Friday, January 30, 2015

காந்தி----கோட்சே.............

காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை மெச்சுகிற முயற்சிகளும் சிலை வைக்கிற முஸ்தீபுகளும் சமீபத்திய செய்திகள்..
 இதனை அங்கீகரிக்கிற விதமாக சிலரது பலரது மனநிலைகள் ..
 ஃபேஸ் புக்கில் இந்த சங்கதி குறித்து ஒரு நீண்ட கடிதம் போன்று வெளியிட்டு இருந்தனர்.. கோட்சேவின் நியாயங்கள் மற்றும் வாக்குமூலங்கள் அவை.. அதற்கு "like " கொடுத்திருந்த அநேகம் பேர்கள்.. 
அதற்கு நானொரு பின்னூட்டம் போட்டிருந்தேன்.. அதனை இங்கே வெளியிட விரும்புகிறேன்.. !!

நான் காந்தியவாதியாகவோ கோட்சேவாதியாகவோ இங்கே வாதங்களை முன்வைக்க விரும்பவில்லை... எனது தனிப் பட்ட கருத்துக்களையும் சில அனுமானங்களை மாத்திரமே சொல்லிப் பார்க்க முயல்கிறேன்.... 

பொதுவாக நெரிசலில் பிக்பாக்கெட் அடித்து பொதுமக்களிடம் சிக்கிக் கொள்கிற சில்லறைத்
 திருடன் கூட, தமது செயல்களுக்கான தர்மங்களையும் நியாயங்களையும் நிலைநிறுத்தும் விதமாக வாதிப்பதில் கெட்டிக் காரனாகத் தான் இருப்பான்.. தமது செய்கை, தவறுகள் அல்ல என்கிற தீர்மானம் அவன் வசம் ஏராளம்..!


சுடப்பட்ட காந்தி மேற்கொண்டு எதுவும் பேசுவதற்கில்லை என்பதற்காக, சுட்ட மனிதரின் வாதங்களை உடனே உள்வாங்கி ஏற்றுக் கொள்கிற அப்பாவிகளாக நாம் இருந்து விடக்கூடாது.. 


காந்தி உயிரோடு இருந்த தருணத்திலேயே கோட்சே தமது முரண்பட்ட கருத்துக்களை, எழுத்து வடிவிலோ வார்த்தை வடிவிலோ காந்தியிடம் தெரிவித்திருக்க வேண்டும்.. அதற்கான காந்தியின் கருத்துக்களையும் பதிவு செய்யப் பட்டிருக்கவேண்டும்..

ஆனால் எதுவுமற்று இவரது ரகசிய முடிவில் அவரது உயிர் பிரிந்த பிற்பாடு, அதிலே உள்ள நியாயத்தை மக்களிடம் பரப்ப முயன்று தியாகி ஆக முயல்வது எவ்வித நியாயம்?.. 

காந்தியைக் கொல்லாமல் கோட்சே தமது வாதங்களை முன்வைத்திருந்து அதிலே நியாயமும் இருந்திருக்கும் பட்சத்தில், காந்தியை புறக்கணிக்க மக்களுக்குத் தெரியாதா?. கோட்சேவை கொண்டாட மக்களுக்குத் தெரியாதா?..

Sunday, January 25, 2015

ஐ ................விமரிசனம் [..ச் சை .. ]

ன்னைக்குத் தான் "ஐ" பார்த்தேன்..
ஊடகங்களின் பத்திரிகைகளின் எதிர்படுகிற ரசிகர்களின் ... இவர்கள் அனைவரின் கருத்துக்களையும் அப்படி ஒன்றும் பெரிதாக கிரகிக்காமல் தான் சென்றேன்..   

ஷங்கர் இவ்ளோ கான்ஃபிடண்ட் டுடன் இருப்பது சற்று எரிச்சலாக உள்ளது.. இத்தனை குரூர கற்பனை எதற்காக?.. ஹீரோ ஒரு அவஸ்தையை அனுபவிக்கிறான் என்றால், வில்லனாக வலம் வருகிறவர்களும் அதே வித பேரவஸ்தையை அனுபவிக்கிறார்கள்..

சண்டைக்  காட்சிகளும், காமெரா கோணங்களும் என்னதான் அசத்தினாலும், யதார்த்தம் என்பது எங்கு தேடியும் கிடைக்காத செயற்கையோடு படம் நெடுக.. 

