Sunday, September 11, 2011

திருட்டுப்பயலின் டைரியிலிருந்து..

உன் மெல்லிய சங்குக் கழுத்து காயமாவதில், அதில் நீ வலியில் தவிப்பதில் எனக்கு உடன்பாடில்லை... 
வன்முறைகள் ஏதுமற்று உன் கழுத்துச் சங்கிலியை கபளீகரித்தாக வேண்டும்...
உடனடியாக தொலைந்தது புலப்படாமல் நீ சற்று நிமிடங்கள் கழித்து உணர்ந்து , அதற்காக மற்ற பெண்கள் போல வருத்தமுறாமல் மிக சாதரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்...

நல்ல  வேளை.. கழுத்து சேதப்படாமல் போயிற்றே , வாழ்க திருடன் என்று நீ மலர்ச்சியோடு வாழ்த்தவேண்டும்...
அதில் நானும் என் தொழிலும் செழிப்புற வேண்டும்...
நகை புனைவதில் சேதாரம் இருக்கலாம்... ஆனால் அது ஓர் பெண்ணால் அணிந்திருந்து  பிடுங்கப்படுகையில் எவ்வகை சேதாரமும் அவளது  உடலுக்கோ மனசுக்கோ நேரக்கூடாது என்பது இந்தத் திருடனின், அவா மற்றும் பிரார்த்தனை..

ஒவ்வொரு முறை வழிப்பறி செய்கையிலும், எவரது கையிலும் மாட்டி தர்மடி வாங்குகிற கற்பனைகள் மேலோங்கும் என்றாலும், அவ்விதம் அசம்பாவிதம் எதுவும் நிகழக்கூடாது என்பதற்காக  அரசமர விநாயகருக்கு நூற்றியெட்டு ஈடு தேங்காய்கள் போடப்படும் என்பதாக பிரார்த்தனை... 
படித்த காலங்களில் பாஸாக வேண்டும் என்கிற வேண்டுதலைக்கூட செவ்வனே நிறைவேற்றாத விக்னேஸ்வர் , இன்றைய என் கபடக் கபடிகளில் வெற்றிப்புள்ளிகளைக் குவிக்கத் துணை வருவது பரமாச்ச்சர்யம்.....

நான் அந்தப்பெண்ணிடம் களவாடுவதை அவளே ரசித்து என் மீது காதல் வசப்பட வேண்டும் என்பது என் மற்றுமொரு நூற்றியெட்டுத் தேங்காய்களுக்கான பிரார்த்தனை..

அதனையும் செவ்வனே நிறைவேற்றுகிற ஆற்றல்களும் உரிமைகளும் கடவுள் வசமுண்டு என்பதை என் களவாணி பய நெஞ்சரியும்...

எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறுகிறதே என்ற போதிலும் வேண்டிக்கொண்டது போல தேங்காய் போடுகிற கெட்ட பழக்கம் என்னிடமில்லை.. சாமியை ஏமாற்றுவதால் தான் "இவன் நம்மையே ஏமாற்றுகிறான்... மக்களும் இவனிடம் ஏமாறட்டும்" என்று சபித்திருப்பாரோ?? அவரது சபிப்பு கூட எனக்கு வாழ்த்தாக மாறியிருக்கிற விஷயத்தை கடவுளே கூட புரிந்து கொள்ளவில்லையோ???


1 comment:

  1. வன்முறைகள் ஏதுமற்று உன் கழுத்துச் சங்கிலியை கபளீகரித்தாக வேண்டும்...
    உடனடியாக தொலைந்தது புலப்படாமல் நீ சற்று நிமிடங்கள் கழித்து உணர்ந்து , அதற்காக மற்ற பெண்கள் போல வருத்தமுறாமல் மிக சாதரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்...

    ஆஹா... என்ன ரசனை.. என்ன ரசனை!

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...