Wednesday, July 31, 2013

இயக்குனர் மணிரத்தினம்

இயக்குனர் மணிரத்தினம் குறித்து எனக்குப் புரிந்த தெரிந்த சில விஷயங்களைப் பரிமாற விரும்புகிறேன்..

சினிமா என்கிற ஓர் தன்மையை ஓர் மெருகூட்டலாக, ரசனைப் பிரவாகமாகத் துவக்கி வைத்த பெருமை ம.ரத்னத்தை நிச்சயம் சாரும்... ஒரே இளையராஜாவைப் பார்த்து பல இசைக் கலைஞர்கள் இன்று வளர்ந்து நிற்பது போல, அந்த வளர்ச்சியில் இ.ராஜாவே சற்று ஓரங்கட்டப் பட்டுவிட்டதாக உணரத் தோன்றுகிற விதமாக காலமும் மனிதர்களும் அவரைப் புறந்தள்ளிய ஓர் தன்மையை .. நிச்சயம் இசையை சினிமாவில் பிரத்யேகமாக ரசிக்கிற எவருமே அடையாளம் கண்டுணர சாத்தியப் படுமென்று அனுமானிக்கிறேன்..

அந்த ராஜாவைப் புறந்தள்ளியவர்கள் பட்டியலில் நிச்சயம் ம.ரத்னமும் அடக்கம்.. அவருடைய காட்சி அமைப்புகளுக்காவது a r  ரஹ்மானின் இசை சற்று பொருந்திப் போயிற்று.. ஆனால், பாரதிராஜாவின் செல்லுலாய்டு, ராஜா இசையை இழந்த நாள் தொட்டு எவ்வித உன்னத தன்மைகளையும் பிரதிபலிக்கவில்லை என்பதை எவரும் மறுப்பதற்கில்லை..!

மெல்லிய கதை அமைப்புகளிநூடே ரத்தக் களரி நிரம்பிய வன்முறைகளை சுலபமாக தனது திரைக் கதைகளில் திணிப்பதில் வல்லவர் ம.ரத்னம்.. முள் பலாவை துளைத்தால் தான் சுவை நிரம்பிய சுளைகள் தென்படும் என்பது போன்ற ஜிம்மிக்ஸ் வேலைகளை செவ்வனே அரங்கேற்றுகிற சாதுர்யம் ரத்னத்தின் முத்திரை..

என்றோ புனையப் பெற்ற ராமாயணம் --மேற்கொண்டும் திரிக்கப் பட்டு ராவணன்...
தமிழகத்தை ஆள்கிற அரசியல்வாதிகளை மேற்கோள் காண்பித்து இருவர்..

இதையெல்லாம் தமிழக மக்கள் வாயைத் திறந்து கொண்டு ரசிப்பார்கள் என்று நம்பி ஏமாந்த மணி, உப்புசப்பில்லாத கடல் படத்தை எடுத்ததும்,

இந்தத் தோல்விகளை சரிக்கட்டும் விதமாக இனி இன்னொரு படத்தை எடுத்து தமிழக  ரசிகர்களை குளிர்விக்கப் போவதாகவும் சில சினிக் கிசுகிசுக்கள்..

ஓர் தெளிவான கலைஞன், குறிப்பிட்ட காலத்தில் தனது சிருஷ்டிகளை இயல்பாகவே நிறுத்திக்  கொள்வது ஓர் பெரிய அறிவு சார்ந்த விஷயம்.. உடலில் மனதில்  தெம்பிருந்த காலத்தில் ஆட்டம் போட்டதை மனதில் வைத்துக் கொண்டே முதிர்ந்த இந்தக் கால கட்டத்தையும் தனது ஆளுமையில் கோலோச்ச வேண்டுமென்கிற ஆசை, அது பேராசை.. அப்ப , பெருநஷ்டம் அந்தப் பழமொழிக்கொப்பவே  வந்துவிடும்..

பாலசந்தருக்கும் பாகியராஜுக்கும் என்ன படமா எடுக்கத் தெரியாது?.. ஜெயகாந்தனுக்கும்  இன்னபிற அன்றைய பிரபல எழுத்தாளர்களுக்கும் இன்றைக்கென்ன  எழுதவா வராது?.. ஆனால் ஏன் எல்லாரும் அமைதி காக்கிறார்கள்? .. எதையேனும் செய்யபோய், சம்பாதித்து வைத்துள்ள அந்தப் பழைய வீரிய இமேஜும் இசிபட்டுப் போகும் என்கிற ஓர் தீர்க்க தரிசனத்தோடு தான் அவர்கள் அவ்விதம் இருக்கிறார்கள்..