ஆசையோடு குழந்தைகளைக் கூட்டி சென்றாலோ, அந்தக் குரூர விக்ரம் கண்டு அருவருத்து பயந்து போவார்கள்.. பொண்டு புள்ளைக படுகிற சிரமத்தைப் பார்க்கையில், இந்த இழவுக்கு நாம தனியா வந்து போயிருக்கலாம் என்று அனேக புருஷர்களுக்குத் தோன்றும்.. இந்த தீர்க்க தரிசனம் எனக்கு இருந்ததால, நல்ல வேல .. தனியா வந்து மத்த கப்புல்ஸ் படற லோலை படத்தோட சேர்த்து வேடிக்கையா பார்த்தேன். ஹிஹி.. 

காக்கிசட்டையில் அம்பிகாவோடு  கமல் பாடுகிற பட்டுக் கன்னம் தொட்டுக் கொள்ள, வானிலே தேனிலா, போன்ற ஆனந்தமான டூயட்களை பார்த்தும் கேட்டும்  பரவசப் பட்ட நாம், அந்த மாதிரியான அலாதி உணர்வுகளுக்கான சந்தர்ப்பங்களுக்கும் தடா போட்டு ஒரே இரைச்சல்களும் அனத்தல்களும் கலவையான  காட்டுக் கத்தல்களோடு பாடல்கள்.. அவைகளை "பாடல்கள்" என்று அடயாளப் படுத்தவே  வெட்கமும் வேதனையும் பிடுங்குகின்றன.. !!

கஃபே டே போய் , கப்பக்ஸினோ , எஸ்ப்ரெஸ்ஸோ வகையறா காப்பிகளை பருகக் கொடுக்கிற ஷங்கர், சென்னை சேரியில் அருக்காணி வீடு சென்று வரக்காப்பியும் பரிமாறி இருக்கிறார்.. அதனதன் தன்மையில் எல்லாமே ரசிக்கவும்  ருசிக்கவும் லாயக்கு என்ற போதிலும், எதற்காக காப்பிகள் இந்த முறை  சேற்றுத் தண்ணீர் கலந்து கொடுக்கப் பட்டன என்று அசூயை ததும்பக் கேட்கத் தோன்றுகிறது.. 

என்னதான் கற்பனை என்ற போதிலும் உடல்கள் எங்கிலும் பபுள்கம் போன்று புடைத்துக் காணப்படுகிற  கொப்புளங்கள் தாங்கொணா எரிச்சலை வியாபிக்க செய்கிறது.. அந்த அழகான சினிமா திரையே இற்றுவிட்டது போன்ற மாயையை  ஏற்படுத்திவிட்டது.. 

காட்சி அமைப்புகள் மனசுக்குள் எவ்விதப் பரிதாப உணர்வுகளையும் கொண்டு வரவில்லை.. விக்ரம் நடிப்பை டெடிகேஷன் என்று வியப்பதா, இப்படி எல்லாம் நாறிப்  போய் தான் டெடிகேட் பண்ண வேண்டுமா என்றெல்லாம் கோபம் வருகிறது.. மேக்-அப் என்பதால் எவ்வித அருவருப்பும் அற்று நாயகி அவனை அரவணைப்பதும் அந்தக் கொடுமையோடு டூயட் பாடுவதும்.. கருமம்டா சாமி.. 

அட்டூழியம் செய்கிறவர்கள்  அழிந்து விடாமல், சொச்ச காலங்களை சொத்தையாக  வாழ்ந்து சாக வேண்டுமென்கிற இந்த உலகமகா கன்செப்ட் , உயர் ரக  சினிமாக்களை சிருஷ்டிக்க சுலபத்தில் சாத்தியப் படுகிற ஒரு கலைஞனுக்கு உதித்திருப்பது நமக்கெல்லாம் நிகழ்ந்திருக்கிற கொடுமை.. 

ஒரு மூன்றாம் பாலின  நபரை வைத்து செய்கிற நய்யாண்டி எந்த விதத்தில் ரசிக்க முடிகிறது?.. 

தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு மைல் கல்..  இது வித்தியாச முயற்சி, விருதுகள் விக்ரமுக்கு நிச்சயம்.. . ஷங்கரின் மகத்தான காவியம், என்பவை போன்ற ஊடகங்களின்  விமரிசனங்களும், ஜால்ராக்களும் வந்திருக்குமோ என்னவோ எனக்குத் தெரியவில்லை.. 

