Sunday, January 29, 2012

கருவாயனும் என் மனைவியும் ...



என் மனைவியுடனான அந்த அண்டங்காக்கையின் சிநேகிதம் துவக்க ஆச்சர்யத்தில் விழி பிதுங்க வைத்து நாளடைவில் ஓர் மிக சாதாரண நிகழ்வாய் என்னுள் பதிவாகி விட்டது..
பிற காக்கைகளினின்று வேறுபட்டு பிரத்யேகமானதோர் ஒலி எழுப்பி தனது வருகையை தனி அடையாளப் படுத்திக் காண்பிக்கிற அதற்கு ஐந்தறிவு என்று நம்பமுடியவில்லை தான்..

அப்படி அது வந்து என்னை முதற்கண் தரிசிக்க நேர்கையில் -- "நீ உள்ள போயிட்டு உன் பொண்டாட்டியை வெளிய அனுப்புடா வெண்ணை" என்பதாக அதற்கொரு தனி சப்தம் வைத்திருந்தது கருவா காக்கா..

நானும் புரிந்து கொண்டு உள்வேளைகளில் லயித்திருக்கிற என் மனைவியிடம்..,
"உனது ப்ரிய கருவாயன் வந்துட்டான்..கூப்பிடறான்" என்று சொல்லி சிரிப்பேன்.. உடனே அவளும் சில தின்பண்டங்களை வாரிக் கட்டிக்கொண்டு துரிதமாக வெளிக் கிளம்புவாள்... அவளை தரிசித்த மறுநொடி அவளுடனான மாறுபட்ட பாஷை... சோற்றுப் பருக்கைகளை அதன் அலகுகளில் வைத்துத் திணிக்கிற
அளவிலான சிநேகிதம்... இவளது விரல்கள் வருடுவதை கள்ளமாக காகம் ரசித்து சிலிர்ப்பதாக என் மனித மூளைக்கு ஓர் ஊகம்..

காகங்கள் மனிதர்களின் மறுபதிப்பென்கிற--- மறு பிறப்பென்கிற அனுமானக் கதைகள் நாம் எல்லாரும் கேள்விப் பட்டிருக்கக் கூடும்.. அவைகளை எல்லாம் நம்ப முடியாத நம்பப் பிடிக்காத பகுத்தறிவு எவ்வளவு சுகமோ, அதே அளவுக்கு சுகமானது சுவாரசியமானது  அவைகள் மீதான நம்பிக்கைகளும் பயங்களும்...!!

--அந்த கோணத்தில் ஊடுருவிப் பார்க்கையில், எவனோ ஒரு கருவாயன் சென்ற மனிதப் பிறப்பில் என் மனைவி மீது காதல் வயப்பட்டோ, காமவயப்பட்டோ-- அவை ஈடேறாத கோலத்தோடு தன் மரணத்தையும் அகாலத்தில் சந்திக்க நேர்ந்ததன் நிமித்தம் --- இப்போதைய நிகழ்வுகளோ? என்றெல்லாம் என்னுள் நானே ஹாஸ்யப் படுத்தி மெளனமாக சிரித்தவாறும் , அதே ஹாசியத்தை மனைவியிடம் பகிர்ந்து --வாங்கிக் கட்டிக்--கொண்டும் ...

கொடுமையைப் பாருங்கள்.. அண்டங்காக்கைக்கு ஊட்டி விட்டவள், எனக்குப் பறிமாற "நீங்களே போட்டு சாப்பிடுங்கள்.. எனக்கு வேறு வேலைகள் நிறைய இருக்கிறது"  என்று கடுப்படித்துக் கொண்டு நகர்கிறாள்..

""--நாளைக்கு வரட்டும் அந்தக் கருவாயன் "" என்று முக்கி முணகி சில கற்களைப் பொறுக்க வெளியில் செல்கிறேன்...



--சுந்தரவடிவேலு..

Thursday, January 19, 2012

கிழட்டுப் புன்னகை...

ஓர் இழையில்---
அறியாமை அறுபடுகிற
அடையாளமே புரிபடாமல்
"அறிவு" வந்து
அப்பிக் கொள்கிறது
மனசெங்கிலும் 
எல்லாருக்குமே..!!

முன்பிருந்த 
அறியாமைகள் யாவும்
மலரும் நினைவுகளாகவும்
சிறுபிள்ளைத் தனங்களாகவும்
அடையாளப் பட்டு
விடுகின்றன --
தற்போதைய 
அறிவின் நிமித்தமாக..!!

அதே அறியாமைப்
பிராயங்களோடு
உலவி வருகிற இன்றைய
தலைமுறையை 
தரிசிக்க நேர்கையில் 
நமட்டாய் ஓர் 
சிரிப்பு வந்து போகிறது
உதட்டோரம்....

