Wednesday, October 5, 2011

எங்கேயும் எப்போதும் .. {பட விமரிசன முயற்சி}

உண்மை சம்பவம் கூட இவ்வளவு வேதனைகளும் கோரங்களும் நிரம்பி இருக்குமா என்பது சந்தேகமே... ஆனால் திரைக்காக மெனக்கெட்டு , அதனைப் பார்க்கிற ரசிகர்கள் எல்லாரையுமே சிறிது நேரம் திகைக்கவும் வேதனைப்படவும் வைத்து விட்டார் டைரக்டர்... இது அவருக்கும் அவரது திரைக்கதைக்கும் மிகப்பெரிய வெற்றி என்ற போதிலும், ஓர் தாங்கொணா சோகத்தை இப்படித் தத்ரூபப்படுத்துகிற முயற்சி வேண்டாமென்றே தோன்றுகிறது.....

இன்னும் விமானத்திலும் சொகுசுக் கப்பல்களிலும் பயணம் மேற்கொண்டு மாபெரும் விபத்துக்களுக்கு உள்ளாகி மரணிப்பவர்களை யோசிப்போமேயானால் இந்த உலக வாழ்க்கை அற்ப புல்லைக் காட்டிலும் கேவலமாகப் புரிபடத் துவங்கி விடும்.... தியான முறைகளும் யோகா முறைகளும் இம்மாதிரியான பற்றற்ற தன்மைகளை ஊக்குவிப்பதில் தான் பிரயத்தனங்கள் மேற்கொள்கின்றன... ஆனால் இம்மாதிரி எந்த விபரீதங்களும் நிகழாமலே அம்மாதிரியான பற்றற்ற தன்மைகளுள் பயணிப்பதற்கான தளங்களை அமைத்துத் தருகின்றன...

ஆனால் இயல்பில் ஒரு மனிதன் இவ்வித கோர சம்பவத்திற்கு பிற்பாடே வாழ்க்கை மீதான நம்பிக்கைகளையும் பிடிப்பையும் இழக்க நேர்கிறது...அதுவும் கூட, சில வாரங்களோ மாதங்களோ...மீறினால் சில வருடங்களோ...!!

ஆனால் பற்றற்ற தன்மைகளை பின்பற்றுகிற குழாமிடம் பொருளீட்டுகிற திறன் இருக்குமா மற்றும் எதையேனும் புதிதாகக் கண்டுபிடித்து சமுதாயத்திற்கு நன்மை பயக்க வைக்குமா  என்பதெல்லாம் பதில் சொல்ல முடியாத கேள்விகள்...

பற்றும் வேண்டும், பொது நல நோக்கும்  வேண்டும், எதையேனும் சாதித்து அதனை சமுதாயத்திற்கு சமர்ப்பிக்கிற மாண்பு வேண்டும்...

ஓர் படத்தை விமர்சிக்கத் துவங்கி, வேறெதையோ யோசிக்க நேர்கிற அளவு ஆழமாகவும் அழகாகவும் இருக்கிறது எங்கேயும் எப்போதும்...

ஜெய்யின் நடிப்பு ஓர் அற்புதமென்றால், அஞ்சலியின் நடிப்பு ஓர் அற்புதம்... அது போக சென்னையை கண்டு மிரள்கிற, மிகவும் யதார்த்தமாக சந்தேகப்படுகிற அனந்யாவும், அவரது guide ஆக செயல்பட்டு காதலனாகிறவராகட்டும், ஆனந்யாவின் அக்கா, ஜெய்யின் அம்மா, ... 

இத்தனை பாத்திரங்களை வடிவமைத்து, அவர்களுக்கெல்லாம் ஓர் முந்தைய 
சுவாரஸ்யமான வரலாறுகளைப் பதிவு செய்து,.. இவர்களுடைய அந்த வரலாறுகளோடு இந்தக் கொடுமையான விபத்துக்களை இணைத்து நமக்குக் காண்பிப்பது கண்ணீர் வரவழைக்கிறது..

பேருந்தில் பயணிக்கிற அந்தப் புதுமணத்தம்பதிகள், துபாய் சென்று திரும்புகிற தந்தை, அவருக்கான அவருடைய மகளின் போன் கால், ...

ஐயோ...தமிழில் இப்படி ஒரு படம் .. யாரும் இது வரை பார்த்திருக்க வாய்ப்பில்லை...

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...