Sunday, December 30, 2012

கும்கி [review]

கும்கி பார்த்தேன்..
முன்பகுதியில் சில தடுமாற்றங்கள் இருப்பினும், தொடர்ந்து பயணிக்கையில் ஓர் ஒட்டுதல் பீரிட்டுவிடுகிறது..
அத்தப் பெரிய யானையையும் மேய்த்துக் கொண்டு, காதலையும் மேய்க்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பை எந்த நடிப்பையும் காண்பிக்காமல் இயல்பாக செய்திருக்கிறார் பிரபு மகன் விக்ரம்ப்ரபு...

அந்தப் பச்சை பசேல் வெளிகளினூடே அம்மூவரும் வலம் வருவதும்... ஓர் முரடர்கள் நிரம்பிய கிராமத்துக்குத் தேவையான கும்கி யானையை, தன்னுடைய கோவில் யானை தான் "கும்கி "என்று பொய் சொல்லி ஒப்பேற்றுவதும்.. அதன் நிமித்தமாக அவர்கள் அந்த கிராமத்திலேயே தங்க நேர்வதும்.. அந்தச் சந்திலே நாயகன் காதல் சிந்து பாடுவதும்.. உடனிருக்கிற நபர் "யானை டுபாக்கூர் என்று தெரிந்தால் டின்னுக் கட்டிவிடுவார்களே மொரட்டுப் பசங்கள்" என்று நகைச் சுவையாக பயப்பதும்..
--நழுவுகிற நிமிடங்களை அப்டியே அலாக்காக யானை மீது உட்கார  வைத்து நமக்குப் படம் காட்டியிருக்கிறார்கள்...

இமானின் பின்னணி இசை மற்றும் அவ்வபோது ரீங்கரிக்கிற தெம்மாங்குகள் .. ரியல்லி சூபர்ப்..

கடினமான ஓர் திரைக் கதையை லாவகமாகக் கையாண்டிருக்கிற  பிரபு சாலமனாகட்டும், தனது காமெராவில் ஒளி ஓவியம் வடித்திருக்கிற சுகுமார் ஆகட்டும் .. இந்தக் காலகட்டத்தின் சினிமா உலகத்துக்கு சவால் விடுபவர்கள்..

ஓர் ஆங்கிலபாணி சினிமாவை மிக சுலபமாக நமது கண்முன் நிறுத்தியுள்ளார்கள்... ஆனால் இதற்கென அவர்கள் பட்ட கடின உழைப்பை நாமெல்லாம் மிக சுலபத்தில் அடையாளம் கண்டுகொண்டு வியக்கமுடியும். நன்றி.. 

அமெரிக்க நண்பனுக்கு ஓர் கடிதம்..


அன்பு செந்தில்.... சாம்..
வடிவேல் நான். நலம், நலமறிய அவா.    

செல்போனில் என்னோடு நீ உரையாடிய அந்நாளிலேயே , "பொன்னான உமது நேரத்தை என்னோடு உரையாட செலவிட்ட" மைக்காக நன்றி நவிலலாம் என்றிருந்தவன் ஏனோ தாமதப் பட்டுவிட்டேன்.. 

காலச்சுழலில் யாவரும் புலம்பெயர்வதே யதார்த்த நிகழ்வாக உள்ளது இந்தப் பிரபஞ்சமெங்கிலும் ..!. ஓர் பிரத்யேக பதின் வயதுகளில் யாவருமாக கூடிக் குழுமி .. பிரிவதற்கான வாய்ப்பே அசாத்தியம் போல ஓர் மாயை பின்னிப் பிணைவதும் பற்றிப் படர்வதும்.. பிற்பாடு ஓரிழையில் இவனெங்கோ அவனெங்கோ என்கிற விதமாக கடல் அலை போல காலம் இழுத்துக் கொண்டு போய் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு தளத்தில் நிலை பெறச் செய்கிற இந்த வாழ்வின் மர்மம் சுவாரஸ்யம் நிரம்பியது.. இல்லையா செந்தில்??

