Monday, August 31, 2009

ஓர் விளம்பரம் குறித்து...

விளம்பரம் குறித்து எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள் மிக நீண்டதொரு கட்டுரை எழுதியதை படித்தேன். சுவாரசியமான அவரது நய்யாண்டித்தனம் ரசிக்கும் படியாகயிருந்தது..
அதனைப் படித்த பிறகு, எனக்கு ஓர் விளம்பரத்தைக் குறித்த கருத்தை வெளிச்சொல்ல முனைகிறேன்....
கோல்டு வின்னர் சமையல் எண்ணெய் விளம்பரத்தை ஒவ்வொரு முறை தொலைக்காட்சியில் பார்க்கிற பொழுதும் , ஓர் விவஸ்தை கெட்ட தனம் விளம்பரம் முழுக்க இருப்பதை நீங்களுமே கூட உணர்ந்திருப்பீர்கள் என்று அபிப்ராயிக்கிறேன்....
ஓடி ஆடி விளையாடுகிற குழந்தைகள் , தங்கள் உணவு முறைகளில் கோல்டு வின்னர் சேர்ந்து இருப்பதற்காக அப்படி ஆனந்தமாக குதூகலிப்பது அபத்தமாக இருக்கும்..
அதற்கு பதிலாக ரெண்டு நடுத்தரக் குடும்பத்துப் பெண்கள், எண்ணையின் அருமையை பகிர்ந்து கொண்டால் கூட ஓர் அர்த்தமிருக்கும்..
ஒருக்கால் அந்த விளம்பர உத்தி அவர்களது வியாபாரத்தை வேண்டுமானால் உயர்த்தியிருக்கலாம்..ஆனால் விவஸ்தை அடிப்படையில் ரொம்ப அநியாயம்...இல்லையா?

Sunday, August 30, 2009

கொடுமையின் மறுபக்கம்...

அரசாங்க உத்யோகத்தில் உள்ளவர்கள் மாத்திரம் தான் துவரைப்பருப்பு வாங்கி சாம்பார் வைக்க முடியும் என்று நினைக்கிறேன்.
எனென்றால் சந்தையில் ஒரு பொருள் விலை ஏறும் போது இவர்களுக்கு சம்பளமும் ஏறி விடுகிறது..
கல்லூரி பேராசிரியர்களுக்கு 62 ஆயிரம் ரூபாய், மாத சம்பளம்.. மாதத்திற்கு 20 நாட்கள் வேலை இருந்தால் அதிகம். அதில் நாள் ஒன்றுக்கு ரெண்டிலிருந்து மூன்று மணி நேரங்கள் வகுப்பு எடுப்பாரா?
ஆக, ஒரு மணி நேரத்திற்கு 1100 ரூபாய் சம்பாதிக்கிறார்கள்..
சாதாரண மக்கள் நூறு கிராம் து.பருப்பு வாங்கவே நாற்பது முறை யோசிக்க வேண்டி உள்ளது..
இந்தியா, ஒரு சாரார்க்கு மட்டும் தான் வல்லரசு ஆக முடியும் போலும்..
மற்றொரு சாரார்க்கு கட்டியிருக்கிற கந்தல் கோவணமும் கழன்று போகும் என்றே தோன்றுகிறது...

Saturday, August 29, 2009

எதற்கும் தயாராகும் மனசுகள்....

அன்றெல்லாம்
கனவுகளில் ---
நான் எதிர்பார்த்தாலுமே
கூடப் போதும்.. நீ
வந்து விடுவாய்..!
ஆதலால் அன்றைய
உறக்கங்கள் கூட
இன்றளவும்
வசந்தகால வனப்புகளுடன்
ஞாபகமாய் உள்ளன..

அன்றைய உறக்கம்
வராத இரவுகளில் கூட
நீ கனவாய் வந்தது போன்ற
பிரம்மைகள் உள்ளன..
விழித்திருக்கையில் --
நமது மடிகளில்
மாறி மாறி நாம் கிடந்து
அந்தக் காதல் உற்சவத்தை
உற்சாகமாய்ப் பகிர்ந்து கொண்டோம்..
--இப்படியாக
விழித்திருக்கையிலும் உறங்குகயிலும்
எந்தத் தருவாய்களிலும்
உன்னை நானோ என்னை நீயோ
இழப்பதற்கான சாத்யக்கூறுகளே அற்ற
அந்த இறந்த காலங்களை-----
விவாகரத்து பெற இன்னும்
ஒரு வார அவகாசமே உள்ள
இந்தச் சமயத்தில்
மீண்டும் ஒரு முறை
பகிர்ந்து கொள்ளப்
பிரயாசைப் படுகிறது என் மனது...!!

Thursday, August 27, 2009

mixing...

