Tuesday, October 9, 2012

இருளிலும் புலனாகிற வண்ணங்கள்...

நிசப்தங்களின் 
நாராசாரம் ... 
வெடித்தே விடும் போல 
இதயம் ...!

ஏதேனும் 
உளறலோ 
அனர்த்தக் கூப்பாடோ 
கவைக்குதவாத 
கதறல்களோ 
எதிர்பார்க்கிற காதுகள்..!

பயித்தியம் போல 
எவருமற்றுப் புன்னகைக்கிற 
காட்டுப் பூக்கள்...
கவிஞனை எதிர்பார்க்காமல் 
கவிதை காண்பிக்கிற 
முழுநிலா...

-இருளிலும் 
புலனாகிற வண்ணங்கள்...

தெளிந்து நெளிந்தோடுகிற 
மழைநீர்...
தாகமிருந்தும் அருந்தும்
பிரயத்தனமில்லை...                

--மின்சாரம் பறிபோய் ....
குப்பைக் காற்றை 
விநியோகித்த மின்விசிறி 
நின்று போய் .....
ஆழ்ந்த உறக்கம் 
தடம்புரண்டு ..
அதன் நிமித்தம் 
நிகழ்ந்த ஓர் அற்புதக் 
கனவில்... 
இப்படியெல்லாம் 
ஓர் இன்பாவஸ்தை.....!

அரைத்தூக்கமும் 
அவிழ்ந்து போய் 
பானை ஜலம் மொண்டு 
பருகினேன்...
கனவில் புரண்ட 
மழைநீர் - எனது வீட்டின் 
பானையில் வந்து 
நிரம்பிய கற்பனையோடு..!! 

1 comment:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...