ஆனால் ஏனோ
அந்தச் சிரிப்பை
கிழடு தட்டியதாகவே
உணரத் தோன்றுகிறது..!!!



சுந்தரவடிவேலு    
.

Monday, January 16, 2012

காதலி காதலி..



உன் விரல்
நகக் கீறல்கள்
என் ஸ்மரணையை
அதீதமாக்கும்....

உன் நினைவுச்
சுழல்கள்
என் பிரக்ஞையை
அதீதமாக்கும்...


உன் இருப்புக்கான
சுவடுகளை 
மணலில் அல்ல...
அண்டத்திலேயே
அடையாளம்
 காண்கிற திறன்....
 எனது
கண்களுக்குண்டு..!!
                                                   

சுந்தரவடிவேலு 
                                                

Thursday, January 12, 2012

காமம் குறித்து... 3

எவ்வளவு பேரழகியாக இருந்தாலும் அவள் மனைவி என்கிற போது ஓர் குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு பிரத்யேகமான சலிப்புத் தட்டி விடுகிற சூழல் ஒவ்வொருவன் வாழ்விலும் மிக யதார்த்தமாக நேர்ந்து விடுவது இயற்கையின் நியதி போல ஓர் விபரீத மாயை ஏற்பட்டு விடுகிறது...

மாற்றான் மனைவி மீதான ஓர் ரம்மிய உணர்வு... தன் மனைவி குழந்தை என்கிற பிரக்ஞை ஒருபுறம் தொக்கி நின்றாலும் பிறன் மனை நோக்குகிற பேராண்மை அற்ற தன்மை அநேகம் பேரினுள் புகுந்து இம்ஸை செய்ய விழைகிறது...

போதை வஸ்துக்கள் மீதான மோகத்தைக் காட்டிலும் ஓர் பெண்ணின் தேகம் என்பது அதீத உணர்வினை ஏற்படுத்துகிற விந்தை ... இறைவனின் படைப்புத் திறன் என்றே சொல்லவேண்டும்... மற்ற போதை வஸ்துக்களை மனிதன் படைத்தான் என்றிருக்க, பெண் என்கிற இயற்கையான போதை வஸ்துவை, அதன் வீரியத்தை, ..." கடவுள் கடவுள் தான்" என்று வாய் பிளந்து பிரம்மித்து நிற்க வேண்டியுள்ளது...

காமத்தை நோயாக்குவதும், அதையே மருந்தாக்குவதும் மனிதனின் சாதுரியத்தில் தான் உள்ளது... விதையினைத் தூவியதோடு இறைவன் பணி நிறைவுறுகிறது... மேற்கொண்டு பற்றிப் படர்ந்து வளர்வதும், ஆனந்தப் பரவசத்தில் நீந்தித் திளைப்பதும் அவனவனுக்கான திறனை சார்ந்தது...

மலரினும் மெல்லிய காமத்தைக் கையாள்கையில் அதே மென்மையைத் திணிக்க முற்படுகையில் காமம் கவிதையாக நம்மில் ஊடுருவக் கூடும்... ஆனால் துஷ்ப்ரயோகம் செய்கையில் அந்த மென்மை நம்மில் விஷ ஊசியாக ஊடுருவி வாழ்வினையே துர்நாற்றமாக்கி விடும்..

எல்லாமே நம்ம கையில் ... புரிந்து செயல்படப் புறப்படுவோம்... ஹிஹி..


இன்னும் பகிர்ந்து கொள்ள முயல்வோம்..



சுந்தரவடிவேலு..

Tuesday, January 10, 2012

உளறல்களும் கிறுக்கல்களும்..




அரிய நிகழ்வுக்கான
காத்திருப்பில் உள்ள
 சுவாரஸ்யம்
அது நிகழ்கையில் கூட
இருப்பதில்லை எவர்க்கும்..

சாத்தியங்களும்
நிதர்சனங்களும்
வரவேற்கத் தக்கவையே
எனிலும் - அவைகளுக்கான
போராடும் களங்கள்
கேலிக் குரியவை அன்று...

மூணாங்கிளாசில்
நாலும் நாலும் ஏழு
என்றதற்கு நாள்முழுதும்
என்னை கால் கடுக்க
வெளியில் வெயிலில்
நிற்கவைத்த
கணக்கு வாத்தியின் மகன்
என் ஆபீஸ் அக்கவுண்டை
மெயின்டைன் பண்ணுகிற
சிப்பந்தி...!

மனிதனை மனிதன்
பழி வாங்குகிற
தன்மை மாறி
காலமே அதனை
செவ்வனே நிறைவேற்றுகிற
அதிசயங்கள் அன்றாடம்
சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன..!!

ஆனால் இந்த
அடையாளங்கள் எதனையும்
பொருட்படுத்தாமல்
சமத்துவத்தை மட்டுமே
நோக்கமாக்கி விடுகிறது
மரணம்...
மிக யதார்த்தமாக.!!