மணிரத்தினம் போல சிலர் ஆட முற்பட்டு, சில துரதிர்ஷ்ட தயாரிப்பாளர்கள் இத்தனை காலம் சேர்த்துவைத்த காசுகளை விரயம் செய்ய வேண்டுமென்கிற விதி.. அதை மாற்ற எவரால் முடியும்?

Friday, July 26, 2013

அலட்டல் ...


.. 

எதற்கேனும் 
அலட்டிக் கொள்கிற 
ஆனந்தம் 
அலாதியானது.. 

பார்ப்பவர்க்கு 
நம் அலட்டல் 
புரிபடாததாக 
இருத்தல் நலம்...!

இயல்பாகவே 
அலட்டும் குணமற்றவர்கள்
தெய்வத்திற்கொப்பாவர்... 
இயல்பாகவே  அலட்டுபவர்கள் 
இம்சையாகப் புரிபடுவர்..!

நாசுக்காய் 
அலட்டத் தெரியாதவர்கள் 
நாசமாய்ப் போவர்..!!

அலட்டலை 
ரகஸ்யமாக்கி ..
புறமிருப்பவர்களுக்கு 
யதார்த்தமாகப் 
புரிபடுகையில்----

நிச்சயம் 
எதற்கேனும் 
அலட்டிக் கொள்கிற 
ஆனந்தம் மிகமிக 
அலாதியானது..!!

Saturday, July 20, 2013

கவிஞர் வாலி..

ம்ஜியார் சம்பந்தப்பட்ட பிரபல கலைஞர்கள் சொல்லி வைத்தாற்போல இதே வருடம் மறைவது ஒருவகையான டச்சிங்காக உள்ளது..
சில மாதங்கள்  முன்னர் தான் டி எம் எஸ் மறைந்தார்... இப்போது கவிஞர் வாலி..

சினிமா பாடல்களை சற்றே புரிகிற விதமாக எழுதிவந்தார்.. எளிமையும் இளமையும் ஒருங்கே இணைந்த அவரது பாடல்கள் பல, பற்பலராலும் மிகவும் ரசிக்கப் பெற்று வந்தன எனில் அது மிகையன்று...!!

தரை மேல் பிறக்கவைத்தான் என்று படகோட்டியில் பாடிய டி எம் எஸ் .. அதை எழுதிய வாலி.. அதற்கு வாயசைத்து நடித்த எம்ஜியார்.. மூவரும் இந்த ஷணத்தில் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை என்கிற கற்பனை பெரிய கண்டுபிடிப்பு இல்லை என்ற போதிலும் ..யோசித்துப் பார்க்கையில் சற்றே ஓர் இனம்புரியா கவலை மனசைக் கவ்வுவதை உணரத்தானே முடிகிறது??

உதாரணமாக சொல்லப் பட்ட அந்த மூவருமே காலத்தால் அழிக்கமுடியாத சாதனைகளை செய்துவிட்டுத் தான் மறைந்துள்ளனர்....! இப்படி நாமதேயங்களை பலமாக இந்த பூமியிலே பதித்துவிட்டு மறைந்தவர்கள் என்றென்றும் மக்களால் நினைக்கப் படுவர், அவரது படைப்புகள் ரசிக்கப்பெறும்...

ஆனால் எல்லாருக்குமா மரணம் இந்தப் பரிசுகளை வைத்துவிட்டுப் போகிறது?.. ஏதோ சிற்சிலர் மாத்திரமே இவ்வித நிழல் அடையாளங்களாகவாவது  இந்த உலகில் உலவுகிற பாக்கியம் பெறுகின்றனர்.. பற்பலரும், வெறுமனே இருக்கிற வரைக்கும் நினைக்கப் படுபவர்களாகவும் , சென்ற பிறகு அவரது குடும்பம் சார்ந்த உறுப்பினர்களே சில நாட்களில் மறந்து விடுகிற வகையிலும் வாழ்ந்து மறைகின்றனர்..

தோன்றின் புகழொடு  தோன்றுக  அதர்வைஸ் பொறக்காம இருக்கறதே பெட்டர் ன்னு  நம்ம ஆஸ்தான வள்ளுவன் ரெண்டே வரியில சுலபமா போட்டெ றிஞ்சுட்டுப்  போயிட்டாரு.. இங்க அவனவன் பொண்டாட்டிகிட்ட ஜெயிக்கிறதையே பெரிய  போராட்டமா வச்சிருக்கான்.. ஹிஹி.. 