ராஜன் நாடார் கடைக்கு போய் எதாவது சரக்கு வாங்கி வரச்சொன்னால் முரளிக்கு எப்பவும் ஓர் அலாதி ஆனந்தம்... கடை ஊழியர்களுக்குத் தடுபபாய் வைத்திருக்கிற அந்தச்சாக்கு மூடைகளில் அஸ்கா சக்கரையும் பொட்டுக்கடலையும் எப்பவும் நிரப்பி வைத்திருப்பார்கள்..ரெண்டையும் மிக்ஸ் செய்து சாப்பிட்ட வண்ணமே அம்மா சொல்லி விட்ட சரக்குகளை நிதானமாக பட்டியலிடலாம்... கடைக்கு வருகிறவர்களில் முக்கால் வாசிப்பேர் அந்த அஸ்கா பொ.கடலை மிக்சிங்கில் லயித்து விடுவார்கள் என்றாலும், அது குறித்து முதலாளியோ ஊழியர்களோ இது வரை எவரையும் கேள்வி கேட்டதாக முரளிக்குப்படவில்லை..
அது கஸ்டமர்களை வரவேற்கிற தந்திரம் என்று உணர்கிற வயதெல்லாம் இன்னும் வரவில்லை.. பக்கத்திலேயே இருக்கிற முருகன் ஸ்டோரில் அவ்வித சலுகைகள் எதுவும் இல்லை. அதுவும் அஸ்கா பொட்டுக்கடலை மூடைகளை அவர்கள் தூரந்தள்ளி வைத்து விட்டதோடு பருப்பு வகையறா மூடைகளை தடுப்புக்கு நிறுத்தி வைத்து விட்டார்கள்..
ஆகவே முரளி போன்ற சின்னப்பய்யங்களுக்கும், ஏன்-பெரியவர்களுக்குமே கூட ராஜன் நாடார் கடை திரும்ப வரவழைக்கிற ஓர் தன்மையை ஏற்படுத்தியிருந்தது..
பென்சில் ரப்பர் வாங்கச்சென்றால் கூட அந்த மிக்சிங்கை ஒரு கை பார்த்து விட்டுத்தான் மறுவேலை..

ஒவ்வொரு முறையும் அவர்கள் போடுகிற பில்லில் , அந்த அஸ்கா பொட்டுக் கடலைக்கான ஓர் விலையை மறைமுகமாக மற்ற சாமான்களில் திணித்து விடுகிற தந்திரத்தை பெரியவர்களே புரிந்து கொள்ள முடியாத போது முரளி போன்ற வாண்டுகளுக்கு என்ன புரியப்போகிறது?....

Tuesday, August 25, 2009

நாடோடிகள் ... நாகரிகமான ஓர் படம்...

நாடோடிகள் .. படம் பார்த்தேன்.
நேர்த்தியான திரைக்கதை.. தமிழில் வித்யாசமான கோணத்தில் ஓர் கதை..
நடித்த அனைவரும் .... வாழ்ந்திருக்கிறார்கள்..
இரைச்சல்கள் இல்லாத சுந்தர் சி பாபுவின் இசை..ரசிக்கும்படியான ரெண்டொரு பாடல்கள்..
பெரிய பெரிய பாணர்களில் விவஸ்தையில்லாத எவ்வளவோ டப்பா படங்களின் நடுவே ஓர் உயிர்ப்புள்ள படம் வந்துள்ளது..
ஏதாவது படம் பார்க்கலாம் என்று யோசிப்பவர்கள், இந்தப்படத்தை சென்று பர்ர்க்கவும்..

Monday, August 24, 2009

மேற்கொண்டாவது...


இது நாள் வரை நான் எனது பிளாகில் வெளியிட்டு வந்த கவிதைகள் சிறுகதைகள் அனைத்தும் ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் எழுதி வைத்தவைகளே..இன்னும் பல கவிதைகளும் பிற வகையறாக்களும் ..இன்னும் தூசு தட்டப்படாமல் இருக்கின்றன..

அன்றைக்கெல்லாம் எப்படி ஓயாமல் இப்படி எழுதித் தீர்த்தேன் என்று ஆச்சர்யமாக உள்ளது.. இத்தனைக்கும் அன்று நான் எழுதியவைகளில் 75% சிறுபிள்ளைத்தனங்கள் நிரம்பியவைகளே..பிளாகில் வெளியிடக்கூடிய அந்தஸ்துக்களற்றவையே...! மிச்சம் இருக்கிற 25% மட்டும் பெரிய அந்தஸ்து உள்ளதென்று நம்பி வெளியிடவும் பயமாகத்தான் உள்ளது..

சில நேரங்களில் எனது அனுமானங்கள் பொய்த்து விடுவதும் உண்டு.. நான் பிரமாதம் எனக்கருதி வெளியிடும் எனது படைப்புகள் கூட ரசிக்க உகந்ததாகவோ அறிவுப்பூர்வமாகவோ இருப்பதில்லை. அதற்காக நானே என்னைக் குட்டிக் கொள்வதும் உண்டு..

அந்த நாட்களில் கேணத்தனமாகக்கூட எதையேனும் கிறுக்கிக்கொண்டிருந்தேன்., ஆனால் இன்று அவ்விதமெல்லாம் எழுதுகிற மனோபாவம் மிக அரிதாகத் தான் நிகழ்கிறது..

பார்ப்போம் , ஏதாவது உருப்படியாக மேற்கொண்டாவது எழுத சாத்யப் படுகிறதா என்று..

சந்திப்போம்..

சுந்தரவடிவேலு, திருப்பூர்..

Saturday, August 22, 2009

அப்பா..

