Thursday, January 1, 2015

அவளுடைய பர்ஸ் ...

ந்தப் பர்ஸில் நான்கைந்து வங்கிகளின் atm கார்டுகள் இருந்தன.. பான் கார்ட் இருந்தது.. அவை போக, இன்னும் சில உபரி காகிதங்கள்.. , atm மில் பணம் எடுத்த ஸ்லிப்கள்.. ஒற்றை ஐநூறு ரூபா தாள், மற்றும் சிற்சில நூறுகள்.. உபரி சில்லறைகள்.. அதனூடே ஒரு என்ட்ரி லெவல் ஆண்ட்ராய்டு மொபைல், சமீபத்தில் தான் பட்டன் போனை எக்ஸ்சேன்ஜ் செய்து வாங்கியது போலும்..!

இதையெல்லாம் அப்படியே அவளிடம் சென்று ஒப்படைத்து, என்னுடைய பரம யோக்கியதையை வெளிப்படுத்தி, அவள் அதில் புளகாங்கிதம் அடைந்து மேற்கொண்டு எங்களின்  சுவாரசியப் பயணம் துவங்குவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளையும் நான் பட்டியலிட்டேன்.. 

ஆனால் துரதிஷ்டவசமாக பர்ஸ் அவள் கையில் பத்திரமாக இருந்தது.. அவள் அதனைத் தவற விடுகிற அஜாக்கிரதைக் காரி போல தெரியவில்லை.. 
அதற்குள்ளாக அவளை நான் இலங்கையில் ராவணன் கையில் சிக்கிக் கொண்ட சீதை போன்றும், மீட்டெடுக்க வந்த அனுமன் போன்று என்னையும் கற்பிதம் செய்து, ஆனால், எனது ராமாயணத்தில் ... பிற்பாடாக நானே ராமனாகவும் மாறிவிடக் கூடிய திரைக் கதையை அமைத்தாக வேண்டிய அவஸ்தை சிறையில் சிக்கி விட்டிருந்தேன்.. !!

சும்மா சொல்லக் கூடாது.. 
துரதிர்ஷ்டங்கள்  என்னை எப்போதுமே அரவணைத்துக் கொள்ளுகிற அங்கீகாரம் பெற்றுள்ளதே எனிலும் , அவ்வப்போது அதிர்ஷ்டங்களும் வந்து சிட்டுக் குருவிகள் போன்று தத்தித் தத்தி நெல் பொறுக்க வரும். விலகி நின்று ரசித்தாக வேண்டும் எனது அதிர்ஷ்டத்தை.. சற்றே எனது அரவம் புரிபட்டாலோ, சரக்கென்று பறந்து விடும் எமது அதிர்ஷ்டக் குருவிகள்.. 

அப்படித்தான் அந்தப் பர்ஸ் பெண்ணை  நான் பெண்பார்க்க செல்ல நேர்ந்தது.. 
நானும் நோக்கி, அவளும் நோக்கி கசிந்த காதல் வார்த்தைகள் தொலைத்தவை.. 
பரஸ்பரம் பிடித்துப் போய் , இருவீட்டிலும் பேச்சுக்கள் சூழ்ந்தன.. ஆனால், அந்தப் பெண் வீட்டு ஜோதிடன் பொருத்தத்தில் குறை கண்டு ஊளையிடவே "போட்றா  அவன பொடனி யில " என்கிற வெறியை ஏற்றினான்.. 

பிறகு இருவீட்டிலும் எதிர்ப்பு வலுத்தன.. அதனூடே எங்கள் காதலும் வலுத்தன. எதிர்ப்புகள் பொடிதவிடாகி ... 
அரேன்ஜ்டு மேரேஜ் என்று டீசன்ட்டாக பெயரெடுக்க வேண்டிய அதிர்ஷ்டம் பெயர்ந்து போய்  "ஓடுகாலிக" என்கிற அவப் பெயரைக் கொணர்ந்து பரஸ்பரம் இருவரும்  அவரவர்களது உறவுகளினின்று தனித்து நிற்க நேர்ந்த துரதிர்ஷ்டங்களை யாதென சொல்ல?? 

முதலிரவில் அந்தப் பர்ஸ் மேட்டரை அவளிடம் சொன்னேன்.. ரொம்ப சிரிப்பாள் என்று  எதிர்பார்த்த எமது அனுமானம் , 
'சுத்த அல்பை' என்கிற அவளது நக்கல் வார்த்தையில் நைந்து போயிற்று.. !

புணர்ச்சிக்குப் பிறகு அவள் உறங்கிப் போக, அவளது பர்ஸை துழாவிக் கொண்டிருந்தேன்  தூக்கம் வரும்வரை.. !!

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இப்படி கதறும் அளவு பிரச்சினை இருக்கிறதா சார்?.. சமயங்களில் எழுதுபவனுக்குப் புரிபடாத விபரீதங்கள் படிப்பவர்களுக்குப் புலனாகும்?? இருப்பின், தெரிவியுங்கள் .. நானும் தெரிந்து கொள்கிறேன்.. ஹிஹி..

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...