Saturday, August 22, 2009

அப்பா..

மறுபடி
பூமியில் என்னைப்
புதுப்பித்தவர்...
-என்னைப்பற்றிய
தனது லட்சியங்களுக்கு
சுதந்திரம் கொடுத்தவர்.,
...எனது லட்சியங்களை
இரக்கமில்லாமல் சிறைப்
படுத்தினார்...!
-சுதந்திரம் அளிக்கப்பட்ட
அவரது லட்சியங்களில்
நான் என்னைக்
கைதியாய் உணர்ந்தேன்..,
அவரால் சிறைப்படுத்தப்பட்ட
எனது லட்சியங்களில் மாத்திரமே
நான் சுதந்திரம் உணர்ந்தேன்...!
இந்த முரண்களால் மூர்க்கமானோம்..
வார்த்தைகளில் குளிர்ச்சி திணிக்க
மறந்து போனோம்...

சுலபத்தில் நான்
தோற்க நேர்ந்த என் அப்பாவின்
லட்சியங்களால்,
வெற்றி பெற்ற எனது
லட்ச்யங்களும் கூட
என்னுள் எவ்வித
சுவாரஸ்யங்களையும்
பதிவாக்கவில்லை...!!
-அன்றைய
அவரது லக்ஷ்யங்களுக்கான
கதறல்களை, இன்றைய
அவரின் இல்லாமையில் கூட
அசரீரியாக தொனிக்கக்
கேட்கிறேன்...!!

(2)

"IN FUTURE,
I WILL BE A DOCTOR
OR AN ENGINEER"
-திட்டவட்டமாக
சொல்கிறான் எனது
பத்தாம் வகுப்பில் படிக்கிற
மகன்...
நான் ஆகவேண்டும் என்று
என் அப்பா ஆசைப்பட்ட
தகுதிகள்.....
"அதைக் காட்டிலும்
தமிழ் இலக்கியத்தில்
அதிகம் சாதிக்கலாமே!"
-என்று சொல்ல விரும்பிய
நான்,
முரண்களை விரும்பாமல்
மௌனித்துக்கொண்டேன்....
இந்த நாசுக்கு அன்றைக்கு
என் தந்தைக்குத் தெரியவில்லை...!
"நான் தாண்டா மகனே உனக்கு
மகனா வந்து பிறந்து இருக்கேன்.."-
---என் கனவில் வந்த அப்பா சொன்னார்...!

விழிப்புற்ற நான் அருகில்
என் மகன் ஆழ்ந்து உறங்குவதைப்
பார்க்கிறேன்..
அப்பாவை மறுபடி நான்
பூமியில் புதுப்பித்து விட்டதாய்
உணர்ந்தேன்..

சுந்தரவடிவேலு, திருப்பூர்..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...