மறுபடி
பூமியில் என்னைப்
புதுப்பித்தவர்...
-என்னைப்பற்றிய
தனது லட்சியங்களுக்கு
சுதந்திரம் கொடுத்தவர்.,
...எனது லட்சியங்களை
இரக்கமில்லாமல் சிறைப்
படுத்தினார்...!
-சுதந்திரம் அளிக்கப்பட்ட
அவரது லட்சியங்களில்
நான் என்னைக்
கைதியாய் உணர்ந்தேன்..,
அவரால் சிறைப்படுத்தப்பட்ட
எனது லட்சியங்களில் மாத்திரமே
நான் சுதந்திரம் உணர்ந்தேன்...!
இந்த முரண்களால் மூர்க்கமானோம்..
வார்த்தைகளில் குளிர்ச்சி திணிக்க
மறந்து போனோம்...

சுலபத்தில் நான்
தோற்க நேர்ந்த என் அப்பாவின்
லட்சியங்களால்,
வெற்றி பெற்ற எனது
லட்ச்யங்களும் கூட
என்னுள் எவ்வித
சுவாரஸ்யங்களையும்
பதிவாக்கவில்லை...!!
-அன்றைய
அவரது லக்ஷ்யங்களுக்கான
கதறல்களை, இன்றைய
அவரின் இல்லாமையில் கூட
அசரீரியாக தொனிக்கக்
கேட்கிறேன்...!!

(2)

"IN FUTURE,
I WILL BE A DOCTOR
OR AN ENGINEER"
-திட்டவட்டமாக
சொல்கிறான் எனது
பத்தாம் வகுப்பில் படிக்கிற
மகன்...
நான் ஆகவேண்டும் என்று
என் அப்பா ஆசைப்பட்ட
தகுதிகள்.....
"அதைக் காட்டிலும்
தமிழ் இலக்கியத்தில்
அதிகம் சாதிக்கலாமே!"
-என்று சொல்ல விரும்பிய
நான்,
முரண்களை விரும்பாமல்
மௌனித்துக்கொண்டேன்....
இந்த நாசுக்கு அன்றைக்கு
என் தந்தைக்குத் தெரியவில்லை...!
"நான் தாண்டா மகனே உனக்கு
மகனா வந்து பிறந்து இருக்கேன்.."-
---என் கனவில் வந்த அப்பா சொன்னார்...!

விழிப்புற்ற நான் அருகில்
என் மகன் ஆழ்ந்து உறங்குவதைப்
பார்க்கிறேன்..
அப்பாவை மறுபடி நான்
பூமியில் புதுப்பித்து விட்டதாய்
உணர்ந்தேன்..

சுந்தரவடிவேலு, திருப்பூர்..

Friday, August 21, 2009

ஞாபக மறதிகள்..

எங்கோ என்
கவிதைகளை நான்
தொலைத்து விட்டேன்..
சிக்கலான மன உணர்வுகளை
தெளிவாய் வார்த்தைப்
படுத்திய அந்தக் கவிதைகள்
தொலைந்து விட்டன..

தேடுகிறேன்..
-விழிப்பில் காட்சிகளைத்
தொலைத்து விட்டுத் தேடுவது
போல..
-உறக்கத்தில் கனவுகளைத்
தொலைத்துவிட்டுத்
தேடுவது போல...

என் கைப்பட நான்
எழுதிய கவிதைகள்
என்னாலையே தேடப்படுகின்றன..

-உன்னத வார்த்தைகள் கோர்த்து
உருவேற்றிய அந்தக் கவிதைகளை
மறுபடி அலங்கரிப்பது
சாத்யமாக தோன்றவில்லை...
-ஆதலால் தொலைந்ததையே
தேடிப்பார்க்கிறேன்...!

எனது இழப்பு உணர்ச்சிகள்
யாவும் உம்மைக் காண்கிற
வரை மாத்திரமே...
நான் தொலைத்த கவிதைகள்
எல்லாமே உன் வசமிருந்தன..

இப்பொழுது தான்
ஞாபகம் வருகிறது எனக்கு..
காகிதம் கொண்டு
எழுதப்பட்டவை அல்ல
அந்தக் கவிதைகள்.,
--என் இதயம் கொண்டு
உன் சித்திரமாய்
சித்தரிக்கப்பட்டவை
அந்தக் கவிதைகள்... ...!!!


சுந்தரவடிவேலு
திருப்பூர்..

Thursday, August 20, 2009

நன்றி திரு.சத்யராஜ் குமார் அவர்களே...

மதிப்பிற்குரிய எழுத்தாளர் திரு.சத்யராஜ்குமார் அவர்கள் எனக்குக் சொன்ன ஓர் சிறு அறிவுரையை இங்கே வெளியிட விரும்புகிறேன்..
அவருடைய சிறுகதை ஒன்றை படித்து விட்டு பாராட்டை அவருக்கு நான் மெயில் அனுப்பியிருந்தேன். அவருடைய எழுத்துக்களை ஒப்பிடுகையில் நான் எழுதுவதெல்லாம் டப்பா என்று உண்மையை யதார்த்தமாக சொல்லியிருந்தேன். நானெல்லாம் ஐம்பது விஷயங்கள் எழுதினால், ஏதோ ஒன்று தேறும் என்று அவரிடம் தெரிவித்திருந்தேன். அதற்கு அவர் பதில் மெயில் அனுப்பியிருந்தார். :
ஓர் நல்ல விஷயம் வருமென்றால் அதற்காக ஐம்பது குப்பைகளை கடந்து வருவதில் தவறில்லை.
என்னை ஊக்குவித்த அவரது பெருந்தன்மைக்கு எனது நன்றிகள்...