இண்டெர்வலில் பசிக்கு ஒரு பஃப்சை , ஒரு கூல் ட்ரின்கை நிம்மதியாகக் குடிக்க முடியவில்லை.. பப்ஸை கடிக்கையில், விக்ரமின் மண்டைக் கொப்புளத்தைக்  கடித்தது போன்றும், கோக்கை வாய்க்குள் ஊற்றிய போது , அந்தக்  கொப்புளத்தின் சீழை அருந்துவது போன்றும் குமட்டத் தோன்றியது.. 

Thursday, January 22, 2015

பேரம்............

"நீங்க எவ்ளோ நேரம் பேரம் பேசினாலும் ஒரே விலை தான் சார்.. சும்மா இப்டியே சொன்னதையே திரும்ப சொல்லி டைம் வேஸ்ட் பண்ணாதீங்க சார்.. மத்த கஸ்டமருக்கு வழி விடுங்க.. நீங்களே கவனிங்க, உங்களோட ரேட்டுக்கு ஒரு பய கேக்க மாட்டான்.. ஏன்னா எல்லாருக்கும் வியாபாரியோட கஷ்ட நஷ்டம் புரியும். உங்க மாதிரி சில பேருங்க தான் சுயனலமாவே சிந்திக்கிற ஆளுங்க"

அதிகப்ரசங்கம் போன்று கடைக்காரன் என்னிடம் தாறுமாறாகப் பேசிக் கொண்டே டென்ஷன் ஏற்றினான்.. 

நாலாயிரம் விலை சொன்ன மொபைலை நான் மூணு நானூறுக்கு கேட்க ஆரம்பித்து மூணு எண்ணூறு வரைக்கும் வந்து நிறுத்தியும் கூட பேரம் படியாமல் விரட்டி அடிக்கப் பட்டேன்.. 
அடுத்த மாதமே, மூவாயிரத்துக்கும் குறைவாக விலை போகப் போகிறது.. எல்லா எலெக்ட்ரானிக் பொருள்களின் தலை எழுத்து இது.. ஆனபோதிலும், அந்த கரண்ட் ரேட்டில் இருந்து குறைவாய் எதிர்பார்க்கிற எங்களைப் போன்ற "பேர வியாதியஸ்தர்கள்" இருந்து கொண்டே தான் இருக்கிறோம்.. 

அது மூவாயிரம் வரும் போதுமே கூட வாங்கி இருக்கமாட்டோம்.. 
அப்போது, எங்களின் பேரம் ரெண்டு ஐந்நூறு என்று துவங்கி ரெண்டு எண்நூற்றம்பது  என்று அடைபட்டு நிற்கும்.. 

எத்தனையோ பொருள்கள் எத்தனையோ  கடைகளில், நாம் நின்று வாங்க யோசித்துக் கொண்டிருக்கிற போது சர்வ சாதாரணமாக எவ்வித பேரங்களையும்  பேசாமல்   கடைக்காரன் சொன்ன விலைக்கு வாங்கிச் செல்கிற வள்ளல்களைப் பார்க்க நேர்கிறது.. ஐம்பது ரூபாய்க்குக் கேட்டிருந்தால் கூட குதித்துக்  கொண்டு கொடுத்திருப்பான் க.காரன் .. ஆனால், இருநூறு என்று அவன்  சொன்ன டுபாக்கூர் விலையைக் கொடுத்து வாங்கி செல்கிற அதிபுத்திசாலிகள் மீது எப்போதும்  எனக்கொரு தாங்கொணா எரிச்சலும் அங்கலாய்ப்பும் உண்டு.. 

ஏமாற்றுகிற கடைக்காரனை  ஓங்கி அறையத் தோன்றுவதை விட, அந்த வாங்கிப் போகிற  பனாதி மீது தான் அலாதி கடுப்பு தோன்றும்.. 

மற்றொரு பேரத்தில் அந்த செல்லின் விலை படிந்து  என் கைக்கு வந்தது.. 