Friday, July 19, 2013

மதிப்பிற்குரிய தமிழ் மக்களே.....

உலகில் எதிர்ப்பதம் இல்லாத வார்த்தை அநேகமாக 'மாயை' என்பதாகத் தான் இருக்கமுடியும்..
'மாயை அல்லாத'.. என்பது மாயையைக் காட்டிலும் மாயை என்றே தோன்றுகிறது..!!

நம்மைச் சுற்றி பறக்கிற கொசுவை சுலபத்தில் ஒரே கைதட்டலில் கொன்று விடுகிறோம்.. ரத்தம் பீய்ச்சி நம் உள்ளங்கையில் அது பொசுங்கிக் கிடக்கையில் ஓர் அசூயை வியாபித்தாலும் அதனைக் கொன்ற ஓர் நிறைவை மனசு அனுபவிக்காமல் இல்லை.. கொசுவாக ஓர் பிறவி எடுத்த அந்த உயிரை மிக சுலபமாக நிறைவுக்குக் கொணர்ந்துள்ளோம் என்கிற கிஞ்சிற்றுப் பிரக்ஞை கூட அற்று அடுத்த கொசு அதே ரீதியில் நசுக்கப் பெறுமா என்று எதிபார்க்கத் துணிந்து விடுகிறோம்.. !!

நமது பகுத்தறிவுக்காக ... புத்திசாலித் தனத்துக்காக.... அறிவுப் பூர்வ நடத்தைக்காக.. இன்னபிற நமது அனைத்து மேன்மைகளுக்காகவும் ஓயாமல் கர்வம் கொள்வதை ஏனோ விட்டொழிக்க விழைவதே இல்லை..

நமது முட்டாள் தனங்களுக்காக.. கேனத் தனங்களுக்காக... கிறுக்குத் தனங்களுக்காகக் கூட நாம் அதிகம் கவலைப் படுவதாகத் தெரிவதில்லை...!

திரையரங்குக் கண்ணாடி வழியாக டிக்கட் கிடைக்காமல் சோர்ந்து போய் திரும்புகிறவர்களை சுறுசுறுப்பாக கவனிக்கிறோம்...

டூவீலரில் நம்மை டிராப் செய்ய மறுக்கிறவனை 'நாசமாபோ' என்று சபிக்கிறோம்.. நாம் டூவீலரில் செல்கையில் டிராப் செய்யச் சொல்கிறவனிடம் காது கேட்காதவன் போல, கவனிக்காதவன் போல நகர்கிறோம்.. குறைந்தபட்சம்  'நான் இந்தப் பக்கம் திரும்பறேன்' என்று சொல்லி நேராகவே போகிறோம்.. நடக்க முடியாத கிழவியைக் கடந்து போகிறோம்.. 'டிராப்  பண்ணட்டுமா?' என்றொரு சற்றும் அறிமுகமாகாத அழகியைப் பார்த்துக் கேட்கிறோம்.. 

கையில் காசுக்குத் தரித்திரம் வருகிற போது சற்று முன்னர் தான் அறிமுகமான ஓர் நபரிடம் கூட கடன் கேட்கத் துணிகிறோம்... இருபதுவருட பழக்கமுள்ள நண்பன்  தனது குழந்தையைப் பள்ளியில் சேர்க்க 'பத்தாயிரம்' கேட்டால் கூட 'அடடே. இருந்ததை இப்பத்தான் ..' என்றொரு கதை சொல்வோம்... அனாமதேயமாக அறுபதாயிரம் கூட சேவிங்க்ஸ் அக்கவுண்ட்டில் தூங்கிக் கொண்டு கிடக்கும்.. 

வாழ்நாள் நெடுக தவறுகளை  சரிவரச் செய்வதே அநேகம் பேருடைய சுபாவமாக உள்ளதை கதைகளும் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதித் தெரிவிப்பதில் தான் என்ன தீர்வு வந்துவிடப் போகிறது??