அன்பு..
சுந்தரவடிவேலு...

Sunday, August 16, 2009

வலிமை நிரம்பிய மாயைகள் {சிறுகதை}

சமயங்களில் உன் குரல் என் ஞாபகத்துக்கு வருகையில், சுலபத்தில் உன் முகமும் என் ஞாபத்துக்கு வந்து விடும். அதே போல் தான் உன் முகம் ஞாபகம் வருகையில், குரலும் பிடிபட்டு விடும்.

வணிக மய்யமொன்றில் வீட்டு உபயோகப்பொருட்களுக்கான கண்காட்சி நடந்து கொண்டிருந்த ஓர் ஞாயிறு மாலையில் என் பொழுது உத்தமமாய் கழிந்துகொண்டிருந்தது.. வியாபார விசாரணைகளுடன் மனித நெரிசல் எப்பொழுதும் எனக்கு சுவாரஸ்யம் ஊட்டும். இன்னது வாங்கப்போகிறேன் என்கிற கங்கணம் ஏதுமற்று வெறுமனே கடைக்குக்கடை சுற்றி விலை விசாரிக்கிற சுகமும் தனி வகை. நானே எதிர்பாரா வகையில் ஏதேனும் பொருளை வாங்கி விடுகிற இன்ப அதிர்ச்சிகளும் நிகழ்வதுண்டு..

என்னவோ திடீரென்று நீ அந்தக் கூட்டத்தில் ஏதேனும் பொருளை வாங்குகிற முஸ்தீபில் விலை விசாரித்துக் கொண்டிருந்தாக வேண்டுமென்று கட்டாயமாகத் தீர்மானிக்க நேர்ந்தது. அந்த அசரீரி என்னுள் புகுந்து உன்னைத் தேடச்சொல்லிற்று. ஓர் தீர்க்கதரிசியின் மெருகில் உன்னைத் தேடும் பணியை மேற்கொண்டேன். பார்த்தும் கேட்டும் பல வருடங்களாகி விட்ட உன் முகமும் குரலும் என் அருகாமையில் தான் என்று தீர்க்கமாக நம்பட்துவங்கிற்று என் உள்மனது.

உன்னை
மிகவும் நான் காதலித்தேன், காதலிக்கிறேன், மேற்கொண்டும் காதலிப்பேன் என்பவை எல்லாம் ஆணித்தரமாகத் தீர்மானிக்கப்பட்டது போலவே, நீ என்னை காதலிக்கவில்லை, இல்லை, இல்லை என்பவைகளும் தீர்மாநிக்கப்பட்டவைகள் என்றே அனுமானிக்கிறேன்.உன்னைக் காதலிக்கச்சொல்லி வற்புறுத்துகிற திராணி எனக்கில்லை என்பதோடு - அதை விட அநாகரீகம் வேறில்லை என்கிற அபிப்ராயங்களும் கொண்டவன் நான்.
என் உள்மனதின் யூகம் உண்மையாகி விட்டது போலவே பக்கமிருந்து எங்கோ உன் குரல் என் செவியுள் பாய்ந்தது..அந்தக் கூட்டத்தின் அத்தனை இரைச்சல்களும் அல்பமாகி, உன் குரல் மாத்திரம் தெளிந்து தொனித்தது...

உடனடியாக
உன்னைப் பார்த்தாக வேண்டுமென்கிற வேட்கை அபரிமிதம் என் வாசம் இருப்பினும் , என்னையே நான் கட்டுப்படுத்திக்கொண்டு கொஞ்சம் தாமதித்துப் பார்க்கலாமே எனும் ஓர் வகையான சுவையில் என் கண்களை மூடிய வண்ணம் உன் குரலைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
அவனப்பாரு..நின்னுட்டே தூங்கறான்...என்று கூட comments கொடுத்தனர் சிலர். உனது குரலிலேயே கரைந்து போக ஆயத்தமானவன் போல தவத்தில் தவித்தேன். நீ பேசாத அந்த கொஞ்ச நேர இடைவெளியில் கூட _ அந்த இடம் பெயர்ந்து விட்டாயோ என்கிற அவசரத்தில் விழிப்புற்று துரிதமானேன். என் விழிப்பிநூடே உன் குரலும் துவங்கியதால் மறுபடி கண்களை மூடினேன்.

உன்னை
காதலிப்பதாக உனக்கு நான் அன்று விண்ணப்பித்ததை நீ கிழித்தெறிந்து விட்டதால் நான் சுக்கு நூறானேன். பிற்பாடாக மன்னிக்கச்சொல்லிக் கேட்டதற்கு மட்டும் என்னிடம் வந்து மன்னித்து விட்டதாகச்சொன்னாய்.
வெறும் நண்பர்களாக பேசலாம் பழகலாம் என்பதாகத் தீர்மானித்துக்கொண்டோம். அதுவே ஆயுளுக்கும் போதும் என்பதாக நான் ஆனந்தக்கண்ணீர் வடிக்க நேர்ந்தது.

