Monday, July 8, 2013

தர்மபுரிக் காதலர்கள்..

வருகிற செய்திகளைப் படிக்க நேர்கையில் வருகிற அசூயைகளையும் தர்மசங்கடங்களையும் வார்த்தைகளிட்டு நிரப்புகிற சாத்தியம் நிச்சயம் எனக்கில்லை..        

தர்மபுரியில் நேர்ந்த அந்த சமீபத்திய காதல் விவகாரம் நாம் யாவரும் அறிந்ததே.. அந்த வெகுளி திவ்யாவையும் அந்த விடலை இளவரசனையும் அவர்கள் கொடுக்கிற சிறுபிள்ளைத் தனமான தொலைகாட்சி பேட்டிகளையும் கவனிக்கையில் "ஏண்டா படிச்சு முன்னேற வேண்டிய இந்த சின்ன வயசுல காதல் கத்தரிக்காய்" ன்னு நாசமா போறீங்க ?! என்று ஒரு கேணச் சிறுக்கிக்கும்  கூடக் கேட்கத் தோன்றும்..

எனக்கு என்ன மஹா எரிச்சல் என்றால்..: வானொலி தொலைகாட்சி போன்ற ஊடகங்கள் இந்த மாதிரி அற்ப மனங்களில் விளைகிற சிறு உணர்வை, எதிரினப் பால் ஈர்ப்பை "காதல்" என்றும் "காதலர்கள்" என்றும் அங்கீகரித்து அந்த சிறுசுகளை ஊக்குவிக்கிற காரியத்தை செய்து கொண்டிருப்பதை.. ரேடியோ டிவி கவனிக்கிற யாவரும் அறிவர்.. !!

ஏன் இப்படி இவர்களையும் இவர்களது இனம் புரியாத அந்த உணர்வையும் இந்த மாதிரியான ஊடகங்கள் ஆதரிக்க வேண்டும்?.. அந்தப் பெண்ணிடத்திலும், பய்யநிடத்திலும் லைவாக கேள்வி கேட்கிறார்கள்.. "உன்னோட ஆளு கூட என்ன படம் முதல் முதலா பார்த்தே?" என்று கேட்கிறார்கள்.. "அடிக்கடி ரெண்டு பேரும் மீட் பண்ற இடம் எங்கே?" என்கிறார்கள்.. இதையெல்லாம் பார்க்கிற மற்றும் கேட்கிற மற்ற பயலுக்கும் புள்ளைக்கும் அனாவசியத்திற்கு ஓர் விஷ விதையை தூவுகிறார்கள்.. !!
"நாமுளும் தான் செஞ்சு பார்த்தா கொறஞ்சா போயிடுவோம்?" என்கிற விபரீத உந்துதலுக்கு ஆட்பட்டு தங்கள் பொன்னான காலத்தை நாசமாக்குகிறார்கள்...

சினிமாக்கள் இந்தக் காரியத்தை இன்னும் செவ்வனே செய்கிறது என்கிற போதிலும், "இதெல்லாம் வெறும் நடிப்பு மச்சி" என்கிற ஓர் உள்ளுணர்வு யாவருக்கும் உண்டு..  அதுவும் போக, ரேடியோ டிவி போல சினிமா என்பது லைவாக நிகழ்வதில்லை... ஆகவே அது ஓர் இறந்த தன்மையில் தான் எல்லாரது மனங்களிலும் வியாபிக்கவிழைகிறது.... ஆனால் வானொலி செய்வதும் தொலைகாட்சி செய்வதும் அப்படி அல்ல.. சுடச் சுட .. அது மிகவும் உயிர்ப்போடு வசீகரிக்க ஏதுவாகிறது.. !!

"என்னதான் வந்து உன்னைக் கெடுக்க வரட்டுமே.. உனக்கு புத்தி என்ன 'அதை' திங்கப் போயிடுச்சா.. ?.

எந்த விபரீதங்களையும் விலகி நின்று வேடிக்கை பார்க்கக் கற்க வேண்டுமேயன்றி தானும் அதில் ஓர் அங்கமாகி இந்த வாழ்க்கையில் ஓர் கலக்கு கலக்க வேண்டும்  என்று அவா கொண்டு அளப்பறை செய்யத் துணியக் கூடாது.. அந்த ஓர் மனப்பக்கும் இல்லை என்றால் மனதை மூடிக் கொண்டு வேறு  உருப்படியான வேலையொன்றில் லயித்து விடவேண்டும்.. !
பாருங்கள்.., இவர்கள் இருவரும் செய்த சிறுபிள்ளைத் தனத்திற்கு இப்போது இருவரது குடும்பங்களிலும் எத்தனை பலிகடாக்கள் ??

மேற்கொண்டு இது ஓர் பாடமாக அமைந்து திருந்தி நடப்பதற்கான வாய்ப்பாக இந்த சம்பவத்தினை நாமெல்லாம் எடுத்துக் கொள்ளவேண்டுகிறேன்.. மாறாக, மறுபடி கலவரங்கள் நிகழ்த்தி எதுவும் ஆகப் போவதில்லை..

ஏற்கனவே தேவைக்கு அதிகமாக இந்த சம்பவங்களால் இருதரப்பினரும் பாழ்பட்டு நிற்கின்றனர். மறுபடி ஓர் வன்முறையினைத் தூண்டி துயர்கள் எதுவும் நிகழாமலிருக்க  நாமெல்லாம் பிரார்த்திப்போம்.. வேறொன்றும் சொல்வதற்கோ செய்வதற்கோ இல்லை.. நன்றி.. 

1 comment:

  1. நீங்கள் சொல்வது போல் நடக்க வேண்டும்...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...