Monday, June 1, 2015

அடிமை ..

ல்லாருக்கும் போலவே எனக்கும் அணிந்தால் ஒருவித பிரத்யேக ஆனந்தம் அளிக்கக் கூடிய சட்டை வகையறாக்கள் உண்டு.. 
நாளடைவில் அந்த வகையறாக்களும்  தங்களின் அந்தப் பிரத்யேக அந்தஸ்த்தை இழந்த வண்ணமோ, அல்லது குறைந்த வண்ணமோ மாறி விடுகிற யதார்த்தங்கள் தவிர்க்க இயலாத ஒன்று.. 

அப்படியாக படிப் படியாக இறங்கி கடைசியில் ரெண்டோ மூன்றோ சட்டைகள் அவ்வித அந்தஸ்த்தில் சற்று ஆயுள் பலம் காணக் கூடும்.. 

அந்த மூன்றுமே கூட முதல் இரண்டாம் மூன்றாம் என்கிற வரிசைக் கிரமத்தோடு நமது தேகத்தோடு வலம் வரக்கூடும்.. 

அப்படி முதல் பரிசு பெற்ற சட்டையாக 'நீலக் கோடுகள் போட்ட ' ஒரு சட்டை இடம்பெற்று 'காலரைத்' தூக்கிக் கொண்டு திரிந்தது.. 

எங்கேனும் திருவிழா என்றாலோ, கல்யாணம் , பார்ட்டி என்றாலோ என்னில் அந்த சட்டை இடம் பெறவே என் மனது பிரயத்தனிக்கும்... 
'ஒன்றையே அனேக முறை திரும்பத் திரும்ப அணிவது அணிபவனுக்கு சௌகர்யப்  பட்டுப் போகலாம்.. ஆனால், அடிக்கடி அந்த சட்டையில் நீ இருப்பதை --சிற்சில நபர்களாவது-- தொடர்ந்து கவனிக்கக் கூடும்.. மௌனமாக அவர்களுக்குள்ளேயே உன்னைக் காறித் துப்பக் கூடும்.. நீ அதனை அத்தனை புத்திசாலித் தனமாக அடையாளம் காண்பது அரிது.. ஆகவே உன்னிடம் நல்லவை என்று அடையாளப் பட குறைந்த பட்சம் நான்கைந்து  சட்டைகளையாவது வரிசைப் படுத்தி வைத்துக் கொள்வது சாலச்  சிறந்தது.. '   என்றெல்லாம் எனது புத்தியில் ஏற்றிக் கொள்ளவேண்டியது கடமையாயிற்று.. 

பிற்பாடு அந்த நீலக் கோடுகள் இழுக்கப் பெற்ற சட்டை முதல் தரமிழக்கத் துவங்கிற்று.. ஆயினும் அதனை எப்படியாவது அணிந்து விடவேண்டும் என்கிற அனாவசியப்  பிரேமை என்னில் ஆட்கொண்டு எனக்கே என்னை அற்பப் பிறவி போன்று அடையாளப் படுத்திற்று.. 

பீடி சிகரெட் மது பெண் சினிமா பான்பராக் ஹான்ஸ் புகையிலை மூக்குப் பொடி என்று ஏதோ ஒரு விஷயத்தில் ஈர்க்கப் பெற்று அதனின்று வெளிவரும் வழி  தெரியாமல் சிக்கிச் சீரழிய நேர்ந்து, அதுவே ஒரு குற்ற உணர்வாகவும் மனதினை ஆக்கிரமிக்கும் சூழல், எப்படி ஒருவித அவஸ்தையோ அதே அவஸ்தை அந்த  ப்ளூ லைன் ஷர்ட் பற்றிய பிரக்ஞை என்கிற உறுத்தல் ஒருமுறை  என்னில் தீவிரமடையவே, அதனை அப்புறப் படுத்தியாக வேண்டும் உடனடியாக என்கிற அவசரம் என்னை ஆட்டுவித்தது.. 

சரி அதனை பீரோவில் ஒரு ஓரமாக மடித்து வைத்துவிட்டு  தக்கதருணம் வருகையில் எவருக்கேனும் சமர்ப்பித்து விடவேண்டும் என்கிற அனுமானத்தில் அதனை விடுத்து மற்ற வகையறா சட்டைகளை மட்டுமே அணிகிற வழக்கத்துக்கு என்னை நான் மாற்றிக் கொண்டேன்.. 

ஆனால் எந்த சட்டை அணிந்தாலும்  அந்த நீலக் கோடுகள் சட்டையை என்னால் ஒப்பீடு செய்ய முடியாமல் இருப்பது அசாத்யமாயிற்று .. சரி போகிறது போ என்று வெறுமே ஒப்பீடு மாத்திரம் செய்து விட்டு பிற சட்டைகளுள்  நுழைகிற பாங்கு எனக்கு வந்திருப்பது சற்று பெருமையாகக் கூட  இருந்தது.. 

ஒரு ஓய்வான ஞாயிறு  அதனை எங்கேனும் சென்று ஒப்படைத்து விட்டு வரலாம் என்கிற ஞாபகம் வரவே, அந்த சட்டையை 'பாக்' செய்வதற்கு பாலித்தீன் பை  ஒன்றைத் தேடினேன்.. 

அதற்குள்ளாக இந்த அடிமை மனசு அரட்டிற்று.. "கடேசி கடேசீ ன்னு ஒரே வாட்டி இன்னைக்குப் பூரா அதை மாட்டிட்டு சுத்துவோம்.. அப்புறம் மறுபடி ஒருக்க  நல்லா தொவச்சு அயன் பண்ணி யாருக்காச்சும் கொடுத்துடுவோம்"

பிறகென்ன.. இந்த மானங்கெட்ட மனசு, இந்த மானங்கெட்ட உடலுக்கு எடுத்து மாட்டி விட்டது.. 

போதாக்குறைக்கு எதிர்ப்பட்ட ராஜகோபாலன் வேறு ..
"இந்த சட்டைல நீ எப்பவுமே ஹாண்ட்சம் டா " என்கிறான்.. 

அப்புறம் ஒருவார கால அவகாசத்தில், மறுபடி முதலிடத்தைப் பிடித்து விட்டிருந்தது  அந்த 'நீலக் கோடுகள் ' வரையப் பட்ட சட்டை.. !!

5 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...