Tuesday, May 10, 2016

24-- [தமிழ் மூவி ரிவ்யூ]

நேற்று நாளை இன்று குழுவினர் கோடு போட , இவர்கள் ரோடு போட்டு விட்டனர்.. அதுவும் தாரில் இல்லாமல், கான்க்ரீட் ரோடு..
இப்படியான யதார்த்தங்களுக்குப் புறம்பான விஷயங்கள் சுலபத்தில் வசீகரித்து விடும் என்பது ஒருவகை மனோவியல்..
டார்ஜான், சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் . ஜேம்ஸ் பாண்ட் .. சித்தரிப்புக்கள் அனைத்துமே மக்களிடத்து  வெற்றி பெற்றமைக்கு அந்த அசாத்யங்களே காரணி..
மனிதன் பறப்பது மற்றும் சுலபத்தில் எதிரிகளை சுட்டு வீழ்த்துவது என்பவை  இயல்பான யதார்த்தமான விஷயங்களாக  இருப்பின், உலகம் சூப்பர்மேன்களால் நிரம்பி வழியக் கூடும்..

எத்தனை கால்களை எம்பிக் குதித்தாலும் சில ஷணம் மட்டுமே கால்கள் பூமி பாவாமல் அந்தரத்தில் இருப்பது சாசுவதம்.. மற்றபடிக்கு உண்பது உடுத்துவது உறங்குவது என்கிற அனைத்துமே பூமி ஒட்டியே  நிகழ்த்தியாக வேண்டிய  சூழல்  தான் மனிதனின் சலிப்பேற்றறுகிற யதார்த்தம்..

அப்படி சலிப்பில்லாமல் பூமியே பாவாமல் சதா அந்தரத்தில் பறக்க சாத்யப்  படுகிற மனிதர்கள் நிழல் பிம்பங்களாகத் திரையில் வழிகையில் அதனை, அவர்களை  ஆராதிக்கிற அதிசயிக்கிற வேகம், சற்றும் விவேகமற்று நம்மில்  ஆட்கொண்டு  விடுகிற விபரீதம் நம் யாதொருவருக்குமான நிகழ்வாக ஏதோ ஒரு பிராயத்தில் உதித்து,  மனமுதிர்வு அடைகிற பிராயமொன்றில் காணாமலும் போய் விடுகிறது...!

கிட்டத்தட்ட 3 மணி நேரம் கடந்தது புரியாமல் அனைவருமே லயித்து விடுகிற மேஜிக்  இந்தப் படத்தில் நடக்கிறது.. மற்றபடி ஆழ்ந்த கதைச் செறிவோ, மனசைக்  கவ்வுகிற பாடல் சங்கதிகளோ எதுவுமே இல்லை என்பதை வெளியே வந்து  நிதானமாக சொல்லிவிடலாம்..

இளையராஜா கைகளில் மட்டுமே மெலடிகள் "புள்ளப் பெக்கற அம்மா" க்களாக இருந்தன போலும்.. இன்றைய இசை அமைக்கிறவர்களின் கைகளில் மெலடிகள்  "மலடிகள்" ஆகி விட்டனவோ?
மனதில் ஒட்டாத பாடல்களும் 'பிஜிஎம்' என்கிற பின்னணி இசைப் புனைவுகளும்  எவ்வித ஸ்மரணைகளும் அற்று வெறுமே ஒலிக்கின்றன..
ஆனால், இம்சிக்கவில்லை என்பதே பெரிய விஷயம் அல்லவா??..

VFX  டெக்னாலஜி மாத்திரம் பகீரதப் பிரயத்தனப் பட்டு காட்சிப் படுத்தப் பட்டுள்ளன.. அந்த வாச்சுக் கடை, அந்த பஜார், அங்கே வருகிறவர்கள் போகிறவர்கள் .. கடக்கிற வாகனங்கள் .. நிகழ்கிற சம்பவங்கள் ..   அனைத்துமே .. சற்றே உற்று நோக்கின், செட் போட்டு சமாளித்திருப்பது புலனாகும்.. ஆனால் அப்படி ஆழ்ந்த பிரக்ஞை கொண்டு அதனை   அலசி ஆராய்வது  வீண்வேலை.. ஸோ .., ஜஸ்ட் ஜாலியாக பார்த்து ரசிப்பதே ஒரு தேர்ந்த  சினிமா ரசிகனின் பார்வையாகும் ..அதனால, லைட்டா எடுத்துட்டு என்ஜாய்  பண்ணுங்க . மக்களே.

அரக்க குணம் கொண்ட வில்லன் சூர்யா.. அப்பாவி விஞ்ஞானி சூர்யா.. வாச்சு மெக்கானிக் சூர்யா.. முப்பரிமாணங்களில் தமது அனைத்து ரசங்களையும் படர  விட்டு தெய்வமகன் சிவாஜி ரேஞ்சுக்கு முயன்றிருக்கும் சூர்யாவைப் பாராட்டுவோம்.  அம்மா சரண்யாவின் அலேக்கான தாய்ப்பாச செண்டிமெண்ட்.. அவ்வப்போது கண்களில் வழிந்து கன்னங்களை நனைத்து கைக்குட்டைக்கு வேலை வந்துவிடுகிறது..

3மணி நேரம் நழுவியது புரியவில்லை.. அதே போன்று  மனத்திலும் பெரிய அளவுக்கு சம்பவங்கள் ஒட்டவில்லை..
அரங்கினுள் அறுவையாக சலிப்பாக உணரப் பட்டாலும் கூட, வெளிவந்ததும் மனசை  என்னவோ பிசைகிற படங்கள்.. மறுபடி கண்டிப்பாக பார்க்கத்தூண்டி அந்த முதற்கண்  உணரப்பட்ட சலிப்பு இரண்டாம் முறையாகக் களையப் பெற்று  3ஆம் முறை கூடப் பார்க்க ஆசை வந்த படங்கள் முன்னரெல்லாம் வந்தன..  பார்த்து மகிழ்ந்தோம்..

இன்றெல்லாம் அவ்வித நிகழ்வுகள் கானலாகி விட்டன..  அதுவும் நல்லதுக்குத் தான்.  அன்றைக்கு 2.90- கொடுத்து 5 முறை பார்த்தாலும் ரூ.15 கூட ஆகாது. இன்று 1 முறைக்கே 150ரூ 200 ரூ அழ நேர்கிறது.. 

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...