"சுஜாவோட அழகு எவளுக்கும் வராது.. உனக்கும் கூட.." என்று என் மனைவியிடமே கூட ஆயிரம் முறைகள் பிதற்றியாயிற்று..என் மனைவி
தெளிவும் நம்பிக்கையும் அதீதம் மனசில் கொண்டவள் ஆதலால் எனது இந்த வேதனைக்காக என்றும் கோபித்ததில்லை. என்னை ஆசுவாசப் படுத்த இறங்கி விடுவாள். என் மனைவி எனக்கு ஓர் வரப்ரசாதம்..

உன் குரலுக்கான பெண்
நீ இல்லை என்பதோடு, உன்னுடைய அழகில் கால் பாகம் கூட அவள் இல்லை என்பது என்னுள் வெறுமைகளையும் வேதனைகளையும் கிளர்வனவாய் அமைந்தன. ஆனபோதிலும் உன்னை என் ஞாபகத்தில் நிறுத்த வைத்த அவளது குரலை மீண்டும் மீண்டும் கேட்கவே விழைகிறேன்.

விவஸ்தை தொலைந்த விதியின் பொருட்டு இனி நீயும் நானும் மேற்கொண்டு சந்திப்பதற்கான வாய்ப்பே இல்லை போல அசரீரி பிதற்றுகிறது..
மிக்சியும் கையுமாக வீடு வந்த பொழுது மணி ஒன்பதிருக்கும். கண்காட்சி பற்றியும் , உன் குரல் குறித்து நேர்ந்த அவஸ்தைகள் குறித்தும் என் மனைவியிநிடத்து வெகு விமர்சையாக ப்ரலாபித்தேன்.

என்னைக் காதலிக்கிற
என் மனைவியை நான் பொருட்படுத்தாமல் , எவருக்கோ மனைவியாகி விட்ட உன்னை, அதுவும் என்னைக் காதலிக்காத உன்னை நான் காதலித்துக் கொண்டிருப்பது எவ்வளவு அநியாயமும் அசூயையும் நிரம்பியவை என்று நான் கருத நேர்ந்ததை என் மனைவியிடம் தெரிவித்த பொது, ஏனோ என்னைக்கட்டிக்கொண்டு மிகவும் அழுதாள் . நானும் அவ்விதமே அழுதேன் வெகு நேரம்...


சுந்தரவடிவேலு, திருப்பூர்.

கவனக்குறைவுகள்...

வானத்தை மூடுகிற

என் பிரயத்தனத்தில்

வீட்டுக்கூரை ஒழுகுவதை

கவனிக்கவில்லை..



தெருவில் நனையாமல்

குடை பிடித்துக் கொள்கிற நான்

வீட்டிற்குள் முழுதுமாக

nanaindhu விடுகிறேன்...



இப்படித்தான்..-

வீட்டினுள் இம்ஸிக்கிர

எலிக்குப் பொறி வைக்க மறந்து

வெளியில் இல்லாத புலிக்கு

வலை விரிக்கச் செய்து

விடுகிறது விதி....



சுந்தரவடிவேலு, திருப்பூர்.

Friday, August 14, 2009

என்னை அவள் இன்னும் அனுமதிப்பதே அனுமானத்திளிருக்க, இவ்விதமான சந்தேகங்களுக்கெல்லாம் என்ன அவஸ்யம் வந்ததென்று யோசிக்கிறேன்..

உளியில் உக்கிரம் இருந்தாலும், உருவேற்ற கல்லோ மரமோ வேண்டும்...

நானோ மழுங்கிய உளியை வைத்துக்கொண்டு இரும்பைச்செதுக்கப்பார்க்கிறேன்..

ஆதலால் சுபா, உனது உருவ ஒற்றுமை உள்ளவளிடம் நான் நெருங்கப்பிரியப்படவில்லை..

உன் நினைவிலேயே இறுகி அவிழ்வேன். நமஸ்காரம்..

சுந்தரவடிவேலு, திருப்பூர்.

உன் நினைவிலேயே ....தொடர்ச்சி...


உன் மீதான எனது நேசம் இவ்வளவு ஆழமும் தெய்வீகமும் கொண்டிருப்பதை நீ உணராமல் போனதும், நான் வார்த்தைகளால் உணர்த்தாமல் போனதும் என் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய விபத்தென்றே சொல்வேன்.


ஒரு வேளை நீ உணர்ந்திருந்தும் கூட உணராதவள் போல நடித்தாயோ? நான் வார்த்தைகளால் உணர்த்தியிருந்தாலும் கூட அதனை நீ தவிர்த்து என் வருகையை உதாசீநித்து இருப்பாயோ?


இவையனைத்தும் இன்றைய சாவகாசங்களில் எனக்குத்தோன்றுகின்றன. ஆனால் மேற்கூறிய எந்த விபரீதங்களும் நிகழாமல் மௌனங்களிநூடே நாம் பிரிவதற்கான தருணங்கள் நேர்ந்தன.


அவ்விதம் பிரிய நேர்ந்த தருணங்கள் இன்றும் என்னுள் நிழாடிய வண்ணம் என்னை ஹிம்சித்துக்கொண்டிருக்கின்றன. ஒரு நாளே கூட உன்னைப்பாராவிடில் - எனது வீரியம் அவ்வளவையும் இழக்க நேர்ந்த அந்த நாட்களும்..... உன்னைப்பார்தே மாதங்களும் வருடங்களும் உருண்டோடி விட்ட இந்த நாட்களும்...- ஒப்பிட்டுப்பார்க்கவே பிரம்மிப்பேற்றுகிறது..


