Sunday, January 29, 2012

கருவாயனும் என் மனைவியும் ...



என் மனைவியுடனான அந்த அண்டங்காக்கையின் சிநேகிதம் துவக்க ஆச்சர்யத்தில் விழி பிதுங்க வைத்து நாளடைவில் ஓர் மிக சாதாரண நிகழ்வாய் என்னுள் பதிவாகி விட்டது..
பிற காக்கைகளினின்று வேறுபட்டு பிரத்யேகமானதோர் ஒலி எழுப்பி தனது வருகையை தனி அடையாளப் படுத்திக் காண்பிக்கிற அதற்கு ஐந்தறிவு என்று நம்பமுடியவில்லை தான்..

அப்படி அது வந்து என்னை முதற்கண் தரிசிக்க நேர்கையில் -- "நீ உள்ள போயிட்டு உன் பொண்டாட்டியை வெளிய அனுப்புடா வெண்ணை" என்பதாக அதற்கொரு தனி சப்தம் வைத்திருந்தது கருவா காக்கா..

நானும் புரிந்து கொண்டு உள்வேளைகளில் லயித்திருக்கிற என் மனைவியிடம்..,
"உனது ப்ரிய கருவாயன் வந்துட்டான்..கூப்பிடறான்" என்று சொல்லி சிரிப்பேன்.. உடனே அவளும் சில தின்பண்டங்களை வாரிக் கட்டிக்கொண்டு துரிதமாக வெளிக் கிளம்புவாள்... அவளை தரிசித்த மறுநொடி அவளுடனான மாறுபட்ட பாஷை... சோற்றுப் பருக்கைகளை அதன் அலகுகளில் வைத்துத் திணிக்கிற
அளவிலான சிநேகிதம்... இவளது விரல்கள் வருடுவதை கள்ளமாக காகம் ரசித்து சிலிர்ப்பதாக என் மனித மூளைக்கு ஓர் ஊகம்..

காகங்கள் மனிதர்களின் மறுபதிப்பென்கிற--- மறு பிறப்பென்கிற அனுமானக் கதைகள் நாம் எல்லாரும் கேள்விப் பட்டிருக்கக் கூடும்.. அவைகளை எல்லாம் நம்ப முடியாத நம்பப் பிடிக்காத பகுத்தறிவு எவ்வளவு சுகமோ, அதே அளவுக்கு சுகமானது சுவாரசியமானது  அவைகள் மீதான நம்பிக்கைகளும் பயங்களும்...!!

--அந்த கோணத்தில் ஊடுருவிப் பார்க்கையில், எவனோ ஒரு கருவாயன் சென்ற மனிதப் பிறப்பில் என் மனைவி மீது காதல் வயப்பட்டோ, காமவயப்பட்டோ-- அவை ஈடேறாத கோலத்தோடு தன் மரணத்தையும் அகாலத்தில் சந்திக்க நேர்ந்ததன் நிமித்தம் --- இப்போதைய நிகழ்வுகளோ? என்றெல்லாம் என்னுள் நானே ஹாஸ்யப் படுத்தி மெளனமாக சிரித்தவாறும் , அதே ஹாசியத்தை மனைவியிடம் பகிர்ந்து --வாங்கிக் கட்டிக்--கொண்டும் ...

கொடுமையைப் பாருங்கள்.. அண்டங்காக்கைக்கு ஊட்டி விட்டவள், எனக்குப் பறிமாற "நீங்களே போட்டு சாப்பிடுங்கள்.. எனக்கு வேறு வேலைகள் நிறைய இருக்கிறது"  என்று கடுப்படித்துக் கொண்டு நகர்கிறாள்..

""--நாளைக்கு வரட்டும் அந்தக் கருவாயன் "" என்று முக்கி முணகி சில கற்களைப் பொறுக்க வெளியில் செல்கிறேன்...



--சுந்தரவடிவேலு..

2 comments:

  1. எங்கள் வீட்டிற்கும் ஒரு கருவாயன் வருகிறான். ஆனால் அவன் உங்களவன் அளவுக்கு மோசமில்லை. ஒரு எல்லையில் வைத்தே பழகுகிறார்கள். இப்படியான சுவராஸ்யக் கதைகள் ஒவ்வொரு வீட்டிலும் நிறைய இருக்கின்றன போலிருக்கிறதே?

    நன்று.

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...