Monday, August 17, 2015

ரகசிய அலறல்கள்..

றியாமையின் சுவடுகள் அனைவரின் வசமும் பத்திரமாக நிறைவு வரைக்குமாக பயணம் செய்யும் அவர்களோடு...!
 பகுத்தறிவுகளும் மன முதிர்ச்சிகளும் ஓரிழையில் நுழைந்து விடுமெனிலும் அந்த அறியாமையின் மழலைமை நம்மில் தவழ்ந்த வண்ணமே ஒருவகை சுவாரஸ்யம் நிகழ்த்திக் கொண்டே தான் இருக்கக் கூடும்.. !

சில விஷயங்கள் இன்னும்  உருவமாக, இன்னபிறவாக நம்மோடு இருக்கும்.. சில விஷயங்களோ, பொருள் தன்மை இழந்து இதயத்துள் நினைவாக வியாபித்து வீற்றிருக்கக் கூடும்..

என்னிடம் பொருள் சார்ந்து நிறைய அறியாமைகள் குவிந்து கிடக்கின்றன.. ஆம், எமது இளம்பிராயம் தொட்டே, எதனையேனும் கவிதை என்றும், கதை என்றும், கட்டுரை என்றும் நான் மெனக்கெட்டுப் புனைந்தவை எல்லாம் .. அன்றைய எமது "அறியாமை" என்கிற மலரும் நினைவுகளாகத் திரண்டு கிடக்கின்றன இன்று..

இன்றைக்கு முளைத்திருக்கிற சிறு அறிவொன்று அவைகளை ரகசியமாக கேலி செய்து ஒரு நமட்டுச் சிரிப்பை உதடுகளில் உதிர்க்கச் செய்கின்றன..

ஆனால் மிக வியப்பாக அந்தப் பிராயங்களிலுமே கூட இன்றைய ஆழ்ந்த சிந்தனைகளுக்கு ஒப்பாக சிலவற்றை சிந்தித்து நான் எழுதி இருப்பது என்னைப் பொருத்தமட்டில்  உலகின் ஏழு அதிசயங்களோடு இணையப் பெறுகிற தகுதி கொண்டவையே..

அன்றைக்கு இருந்த என் அறிவு கூட இத்தனை நம்பிக்கைகளோடும்  அகந்தைகளோடும் இருந்ததில்லை என்று இன்று அனுமானிக்க முடிகிறது.. கனமான ஒன்றைக் கூட மிக யதார்த்தமாக , போகிற போக்கில் சொல்ல முடிந்திருக்கிறது என்னால்... 
ஆனால், இன்றோ எதையேனும் சற்றே ஆழ்ந்து சொல்லவோ எழுதவோ  நேர்ந்து விட்டால் போதும்.. என்னவோ, மகாகவி எனக்கும்  கீழே நின்றாக வேண்டும் என்று கூக்குரலிடுகிறது எமது போலி கவுரவம்.. 

இன்றைக்கென்னவோ நான் மிகவும் அங்கீகரிக்கப் பட்ட பிரபல எழுத்தாளனாக  உலா வருவது போன்ற மாயையை எனக்கு நானே ஏற்படுத்திக் கொண்டு விட்டேனோ என்று தோன்றுகிறது.. 

'அன்னைக்கு ஒரு வார்த்தை இன்னைக்கு வேற ஒரு வார்த்தை.. ' என்கிற பாகுபாடுகள் எனக்கு உடன்பாடில்லாதது .. ஆகவே அன்று எவ்வண்ணம்  கனவுகள் குவித்த வண்ணம் எதையேனும் சிறுபிள்ளைத் தனமாக கற்பிதம் செய்து கொண்டு திரிந்தேனோ, அதே மனநிலை, சூழ்நிலை கொண்டு தான் இன்றளவும் எனது 'எழுத்தாளன் கனவு' மிளிர்ந்த வண்ணமே உள்ளது.. 

ஆனால் இளமை அன்று எனக்குள் ஒரு எதிர்கால வேட்கையை மிக அடர்த்தியாக செருகி வைத்திருந்தது.... ஆனால், கால நழுவலில் யாவும் நீர்த்து கானலாகி ... இன்றைய அடர்த்தியான அறிவு, 'ஏதோ இந்த அளவுக்கு ஆச்சே!' என்கிற சமாதான சமாதியை ஏற்படுத்தி உயிரோடு புதையுண்டு போகிற ஆற்றல்களும் பொறுமைகளும் பெற்றிருப்பது  பரம ஆச்சர்யம் நிகழ்த்துபவை.. !!

3 comments:

 1. அந்த திருப்தி இருந்தால் போதும்...!

  ReplyDelete
 2. //இன்றைக்கென்னவோ நான் மிகவும் அங்கீகரிக்கப் பட்ட பிரபல எழுத்தாளனாக உலா வருவது போன்ற மாயையை எனக்கு நானே ஏற்படுத்திக் கொண்டு விட்டேனோ என்று தோன்றுகிறது.. // neenga oru pirapalamthaane....ithilenna santhegam.

  ReplyDelete
  Replies
  1. நானும் 'ரவ்டி' தான் என்று மூக்கில் வளையம் போட்ட வடிவேலு கூவிக் கொண்டு போலீஸ் ஜீப்பில் ஏறுவது போலதான்.. நானும் 'பிரபலம்' என்று கூவுவது.. அதே வடிவேலு இன்னொரு கேள்வி கேட்பார்.. அதை இந்த வடிவேலு கேட்கிறேன்.. 'என்னெ வச்சு காமெடி கீமெடி பண்ணலையே?'.. ஹிஹி..

   Delete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...