Sunday, October 25, 2015

நாஸ்திகன் டைரியிலிருந்து..

ஆத்திகன் நீ என்பதால் அனேக கடவுள்களையும் பாரபட்சம் பாராது பிரார்த்திக்கிறாய்.. 

ஆனால் உமது பிரச்சினைகளை தீர்க்கவல்ல கடவுள் ஒருவரே.. 
உமது பிரார்த்தனையின் பிரதான அம்சமே, அந்தப் பிரத்யேகமான பிரச்சினை காணாமற்போய் ஒரு நல்ல தீர்ப்பு வந்து சேர்ந்து சந்தோஷம் பிரவகிக்க வேண்டும் என்பதே.. 

அவ்வாறே உமது பிரச்னையும் ஒரு எல்லையை சந்தித்து, ஒரு தீர்க்கமான சூழல் உருவாயிற்று.. 
மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கித் திளைத்து, சில நாட்கள் உம்மைக் காப்பாற்றிய தெய்வத்தைக் கூட நினைவில் கொள்ளாமல் வேறு களியாட்டங்களில் நண்பர்களோடும் உறவினர்களோடும் கொண்டாடித் தீர்த்தாய்.. 

யாவும் கடந்தாக வேண்டிய விதியின் நிமித்தம், உமது கொண்டாட்டத் தருணங்கள் கடந்து கடவுள்களை சிந்திக்கிற நேரம் பிறந்தன.. 

பிரச்சினை தீரவேண்டும் என்று கோரஸாக பார்க்கிற கடவுளை எல்லாம் வேண்டி விடுகிறாய்.. ஆனால், நீ காப்பாற்றப் பட்ட பிற்பாடு, அனைத்து கடவுளும்  கூடித் தான் உம்மைக் கரை சேர்த்தன என்கிற நம்பிக்கை பிறப்பதில்லை.. குறிப்பிட்ட ஒரே கடவுள் மட்டுமே உமது தெளிவுக்கும் மகிழ்வுக்கும் காரணகர்த்தா  என்கிற பிடிவாதமான ஒரு வகை நம்பிக்கை புகுந்து  உம்மைக் குழப்பத் துவங்குகிறது.. 

திருச்செந்தூர் முருகன் தான்  உம்மைக் காப்பாற்றிய கடவுள் என்கிற தீர்க்கமான நம்பிக்கைக்குள் சிறைப்பட்டு, தி.செந்தூர் சென்று ஒருவாரம் தங்கி இருந்து எல்லா நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றி விட்டுத் திரும்புகிறாய்.. 

ஆனால் உம்மை முழுதுமாகக் காப்பாற்றியது நீ அனுமானித்தது போன்று  திருசெந்தூர் முருகன்  அல்ல.., நீ குடி இருக்கிற தெருவுக்கு 2 தெருக்கள் தள்ளி  வீற்றிருக்கும்  'காமராஜ் நகர் சுப்பிரமணியர் கோவில் முருகன்' என்கிற உண்மையை எவர் சொல்லி உமக்குப் புரிய வைப்பது?.. 

அடுத்த நாள் தி.செந்தூர் மொட்டைத் தலையோடு நீ அந்தக் கோவிலைக் கடக்கையில், அந்த சுப்பிரமணியரை ஏறெடுத்தும் பார்க்காமல் சென்றது கண்டு கடுப்பாகி, ஒரு ஜல்லிக் கல் எடுத்து உமது மொட்டை மண்டையில் அடித்து கிஞ்சிற்று ரத்தம் கசிய வைத்தார் முருகன்.. 

நீ, உன்னைக் கடந்து சென்ற சுகுமாரை சந்தேகித்து, அவனோடு சண்டையிட்டு பிரச்சினை செய்தாய்.. 
இப்படித்தான், எல்லாவற்றையும் தவறுதலாகவே புரிந்து கொண்டு நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.. 

சுகுமார் நான்கு தடியன்களை அழைத்துவந்து உம்மை பேதி கிளப்பி, மறுபடி பிரச்சினைகள் உருவாக்கி ... உம்முடைய அடுத்த பிரார்த்தனை களத்துக்கு ஏற்பாடு செய்து விட்டான். 

இந்தமுறையாவது காமராஜ் நகர் சுப்ரமணியரை நீ அடையாளம் காண்பாயாக.. யார் கண்டது, அவர் காண்டாகி இந்த முறை உன்னைக் காப்பாற்றுகிற பொறுப்பை அந்தப் பழனி தண்டாயுதபாணி இடத்தில் ஒப்படைக்கிறாரோ என்னவோ எவர் கண்டது.. ?

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...