Saturday, July 4, 2015

தெரு நாய்....

தெரு நாயின் பாசம் என்னை ஷணத்தில் அதனிடத்து கவிழ்த்துப் போட்டது.. 
கடை வீதி போய் விட்டு பைக்கில் வீடு சேர்ந்த போது வாசலின் குறுக்கே ஒய்யாரமாக நீட்டிப் படுத்துக் கிடந்தது அந்தக்  காவிக் கலர் தெரு நாய்.. 
நான் வந்ததும் ஒரு காவலாளி போன்று எழுந்து கதவைத் திறந்து விட்டிருக்க வேண்டுமென்று எனது ஆறாம் அறிவு கேவிற்று.. பழக்கப் படுத்திய வீட்டு நாய்களே அவ்விதம் செய்வது அரிது என்றிருக்க தெருத் தெருவாக சுற்றித் திரிகிற அந்த நாயிடம் அப்படி ஒரு விஷயத்தை எனது மரமண்டை எப்படி எதிர்பார்க்கலாம்?

அவ்விதம் இல்லாது போனால் கூடப் பரவாயில்லை.. வீட்டு எஜமானன் வந்திருக்கேன், கொஞ்சம் பவ்யமா நகர்ந்து அந்தப் பக்கமோ இந்தப் பக்கமோ போயிருந்தால் இங்கே எதுவும் எழுத நேர்ந்திருக்காது என்றே கருதுகிறேன்.. 


நகராமல் என்னை வேறு முறைத்து ... குரைத்து .... கலவரப் படுத்திற்று.. எங்கேனும் கபக்கென்று பிடித்துக் கவ்வி, குன்னூர் போக நேருமோ என்றெல்லாம் சிந்தனைகள் மிக அவசரமாக என்னை வந்து கபளீகரித்தன .. இந்தவாட்டி யாவது இந்த "பழக் கண்காட்சி நடக்கிற சிம்ஸ் பூங்கா " வுக்கு சென்று வந்து விட வேண்டும் என்றெல்லாம் திட்டம் போட்டு விட்டேன்.. 


இளிச்சவா நாயி, கல் எடுத்து விரட்டுவது போன்று நடித்த மாத்திரத்தில் வாலைக் குறுக்கிக்கொண்டு வாசலை காலி செய்தது.. 


பாவம், வீடு என்னுடையது என்பது அந்த நாய்க்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது.. !!


என்னவோ தெரியவில்லை, சட்டென்று அந்த நாயின் மீதான எனது காருண்யம் எனக்கே ஆச்சர்யம் கொப்பளிக்க வைத்திற்று.. 


விரல்கள் இரண்டை நெறுக்கி சடக்கென்று போட்ட சொடுக்கில், பயந்தோடிய அந்தத் தெரு நாய் திரும்பவும் 'நிறைய நாட்கள் பழகியது' போன்று திரும்ப வந்து குறுக்கிய அந்த வாலை வெளிக் கொணர்ந்து நேசமாக ஆட்ட ஆரம்பித்து, முன்னங்கால்களை உரிமையோடு எனது வயிற்றுப் பகுதி, மற்றும் மார்புப் பகுதிகளில் பதிக்க ஆரம்பித்து என்னை நிலைகுலைய வைத்தது.. உடனே எனது கைகள் அதன் நெற்றியை நீவி அதனிடத்தே என்னை முழுதுமாக  ஒப்படைக்க நேர்ந்தது.. 


உள்ளிருந்த மனைவியை அழைத்து அதற்கு சில பிஸ்கட்டுகள் போடச் செய்தேன்.


இப்படி பழக்கினால் அது அன்றாடம் வந்து இம்சை செய்யும் என்கிற எனது மனைவியின் எச்சரிக்கை எனக்குப் பொருட்டாகப் படவில்லை.. 


ஆனால், அப்படி எல்லாம் அந்த நாய் திரும்ப வரவில்லை.. இத்தனைக்கும் வரட்டும் என்று கூட எதிர்பார்த்தேன்.. 


இன்னும் எத்தனையோ வாசல்கள் இருக்கின்றன அந்த நாய்க்கு. 


1 comment:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...