Sunday, June 27, 2010

அழுகி வரும் வேர்கள் .....

மக்கள் தொகை
பெருகி விட்டது...,
ஆனால் மக்கள்
மனசுகள் சுருங்கி              
விட்டன...                    
சுயநலம் என்பது
யதார்த்த நிகழ்வாகி
விட,
பொது நலமிகளை
விநோதமாயும் அந்நியமாயும்
பார்க்கிறார்கள்....

பிரச்சினை தனக்கு
நேர்கையில்
பிறருதவி எதிர்பார்ப்பவர்கள்
பிறர் பிரச்சினைகள்
குறித்து கிஞ்சிற்றும்
பிரக்ஞை அற்று நகர்கிறார்கள்..!!

நம் வீட்டுக்குழந்தைகள்
கூட தொலைக்காட்சிப்
பெட்டிகளையும் கணினிகளையும்
மாத்திரமே உற்ற சிநேகிதர்களாக
வரித்திருக்கின்றன...
கார்ட்டூன் பொம்மைகள்
மீது வைத்துள்ள அக்கறை கூட
உடன் பிறந்த தம்பி தங்கையிடம்
இருக்குமா என்பது சந்தேகமே...
-- இப்படி எலும்பு சதை ரத்தம்
மீதான பாச பந்தங்கள் எல்லாம்
பஞ்சு திணித்த பொம்மைகள் மீதும்
நிழலாடுகிற மாய பிம்பங்களின் மீதுமே

இந்தத்தலைமுறை குழந்தைகளுக்கு..!!
--தொட்டில் பழக்கமே
இப்படி என்கிற போது, சுயநலம்
சகஜமாகி விடுவதும் சகஜம் தானே???



சுந்தரவடிவேலு...

Wednesday, June 23, 2010

செம்மொழி மாநாடு

கோவை செம்மொழி மாநாடு குறித்து பற்பலரிடமும் பற்பல கருத்துக்கள் நிலவி வருகின்றன... முன்னர் இது குறித்து அவதூறாக பேசி வந்த எனது நண்பன் ஒருவன் இப்போது இந்த மாநாடு குறித்து பெருமை பேசுகிறான்.  ஓர் அரசாங்கம் இப்படி ஒரு திருவிழா நடத்துகிற யோகியதை கூட அற்று இருக்க வேண்டுமா , ஆகவே இது ஒரு ஆரோக்யமான மாநாடு , நம் மாநிலத்தின் உயர்வுகளை , அதன் தொன்மையான வரலாறுகளை, அன்று பெருவாழ்வு வாழ்ந்து மாண்ட மாமன்னர்கள் குறித்த அற்புதமான பதிவுகளை பறை சாற்றுகின்றன.. இப்போதைய தலைமுறைகள், தமிழின் தமிழர்களின் வீரியத்தை கண்டு உணர்வதற்கான பிரம்மாண்டமான வாய்ப்பென்று அபிப்ராயிக்கிறான்..
அரிசி பருப்பு விலைகளை கட்டுப்படுத்துகிற வக்கற்று ஆடம்பரம் செய்கிற ஒரு அரசாங்கம், கொடுங்கோலாட்சி நடத்திக்கொண்டிருப்பதாக அன்று சீறி சினந்து குதித்தவன் இன்றைய தேதியில் தன் கருத்தை இப்படி மாற்றி சொல்வதன் விபரீதம் புரியாமல் திணற நேர்கிறது..
எத்தனையோ இயற்கைப்பேரழிவுகள் நடக்கின்றன, பல கோடிகள் நஷ்டமாகின்றன, ரயில் விமானம் பேருந்து என்று ஒன்று விடாமல் அன்றாடம் விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணமுள்ளன, உயிர்சேதம் ஆகின்றன..அவர்கள் குடும்பத்திற்கு நஷ்டஈடு என்று பல கோடிகள் அளித்துதவ வேண்டியுள்ளது, அப்படியெல்லாம் செலவாகிறது.. ஒரு அற்புத விழா நடந்தேற ஆகும் செலவுகள் குறித்து நாம் ஏன் கவலை பட வேண்டும் என்று விளக்கம் சொல்கிறான்..
நேற்று மாநாடு சென்று திரும்பிய பலரும் BC என்றும் AC என்றும் பல கருத்துக்கள் வைத்துள்ளர்கள்.. அதாவது before conference  , after conference ...
அந்த பிரம்மாண்டத்தை காண்பதற்கே கண்கள் கோடி வேண்டும் என்றும், வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்றும் அரற்றுகிறார்கள்..
அவரையும் இவரையும் அப்படி சொன்னார்கள், இப்படி சொல்கிறார்கள் என்று பிதற்றுகிற நான் ?... நானும் அதே குழப்பங்களில் தான் இருக்கிறேன்..
நாளைக்கு மாநாடு சென்று வந்தால், நானும் இனி அபிப்ராயங்களை மாற்றி கொள்வேன் என்றே தோன்றுகிறது... பார்ப்போம்..        

Thursday, June 17, 2010

இருட்டுச்சூரியன்..

