Wednesday, September 23, 2015

அம்மாக்களின் சுபாவங்கள்..

அங்கொன்றும் 
இங்கொன்றுமாய் 
பிஞ்சுப் பாதங்களின் 
ஒற்றை செருப்புக்கள் 
பாதை எங்கிலும் 
அனாமதேயாமாய்க் 
கிடக்கின்றன.. 

அம்மா மடியில் 
அயர்ந்து போய்  
அப்படியே நழுவி 
இருக்கக் கூடும்.. 
அல்லது 
தெரிந்தே கூட 
நழுவி .. 
சொல்லத் தெரியாமல் 
பார்த்துக் கொண்டே கூடப் 
போயிருக்கும்.. 

வீட்டிற்குப் போய் 
இறங்கும் போது தான் 
காலிலுள்ள ஒற்றை 
செருப்பை அம்மா 
கவனிப்பாள் .. 
'சனியனே.. இப்பத் 
தான் வாங்கிக் 
கொடுத்தோம்.. அதுக்குள்ள 
தொலச்சுட்டியே'
என்று திட்டுவதை 
எதற்கென்று புரியாமலே 
அழும்.. 

மறுபடி மற்றொரு ஜோடி 
செருப்பு.. 

குழந்தையே 
தொலைந்து போய்க் 
கிடைத்தாலும் 
'சனியனே எங்க 
போயித் தொலைஞ்சே?'
என்று திட்டிவிட்டு 
பிறகு அதற்கும்  
சேர்ந்தாற்போன்று 
கொஞ்சுவது தான் 
அம்மாக்களின் சுபாவங்கள்.. !!
Image result for mother and child

Tuesday, September 22, 2015

ர "களைகள்"....

ராவணனை 
ஹிட்லரை 
கோட்சேவை 
நல்லவர்கள் என்று 
சூளுரைக்கிற 
கெட்டவர்கள் 
இருக்கத் தான் 
இருக்கிறார்கள்.. 

ஆனால் 
காந்தியைக் கூட 
அவதூறு சொல்கிற 
ஹிம்ஸாவாதிகள் 
குறித்துத் தான் 
நமது கவலைகள் 
யாவும்.. 

பிச்சை 
எடுப்பதை 
ஊக்குவிக்கத் 
தெரிந்தவர்களுக்கு 
தர்மம் குறித்த 
பிரக்ஞை 
எங்கனம் இருக்கப்
போகிறது ?

நீர்நிலையின் 
அமைதியை 
சலனப் படுத்தி 
சிற்றலை நிகழ்த்தும் 
ஆவல் தென்றலுக்குக்  
கூட வந்து விடுகிறது..!

பிடுங்கி வீசவேண்டிய 
களைகள் 
வழிநெடுக வாழ்வுநெடுக 
வீற்றிருந்தாலும் 
நல்லவைகளை 
அடையாளப் படுத்த 
அவசியமாகி விடுகிற 
வினோதம் 
சுவாரஸ்யமே..!!

Sunday, September 20, 2015

வாஞ்சை..

சிக்கு நான் 
பிஸ்கட் சாப்பிட்டுக் 
கொண்டிருந்த போது.. 
வாஞ்சையோடு 
வாலாட்டிக் கொண்டு 
வந்து நிற்கிறது
சென்ற மாதம் என்னைக் 
கடித்து .... தொப்புளைச் 
சுற்றி ஊசிகள் போடச் 
செய்த அந்த 
காவி வண்ணத் தெருநாய்.. 

பற்பல பணி நிமித்தங்கள் 
நடுவே 
நாய்க்கடி மருத்துவத்தையும் 
கவனித்தாகவேண்டிய 
அவஸ்தைகளும் சூழ்ந்து 
எமது சூழலை 
இம்ஸிக்கச் செய்த 
நாயை .. 
தக்க தருணம் பார்த்து 
கழுத்தறுக்க என் 
மனிதபுத்தி ஆயத்தமாயிற்று.. 