என்போன்ற சிலரை எந்த அலையும் இழுக்கவியலாத ஓர் பாறைத்தன்மையில் படிந்து நிற்கவும் வைத்துவிடுகிறது..." இந்த சொந்த மண்ணை, இந்த இன்ப இந்தியாவை விட்டு எந்த சக்தியும் அடித்து சென்று விடமுடியாது " என்று பெருமையாக மார்தட்டிக் கொள்ளமுடிகிறது..  "இத விட்டா நமக்கு வேற கதி இல்லை" என்று மாரடித்துக் கொள்ளவும் முடிகிறது..

என்னவோ இதையெல்லாம் இந்த ஷணத்தில் உமக்குச் சொல்லத் தோன்றிய மாத்திரத்தில் சொல்கிறேனே தவிர முந்தைய அனுமானங்கள்   எதுவும் இல்லை..

நண்பர்களை விட்டு சிலர் உன்போல தேசம் கடந்து விடுகின்றனர்... அங்கிருந்து உமது மகள் பல மைல் தூரங்கள் தள்ளிப் போய் படிக்கவேண்டிய சூழல்..

ஏனோ புலம்பெயர்தல்கள் என்பன வரமா சாபமா என்கிற தகுதிகளோடு ஒத்துப் போகாமல் ஓர் குழப்பமான தகுதியோடு நம் வாழ்வோடு ஊடாடிக் கொண்டு தானிருக்கிறது எப்போதும்..

மறுபடி நீ இந்தியா வருகிற காலம் இன்னும் சற்று நீண்டிருப்பதாக சொன்னாய்... ஏனோ, எனக்கது இன்னும் விலகிப் போனதான ஓர் கற்பனை.. 

நன்றி செந்தில்.. 

ப்ரிய 
வடிவேல்.. சுந்தர..

Tuesday, December 11, 2012

.என் முகத்தைப் பழிக்கிறது என் இதயம்..

என் இதயத்தில் எழுகிற உணர்வுகளுக்கும்

ரசனைகளுக்குமான  பொருத்தத்தில் 

எனது முகம் பிரதிபலிக்காததை --

 என் முகத்தைப் பிரதிபலிக்கிற

 என் வீட்டுக் கண்ணாடியில்

 என்னால் சுலபத்தில் அடையாளம் காணமுடிந்தது..


அகத்தின் மெருகை முகம் காட்டுமென்கிற பழமொழியைப் பொய்யாக்கி விட்டதான அனுமானம் எனக்கு, என்மீதும் என் முகத்தின் மீதும்.

எது எப்படியான போதிலும் என்னை விட்டு நழுவுவதற்கான வாய்ப்பே அற்ற எனது முகத்தை நானென் இதயத்தைப் பிரதிபலிக்கச் சொல்லிப் பயிற்றுவிக்கிற  பயித்தியகாரத் தனத்தில் ஈடுபடவேண்டிய ஓர் ரணகளம் அவ்வபோது நிகழத்தான் நிகழ்கின்றன..!


"டிப்டாப்" ஆசாமி ஜேப்படி செய்து மாட்டிக் கொண்டு மானம் கெடுவது போல, எனது மன உணர்வுகளுக்கான எவ்வித தேஜஸும் அற்று ... மாமிசக் கடையில் பீதியில் உறைந்துள்ள கோழியின் பீய்ச்சி அடித்த பொச்சு போல என் முகம்...


இவ்வளவு பேரவஸ்தைகளை ஓரங்கட்டுகிற முஸ்தீபில் தான் நான் என்னைப் பிரதிபலிக்கிற எந்தக் கண்ணாடிகளுக்கும் பாராமுகமாயிருக்கப் பிரயத்தனித்துப் பழகிக் கொள்கிறேன்.


என் முகத்தைப் பிரதிபலிக்கிற கண்ணாடிகள் கல்லடி பட்டதுபோல  சுக்குநூறாகத் தெறித்து விடக்கூடுமென்கிற அபாண்ட கற்பனை எனக்கு..


