Wednesday, January 6, 2010

நாமெல்லாம் மனிதர்களா?.....

பிறவிகள் குறித்த பிரக்ஞை நம் அனைவர் வசமும் உள்ளன..
சென்ற பிறவியில் நாம் என்னவாக இருந்திருப்போம்?.. அடுத்த பிறவியில் என்னவாக பிறப்போம்?.. என்பதாக ஓர் பீதி நிரம்பிய அனுமானப்பட்டியல்கள் நம் அனைவரின் வசமும் ...

ஆனால் இந்த மனிதப்பிறவி குறித்த வியப்புகளோ சந்தோஷங்களோ மாத்திரம் எவரிடமும் இருப்பதாகத்தெரியவில்லை....
மனிதனாகப் பிறப்பது அரிதென்று பெருமை பிதற்றுகிற நாம் தான் .. பிறவியில்லா பெருநிலை வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறோம்...

எத்தனை கண்டுபிடிப்புகள்... எத்தனை புத்திசாலி த்தனங்கள்... மனிதனாகப் பிறந்தவன் மட்டுமே இத்தனை அற்புதங்களை நிவர்த்தி செய்ய முடிந்திருக்கிறது.. வேறு எந்த ஜீவராசிகளும் அல்ல... அந்த ஜீவராசிகள் ---அது அக்றிணை ஆகட்டும், உயர்திணை ஆகட்டும்..---- மனிதனால் மாத்திரமே அவை குறித்து ஆய முடியும், ஆய்ந்து விளக்கம் கொடுக்க முடியும். எந்த ஜீவராசிகளாலும் மனிதனை ஆய முடிவதில்லை... ஆனால் அந்த உயர்திணைகளும் அக்றினைகளும் மனிதர்களை காட்டிலும் அதிக காலம் இந்தப்ப்ரபஞ்சத்தில் வீற்றிருக்கககூடியவைகளாக இருக்கலாம், மனிதர்களுக்கு பெரும் பயன் தருபவைகளாக இருக்கலாம்.... ஆனாலும் என்ன ... மனித மூளைக்கு ஈடு இணை எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது...

இத்தனை உயர்நிலையில் வியாபித்திருந்தாலுமே ஓர் தாங்கொணா வெறுமை அவ்வப்போது வந்து ரத்தஞ்சுண்ட வைத்து விடுகிறது... அது சரி.. நாம் என்ன சாதித்திருக்கிறோம் , மனிதனாகப் பிறந்ததைத் தவிர?... எல்லாவற்றையும் வியத்தகுவகையில் சாதித்திருப்பவர்களும் மனிதர்கள் தான் என்றபோதிலும், அந்த வகை மனிதர்களிநின்று நாம் மாறுபட்டும் வேறுபட்டும், வெறும் மனிதர்களாக அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?
--ஆகவே அவ்விதமாக சாதிக்கிற மனிதர்களை வேண்டுமானால் வியந்து பாராட்டி , அரிது அரிது .. மானிடனாய் பிறத்தல் அரிது.. என்று வர்ணிக்கலாமே தவிர .. உண்டு பேண்டு உறங்கி எழுந்து .. உழைக்கச்சோம்பி.... காலைக்காட்சிக்கு திரையரங்கு வாசலில் தவம் கிடந்து .. பொழுது போவதற்கென்று பேருந்தில் பயணம் செய்து... கலர்களை அலசுவதற்கு கோயில்கள் பிரவேசித்து... மதியம் வீட்டிற்கு திரும்பினால் , உபயோகமாகத்தான் பய்யன் ஏதோ செய்து விட்டு வருகிறான் என்று நம்பி .. சாப்பிட அம்மா வட்டிலை கழுவி வைக்கிற போது கூட ஓர் குற்ற உணர்வு வரவில்லை என்றால் .... நாமெல்லாம் மனிதர்களா?...

சுந்தரவடிவேலு...

1 comment:

  1. //உண்டு பேண்டு உறங்கி எழுந்து .. உழைக்கச்சோம்பி.... காலைக்காட்சிக்கு திரையரங்கு வாசலில் தவம் கிடந்து .. பொழுது போவதற்கென்று பேருந்தில் பயணம் செய்து... கலர்களை அலசுவதற்கு கோயில்கள் பிரவேசித்து... மதியம் வீட்டிற்கு திரும்பினால் , உபயோகமாகத்தான் பய்யன் ஏதோ செய்து விட்டு வருகிறான் என்று நம்பி .. சாப்பிட அம்மா வட்டிலை கழுவி வைக்கிற போது கூட ஓர் குற்ற உணர்வு வரவில்லை என்றால் .... நாமெல்லாம் மனிதர்களா?...//

    திருப்பூரின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்தாற்போல் இருக்கிறது நண்பரே

    தொடர்ந்து நிறைய எழுதுங்கள்..

    வாழ்த்துகள்

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...