என்னை நீ சலனப்படுத்தினாயா தெளிவாக்கினாயா என்றே புரியாமல் தடுமாறுகிறேன்..


உன்னைத்தொலைத்ததைப் போலவே உனது முகவரியையும் தொலைத்து விட்டு நிற்கிறேன்..


உன் உருவை ஒத்த ஒருத்தியின் பின் சென்று அவளது இருப்பிடம் தெரிந்து கொண்டு வந்தேன் நேற்று.... எங்களுக்குள்ளாக மறுபடி உறவை எங்ஙனம் எவ்விதம் அடர்த்தி கொள்ள செய்வது என்கிற ஆராய்ச்சியில் திளைத்தவனாக திரும்பி வந்தேன்.


உன்னைப்போல அவள் என்னுடன் நாசுக்காக பேசி என்னை குளிர்விப்பாளா என்று சந்தேகித்தேன்..உமது பாங்கில் என்னை வரவேற்று சீதோஷணநிலைகளுக்குத்தகுந்தார் போல குடிக்கிற பானங்களைத் தருவிபபாளா என்பது கேள்விக்குரியதே. என் ரசனைகளை உன் போல உடனடியாக பாராட்டுகிற பாந்தம் அவளுக்கு இருக்குமோ?


-என்னை அவள் இன்னும் அனுமதிப்பதே அனுமானத்திலிருக்க இவ்விதமான

உன் நினைவினிலே.....{ஓர் சிறுகதை முயற்சி}

அன்பு சுபா,
உன் உருவத்தை ஒத்த ஓர் பெண்ணை நேற்று தரிசிக்க நேர்ந்தது. நீயே தானோ என்றோர் சந்தேகம். ஏனெனில் நேருக்கு நேர் நீ என்னை பார்ப்பது போலவே அந்தப்பெண்ணும் என்னைப் பார்க்கிறாள். உன்னுடன் பேச நான் ஆசைப்படுவது போலவே அவளுடனும் பேச ஆசைப்பட்டு, 'எக்ஸ்கியூஸ் மீ மேடம்..நீங்க சுபா தானே?'
"நோ நோ.. அய் யாம் நாட்.." என்றாள்.
ஹோ..அந்தக்குரலில் கூட உனது குரலின் சாயல்..
அவள் நீ இல்லை என்று ஓரளவு நான் புரிந்து கொண்டாலும் கூட, உன்னை ஒத்திருக்கிற ஒரே காரணத்துக்காக நான் அவளுடன் பேச அவா கொண்டேன்.
உனக்கும் அவளுக்குமான மெல்லிய வித்தியாசங்களை மிகவும் சிரமப்பட்டே தான் உணர முடியுமென்று கருதுகிறேன். இருப்பினும் அந்த வித்தியாசங்களை மறுப்பதற்கில்லை.

மறுபடி என்னுடன் பேசுவதை நீட்டிக்க விரும்பாமல், "ஒ.அய் யாம் சாரி " என்று நான் சொன்னதற்கு "இட் இஸ் ஆல்ரைட் " என்று மட்டும் சொல்லி விலகிக்கொண்டாள்.
உன் முகமும் உன் குரலும் என்னை அபரிமிதம் பாதித்தன. அதே சமயம் மறந்தன.மறுபடி தரிசிக்க ஆர்வம் பிறந்தன. ஆதலால் நீயே சலித்துக்கொள்கிற விதமாக உன்னை அனுதினமும் சந்தித்து சந்தித்துப் பேசினேன்.
உனது மனநிலையை நான் உணராதவனல்ல..விவஸ்தை இல்லாதவனும் அல்ல. ஆனாலும் உன்னைப் பாராவிடில் நான் உடலும் மனதும் சோபை இழந்து நைந்து போனேன்.
உன்னை தரிசிப்பதை வாழ்வின் தினசரி லட்சியமாகவும் , வெறும் நினைவுகள் கனவுகள் போன்ற மாயைகளைத்தவிர்த்து நிஜமாகவே உன் அருகாமையில் கிடப்பதையே மிகவும் ஆரோகியமாகவும் சந்தோஷமாகவும் உணர்ந்தேன்.
[மறுபடி நாளை .. தொடர்கிறேன்....]

{வலி}மை..

காயங்களுக்கும் வலிகளுக்குமாக

காத்துக்கிடக்கிறது உடல்..

நாளடைவில் காயங்கள்

உடலுக்கான அங்கீகாரத்தையும் பெற்று -

விட்டு விலகுகையில்

நம் அங்கத்தின் ஓர் பாகமே

அறுபட்ட மாயைகளைத் தோற்றுவிக்கிற

வலிமை பொருந்திவை வலிகள்..

குணமாகி இருப்பதையே ஓர் நோய் மாதிரி

புரிய வைக்கிற வலிகள்..

Thursday, August 13, 2009

tulsi for swine flu

swine flu cures in tulsi..

message i read in yahoo. just insert in an empty stomach in the form of paste or juice, with two to three teaspoons, but the leaves of tulsi should be fresh and without any deceases..

