Saturday, October 13, 2012

பயணங்கள் முடிவதில்லை...----- திருமலை நாயக்கர் மஹால் ---- மதுரை.

எப்போது மதுரை செல்ல வாய்க்கையிலும் திருமலை நாயக்கர் மகாலை சென்று ஓர் தரிசனம் செய்துவிட்டு வருவது எனது சுபாவம்...
மனத்தைக் கொள்ளை கொண்டு கபளீகரித்து விட்ட அதன் கட்டிடக் கலை.. அதனை வர்ணிக்க என் வார்த்தைகளுக்குத் திறனில்லை என்பதை விட அதற்கான வார்த்தைகளே இல்லை என்னிடம்...

ஆத்திசூடி மறந்து போய் ஊமையாக, மெளனமாக, பிரம்மித்துப் போய் பேயறைந்தார் போல நிற்பேன் அதன் பிரும்மாண்டத்தில்...
எனது அற்ப வார்த்தைகள் நிரப்பி அதன் வசீகரத்தை விளக்க முனைவதே என்னுள் ஓர் லஜ்ஜை ஏற்படுத்தும்... ஆதலால் மௌனமே உத்தமம் என்பதாக எதுவும் அது குறித்து நான் இதுவரை எழுதியதில்லை...

எப்படி இது சாத்யம் ஆயிற்று?.. நம்மால் ஒரு சின்ன சுவரை எழுப்பவே ஆயிரத்தெட்டு யோசனை செய்து, கடைசியில் அதுவும் தவிர்க்கப் பட்டு வெட்ட வெளியாகவே இருந்து விட  அனுமதிக்கிற பரந்த எண்ணம் கொண்டவனாக இருக்கிறேன்... ஆனால் ஆயிரத்தெட்டு தூண்களை அலேக்காகக் கொண்டு வந்து நிறுத்தியது போல அங்கங்கே நிறுத்தி அசத்தி இருக்கிறார்களே...

இது ஓர் தனிப் பட்ட மனிதனின் சிந்தனையா?.. கூடிப்பேசி திட்டமிட்ட ஓர் குழுவின் யோசனையா?.. எது எவ்வாறாயினும், இதற்கான முழுமுதல் ஆற்றலும் திருமலை நாயக்கரையே சாரும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க நியாயமில்லை..

வியப்பு நம்முள் தாண்டவமாடுகிறது... 
எத்தனை எத்தனை நபர்களும், யானைகளும், துவக்கம் முதலே செயல்பட்டு இந்தப் பிரம்மாண்டத்தை  சாத்தியப் படுத்தியிருக்கக் கூடும்?

தான் மிகப் பெரிய கட்டிடம் கட்டிவிட்டோம் என்று அகம்பாவத்தில் உலவித் திரிகிற பொறியியல் வல்லுனர்களும், தன்னைப் போல எவரும் இதுவரை வீடே கட்டவில்லை  என்று பிதற்றித் திரிகிற பலரும் இந்த தி.நா மகாலை ஒருமுறையாவது சென்று பார்த்துவிட்டு வரவேண்டியது மிக அவசியம்...
நிச்சயம் வெளியே வருகையில், தனது அனுமானம், அகம்பாவம், ஆணவம் எல்லாம் மௌனமாகக் கரைந்து.. ஓர் மகா ஞானி போல பற்றற்ற தன்மையோடு வெளிவருவதற்கான  எல்லா சூட்சுமங்களும் அடங்கியுள்ளன இந்த மகாலில் எனில் அது மிகையே அன்று.. !!.. 

1 comment:

  1. வியக்க வைக்கும் படங்கள்...

    நன்றி சார்...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...