Sunday, July 14, 2013

சிங்கம் 2

ஒரு ஜனரஞ்சக யாகமே நடத்தி இருக்கிறார்கள்.. அந்தத் தூத்துக்குடி உப்பளப் பிராந்தியாமே அபின் என்கிற வஸ்துவால் நிரம்பி வழிவது போன்ற ஓர் மாயையை நிகழ்த்தி உள்ளார்கள்..
சூரியாவின் அந்த மிடுக்கும் ஆவேசமும் மீசையும் போலீஸ் காஸ்ட்யூமும் .. நிஜப் போலீஸ் கூட அத்தனை தேஜஸில் இருக்கிற வாய்ப்பில்லை என்பதை சொல்லியாக வேண்டும்.. 
ஆனால் .... ஆடியன்ஸை சீட் நுனியில் உட்கார வைக்க வேண்டும் என்று மிகவும் பிரயத்தனித்திருப்பார்கள் போலும்.. 

இத்தனை களேபரங்களுள் நகைச்சுவைகளையும் அலேக்காக கொட்டி இருக்கிறார்கள்.. முதல் பாக விவேக்கையும் இரண்டாம் பாக சந்தானத்தையும் மிகத் திறமையான ட்ராக்கில் கலவை செய்து விநியோகித்தது எல்லாம் ஓகே.. 

அதே விதமாக அனுஷ்காவையும் நுழைத்து வெறுமனே ரெண்டு டூயட் பாட விட்டிருக்கிறார்கள் .. ஹன்சிகா மொட்வாணியை பிளஸ் 2 பெண்ணாக்கி அப்டி ஒன்றும் மனசில் ஒட்டாமல் செய்துள்ளார்கள்.. 

எந்நேரம் பார்த்தாலும் வில்லன்களிநிடத்து மிரட்டல் விடுப்பதும் அவர்களை சிங்கம் போல பாய்ந்து பாய்ந்து சண்டையிட்டு தோற்கடிப்பதுமே சூரியாவின் பிரதான வேலை.. 

ஆந்திராவையும் குறிவைத்து திரைக்கதையையும்  காமெரா ஆங்கில்களையும் --ரொம்பப் பரபரப்பை தூவியுள்ளார்கள்.. 

அஞ்சலி ஆரம்பக் குத்துப் பாட்டு .. வில்லன் கோஷ்டிகளின் அடாவடி திமிர் நியாயங்கள், அதனை சுலபத்தில் தனது சாதுரியத்தில் ஜேம்ஸ் பாண்ட் போல ஓடிவந்து  களைந்து விடுகிற சூரியா.. 

இதையே தான்யா சினிமா தொடங்குன நாளில இருந்து பார்த்துட்டு வர்றோம்.. ஆனா பாருங்க .. சலிக்காம விசில ஊதறாங்க ... 

சூப்பர் ஹிட் என்பதில் சந்தேகம் இல்லை.. ஆனால், ஓர் நியாயமான தரமான புதுமையான, ரசனை ததும்புகிற விஷயங்கள் உண்டா எனில், சத்தியமாக இல்லை.. !!

Monday, July 8, 2013

தர்மபுரிக் காதலர்கள்..

வருகிற செய்திகளைப் படிக்க நேர்கையில் வருகிற அசூயைகளையும் தர்மசங்கடங்களையும் வார்த்தைகளிட்டு நிரப்புகிற சாத்தியம் நிச்சயம் எனக்கில்லை..        

தர்மபுரியில் நேர்ந்த அந்த சமீபத்திய காதல் விவகாரம் நாம் யாவரும் அறிந்ததே.. அந்த வெகுளி திவ்யாவையும் அந்த விடலை இளவரசனையும் அவர்கள் கொடுக்கிற சிறுபிள்ளைத் தனமான தொலைகாட்சி பேட்டிகளையும் கவனிக்கையில் "ஏண்டா படிச்சு முன்னேற வேண்டிய இந்த சின்ன வயசுல காதல் கத்தரிக்காய்" ன்னு நாசமா போறீங்க ?! என்று ஒரு கேணச் சிறுக்கிக்கும்  கூடக் கேட்கத் தோன்றும்..

எனக்கு என்ன மஹா எரிச்சல் என்றால்..: வானொலி தொலைகாட்சி போன்ற ஊடகங்கள் இந்த மாதிரி அற்ப மனங்களில் விளைகிற சிறு உணர்வை, எதிரினப் பால் ஈர்ப்பை "காதல்" என்றும் "காதலர்கள்" என்றும் அங்கீகரித்து அந்த சிறுசுகளை ஊக்குவிக்கிற காரியத்தை செய்து கொண்டிருப்பதை.. ரேடியோ டிவி கவனிக்கிற யாவரும் அறிவர்.. !!