வசமாக இன்று 
மாட்டிக் கொண்டதாக 
பீறிட்டுச் சிலிர்த்தது மனது.. 

'கடிச்சுட்டு வெக்கமில்லாம 
பிஸ்கட்டுக்கு வந்து வேற 
வாலாட்டுற நீ?' 
என்று முனகின உதடுகள்.. 

சப்தமில்லாமல் 
பின்புறக் கதவைத் 
திறந்து .. கைக்குச் சிக்கிய 
இரும்புத் தடி ஒன்றை  
எடுத்துக் கொண்டு 
நாய் நின்று கொண்டிருந்த 
முன்வாசலுக்கு வந்தேன்.. 

நான் பிஸ்கட் எடுக்க 
உள்ளே சென்றிருப்பதாகக் 
கருதி அது இன்னும் 
வாலை ஆட்டியவண்ணமே 
நின்றிருந்ததைப் பார்க்கையில் 

-உடனடியாக 
இரும்புத் தடியை கீழே போட்டுவிட்டு 
கையிலிருந்த 4 பிஸ்கட்டுகளை 
மட்டுமே போட முடிந்தது.. 

என்னைக் கடித்த வாய்
பிஸ்கட்டில் லயித்திருக்க 
அதன் நெற்றியை 
நீவுவதில் 
எனது வாஞ்சையும்  
நாயைப் போன்றே 
சிறந்து விளங்கிற்று.. !!

Friday, September 18, 2015

ஒரு தடவை செத்துப் போனப்ப.....

சுவாரஸ்யமான நாவலின் 
கடைசிப் பக்கம் 
கிழிஞ்சு  போயிருப்பது போல.. 

தரம் விலை 
எல்லாம் உயர்ந்த 
சொக்காய் ஒன்றுக்கு 
நான்காம் வரிசை 
பட்டனுக்கான காஜா 
எடுக்க மறந்திருப்பது போல.. 

டுபாக்கூர் என்று 
நினைத்திருந்த ஒரு கம்பெனி 
திடீரென்று 
'இலவச சிங்கப்பூர் பயண'
அறிவிப்பில் மூர்ச்சையாக்கி 
கிறங்கி மயங்கி.. 
-- பயண நாளில் 
துரிதகதியில்
பயண ஏற்பாடு நிகழ்ந்து 
கொண்டிருக்கக் கொண்டிருக்க.. 
அப்பனப் பெத்த அப்பத்தா 
பொசுக்குன்னு மண்டையப் 
போட்டது போல.. 

இப்டியே நெகட்டீவ் 
அடையாளங்களை அடுக்கிக்கிட்டே 
போயி.. 
செத்து மின்மயானம் 
தூக்கிக்கிட்டுப் போனா 
பவர் கட்டு.. ஜெனரேட்டர் ரிப்பேர்.. 

சரி, பொதச்சுடுவோம் னுட்டு 
ஏற்பாடாகி 
குழியத் தோண்டி.. 
'தொபுக்கடீர்' னு 
என்னைப் போட்டுட்டாங்களாம்.. 
நல்லவேளை, செத்துக் 
கெடந்ததால 
வலியோ வீக்கமோ இல்லாமத் 
தப்பிச்சுட்டதா  
பேசிக்கிட்டாங்களாம்...!!

Friday, September 4, 2015

தனி ஒருவன் ------------[சினிமா விமரிசனம்]

இடை வேளை  வரையிலுமாக அம்புலி மாமா கதை போன்று நகர்கிற கதை, இ.வே க்குப் பிற்பாடு சுஜாதா ஸ்டோரி மாதிரி மிக நயமாக நகர்கிறது.. 

