Tuesday, June 9, 2015

நல்லவர்களும் கெட்டவர்களும் ... [one page story]

எனக்கு மூணே முக்கால் லட்சம் தரவேண்டிய சிவகுருநாதன் முந்தாநாள் வந்து கொடுத்துவிட்டு சென்றான்.. கடந்த இரண்டரை வருட இழுபறிக்குப் பிற்பாடு இந்தப் பணம் கைக்கு வந்திருக்கிறது.. ஒரு வருடம் முன்னரெல்லாம் 'அவ்ளோதான் இந்தக்காசு.. கால்வாசிக் கூட கைக்கு வரப் போவதில்லை ' என்கிற மோசமான செய்தி கேள்விப் பட்டு இடிந்து போய் நாட்கள் நகர நகர , 'தொலையுது போ' என்கிற ரீதிக்கு மனசு தயாராகத் துவங்கி, பிறகு அதைக் குறித்து கிஞ்சிற்றும் நினைத்திராத இந்தத் தருவாயில் சிவகுருவே வீடு தேடி வந்து பணத்தைத் தந்தது லாட்டரி சீட் விழுந்தது கணக்காக விம்மிற்று மனசு..

"ஹோ.. ரியல்லி தாங்க் யூ ஷிவா .. கொஞ்சம் கூட எதிர்பார்க்கலே" என்றதும்,
"ரொம்ப சாரி முருகேஷ்.. தொடர்ந்து எல்லா பிஸினசும் செம அடி.. எப்டியோ 6 மாசம் முன்னாடி சீட் கம்பெனி ஸ்டார்ட் பண்ணி கொஞ்சம் தேறீட்டு வர்றேன்.. பழைய கடனாளிகள் பேர்களை லிஸ்ட் அவுட் பண்ணி ஒவ்வொருத்தரா கிளியர் பண்ணிட்டு வர்றேன்.. " என்ற அவனுடைய நேர்மை என்னில் மெய் சிலிர்க்க வைத்தது..

ஆனால் காலத்தின் குரூரம் தாங்கொணா தர்மசங்கடம் விளைவிப்பதாக அமைந்து  விட்டிருந்தது.. ஆம், இன்று அதிகாலை, ஹார்ட் அட்டாக்கில் சிவகுரு மறைந்து போனதாக தகவல்..
என்னுடைய அதிர்ஷ்டம் அற்பமாகப் புரிபட்டது.. ஆனபோதிலும், அந்தக் காசு வராது போயிருப்பின் என்னுடைய சிந்தனை இப்படி இருந்திருக்கும்?.. .
'என் காசை வாயில போட்டவனுக்கு இது தான் கதி'
'ஐயோ. நாசமாப் போனவன் என் காசைக் குடுக்காமப் போயி சேர்ந்துட்டானே'..

இதுபோக இன்னொரு கொடிய விதத்தில் எனக்கு மற்றுமொரு அதிர்ஷ்டம் வந்து சேர்ந்தது அடுத்த 2 வாரங்களிலேயே..
நான் ஐந்து லட்சம் தரவேண்டிய பாண்டிவேல் தன்னுடைய மனைவியாலேயே சரமாரியாக வெட்டிக் கொல்லப் பட்டதாக செய்தி..
தனது கள்ளக் காதலைக் கண்டித்ததன் காரணமாக என்று ஒரு செய்தித் தாள் பக்கம் பக்கமாகப் பிதற்றித் தள்ளியிருந்தது..
குடித்துவிட்டு அன்றாடம் ரகளை..., சதா நேரமும் சந்தேகப் படுவதும் அதன் நிமித்தமாக சித்திரவதை செய்வதாகவும் .. அதனாலேயே தூங்கத் தூங்கப் போட்டெறிந்ததாகவும் .. மற்றொரு தாள் கதை கோர்த்திருந்தது..

தீர விசாரித்ததில் தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்து ரவுண்டு கட்டிக் குடிக்கிற வழக்கம் பாண்டிவேலுக்கு சமீபமாக வந்திருக்கிறது.. மப்பில் மைனர் பயல்கள் பாண்டிவேல் சம்சாரம் ருக்குவை சீண்டிப் பார்க்கவே, அதில் காட்டமான ருக்கு பாண்டியிடம் பலமுறை இது குறித்து எச்சரிக்கை விடுத்தும் கூட அதனைப் பொருட்படுத்தாத பாண்டி, தனது மப்பு சிநேகிதர்களுக்கு மனைவியை இணங்கச் சொல்லியதன் காரணமாகவே சாகடிக்கப் பட்டான் என்கிற உண்மை புரிபட்டது..

ஒரு பத்தினிப் பெண்ணை, பத்திரிக்கைகள் உத்தேசமாகக் கூட ஒழுக்கமானவர்கள்  என்று சொல்வதற்குத் தயங்குகிற விநோதத்தை முதல் முதலாக எனது வாழ்நாளில் நேரில் கவனித்து வேதனைப் பட்டேன்..

பாண்டியும் செத்துப் போய் , ருக்குவும் அதன் நிமித்தம் சிறைக்குப் போய் , அவர்களுடைய  2 குழந்தைகளான -ஐந்து வயது ஐஸ்வர்யாவும் மூன்று வயது குமரேசனும் எனக்குள் நிறைய அழுகை முட்ட வைத்தனர்..

பலமுறை பாண்டி என்னிடம் பணம் கேட்டுத் தொந்தரவு செய்து மிரட்டல் விட்டு, பயமுறுத்தி இருக்கிறான்.. சிவகுரு கொடுத்த அடுத்த நிமிடமே வந்து பணத்தை  ஒப்படைப்பதாக பலமுறை சொல்லியும் கூட நம்பாமல் வசவுகளை உதிர்த்து என்னை தற்கொலைக்கே யோசிக்க வைத்திருக்கிறான்..

ருக்குவின் கொலை நியாயங்கள் நிரூபிக்கப் பட்டு தண்டனைக் காலங்கள் குறைக்கப் பெற்று வெளியே வந்த போது  அவளது குழந்தைகள் எனது கஸ்டடியில் என்  குழந்தைகளோடு குழந்தைகளாக பள்ளி சென்று பயின்று வந்தனர்.. அதுகண்டு அகமகிழ்ந்து என் கால்களைப் பற்ற குனிந்த ருக்குவை தடுத்து நிறுத்தி .. " ஹே ருக்கு. இது என்னோட கடமை.. " என்று சொல்லி பாண்டிக்கு சேர வேண்டிய பணத்தை குழந்தைகள் பேருக்கு டெப்பாசிட் செய்த விஷயத்தையும் சொல்ல, நிறைய அழுதாள் ருக்கு..

என்னைக் கொல்வதற்கு பல நாட்கள் ஆட்களை ஏவி விட்டதாக பாண்டி பற்றி சொன்னாள் ..
அந்த ஏவி விட்ட நபர்கள் இன்னாரென்று அடையாளம் கண்டு அவர்களிடம் 'அனைத்தும் சுமூகமாக முடிவுற்றது' என்கிற தகவலை சொல்ல வேண்டும் என்கிற  ருக்குவின் மெனக்கெடல் எனக்குள் வார்த்தைகள் பிடிபடாத உணர்வுகளைக் கிளர்ந்தெழ வைத்தன..

2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...