என் முகம் சமைக்கப் பெற்றதற்கான காரணிகளாக அனுமானிக்கப் படுகிற பிரம்மன் ஆகட்டும், இன்னபிற தாதுக்களாகட்டும் -- ஒட்டுமொத்தமாகக் கூட்டு சேர்ந்து பெருந்துரோகம் இழைத்துவிட்டதாகவே எப்போதும் அரற்றிக் கொள்கிறது  என் இதயம்..!!


என் இதயம் விரும்புகிற முகங்களை தரிசிக்க நேர்கையில், அங்கலாய்ப்பில் விம்மிப் புடைத்துத் துள்ளி வெளியே குதித்து விடும் போல இதயம் என்னுள்ளே தத்தளிக்கிற போது .. என்னை முண்டமாக்கிவிட்டு எனது முகம் தற்கொலை செய்து கொள்ளுமோ என்றொரு அச்சமுண்டு... அந்த அச்சம் , என் இதயத்தில் ..!???

Monday, December 10, 2012

தவிர...

வாழ்க்கையைத் தவிர
யாவற்றுக்கும்
உத்திரவாதமிருக்கிறது...
--ஆனால்
வாழ்க்கை
பெரிய உத்திரவாதம் போல
மற்றவற்றின்
உத்திரவாதங்களுக்காக
நாமெல்லாம்
அதீதம் மெனக்கெடுகிறோம்..!

தாற்காலிகமான
முகவரிகளில் நாம்
வசித்து வருகிறோம்...
ஆனால்
விண்ணப்ப படிவங்களில்
"நிரந்தர முகவரி"
என்கிற கட்டத்தில்
எதையோ பூர்த்தி
செய்துகொண்டிருக்கிறோம்...

யாரோ சொல்லி

உலகம் உருண்டை
என்று புரிந்துகொண்டுள்ளோம்..
யாரோ சொல்லி
இந்த பூமி
நவகோள்களில் ஒன்றென்று
அறிந்து வைத்திருக்கிறோம்..!

நாமென்ன சொல்கிறோம்?..
அவனம்பிக்கைகளைத் தவிர..!!

நாமென்ன செய்கிறோம் ?..
சும்மா இருப்பதைத் தவிர..!!!

Thursday, December 6, 2012

ஐந்து நக்ஷத்திர குடிசைகள்...

ங்கக் குப்பையில் 
நானெனது 
கந்தலைத் தொலைத்து 
விட்டேன்...
அம்மணத்தோடு 
அலைகிறேன்..!               

அறுக்கும் வைரங்கள் 
காலடியில்..
அதற்கு பயந்து 
லாரி டயரில் தைத்த 
செருப்பு..
அவ்வப்போது 
அலட்டிக் கொள்கிற 
ராத்திரிக் குளிர்...
குளிர் காய 
நெருப்பில் போட
கரன்சி சேமித்து 
வைத்துள்ளேன் 
ஏராளம்....

பிளாட்டினத் 
தட்டேந்தி 
அன்றாடம் பிச்சை..
-அமிர்தம் 
விழுந்தால் 
நாய்க்கு எறிவேன்..
பழைய சோறென்றால் 
பருக்கை 
விடமாட்டேன்..!!

Saturday, December 1, 2012

பயணம்

எனது பயணம்
மிகவும் நீண்டது..
தடைகள் எவை 
வரினும் 
அவைகளை 
சுலபத்தில் 
தகர்த்தெறிவது...!

ஜன்னலோர 
வயல்வெளிகள்..
மலைமுகடுகள்..,
துரிதமாக விரைகிற
முகில்கள்..

வாகன நெரிசல்களில்
நான் பயணிக்கிற
பேருந்தின் நிதானம்
பேரவஸ்தை எனக்கு..

துரதிர்ஷ்டவசமாக
எனது பயணங்கள்
யாவும்
இலக்கற்றவை..!!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...