ஏன் இப்படி இவர்களையும் இவர்களது இனம் புரியாத அந்த உணர்வையும் இந்த மாதிரியான ஊடகங்கள் ஆதரிக்க வேண்டும்?.. அந்தப் பெண்ணிடத்திலும், பய்யநிடத்திலும் லைவாக கேள்வி கேட்கிறார்கள்.. "உன்னோட ஆளு கூட என்ன படம் முதல் முதலா பார்த்தே?" என்று கேட்கிறார்கள்.. "அடிக்கடி ரெண்டு பேரும் மீட் பண்ற இடம் எங்கே?" என்கிறார்கள்.. இதையெல்லாம் பார்க்கிற மற்றும் கேட்கிற மற்ற பயலுக்கும் புள்ளைக்கும் அனாவசியத்திற்கு ஓர் விஷ விதையை தூவுகிறார்கள்.. !!
"நாமுளும் தான் செஞ்சு பார்த்தா கொறஞ்சா போயிடுவோம்?" என்கிற விபரீத உந்துதலுக்கு ஆட்பட்டு தங்கள் பொன்னான காலத்தை நாசமாக்குகிறார்கள்...

சினிமாக்கள் இந்தக் காரியத்தை இன்னும் செவ்வனே செய்கிறது என்கிற போதிலும், "இதெல்லாம் வெறும் நடிப்பு மச்சி" என்கிற ஓர் உள்ளுணர்வு யாவருக்கும் உண்டு..  அதுவும் போக, ரேடியோ டிவி போல சினிமா என்பது லைவாக நிகழ்வதில்லை... ஆகவே அது ஓர் இறந்த தன்மையில் தான் எல்லாரது மனங்களிலும் வியாபிக்கவிழைகிறது.... ஆனால் வானொலி செய்வதும் தொலைகாட்சி செய்வதும் அப்படி அல்ல.. சுடச் சுட .. அது மிகவும் உயிர்ப்போடு வசீகரிக்க ஏதுவாகிறது.. !!

"என்னதான் வந்து உன்னைக் கெடுக்க வரட்டுமே.. உனக்கு புத்தி என்ன 'அதை' திங்கப் போயிடுச்சா.. ?.

எந்த விபரீதங்களையும் விலகி நின்று வேடிக்கை பார்க்கக் கற்க வேண்டுமேயன்றி தானும் அதில் ஓர் அங்கமாகி இந்த வாழ்க்கையில் ஓர் கலக்கு கலக்க வேண்டும்  என்று அவா கொண்டு அளப்பறை செய்யத் துணியக் கூடாது.. அந்த ஓர் மனப்பக்கும் இல்லை என்றால் மனதை மூடிக் கொண்டு வேறு  உருப்படியான வேலையொன்றில் லயித்து விடவேண்டும்.. !
பாருங்கள்.., இவர்கள் இருவரும் செய்த சிறுபிள்ளைத் தனத்திற்கு இப்போது இருவரது குடும்பங்களிலும் எத்தனை பலிகடாக்கள் ??

மேற்கொண்டு இது ஓர் பாடமாக அமைந்து திருந்தி நடப்பதற்கான வாய்ப்பாக இந்த சம்பவத்தினை நாமெல்லாம் எடுத்துக் கொள்ளவேண்டுகிறேன்.. மாறாக, மறுபடி கலவரங்கள் நிகழ்த்தி எதுவும் ஆகப் போவதில்லை..

ஏற்கனவே தேவைக்கு அதிகமாக இந்த சம்பவங்களால் இருதரப்பினரும் பாழ்பட்டு நிற்கின்றனர். மறுபடி ஓர் வன்முறையினைத் தூண்டி துயர்கள் எதுவும் நிகழாமலிருக்க  நாமெல்லாம் பிரார்த்திப்போம்.. வேறொன்றும் சொல்வதற்கோ செய்வதற்கோ இல்லை.. நன்றி.. 

Wednesday, July 3, 2013

கேதார்நாத்.. உத்தரகாண்ட் ..

யற்கையின் சீற்றங்கள் நம் இதயங்களைப் பிளந்து போட்டன..
அங்கே நாம் இருந்திருக்க விதி வாய்த்திருந்தால் ??.. குறைந்த பட்சம் நமது உற்றார் உறவினர் சிக்கி இருந்திருந்தால்?..

அவ்வித வலிகளினின்று விலகி, அந்தக் காயங்களை அன்றாடம் செவிவழி செய்திகளாகக் கேட்டு மருகி உருகி வருகிறோம்...
அவ்விதக் காயங்களினின்று விலகி, அந்த வலிகளை அன்றாடம் அறிந்து பதறிப் போகிறோம்...

