... எத்தனை புத்திசாலி த்தனங்கள்... மனிதனாகப் பிறந்தவன் மட்டுமே இத்தனை அற்புதங்களை நிவர்த்தி செய்ய முடிந்திருக்கிறது.. வேறு எந்த ஜீவராசிகளும் அல்ல... அந்த ஜீவராசிகள் ---அது அக்றிணை ஆகட்டும், உயர்திணை ஆகட்டும்..---- மனிதனால் மாத்திரமே அவை குறித்து ஆய முடியும், ஆய்ந்து விளக்கம் கொடுக்க முடியும். எந்த ஜீவராசிகளாலும் மனிதனை ஆய முடிவதில்லை... ஆனால் அந்த உயர்திணைகளும் அக்றினைகளும் மனிதர்களை காட்டிலும் அதிக காலம் இந்தப்ப்ரபஞ்சத்தில் வீற்றிருக்கககூடியவைகளாக இருக்கலாம், மனிதர்களுக்கு பெரும் பயன் தருபவைகளாக இருக்கலாம்.... ஆனாலும் என்ன ... மனித மூளைக்கு ஈடு இணை எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது...

இத்தனை உயர்நிலையில் வியாபித்திருந்தாலுமே ஓர் தாங்கொணா வெறுமை அவ்வப்போது வந்து ரத்தஞ்சுண்ட வைத்து விடுகிறது... அது சரி.. நாம் என்ன சாதித்திருக்கிறோம் , மனிதனாகப் பிறந்ததைத் தவிர?... எல்லாவற்றையும் வியத்தகுவகையில் சாதித்திருப்பவர்களும் மனிதர்கள் தான் என்றபோதிலும், அந்த வகை மனிதர்களிநின்று நாம் மாறுபட்டும் வேறுபட்டும், வெறும் மனிதர்களாக அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?
--ஆகவே அவ்விதமாக சாதிக்கிற மனிதர்களை வேண்டுமானால் வியந்து பாராட்டி , அரிது அரிது .. மானிடனாய் பிறத்தல் அரிது.. என்று வர்ணிக்கலாமே தவிர .. உண்டு பேண்டு உறங்கி எழுந்து .. உழைக்கச்சோம்பி.... காலைக்காட்சிக்கு திரையரங்கு வாசலில் தவம் கிடந்து .. பொழுது போவதற்கென்று பேருந்தில் பயணம் செய்து... கலர்களை அலசுவதற்கு கோயில்கள் பிரவேசித்து... மதியம் வீட்டிற்கு திரும்பினால் , உபயோகமாகத்தான் பய்யன் ஏதோ செய்து விட்டு வருகிறான் என்று நம்பி .. சாப்பிட அம்மா வட்டிலை கழுவி வைக்கிற போது கூட ஓர் குற்ற உணர்வு வரவில்லை என்றால் .... நாமெல்லாம் மனிதர்களா?...

சுந்தரவடிவேலு...

Sunday, January 3, 2010

மூர்ச்சை...

சாஸ்வதம் என்பதும் நிரந்தரம் என்பதும் மனிதன் தோற்றுவித்த ஓர் பொருளுக்கோ, அதன் தன்மைக்கோ இருக்கலாமேயன்றி , மனிதனுக்கு அன்று..
மார்கோனி கண்டுபிடித்த ரேடியோவாகட்டும், கிரஹாம்பல் கண்டுபிடித்த டெலிபோனாகட்டும் பல்பு கண்டுபிடித்த எடிசனாகட்டும்..
ஆனபோதிலும் மனிதன் அன்றி அந்த நிரந்தரத்தன்மை என்கிற உணரத்தக்க ஓர் உணர்வு வேறெந்த ஜீவராசிகளுக்கோ , நிரந்தரமாக இந்த உலகில் என்றென்றும் வீற்றிருக்கிற மலைக்கோ கடலுக்கோ கூட இல்லை என்றே ஓர் மனிதன் என்கிற முறையில் அனுமானிக்கிறேன்.
தத்துவார்த்தமாக எதையேனும் சொல்ல வேண்டுமென்கிற எனது பிரயத்தனம், எனது தன்மையையே கேலிக்குரியதாய் மாற்றவிழைகிறதோ என்று கருதுகிறேன்.
இப்படித்தான்... எதையேனும் தத்து பித்தென்று உளறி அறிவுப்பூர்வமாக பேசி விட வேண்டுமென்கிற அவசரத்தில் அல்ப விஷயங்களைக்கூட பகிர்ந்து கொள்ள சாத்யப்படாமல் போய் விடுகிறது, சமயங்களில்....
புது வருடம் பிறந்ததென்று மக்கள் ஆர்ப்பரிப்பதைப்பார்க்கையில் எனக்கு ஹாசியமாக இருக்கிறது..

இவர்களது கூப்பாடுகளுக்கு மத்தியில் ஒரு நிமிடம் அண்ணாந்து அந்த வானத்து நிலவைப் பார்த்தேன்... எத்தனையோ கோடி ஆண்டுகளை தரிசித்த அதன் மௌனமான வெளிச்சம் .. பூமியில் இந்த அல்ப வாழ்க்கை கிடைத்தமைக்காக தலை கால் புரியாமல் ஆடிப்பாடுகிற மக்கள்...

இந்த முரண்பாட்டின் அடர்த்தி... மூர்ச்சை அடையச்செய்கிறது என்னை..

சுந்தரவடிவேலு ....

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...