Wednesday, April 20, 2016

தெறி .. சினிமா விமரிசனம்..

Image result for theri stillsனைவி அம்மா அனைவரும் சுடப் பட்டு கன்னாபின்னாவென்று இறந்த பிற்பாடு, தமது ஒரே மகளை எடுத்துக் கொண்டு கேரளம் சென்று ஒரு அப்பாவி போன்று வாழ்க்கையை ஓட்டுகிறார் விஜய்.. அந்த அப்பாவி மிடுக்கினூடே, அவ்வப்போது ரவுத்ரம் பீறிட, வில்லன்மார்களை சுலபமாக நய்யப் புடைகிறார். 
இந்த ஸ்க்ரீன் ப்ளே பாட்ஷாவில் ரஜினிக்கு எடுபட்ட ஒரே காரணத்துக்காக வேதாளத்தில் அஜித்தும், இப்போது விஜயும் என்று பட்டியல் . நீள்கிறது.

இப்போதைக்கு இது பக்கா மொக்கையாகத் தெரிகிறது.. 
அதுவும் பிந்தைய ஃப்ளாஷ் பேக் என்பது கர்ண கடூரக் கொடூரமாக சித்தரிக்கப் பட்டுள்ளது.. 'இது யதார்த்த சினிமா இல்லை' என்று உடனே அவசரக் குடுக்கை போன்று சொல்ல முற்பட்டாலும், 'இப்படியான கொடுமையான கொலைகள் நடப்பதை' யதார்த்தமில்லை என்று எங்கனம் சொல்ல?.. இவை நமது செவி வழி செய்திகளாக நுழைகிறது.. செய்தித் தாள்களில் படித்து வெம்புகிறோமே அன்றி, நேரில் பார்க்கிறோமா ?.. 
ஆனால், அவ்வித விபரீத சங்கதிகளை மெனக்கெட்டு சினிமா படுத்துகையில் ஏன்  சுலபத்தில் யதார்த்தத்துக்குப் புறம்பாகப் புரிபடுகிறது நமக்கெல்லாம்?

ஆகவே, இதையும் யதார்த்தம் என்று சூளுரைத்து .. வாதத்தில் நிலைநின்று நிரூபிக்கிற  தார்மீகப் பொறுப்பை ஏற்கிறோமாக ..!!

ஆனால் அட்லீ ... எத்தனையோ நிம்மதியான யதார்த்த விஷயங்கள் உள்ளன இந்த உலகிலே.. இந்த மாதிரி விபரீதங்களைத்  தத்ரூபப் படுத்தி 2 மணிநேர ரிலேக்ஸ் க்காக செலவு செய்து வருகிற மக்களுக்கு எதற்காக அனாவசியத்துக்குட்  டெம்ப்ட் ஏற்றி மனதை சிதிலப்  படுத்த விழைகிறீர்?

வாழ்க்கையில் இத்தனை அநியாயக் குரூரங்களை சந்திக்கிற ஒரு நபர், மறுபடி ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு அவ்ளோ ஜாலியாக பேபி பேபி என்று  கொஞ்சி வலம் வருவதும் .. அவ்வப்போது எதிர்ப்படுகிற கேரளா தாதாக்களை வேறு துவம்சம் செய்வதும் .. பிறகு அவர்களிடமே மன்னிப்பு கேட்பதும்.. பெரிதாக மனதில் ஒட்டவில்லை.. 

பாடல்களுக்கு இடங்களை மென்மையாகத் தேர்ந்தெடுத்து விட்டு எல்லா பாடல்களும்  சப்பையாகப் போட்டிருக்கிறார் ஜி.வி.. 50வது படமாம்.. மெலடியாக 2 பாடல்கள் கூட யோசிக்க முடியாத அவசரம் என்னவோ?

80-90 களின் யதார்த்த சினிமாக்களுக்கு தந்தையாக விளங்கிய மகேந்திரன் எதற்கிந்த விபரீத வில்லத்துவத்தை ஏற்று நடித்திருக்க வேண்டும் என்கிற ரகசிய தர்ம  சங்கடம் மனசுள் வியாபிக்கிறது.. இருப்பினும் இத்தனை  பெரிய இடைவெளிக்குப் பிற்பாடு கூட 'இந்த ஒரு கொடிய' பரிமாணத்தை தத்ரூபப் படுத்தி இருக்கிற அவரது பங்கு-பாங்கு  அனைத்தும் பிரம்மாதம்.. 

சமந்த்தா கூட கொஞ்சம் நன்கு கீ கொடுத்த பார்பீ பொம்மை போன்று நடித்திருக்கிறார்.. ஆனால், அந்த எமி ஜேக்சன் பொம்மைக்கு சுத்தமாகக் கீ கொடுக்க  மறந்து விட்டார்கள் போலும்.. வெறுமே லிப்ஸ்டிக் மட்டும் மிடுக்காகப் பூசிக்  கொண்டு நடக்கிறது.. 

வசனத்தின் வீரியமும் அதன் நியாயங்களும் மனசைக் கவ்வுகின்றன.. அதனை உச்சரித்துப் பேசியும் உடல் மொழியில் ஒருவித ஆளுமையை நிலைநிறுத்துவது  என்பதும் , சாதாரண நடிகனால் அசாத்யமான ஒன்று.. விஜய்  அதனை அனாயாசமாக பல இடங்களில் செய்து அசத்தி இருப்பது அஜித்  ரசிகனாலும் மறுக்க முடியாத உன்னதம்.. 

மென்மை ததும்பும் யதார்த்தங்களை அடுத்த முறை அட்லி முயலவேண்டுகிறேன்.. இந்த வன்முறை யதார்த்தங்கள் செய்தித் தாள்களிலும்  நம்முடைய அனுமானங்களிலும் மாத்திரமே இருந்து விட்டுப் போகட்டும். 

நன்றி.. 

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...