அந்தக் கொடூரத் துயர்களிநின்று விடுதலை பெற உதவுகிற ஓர் ஹெலிக்காப்டரும் அதன் உதவுகிற குழுவும் விபத்தில் சிக்கி சின்னாபின்னமான செய்தி தாங்கொணா வேதனை அளித்தது..

தன் உறவினர் தப்பித்துத் திரும்புகிற குழுவில் உள்ளாரா அல்லது பிணக்குவியலில் கிடக்கிறாரா என்கிற ஓர் மகா குழப்பத்தில் தள்ளிவிட்டிருக்கிற இந்தக் கோர விதி குறித்து எவ்வளவு எழுதினாலும் எதுவும் எவர்க்கும் பிடிபடாதென்றே தோன்றுகிறது..

மனித மரணம் இத்தனை பெரிய அவலத்திற்கு ஆளான சேதி .. கேள்விப்படவே சுக்குநூறாக சிதிலப் படுகிறது நம் இதயங்கள்..

ஓடிப்போய் உதவ நாமெல்லாம் துடிக்கிறோம்...ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் நின்றுகொண்டு..!!

பசிக்காத குழந்தைக்கு நிலா காட்டி வாயில் திணித்து அதன் சின்ன வயிற்றை நிரப்புகிற முஸ்தீபில் நாமிருக்கிறோம்.. அங்கே பசியில் கதறுகிற பிஞ்சுக்கு அதன் தாய் முலைகளில் பால் வற்றிக் கிடப்பதை அனுமானிக்கிற திராணி நமக்கெல்லாம் இருந்தும் தான் என்ன பயன்??

புனித யாத்திரை, பாப யாத்திரையாக மாறி இருந்திருக்குமேயானால் கூட தேவலாம்.. அது மரண யாத்திரையாக மருவி இருப்பதைத் தான் தாங்க முடியவில்லை..

இன்னும் சில வருடங்களில் இந்தப் பிராந்தியம் யாவும் செவ்வனே புணரமைக்கப்  பெற்று ....

மக்களின் நெரிசல் குறைந்து விடுமென்றா நினைக்கிறீர்கள்?..ம்ஹ்ம் .. அதான் கிடையாது.


ஆயிரக்கணக்கான பைனான்சுகளும் சிட் பண்டுகளும் மக்களை ஏமாற்றி விட்டன.. ஏமாந்த கதைகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்லக் கேட்கிறோம். ஆனால், அதெல்லாம் ஓய்ந்திருக்கிறதா?.. இன்னும் காளான்கள் போல முளைத்துக் கொண்டே தான்  உள்ளன..

மெக்கா மதீனாவில் நெரிசலில் சிக்கி பற்பலர் இறக்கின்றனர்.. நமது சபரி ஐயப்பன் கோவிலில் நெரிசலில் மிதிபட்டு அன்று பலரும் இறந்ததை அறிவோம்.. ஆனால் எங்கேயும் கூட்டம் மாத்திரம் குறைந்த பாடே இல்லை.. அதே கதை தான், இந்த கேதார்நாத்துக்கும்..

சிவன் தனது வீட்டிலியே குடி இருந்தாலும் கூட ஒரு மனிதன் திருப்தி அடையமாட்டான் போலும்... இப்படி இமயம் வருவதைத் தான் பெருமையாகவும் தேவை போலவும்  கருதி செயல்பட விழைகிறான்.. ஆனால், இப்போது நடந்துள்ள இந்த விபரீதத்தைப் பார்த்தும் கூட தனது கொள்கைகளை எதிர்காலத்தில்  மாற்றிக் கொள்ளத் தவறுவானேயானால், யாரும் எதுவும் மேற்கொண்டு சொல்வதற்கோ செய்வதற்கோ இல்லை..

எனக்கொரு பகுத்தறிவில்லாத கற்பனை  --இந்த சம்பவத்திற்குப் பிற்பாடு வந்துவந்து  போகிறது.. அதாவது நமது புராண இதிகாச வரலாற்றுப் பதிவுகளில்.. சிவன் என்கிற கடவுள் அழிப்பவன் என்கிற செயலை செய்வதாக நாமெல்லாம் கேள்விப்பட்டும் படித்தும் அறிந்திருக்கிறோம்.. இதைப் பார்க்கிற போது .. அம்மாதிரி வரலாற்றுப் பதிவுகள் பொய் இல்லை என்றே நாஸ்த்திக மனது கூட நம்பிவிடும் என்றே எனக்குத் தோன்றுகிறது... !!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...