Tuesday, December 11, 2012

.என் முகத்தைப் பழிக்கிறது என் இதயம்..

என் இதயத்தில் எழுகிற உணர்வுகளுக்கும்

ரசனைகளுக்குமான  பொருத்தத்தில் 

எனது முகம் பிரதிபலிக்காததை --

 என் முகத்தைப் பிரதிபலிக்கிற

 என் வீட்டுக் கண்ணாடியில்

 என்னால் சுலபத்தில் அடையாளம் காணமுடிந்தது..


அகத்தின் மெருகை முகம் காட்டுமென்கிற பழமொழியைப் பொய்யாக்கி விட்டதான அனுமானம் எனக்கு, என்மீதும் என் முகத்தின் மீதும்.

எது எப்படியான போதிலும் என்னை விட்டு நழுவுவதற்கான வாய்ப்பே அற்ற எனது முகத்தை நானென் இதயத்தைப் பிரதிபலிக்கச் சொல்லிப் பயிற்றுவிக்கிற  பயித்தியகாரத் தனத்தில் ஈடுபடவேண்டிய ஓர் ரணகளம் அவ்வபோது நிகழத்தான் நிகழ்கின்றன..!


"டிப்டாப்" ஆசாமி ஜேப்படி செய்து மாட்டிக் கொண்டு மானம் கெடுவது போல, எனது மன உணர்வுகளுக்கான எவ்வித தேஜஸும் அற்று ... மாமிசக் கடையில் பீதியில் உறைந்துள்ள கோழியின் பீய்ச்சி அடித்த பொச்சு போல என் முகம்...


இவ்வளவு பேரவஸ்தைகளை ஓரங்கட்டுகிற முஸ்தீபில் தான் நான் என்னைப் பிரதிபலிக்கிற எந்தக் கண்ணாடிகளுக்கும் பாராமுகமாயிருக்கப் பிரயத்தனித்துப் பழகிக் கொள்கிறேன்.


என் முகத்தைப் பிரதிபலிக்கிற கண்ணாடிகள் கல்லடி பட்டதுபோல  சுக்குநூறாகத் தெறித்து விடக்கூடுமென்கிற அபாண்ட கற்பனை எனக்கு..


என் முகம் சமைக்கப் பெற்றதற்கான காரணிகளாக அனுமானிக்கப் படுகிற பிரம்மன் ஆகட்டும், இன்னபிற தாதுக்களாகட்டும் -- ஒட்டுமொத்தமாகக் கூட்டு சேர்ந்து பெருந்துரோகம் இழைத்துவிட்டதாகவே எப்போதும் அரற்றிக் கொள்கிறது  என் இதயம்..!!


என் இதயம் விரும்புகிற முகங்களை தரிசிக்க நேர்கையில், அங்கலாய்ப்பில் விம்மிப் புடைத்துத் துள்ளி வெளியே குதித்து விடும் போல இதயம் என்னுள்ளே தத்தளிக்கிற போது .. என்னை முண்டமாக்கிவிட்டு எனது முகம் தற்கொலை செய்து கொள்ளுமோ என்றொரு அச்சமுண்டு... அந்த அச்சம் , என் இதயத்தில் ..!???

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...