Wednesday, August 12, 2009

காதல்...

காதலின் விரல்களைப்
பிடித்து குழந்தை போல
நடை பயின்ற காலங்கள் போய்
இன்று-
காதலைக் குழந்தையாக்கி
தாலாட்டுகிறேன்..
நமக்கெல்லாம் இளமை முதலிலும்
மூப்பு பிற்பாடாகவும் வருகிறது. ..
காதல் மட்டும் கடைசியில்
குழந்தையாகி விடுகிறது நம்
யாவருக்கும்..
அதன் யவ்வனங்களும்
மழலைமைகளும் நம்மையெல்லாம்
சுகந்தமானதோர் மூர்ச்சையில் ஆழ்த்தி
விடுகிறது..
வாழ்கையின் ஆதார ஸ்ருதியாகி
அபஸ்வரங்களைக் கூட
ஆனந்த ராகமாக்கி விடுகிறது காதல்..
அதன் மலர்ச்சி நமது எல்லா
வரட்சிகளையும் கேலியாக்கும்
வல்லன்மை கொண்டது..
ஆதலால் காதல் செய்வீர் யாவருமே..

சுந்தரவடிவேலு, திருப்பூர்.

Sunday, August 9, 2009

முரண்கள்..

என் பேனா கூட


உன்னைப்பற்றியே


என்னை எழுதச்சொல்கிறது..


நீ மட்டும் ஏனோ


உன் உதடுகளுக்கு


புன்னகைக்கப்


பயிற்றுவிக்காமல் இருக்கிறாய்..


என் பேனாவோடு


காகிதங்களும் சிநேகம் போலும்..


அவைகளும் உன்னைக்குறித்து


எழுதுவதையே ஊக்குவிக்கின்றன..


நீ மாத்திரம் ஏனோ


பதில் கடிதம் எழுதுவதைக்கூட


கெளரவக் குறைவாக எண்ணி
மௌனத்தையே பிதற்றுகிறாய்..

சுந்தரவடிவேலு, திருப்பூர்.






Saturday, August 8, 2009

மலரும் ஞாபகங்கள்...

அன்புள்ள யாவருக்கும்..

இளம் பிராய ஞாயிற்றுக்கிழமைகள் மிகவும் சுவாரஸ்யம் நிரம்பியவை...

சனிக்கிழமை சாயங்காலமே அடுத்த நாளுக்கான பட்டியல்களை மனசு போட்டிருக்கும். பட்டியலில் காட்டாயம் கிரிக்கெட் இருக்கும். புதிய ரிலீஸ் படங்கள் இருக்கும். அதிலும் கமல் ரஜினி படங்கள் அதீத போதை கொடுப்பவை. சினிமா இடைவேளைகளில் சில தியேட்டர்களின் போண்டா பஜ்ஜிகள் அந்த இள நாக்குகளுக்கு பேரின்பமளிப்பவை....

அது போக எங்கேனும் பக்கம்பாட்டில் மினி பிக்னிக் சென்று வருவதும் உண்டு சைக்கிள்களில்..ஞாயிறு சாயங்காலம் மனசுக்கு வேதனை அளிக்கத் துவங்கும்..திங்கட்கிழமை பள்ளிக்கூடம் என்பதே தாங்க முடியாத சோகத்தை மனசுக்குக் கொண்டு வந்து விடும்.

மறுபடி வியாழன் வெள்ளி நெருங்குகையில் , சனி ஞாயிறு குறித்த அற்புதங்களும் அதற்கான பட்டியல்களும் தயாராகத்துவங்கும்..

அவைகள் எல்லாம் விடுபட்ட இழைகள் அடையாளமற்று போய்விட்டன. இன்றைய வாழ்வியல் பிரச்சினைகள் கிழமைகள் குறித்த அனைத்த பிரக்ஞை களையும் இழக்கச்செய்து விட்டன என்றே அனுமானிக்கிறேன்.

Friday, August 7, 2009

அசைவ சோகங்கள்....

தாய் முலை முட்டி
பால் குடிக்கிற ஆட்டுக்குட்டியை
ஓர் தாய்மை உணர்வுடன்
ரசிக்க முடிகிற என்னால் -
மட்டன் வறுவல் வாய்க்கு
ரப்பராகத்தெரிந்தால்,
"ஆடு குட்டியா இருந்திருந்தா
அம்சமா இருந்திருக்கும்..."
என்று அங்கலாயிக்கவும் முடிகிறது.


கூண்டிற்குள்ளாக
பரப்பி விடப்பட்டிருந்த
தானியங்களை பொறுக்கிக்
கொத்தி உன்பதில்
தீவிரம் கொண்டு
மற்ற கோழிகளை பரம வைரிகளை
போல் எண்ணி தனது வயிற்றை
நிரப்ப மாத்திரம் ப்ரயத்தனித்து
கொண்டிருந்தது ஓர் வெள்ளை நிறத்திலான
கோழி. அப்போது-
ஓர் வாடிக்கையாளரின் ,"முக்கால் கிலோ
வருவது போல் ஒரு கோழி குடுங்க" என்ற
வேண்டுகோளுக்கு இணங்க
அதே வெள்ளை நிறக் கோழி
தேர்ந்தெடுக்கப்பட்டது.
இன்னும் கூட அதன் பசி தீர்ந்த பாடில்லை...