சுந்தரவடிவேலு..

Thursday, January 5, 2012

மார்கழி அனுபவம்



பல்துலக்க மறந்த
சில மார்கழி
அதிகாலைகளில்
நடைப் பயிற்சிக்கு
வீதியில் செல்கையில்
கோவிலுக்குச்
சென்று விட்டுக்
கையில் பிரசாதத்தோடு
எதிர்ப் படுபவர்கள்
அதனை எனக்கும்
விநியோகிக்கையில்
மறுதலிப்பதில்லை நான்...

சுவாமி பிரசாதத்தை
பல்துலக்காமல் சாப்பிடுகிறோமே
என்கிற குற்ற உணர்வெல்லாம்
அதன் ருசியில் லயிக்கையில்
காணாமல் போய் விடுகிறது...

இதற்காகவே அடுத்தநாள்
பல்துலக்கி .. பிரசாத
கனவில் நடந்தோமேயானால்
உள்ளங்கை விபூதியை
மட்டும் நீட்டுகிறார்கள்...      


சுந்தரவடிவேலு..

Monday, January 2, 2012

காமம் குறித்து ......2

சில நபர்கள் இருக்கிறார்கள்... தனது மனைவியுடனான புணர்ச்சியை யதார்த்தமாக நண்பர்கள் மத்தியில் எடுத்தியம்புபவர்கள்...
இருவரும் மிகத் திருப்தி கொண்டதாகவும்...
 தனக்கு மட்டுமே திருப்தி ஆனதென்றும்...
லாட்ஜ் வைத்தியர் சொன்ன லேகியம் சாப்பிட்டும் திருப்திப் படுத்த சாத்யப் படவில்லை என்றும்...
பல வகையறா பரிமாறல்கள் நண்பர்கள் மத்தியில் நிகழும் அன்றாடம்...


மனைவியின் இமேஜ் ஸ்பாயில் ஆகிவிடும் என்கிற இங்கிதம் தெரிந்த சிலர் இது குறித்து விவாதிப்பதைத் தவிர்க்கக் கூடும்...
எதுவுமே செய்யாமல் கூட, தனது ஆண்மையைப் பறைசாற்றுகிற ஆவலில் சிலர் ஏதேனும் பொய் விளிக்கக் கூடும்...
 பல வித்தைகளையும் செய்தவர்கள் எதுவுமே செய்யாதது போல வெறுமே மௌனித்தும் இருக்கக் கூடும்..


பெண்களும் இவ்விதம் தனது தோழிகள் மத்தியில் தன் கணவன் குறித்து பரிமாறிக் கொள்வார்களா என்பதை இதனைப் படிக்க நேர்கிற பெண்கள் எவரேனும் இருக்கும் பட்சத்தில் எனக்கு பின்னூட்டம் போட வேண்டுகிறேன்...


ஆனால் பெண்களும் அவ்விதம் பகிர்ந்து கொள்கிற சுபாவம் உள்ள  நபர்களே என்கிற அனுமானம் ஆண்கள் மத்தியில் உண்டு... 
ஆனால் ஆண்கள் போல அநியாயத்திற்கு பேசித் தொலைக்க மாட்டார்கள் என்றே நான் அனுமானிக்கிறேன்...


ஓர் வயதினை எட்டுகி ற மகனாகட்டும், மகளாகட்டும்.... அவர்கள் குறித்த ஓர் பயமும் சந்தேகங்களும், கவலைகளும் .. இன்னபிற வார்த்தைகளுக்குப் பிடிபடா உணர்வுக் குழப்பங்களுக்கும்  அநேகப் பெற்றோர்கள் ஆளாகி விடுகிறார்கள் என்றே கருதுகிறேன்... 
அவ்வித பயங்கள் மற்றும் சந்தேகங்கள் நிமித்தம் குழந்தைகளுடைய  ஒவ்வொரு நடவடிக்கையையும் கூர்நோக்கும் திறன் பெற்று மன உளைச்சல்களில் மன்றாடுகிறார்கள்.... குழந்தைகளையும் தர்ம சங்கடங்களுக்கு உட்படுத்துகிறார்கள்...


இந்தியாவுடன் ஒப்பிடுகையில் ... மற்ற நாடுகளில் இவ்வித தன்மைகளுக்கு இத்தனை அலைபாய்தல்கள் இருக்காதென்றே நம்புகிறோம்... ஒழுக்கம் என்கிற ஒன்றிற்காக இந்தியப் பெற்றோர் போல வேறெந்த நாட்டிலும் கவலைப் படுகிற சந்தேகப் படுகிற பெற்றோர் இருக்க மாட்டார்கள் என்றே என் அறிவுக்கு எட்டுகிறது... 

இன்னும் இவை குறித்துப் பேசுவோம்..  


சுந்தரவடிவேலு..

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...