சமீபத்திய டிரெண்டாக ஜெயம் ரவி, இந்த நாட்டைத்  திருத்துவதான பாத்திரங்களில் அதீத அக்கறை காண்பிப்பது சற்றே அமெச்சூராகத் தென்பட்டாலும் இந்த ஒரு கான்ஷியஸ் வெல்கம் செய்ய உகந்ததாகவே தோன்றுகிறது..
Image result for thani oruvan stills
வில்லனாக அரவிந்த்சாமி ... அதற்குரிய முகமோ, அவருக்கான தந்தையோ சற்றும் சம்பந்தமில்லாமற் தெரிந்தாலும், இப்படியான ஒரு மாறுதல் அவருடைய வெர்ஸாடிலிட்டி யைப் பின்னிப் பெடலெடுத்துக் காண்பிக்கிறது.. 

நயன்தாராவின் அந்த வீச்சான நடிப்பையும் புகழ்ந்தாக வேண்டும்.. இந்தக் கதையின் ஆழத்தை நன்கு அப்சார்ப் செய்து, அதற்குரிய விதத்தில் தன்னுடைய பாத்திரத்தை மெருகேற்றும் விதமாக செய்திருக்கிற அவருடைய பாங்கு, அற்புதம்.. அந்த ரெடிமேட் ஸ்மைல் மற்றொரு ப்ளஸ்.. 

நூறு சதவிகித சினிமா தனம் ஆரம்பம் முதல் நிறைவு வரைக்குமாக அப்பட்டமாகத் தெரிந்தாலும் அவ்வப்போது இந்த சமுதாயத்தின் மீதான பிரக்ஞைகளும், அதில் விழைகிற தீமைகளை செவ்வனே களைந்தாக வேண்டுமென்கிற அவசரங்களும் திரைக் கதையை இம்சை இல்லாமல் இழுத்துச் செல்கிறது.. 

இசை, துஷ்ப்ரயோகம் செய்யப் படாமல் அவ்வப்போது தேவையான சமயங்களில் மாத்திரம் வந்து நமது காதுகளை இம்சிக்காமல், மொத்தத்தில் சவுண்டு பொல்யூஷன் இல்லாமல் இருப்பது மிக ஆறுதல்.. அந்த ஹிப்ஹாப் இசை அமைப்பாளருக்கு ஒரு பாராட்டு.. அந்த "கண்ணாளனே " மெலடி கூட கேட்க இதம்.. பிக்ச்சரைசெஷன் செம... 

ஒரு ஜெனுயினான பிராண்டட் மொபைல் போன்று இந்தப் படம், அதீத டெக்னிக்கல்  ஸ்பெஸிஃபிக்கேஷன் நிரம்பி வழிகிறது.. 

உடன் வருகிற அந்த சிநேகிதப் பட்டாளங்களும் இந்தக் கதைக்கு ஈடு கொடுத்து  அரும்பாடு பட்டுக் கலக்கி இருக்கிறார்கள்.. 
Image result for thani oruvan stills
இன்னும் ஏதாவது படத்தின் ஹைலைட் விட்டுப் போயிருந்தால், அது என்னுடைய  கவனமின்மையே தவிர வேறென்ன?.. 

படம், மிக கவனமாகவும், இண்டெலிஜென்ஸ் கன்டென்ட் ஆகவும் பிரம்மாண்டமாயும் பிரம்மிப்பாயும் உள்ளது.. 

மன்னிக்க முடியாத ஒரே விஷயம் சற்று வன்முறையின் தூக்கல்.. 
அதுவும் அநேகமாக ஆந்திராவுக்குத் தேவையான மிளகாய் என்று நினைக்கிறேன்.. ஆனால், தமிழர்களுக்கு சற்று அதிக "காரம்" தான்.. 

இவ்ளோ மெனெக்கெட்டு சொல்லி,  படத்தின் டைரக்டரை மறந்தது  எனக்கே  ஆச்சர்யம்.. யெஸ் .. ஜெயம் ரவியின் சகோதரர்  ராஜா முன்னர். மோகன் ராஜா  இப்பொழுது.. ஆஸம்  பாஸ் .. இதே மாதிரி இனி கன்டினியூ  பண்ணுங்க.. 

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...