சுந்தரவடிவேலு, திருப்பூர்.

Thursday, August 6, 2009

நீயும் தருணங்களும்..

தருணங்கள் புரிந்த தயவால்
உன் தரிசனம் கிடைத்தது..
சினிமா நடிகையை பார்க்க அலைகிற
பாமரன் போல உன் தரிசனத்திற்கு
அலைவதில் ஓர் பேராவல் எனக்கு...

ஓர் நடிகைக்குப் போல அல்லாமல்
உனது சுற்றுப்புறம் சூழ்வாரற்றுத்தானிருந்தது..
ஆனால் என்னை நீ கண்டதும் ஏனோ
மீள முடியாத நெரிசலில் சிக்கித்தவிப்பவள்
போல உணர்வதை அறிந்து நான்
சங்கடப்படுகிறேன்...

ஆகவே உன்னை தரிசிக்க
வாய்ப்பளித்த தருணங்களிடமே
புலம்பி அழுகிறேன்.

"போயும் போயும் உனக்கு சந்தர்ப்பங்களை
அமைத்துக்கொடுதேன் பாரு.."
என்று தருணங்களும் அலுத்துக்கொள்கின்றன
உன்னைப்போலவே...

சுந்தரவடிவேலு
திருப்பூர்.

Wednesday, August 5, 2009

என் பாதணிகள்....

கோயில் வாசலில்
எனக்காக காத்துக்கிடந்தன
என் பாதணிகள்...
தூய பகுதிகளில் மட்டுமே
என் பாதங்களை அனுமதிக்கும்
என் பாதணிகள்
அசுத்த பாதைகளில் என்னை
ஏற்றிக்கொள்ளும்..
புற்களை மட்டுமே ஸ்பரிசிக்க
இறங்கச்சொல்லும் என் பாதணிகள்
முள்குத்தல்களை முணகாமல்
வாங்கிக்கொள்ளும்..
கோயிலுக்குள் வராத நாத்திகர்கள்
என் பாதணிகள்.

எல்லா பொருள்களும்
கைகளால் களவு போகும்..
பாதணிகள் மட்டுமே
கால்களால் ...

வார் அறுந்தால் கூட
மாற்றி புதியதாய் வாங்க
உத்தேசிக்கும் என்னிடம் -
என் பாதணிகள்
தன்னையே தைத்துப்
புதுப்பித்துக்கொள்ளச்சொல்லும்

மிகவும் அற்புதமான பிரதேசங்களிலேயே
என் பிரவேசங்கள் நிகழும் ஆதலால்
என் பாதங்கள்-
என் பாதணிகளுக்கு சுவாரஸ்யமானவை...

சுந்தரவடிவேலு,
திருப்பூர்..

Sunday, August 2, 2009

வானம் வசப்பட்ட நாட்கள்

அனைவருக்கும் என் காலை வணக்கம்..
தூரி நோன்பு இன்று. ஆகாயத்திலிருந்து ஊஞ்சல் இறங்கியது போல உணரும் அன்றெல்லாம் என் இளமனது. எங்கள் தெருவெங்கும் கிணறு சேந்துகிற கயிறுகள் யாவும் மரங்களில் கட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு தூரிக்கும் ஆடுவதற்கும் ஆட்டுவதற்கும் ஆட்கள் தயார் நிலையில் இருப்பதைப்பார்க்கவே ஏகாந்தம் பிரவகிக்கும் மனசுள்.
நான் தூரியில் அமர்கிற முறை வருகையில் என் இதயத்துக்கு சிறகுகள் முளைக்கத்துவங்கும். வானமே வசப்பட்ட மாதிரி ஓர் அற்புத கிறக்கத்தில் அதற்கும் இதற்குமாக சில நிமிட பறவையாகி குதூகலித்த அந்த இளமைக்கால நினைவுகள் இன்று த்வனிக்கிறது.
ஆனால் இன்றைய குழந்தைகள் அந்த சுகங்களையெல்லாம் இழந்து நிற்பது போல உணர்கிறேன். தொலைக்காட்சிகளிலும் கம்ப்யூட்டர் விளையாட்டுக்களிலும் லயித்து , ஆனந்தங்களையும் வசந்தங்களையும் ஓர் வெறும் மாயை போல அனுபவித்து வருகின்றன.
குண்டு , கில்லி, பம்பரம், போன்ற புழுதி சார்ந்த சந்தோஷங்களை கூட இந்தக்கால குழந்தைகள் இழந்து நிற்கின்ற சோகம் ...
பாரம்பரியமானவற்றை நம் போன்ற இளமை ரசனை உள்ளவர்கள் மறுபடி புதுப்பிக்க முனைவோம்.. அதுவே ஆரோக்யம். அதுவே குழந்தை இலக்கியம்.

நன்றி.மறுபடி சந்திப்போம்.
சுந்தரவடிவேலு.
அன்புள்ளவர்களுக்கு..
நான் சுந்தரவடிவேலு. ஏதேனும் எழுத நினைத்து ஏனோ இன்று எதுவும் எழுத இயலவில்லை. என் எழுத்தை எதிர்பார்த்து ஏமாந்து போன என் ரசிகப்பெருமக்களுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை..

அடங்கொப்பா சாமி... இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலே?

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...