கடைக்காரனுக்கு  என்று அனுமதிக்கப் பட்ட சிறு லாபத்தை கூட என் போன்ற சிலரின்  தடை உத்தரவால், காண்டாகி சபிக்கிற கடைக்கார்கள், சொன்ன விலை கொடுத்து வாங்கிப்  போகிற இ.வாயன்கள் தான் தெய்வங்களாகப் படுவார்கள். 

என் போன்ற நபர்களுக்கு  அநியாயம் புரிபவர்களையும் ஏமாந்து போகிறவர்களையும் ஓங்கி அறையத்  தோன்றும்.. 
கடைக் காரர்களுக்கோ எங்களைப் போன்ற  பேரம் பேசுபவர்களை ஓங்கி ஓங்கி அறையத் தோன்றும்.. 

அறைகள் மாத்திரம் அனுமதிக்கப் பட்டால், ஆளாளுக்கு கன்னங்கள் வீங்கி காதுகள் டமாரமாகித்  தெருக்கள் எங்கும் திரிய நேரும்.. ஹிஹி.. 

Wednesday, January 14, 2015

பிரபலங்களுக்கு ஒரு எச்சரிக்கை.. !!

முன்னர் அமோகமாகக் குலுக்கப் பட்டஎமது கரங்கள் ..அதே நம்பிக்கையில்மறுபடி கொடுக்கப்பட்ட போது ,சற்றும் எதிர்பாராமல்"ஐயோ" என்று நானே பதறுமளவு முறுக்கப்பட்டன..ஸ்நேகமான குலுக்கல்கள் எமதுகைககளை விட்டல்ல..  என்னை விட்டே பெயர்ந்து போயினவோ?எல்லாருக்குமான எதார்த்தம் இப்படித்தான் ... உச்சி செல்வதற்கான சந்தர்ப்பங்களில் சென்று விட்டு.. குறிப்பிட்ட தருணங்கள் கழிந்த பிற்பாடு  நாசுக்காக இறங்கி வந்துவிட வேண்டும்.. உச்சி தான் பிடித்தது என்று அங்கேயே வீற்றிருந்தால்  புலி உறுமும் .. யானை கர்ஜிக்கும்.. எல்லாரும் உன்னை உச்சியில் ஏற்றி விட்டபோது  பாதுகாப்பும் பலமாக இருந்தன.. 

இன்று நீ அடம்பிடித்து உட்கார்ந்து கொண்டிருந்தால் உமக்கான பாதுகாப்பு கழற்றி விடப் பட்டிருக்கும்.. எறும்பு கடித்தால் கூட  அரண்டு போய் நீ அடிவாரம் வந்துவிழ வேண்டும்.. !அடிவாரம் வந்தால் மாத்திரம் பாதுகாப்பு  என்ன நமக்கு இனி  என்கிற அறிவுப் பூர்வமான  கேள்விகள் சந்தேகங்கள்  வந்துவிடவேண்டும்.. 
அதுவும்  தெரியாமல்  புரியாமல் ஆடினால் கோவணம் உதிர்வது  கூடப் புரியாத அம்மணத்தில் அலங்கோலப் பட்டாகவேண்டும்.. !!


Friday, January 2, 2015

அசாத்யப் பிரியன்..

முத்தெடுக்க 
நெருப்பில் மூழ்கி 
தீக் கங்கெடுக்க 
கடலுள் மூழ்குகிறேன்.. 

ஆம்புலன்ஸ் ஏறி 
ரஜினி படம் முதல் ஷோ 
போகிறேன்.. 
மாரடைப்பு வந்ததற்கு 
மாட்டுவண்டி ஏறி 
ஆசுபத்திரி போகிறேன்.. 

பம்பர் குலுக்கலில்  
பரிசு கிடைத்தும் 
தற்கொலைக்கு 
திட்டம் போடுகிறேன்.. 

பாதாளத்துள் 
புதையுண்டு போய் 
பிராணவாயு தேடுகிறேன்.. 

--இதையெல்லாம் விட 
பெண்ணே.. 
உமது காதலை எதிர்பார்த்து 
கவிதை புனைகிறேன்..!!

Thursday, January 1, 2015

அவளுடைய பர்ஸ் ...