நான் உன் சூரியன்..
உன் மலை மார்புகளுக்குள்
புதையுண்டு
அஸ்தமிக்க விரும்புகிறேன்
அன்றாடம்...
அக்கினிக்குஞ்சாய்                                               
என்னைப்பராமறிக்கிறாய்..!
-உன் மார்புச்சூட்டில்
இந்த சூரியன் குளிர்காய்கிறது..!!

உன் காதல் ஒத்தடத்தில்
ஏன் ஏக்க வீக்கம் இளைக்கிறது..,
ஆனால் காமம் பருத்து விட்டது...
காமம் இளைப்பதற்கான
எந்த ஒத்தடங்களையும்
மறுக்க விரும்புகிறேன்..!

உன்னில் புதையுண்ட பிற்பாடு
மறுபடி மீள்வதற்கான
எந்த ஆயத்தங்களையும்
மேற்கொள்ளப்பிடிக்கவில்லை..!
உன்னில் அஸ்தமித்த பிற்பாடு
மறுபடி வெளியேறி
உதிக்கிற உத்தேசமே
அற்றுப்போய் விட்டது..!!

உன்னுள் உள்ளொளி பாய்ச்சி
எல்லா சுடர்களையும்
உன்னிடமிருந்தே உலகம்
கடன் பெறட்டும்..!!
சூரியனைக் கபளீகரித்து
விட்டதாக உன்னை சொல்வார்கள்,
சொல்லி விட்டுப்போகட்டும்..!         

சுந்தரவடிவேலு..

Saturday, June 12, 2010

அழகிய தமிழ்மகன்கள்...

நடக்கவிருக்கிற செம்மொழி மாநாடு எந்த வகையில் மக்களை அவர்களது வாழ்க்கைத்தரங்களை மேம்படுத்தப்போகிறது ? அப்படி மேம்படுத்துகிற வல்லன்மைகள் கொண்டதா இந்த மாநாடு... ?
பற்பலரும் பற்பல அனுமானங்களை, கருத்துக்களை பேச்சிலும் கட்டுரைகளிலும் வெளிப்படுத்திக்கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது..
பருப்பு அரிசி விலைகளை கட்டுப்படுத்துகிற யோக்யதையை காணோம்... இத்தனை கோடிகளைகொட்டி மாநாடு நடத்துகிறார்களாம்...
-- இப்படித்துவங்குகிற புலம்பல்கள், பல தினுசுகளில் நீள்கிறது..!!

தமிழை முன்னிறுத்துகிற பிரயத்தனங்கள் திமுகாவிற்கு இன்றோ நேற்றோ விளைந்ததன்று.. இது ஆரம்ப காலம் தொட்டு நிகழ்ந்து வருகிற கூத்து... என்ன செய்தும் தமிழ் அப்படி ஒன்றும் பிரதானமாக எதிலும் கோலோச்சுவதாகத் தெரியவில்லை... கருணாநிதியே தன் பிறந்த நாளை ஜூன் 3  என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டால் தான் தற்குறி கூட புரிந்து கொள்ள முடியுமே தவிர மாசி மாசம் என்றோ ௨௦ ஆம் தேதி என்றோ சொன்னாலோ எழுதிககாட்டினாலோ ஒன்றும் விளங்கிக்கொள்ளப்போவதில்லை... ஒரு நிறுவனத்தில் வேலைக்கு apply செய்வதற்கு கூட resume  ஆங்கிலத்தில் இருந்தால் தான் நாகரீகம் என்கிற போக்கு abcd   ஒழுங்காகத் தெரியாதவனுக்குக் கூட..
தமிழ்நாட்டில் வசிக்கிற நாம், ஆங்கிலத்தில் கையெழுத்து போடுவதை தானே பிரமாதமாகக் கருதுகிறோம்... எத்தனை பேர்கள் செக் லீபிலும், இன்னபிற முக்கிய ஆவணங்களிலும் தமிழில் signature செய்கிறார்கள்?.. அவர்களையும் அறியாமல் ஆங்கிலம் தான் அங்கே தவழ்கிறது..
எத்தனை மாநாடுகள் இந்த மாதிரி நடந்தாலும் இதே தலையெழுத்து தான் நம் மாநிலத்துக்கு... தமிழ் உயரிய மொழிதான், உன்னத மொழிதான்.. தமிழ் போலொரு இனிதான மொழி இல்லைதான்.. நன்கு பண்பட்ட மொழிதான்... ஆன போதிலும் தமிழ் தமிழ் என்று அழுபவர்களும் சிரிப்பவர்களும் ,  தன்னை உயர்த்திக்காண்பிக்கவும், பகுத்தறிவாளனாக உணர்த்தவும்  ரகசியமாக ஆங்கிலம் பேசவே  ஆசைப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை, சத்யம்..

சுந்தரவடிவேலு..          

Monday, June 7, 2010

ஹைக்கூ குக்குக்கூ....

நதியில்
சலனங்களின் சிறகடிப்பில்
நிலவே குலுங்கிற்று..

விலாவாரியாக
விளக்க முயல்கிறேன்.,
ரத்தினச்சுருக்கங்கள் குறித்து..

சமரச முயற்சிகளே
சண்டையின் சாயலில்
பயமுறுத்துகின்றன...


சுந்தரவடிவேலு..

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...