ந்தப் பர்ஸில் நான்கைந்து வங்கிகளின் atm கார்டுகள் இருந்தன.. பான் கார்ட் இருந்தது.. அவை போக, இன்னும் சில உபரி காகிதங்கள்.. , atm மில் பணம் எடுத்த ஸ்லிப்கள்.. ஒற்றை ஐநூறு ரூபா தாள், மற்றும் சிற்சில நூறுகள்.. உபரி சில்லறைகள்.. அதனூடே ஒரு என்ட்ரி லெவல் ஆண்ட்ராய்டு மொபைல், சமீபத்தில் தான் பட்டன் போனை எக்ஸ்சேன்ஜ் செய்து வாங்கியது போலும்..!

இதையெல்லாம் அப்படியே அவளிடம் சென்று ஒப்படைத்து, என்னுடைய பரம யோக்கியதையை வெளிப்படுத்தி, அவள் அதில் புளகாங்கிதம் அடைந்து மேற்கொண்டு எங்களின்  சுவாரசியப் பயணம் துவங்குவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளையும் நான் பட்டியலிட்டேன்.. 

ஆனால் துரதிஷ்டவசமாக பர்ஸ் அவள் கையில் பத்திரமாக இருந்தது.. அவள் அதனைத் தவற விடுகிற அஜாக்கிரதைக் காரி போல தெரியவில்லை.. 
அதற்குள்ளாக அவளை நான் இலங்கையில் ராவணன் கையில் சிக்கிக் கொண்ட சீதை போன்றும், மீட்டெடுக்க வந்த அனுமன் போன்று என்னையும் கற்பிதம் செய்து, ஆனால், எனது ராமாயணத்தில் ... பிற்பாடாக நானே ராமனாகவும் மாறிவிடக் கூடிய திரைக் கதையை அமைத்தாக வேண்டிய அவஸ்தை சிறையில் சிக்கி விட்டிருந்தேன்.. !!

சும்மா சொல்லக் கூடாது.. 
துரதிர்ஷ்டங்கள்  என்னை எப்போதுமே அரவணைத்துக் கொள்ளுகிற அங்கீகாரம் பெற்றுள்ளதே எனிலும் , அவ்வப்போது அதிர்ஷ்டங்களும் வந்து சிட்டுக் குருவிகள் போன்று தத்தித் தத்தி நெல் பொறுக்க வரும். விலகி நின்று ரசித்தாக வேண்டும் எனது அதிர்ஷ்டத்தை.. சற்றே எனது அரவம் புரிபட்டாலோ, சரக்கென்று பறந்து விடும் எமது அதிர்ஷ்டக் குருவிகள்.. 

அப்படித்தான் அந்தப் பர்ஸ் பெண்ணை  நான் பெண்பார்க்க செல்ல நேர்ந்தது.. 
நானும் நோக்கி, அவளும் நோக்கி கசிந்த காதல் வார்த்தைகள் தொலைத்தவை.. 
பரஸ்பரம் பிடித்துப் போய் , இருவீட்டிலும் பேச்சுக்கள் சூழ்ந்தன.. ஆனால், அந்தப் பெண் வீட்டு ஜோதிடன் பொருத்தத்தில் குறை கண்டு ஊளையிடவே "போட்றா  அவன பொடனி யில " என்கிற வெறியை ஏற்றினான்.. 

பிறகு இருவீட்டிலும் எதிர்ப்பு வலுத்தன.. அதனூடே எங்கள் காதலும் வலுத்தன. எதிர்ப்புகள் பொடிதவிடாகி ... 
அரேன்ஜ்டு மேரேஜ் என்று டீசன்ட்டாக பெயரெடுக்க வேண்டிய அதிர்ஷ்டம் பெயர்ந்து போய்  "ஓடுகாலிக" என்கிற அவப் பெயரைக் கொணர்ந்து பரஸ்பரம் இருவரும்  அவரவர்களது உறவுகளினின்று தனித்து நிற்க நேர்ந்த துரதிர்ஷ்டங்களை யாதென சொல்ல?? 

முதலிரவில் அந்தப் பர்ஸ் மேட்டரை அவளிடம் சொன்னேன்.. ரொம்ப சிரிப்பாள் என்று  எதிர்பார்த்த எமது அனுமானம் , 
'சுத்த அல்பை' என்கிற அவளது நக்கல் வார்த்தையில் நைந்து போயிற்று.. !

புணர்ச்சிக்குப் பிறகு அவள் உறங்கிப் போக, அவளது பர்ஸை துழாவிக் கொண்டிருந்தேன்  தூக்கம் வரும்வரை.. !!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...